விஷ்ணுஸஹஸ்ர நாமம் -23
201.அம்ருத்யு: - அழிவில்லாதவர். 'ம்ருத்யுர்யஸ்ய உபசேசனம் க இத்தா வேத யத்ர ஸ:,' –கடோ.உப .2.2.25
. எந்த பரமாத்மாவுக்குக் யமனும் ஊறுகாய் போன்றவனோ அப்படிப்பட்ட அவரை யார் அறிவார்?
எல்லாம் பகவானால் சம்ஹரிக்கப்படுவதை அவன் உணவாகக்கொண்டால் ஊறுகாய் எப்படி உணவை உட்கொள்ள உதவுகிறதோ அதுபோல யமன் எல்லாவற்றையும் உட்கொள்ளக் கருவியாக இருந்து அவனும் கடைசியில் உட்கொள்ளப்படுகிறான் என்பது இதன் கருத்து.
இது முதல் நரசிம்ஹாவதாரத்தை பற்றிய நாமங்கள்.
நரசிம்ஹரை ப்பற்றிய மந்த்ரராஜ பதஸ்தோத்திரத்தில்,
சாக்ஷாத் ஸ்வகாலே ஸம்ப்ராப்தம் ம்ருத்யும் சத்ருகணான்விதம்
பக்தாநாம் நாசயேத் யஸ்து ம்ர்த்யும்ர்த்யும் நமாம்யஹம்
என்று ஒரு ஸ்லோகம்.
இதன் பொருள்,
எவர் பக்தர்களின் மரணபயத்தையும் சத்ருக்களையும் அழிக்கிறாரோ , எவர் யமனையும் கட்டுப்படுத்துகிறாரோ அவருக்கு நமஸ்காரம்.
202. சர்வத்ருக்- இது எவ்வாறு நரசிம்ஹரைக் குறிக்கிறது என்றால்,
மந்த்ரராஜபதஸ்தோத்ரத்தில் ,
ஸர்வேந்த்ரியை: அபி வினா ஸர்வம் ஸர்வத்ர ஸர்வதா
யோ ஜாநாதி நமாமி ஆத்யம் தம் அஹம் ஸர்வதோ முகம்
இதன் பொருள்,
இந்த்ரியங்களின் உதவியின்றி எவர் எல்லாவற்றையும் எல்லா இடத்திலும் எப்போதும் அறிவாரோ அந்த எங்கும் பார்க்கும் முகம் உடைய நரசிம்மரை நமஸ்கரிக்கிறேன்.
ஸர்வதோமுக: என்ற நாமம் பின்னால் வருகிறது அதற்கு வேறு விளக்கம்.
203. சிம்ஹ: -ஹினஸ்தி ஸ்மரணமாத்ரேண ஸர்வபாபான் , தன்னை நினைத்த மாத்திரத்திலேயே எல்லா பாபங்களையும் போக்குகிறவர். அல்லது ஹினஸ்தி பாபீன் இதி சிம்ஹ; பாவிகளை அழிப்பவர்.
204. ஸந்தாதா – ததாதி இதி தாதா – கொடுப்பவர். ஸர்வம் ததாதி இதி ஸந்தாதா. எல்லாம் கொடுப்பவர், சந்தாதா
205. ஸந்திமான் –ஸம் என்ற எழுத்து ஏகீபாவம் அதாவது சேர்க்கையைக் குறிக்கிறது. ஸம்( ஏகீபாவேன)தீயதே இதி ஸந்தி: அதாவது சேர்க்கை. ஸநதி: அஸ்ய அஸ்தி இதி ஸந்திமான் . பகவான் பக்தர்களை தன்னுடன் இணைப்பதாலும், அவரவர் கர்மபலனை அவரவருடன் இணைப்பதாலும் ஸந்திமான் எனப்படுகிறார்.
உலகில் எல்லாவற்றிற்கும் எதிரிடையாக ஒன்று உள்ளது. சுகம், துக்கம், லாபம், நஷ்டம், வெற்றி ,தோல்வி இவைமாதிரி . எல்லா விஷத்துக்கும் ஒரு முறிவு மருந்து உள்ளது. பகவான் நேர்மறையாகவும் எதிர்மறையாகவும் உள்ளவற்றை ஒன்று சேர்க்கிறவர்.
