Friday, April 19, 2019

Only sloka in entire Ramayan to occur twice -

ராமரைப் பற்றி சீதை கூறும் அரிய குணங்கள் ஆரண்ய காண்டத்தில் நாற்பத்தியேழாவது ஸர்க்கத்தில் 17ஆம் ஸ்லோகத்தில் இடம் பெறுகிறது.

ராவணன் சீதையை யார் என வினவ சீதை தனது குடும்பத்தைப் பற்றிச் சொல்லும் அற்புதமான சித்திரத்தை இங்கு காண்கிறோம்.

தத்யாத்ந ப்ரதிக்ருஹ்ணீயாத் சத்யம் ப்ரூயாந்ந சான்ருதம் I
ஏதத்ப்ராஹ்மண ராமஸ்ய வ்ரதம் த்ருவமனுத்தமம் II

ப்ராஹ்மண – பிராம்மணரே! தத்யாத் – (ஸ்ரீ ராமர் எப்போதும்) அளிப்பார் ந ப்ரதிக்ருஹ்ணீயாத் – (ஒருபோதும்) வாங்கமாட்டார் சத்யம் – உண்மையே ப்ரூயாத் – பேசுவார் அன்ருதம் – பொய்யை ச ந – ஒருபோதும் பேச மாட்டார் ராமஸ்ய – ராமரது அனுத்தமம் – ஒப்புயர்வற்ற த்ருவம் – சாஸ்வதமான வ்ரதம் – அனுஷ்டானம் ஏதத் – இது.

அந்தண வேடத்தில் கபட வேஷதாரியாக வந்த ராவணனிடம் ராமரைப் பற்றி சீதை கூறும் அற்புத ஸ்லோகம் இது.

சில பதிப்புகளில் காணப்படும் இந்த ஸ்லோகத்தின் இன்னொரு உருவம் இது:

தத்யாத்ந ப்ரதிக்ருஹ்ணீயாத் சத்யம் ப்ரூயாந்ந சான்ருதம் I
அபி ஜீவிதஹேதோர்வா ராம: ஸத்யபராக்ரம: II

இந்த ஸ்லோகத்தில் ஒரு சுவாரசியமும் அடங்கியுள்ளது. இதே ஸ்லோகத்தை சீதை ஹனுமானுக்கு அசோகவனத்தில் கூறுகிறார்.

சுந்தரகாண்டத்தில் முப்பத்திமூன்றாவது ஸர்க்கத்தில் 26வது ஸ்லோகமாக இது அமைகிறது.

ஆக ராமாயணத்தில் அபூர்வமாக இரு முறை வருகின்ற ஒரே ஸ்லோக வரிசையில் ராமரின் அபூர்வ குணங்களை அறிவிக்கும் இந்த ஸ்லோகமும் இடம் பெறுகிறது.


ஸத்ய பராக்ரம: என அடிக்கடி ராமரைப் பற்றிக் கூறுவதைப் பார்க்கிறோம். இதற்கு இரண்டு அர்த்தங்கள் உண்டு.

என்றும் நிலை கொண்டிருக்கும் சத்தியம் மற்றும் பராக்கிரமம் என்றும் பொருள் கொள்ளலாம். சத்தியத்தை அடிப்படையாகக் கொண்ட பராக்கிரமம் என்று இன்னொரு பொருளையும் கொள்ளலாம்.

மாரீசனே ராவணனிடம் ராமரைப் பற்றி, "ராமோ விக்ரஹவான் தர்ம:" "ராமன் தர்மத்தின் மறு உருவம்" என்று புகழ்கிறான்.

"அறம் வெல்லும் பாவம் தோற்கும்" என்பதையே கம்பன் தன் காவியத்தின் முகப்புச் செய்தியாக அளிக்கிறான்.

அறத்தைப் பேணியவர்க்கும் சத்ய பராக்ரமனான ராமனின் குணங்களே அவனைத் தெய்வமாக இனம் சுட்டிக் காட்டுகின்றன.

உத்தர ராம சரிதத்தில் அருந்ததி கோசலையிடம் கூறுவது இது:

"குணா: பூஜா-ஸ்தானம் குணிஷு ந ச லிங்கே ந ச வய:"
"ஒருவரது குணங்களினாலேயே அவர் மதிக்கப்படுகிறார். ஆணா அல்லது பெண்ணா என்பதாலோ அல்லது வயதாலோ அல்ல"

ரகு வம்சத்தில் மஹாகவி காளிதாஸன்,
" த தா ஹி சர்வே தஸ்ய ஆஸன் பரார்த்த ஏக பலா: குணா:" என்று சுருங்கச் சொல்லி ராமாவதார நோக்கத்தை விளங்க வைக்கிறான்.

இதன் பொருள்: "அவரது எல்லா குணங்களும் ஒரே நோக்கத்தையே கொண்டிருக்கின்றன. மற்றவர்கள் அனைவரும் சுகமாக வாழ்வதே அது"

ராமரின் சாஸ்வதமான அனுஷ்டான்ங்கள் படிப்பதற்காக மட்டும் அல்ல; நம் வாழ்வில் அனுஷ்டானமாகக் கடைப் பிடிப்பதற்காகவே!

No comments:

Post a Comment