Monday, March 18, 2019

Few Q & A from yaksha prasnam in tamil

ஐந்தாம் வேதம். J K SIVAN 
யக்ஷப்ரச்னம்.

நாம் மீண்டும் யுதிஷ்டிரனைத் தேடி காட்டுக்குள் சஹாதேவன் கண்டுபிடித்த நச்சுப் பொய்கையை அடைந்து விட்டோம். யக்ஷனுக்கு என்ன, சௌகர்யமாக ஒரு மரத்தின் மீது சாய்ந்து கொண்டு சாவதானமாக கேள்வி கேட்க தயாராகி விட்டான். பதில் சொல்பவனுக்குத்தானே சிரமம். கேட்பதற்கு என்ன கஷ்டம்? மேலும் யுதிஷ்டிரனின் பதிலை ஒட்டித்தான் அவன் சகோதரர்களின் ஒருவன் பிழைக்க வழி இருக்கிறது. எனவே யுதிஷ்டிரன் கவனமாக அடுத்த கேள்விக்கு காத்திருந்தான். யுதிஷ்டிரன் ஏதோ முன்பே கேள்விகள் லீக்காகி பதில் தெரிந்து வைத்துக் கொண்டவன் போல் யக்ஷனின் கேள்விகளுக்கு உடனுக்குடன் பதில் சொல்வதைப் பார்த்து யக்ஷன் அதிசயிக்கிறான்.

அவர்கள் கேள்வி பதில் தொடர்கிறது.

31 பிறந்தும் கூட நகராதது?
முட்டை.

32. இதயம் இல்லாதது?
கல்

33. வேகத்தோடு வளர்வது?
நதி பிரவாகம்

34 வெளிநாட்டு செல்பவனின் நண்பன்?
அவன் கற்றுத் தேர்ந்த கல்வி ஒன்றே.

35 வீட்டிலேயே கிடப்பவனுக்கு ?
மனைவி ஒருவளே. (அதுவே போதுமே!)

36 நோயாளிக்கு நண்பன் யார்?
அவனது வைத்தியன்

பாவம், தண்ணீர் குடிக்க வந்தவனை இவ்வளவு கேள்விகளா கேட்பது? கேட்டும் தர்மன் பொறுமையாக தம்பிகளின் சடலங்களை அருகில் வைத்துக்கொண்டு பொறுமையாக பதில் சொல்கிறானே.

37. இது ஒரு சாதுர்யமான கேள்வி. சாகப்போகிறவனின் நண்பன் யார்?
அவன் செய்த தான தர்மம்.

38 யார் எல்லோரும் தேவை என கருதும் வஸ்து?
அக்னி. தீ இல்லையேல் ஒருவராலும் வாழ இயலாதே.

39. எதை செய்தால் சாஸ்வதம் ?
எது ஒருவனை அது நற்கதிக்கு கொண்டு செல்கிறதோ அச் செய்கை.

40. எது அம்ருதமாகும்?
சுத்தமான பசும் பால் அம்ர்தத்துக்கு சமானம். சோமம் என்பதும் அதே.

41. உலகம் நிறைந்தது எது தெரியுமா?
சர்வ வியாபியான காற்று.

42 எவன் தனித்தே பிரயாணிக்கிறான் ?
சூர்யன்.

43 மீண்டும் மீண்டும் பிறப்பவன் ?
சந்திரன்.

44. பனிக்கு மாற்று எது?
உஷ்ணம்.

45. எல்லாவற்றையும் தன்னுள் தாங்குவது எது?
பூமி.

மிகவும் மகிழிகிறான் யக்ஷன். இப்படியா ஒருவன் தனது சட்டென்ற கேள்விக்கு பட்டென்று பதில் சொல்வான் !! பலே. மேலே தொடர்வோம்.

தர்மபுத்ரன் என்ற பெயர் பெற்ற யுதிஷ்டிரன் சற்றும் சளைக்காமல் தர்மதேவதை யக்ஷனாக வந்து கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்கிறான். நாம் தான் பல நாட்களாக இந்த கேள்வி பதிலை இழுத்து பறித்துக்கொண்டு எழுதுகிறோம் படிக்கிறோம். யுதிஷ்டிரனுக்கு யக்ஷன் அவ்வளவு அவகாசம் கொடுக்கவில்லை. மேலே மேலே கேட்டுக்கொண்டே போகிறான். பதிலும் வந்து கொண்டே இருக்கிறது. ஞாபகம் இருக்கட்டும். தாகம் தீர யுதிஷ்டிரன் இன்னும் தண்ணீர் குடிக்கவில்லை.

61. எவனுடைய நட்பு சாஸ்வதமானது?
இறைவனுடைய நினைப்பில் ஆழ்ந்தவனிடம் கொண்ட நட்பு சாஸ்வதமானது.

62. எதை விட்டுவிட்டால் துயரமே அணுகாது?
கோபத்தை அறவே ஒழித்தவனுக்கு துயரம் ஏது.

63. எதைத் தவிர்த்தால் செல்வந்தன் ஆகலாம்?
ஆசையை விட்டுப்பார். உன்னைப்போல் கோடீஸ்வரன் யாரும் இல்லை.

64. வாழ்க்கையில் சந்தோஷம் பெற வழி என்ன?
உன்னிடம் கொஞ்சமாவது கருமித்தனம் இருந்தால் அதை இப்போதே விட்டு விடு. பிறகு பார் நீ தான் உலகிலேயே சந்தோஷமான மனிதன்.

65. பிராமணர்களுக்கு தானம் செய்வது ஏன்?
அதன் மூலம் ஆத்ம திருப்தி கிடைப்பதால்.