நரசிம்மராகத் தோன்றி ந மிருகம் ந மானுஷம் , என்று மனிதனும் இல்லாமல் மிருகமுமில்லாமல், பகலும் இரவும் இல்லாமல் அந்தி நேரத்தில், வீட்டினுள்ளும் வெளியிலும் இல்லாமல் வாசற்படியில் உட்கார்ந்து ஆயுதம் இன்றி தன் நகத்தாலேயே ஹிரண்ய கசிபுவைக் கொன்று இவ்வாறு அவன்கேட்ட வரங்களை தகர்த்தவர். இதனாலேயே அவர் த்வந்த்வாதீதன் , இருமைக்கு அப்பால் உள்ளவர் ஆகிறார்.
206. ஸ்திர: - திடமானவர். பக்தர்களிடம் திடமான பற்றுள்ளவர்.
ஸதா ஏகரூபத்வாத் ஸ்திர: , திஷ்டதி இதி ஸ்திர; எப்போதும் ஒரே நிலையில் நிற்கிறார். அவர் இல்லாத இடங்கள் இல்லை எனும்போது இது பொருள் பொதிந்ததாகிறது.
நரசிம்மராக தூணில் ஸ்திரமாக நின்றதால் இது நரசிம்மருக்குப் பொருந்தும். தூணில் மட்டும் அல்லவாம். உலகம் பூராவும் எங்கு ஹிரண்யகசிபு சுட்டிக்காட்டி இங்கு உன் ஹரி உள்ளனா என்று கேட்கப்போகிறானோ என்ற எண்ணத்தில் சர்வவ்யாபியாக நின்றாராம்.
வேதாந்த தேசிகர் வரதராஜ பஞ்சாச்த்தில் சொல்கிறார்.
ஸ்தம்பைக வர்ஜம் அதுனா அபி கரீச நூனம்
த்ரைலோக்யம் ஏதத் அகிலம் நரசிம்ஹகர்பம்.
இதன் பொருள், ஹிரண்யன் மாளிகையில் உள்ள ஒரு கம்பத்தைத்தவிர மீதி உலகம் எல்லாம் நரசிம்மனை இன்றும் உள்ளே வைத்துள்ளன.
207. அஜ: -மற்றவர்களைப்போல் பிறக்காதவர். இது நரசிம்மனுக்கு நூறு சதவீதம் பொருந்தும். தானாகவே தூணில் ஆவிர்பவித்தவர் அல்லவா.
அஜ: என்ற சொல் கதி அல்லது செல்லுதல் என்ற பொருளிலும், க்ஷேப அல்லது எறிதல் என்ற பொருளிலும் உபயோகப்படுத்தப் படுகிறது. அந்த விதத்தில் பார்த்தால், பகவான் எங்கும் செல்பவர் , சர்வ வியாபி.
பக்தர்களின் உள்ளங்களிலும் சென்று குடிகொள்பவர். பக்தர்களின் எதிரிகளை தூக்கி எறிபவர்.
208. துர்மர்ஷண: -துஹ்கேன மர்ஷண:-ம்ருஷ் என்றால் சகிப்பது. அவரை எதிர்ப்பவர்களால் சகிக்க முடியாதவர்.
நரசிம்ஹ மந்த்ரம்-
உக்ரம் வீரம் மஹாவிஷ்ணும் ஜ்வலந்தம் ஸர்வதோமுகம்
ந்ருஸிம்ஹம் பீஷணம் பத்ரம் ம்ருத்யும்ருத்யும் நமாம்யஹம்
இதில் நரஸிம்மர் உக்ரம், பீஷணம் , என்று கூறப்படுகிறார். அதாவது உக்கிரமான பயம் கொள்ளத்தக்க உருவம். ஆனால் பிரஹலாதன் பயப்படவில்லையே !. வேதாந்த தேசிகர் அவரை க்ருபாகபட கேசரி என்று காமாசிகாஷ்டகத்தில் குறிப்பிடுகிறார்.
ஸடாபடல பீஷண்ஏ(णे) ஸரபஸ அட்டஹாஸோத்படே
ஸ்புரத்க்ருதி பரிஸ்புரத் ப்ருகுடிகே அபி வக்த்ரே க்ருதே
க்ருபாகபடகேஸரின் தனுஜடிம்பதத்தஸ்தனா
ஸரோஜசத்ருசா த்ருசா வ்யதிபிஷஜ்ய தே வ்ய்ஜ்யதே ( காமாசிகாஷ்டகம் . 7)
கிருபையினால் மாய சிங்க வடிவில் (கபடகேசரி ) தோன்றிய பிரானே! உன்னுடைய உருவத்துக்கு மாறான நடவடிக்கையினால் உன் நிஜ ரூபம் தெரிகிறது. பயங்கரமான பிடரி மயிர், உரத்து பயமளிக்கும் அட்டஹாசமான சிரிப்பு, கோபத்தில் துடிக்கும் புருவம், இவற்றிற்கிடையே உன்னுடைய தாமரைக்கண்ணால் தயையுடன் அந்த அசுரக்குழந்தையை ஒரு தாயின் தயையுடன் கூடிய பார்வை.
பகவான் நரசிம்ஹராக பயங்கரமான உருவத்துடன் காட்சி அளிக்கிறார். சிலிர்க்கும் பிடரி மயிர் ,(சடா) உரத்த அட்டஹாசம். அவர் புருவம் கோபத்தில் துடிக்கிறது( ஸ்புரத்க்ருதிபரிஸ்புரத்). ஆயினும் பக்தர்கள் இதனால் ஏமாறவில்லை என்று கூறுகிறார் தேசிகர், அவனை கபடகேஸரி என்பதன் மூலம்.
209.சாஸ்தா- சாஸ்தி விச்வம் இதி சாஸ்தா. பிரபஞ்சத்தைத் தன ஆணைக்குட்பட்டதாக வைத்திருப்பதால்.
ஸ்வஸ்தானேஷு மருத்கணான் நியமயன் ஸ்வாதீனஸர்வேந்த்ரிய:
பர்யங்கஸ்திர தாரணாப்ரகடித பிரத்யங்முகாவஸ்தித்தி:
ப்ராயேண ப்ரணிபேதுஷாம் ப்ரபுரஸௌ யோகம் நிஜம் சிக்ஷயன்
காமான் ஆதனுதாத் அசேஷஜகதாம் காமாசிகாகேசரீ(காமாசிகாஷ்டகம் -5)
காமாஸிகா நரசிம்ஹன், மருத் முதலிய தேவர்களை அந்தந்த பதவிகளில் நியமித்து இந்த்ரியங்களுக்கு இறைவனாகி பர்யங்க பந்தம் என்ற நிலையில் யோக நரசிம்ஹனாக அமர்ந்து அன்தர்முகத்யானத்தைக் காட்டுபவனாய் தன்னை வணங்குபவர்க்கு தன்னை அடையும் வழியைக் காட்டுபவனாயும் உள்ள அந்தப் பிரபு எல்லோருடைய கோரிக்கைகளையும் நிறைவேற்றட்டும்.
நரசிம்ஹன் அல்லது நாராயணன் என்ற உபநிஷத் ப்ரஹ்மத்தின் ஆணைப்படி எல்லா தேவர்களும் தத்தம் கடமைகளைச் செய்கிறார்கள். கடோபநிஷத் சொல்கிறது,
பயாத் அஸ்ய அக்னி: தபதி பாத் தபதி சூர்ய: , பாத் இந்த்ரஸ்ச வாயு: ச ம்ரித்யுர்தாவதி பஞ்சம: (கடோ.உப. 11.3)
அவனிடத்தில் உள்ள அச்சத்தினால் அக்னி எரிகிறது சூரியன் பிரகாசிக்கிறான், அவ்வாறே இந்திரன் வாயு முதலிய தேவர்களும் தத்தம் வேலைகளை செய்கிறார்கள். ம்ருத்யு என்கிற காலதேவனும் அவர் கட்டளைக்கு கீழ்ப்படிந்தே செல்கிறான்.
210. விச்ருதாத்மா- அவருடைய லீலைகள் வியப்புடன் கேட்கப்படுகின்றன . சுருதி அல்லது வேதத்தால் வெகுவாகப புகழப்பட்டவர்.
211 ஸுராரிஹா-ஹிரண்யன் போன்ற தேவ சத்ருக்களை அழிப்பவர்.
No comments:
Post a Comment