66. உன்னுடைய தான தர்மம் ஆட்டத்துக்கும் பாட்டத்துக்கும் போவதால் பயன் என்ன ?
உனக்கு பெருமை புகழ் என்று நினைப்பதால் கிடைக்கும் அற்ப சந்தோஷம் தான் பயன்..

67. சரி அப்படியானால், நீ கொடுக்கும் தானம் தர்மம் உன் பணியாட்களுக்கும், வேலையாட்க ளுக்கும் சென்றால்?
அவர்கள் உன்னிடம் நன்றியுடன் நீ இட்டதை செய்ய உதவுதான் பயன்.

68. அரசனுக்கு செலுத்தும் பணம் எதற்கு?
உனக்கு இருக்கும் பயம் போவதற்கு .

69. எதால் இந்த உலகம் போர்த்தப்பட்டிருக்கிறது தெரியுமா உனக்கு ?
அறியாமை ஒன்றினால் தான்.

70. உலகம் என்றால் எது?
நமது ஆன்மா தான் யக்ஷனே இந்த உலகம்.

71. உலகம் ஜொலிப்பது எதால்?
நற்குணத்தால் தான் . தீய நினைப்பும் செயலும் ஒளி தராது.

72. உன் நண்பர்கள் எப்போது உன்னை பிரிகிறார்கள்?
உன்னிடம் ஒன்றும் இனி பெயராது என்று தெரிந்துகொண்டால்.

73. யுதிஷ்டிரா, இதற்கு பதில் சொல்லேன். மனிதன் ஏன் விண்ணுலகு எய்த முடியவில்லை?
இந்த பூவுலக வாழ்க்கையின் பிடிப்பு அவனை விட்டு அகலாததால் எப்படி அவன் நகரமுடியும்.

74 .மனிதன் எப்போது செத்தவனாக வாழ்கிறான்?
தான் எல்லா நற்செய்கைகளும் அறிந்தவனாக இருந்தும் அவற்றை செய்யாமல், உபயோகி க்காமல், பரம ஏழையாக சக்தியற்றவனாக தன்னைத் தாழ்த்திக்கொண்டபோது.

75. எப்போது ஒரு தேசம் உயிரற்றதாக காண்கிறது?
ஆளுவதற்கு சரியான அரசனோ தலைவர்களோ இல்லாதபோது அது செத்த நாடாகிறது.

6. அவசர கேள்வியும் அவசிய பதிலும்

யாருக்குமே கேள்வி கேட்பது என்பது எளிது. அதற்கு பதில் சொல்வதும் எளிது. ஆனால் அதில் சிக்கல் என்னவென்றால் அந்த பதில் பொருத்தமாக அமையவேண்டும். இல்லையென்றால் அந்த பதிலே பல கேள்விகளுக்கு மேலும் பதில் சொல்ல வைத்து விடும்! யக்ஷனின் கேள்விகள் அப்படியொன்றும் சாதாரணமானவை அல்ல, உன் பேர் என்ன, சாப்பிட்டாயா? போன்ற கேள்விகள் அல்லவே.

76. யாகம் எப்போது பலனளிக்காமல் போகிறது?
ஸ்ரத்தையாக அதை போஷிக்க வேதம் உணர்ந்த பண்டிதர்கள் இன்றி .

77.ஹோமாக்னி எப்போது பலன் தராது?
வேதம் உணர்த்தும் ஆஹூதி, ஹோமத்தீயில் இட வேண்டிய பொருட்கள் ஸ்ரத்தையின்றி, தாராள மனமின்றி, சரியானபடி இடாதபோது.

78 எது உகந்த வழி என்று கொள்ளலாம் ?
இறைவன் மீது சிந்தனையோடு உலவும் ஞானிகள் காட்டுவதே.

79. எது நீர்?
ஆகாசமே. ஆகாசமின்றி மழை ஏது, பின் நீர் ஏது ?

80. எது ஆகாரம் ?
ஒன்றுக்கு மற்றொன்று. எது உண்கிறதோ அதுவே மற்றொன்றின் ஆகாரம்.

81 எது விஷம் ?.
யாசகம் வாங்கி அனுபவிப்பது.

82. எது நீத்தோர்க்கு செயப்படவேண்டிய ச்லாக்கியமான செயல்?
சிறந்த வேதமந்த்ரம் உணர்ந்த சரியான பிராமணனுக்கு அன்னமளித்தல்,

83. நேம நியமத்தை விளக்கு?
அவனவன் தனக்கு விதித்த, ஏற்றுக்கொண்ட ஸ்வதர்மத்தை விடாமல் கடைப்பிடிப்பதே.

84. தர்மம் என்பது?
மனக் கட்டுப்பாடு

85. சிறந்த பொறுமை எதுவோ?
துன்பம், இன்பம், உயர்வு, தாழ்வு, பெருமை, சிறுமை,எது வரினும் நிலை குலையாமல், அடக்கமாக அமைதியாக எதையும் சமநிலையோடு ஏற்பது.

86 ஞானம் எது?
அண்டத்தை பிண்டத்தில் காணும் அறிவு . சத்யத்தை உணர்வது.

87."சமம் "என்றால் என்ன?
மனத்திற்குள் அடையும், காணும், வேற்றுமை இன்மை.

88. கருணை என்பது?
எல்லோரும் இன்புற்றிருக்கவேண்டுவது.

89. எது நேர்வழி?
எல்லோரிடமும் மதிப்பும் அன்பும் கொண்ட எளிய வாழ்க்கை.

90. எந்த பலம் கொண்ட எதிரியை கூட ஒருவன் மனது வைத்தால் வெல்ல முடியும்?
கோபத்தை வெல்பவன் தான் பலசாலி.

No comments:

Post a Comment