விஷ்ணு ஸஹஸ்ரநாமம்- 8
46. அப்ரமேய:- பிரமாணத்திற்கப்பாற்பட்டவன்
ஒரு விஷயத்தைப் பற்றி அறிய வேண்டும் என்றால் அதற்கு நான்கு பிரமாணங்கள் அல்லது முறைகள் உண்டு.
1. ப்ரத்யக்ஷம் – அதாவது இந்த்ரியங்கள் மூலம் அறிவது. இறைவனை இப்படி அறிய முடியாது ஏனென்றால் இந்த்ரியங்கள் செயல்படுவதே இறைவனின் மூலம்தான். உதாரணமாக கண்ணால் காண்பவனை அறிய முடியாது , காட்சிகளைத்தான் காண இயலும் அல்லவா அதுபோல., அவன் அதீந்த்ரியன் , இந்த்ரியங்களுக்கு அப்பாற்பட்டவன்.
2. அனுமானம் – அதாவது தெரிந்த ஒன்றின் மூலம் தெரியாததை ஊகித்துணர்வது. உதாரணமாக ஒரு இடத்தில் புகை இருந்தால் அந்த இடத்தில் நெருப்பு உள்ளது என்று அறிதல்.இறைவனை அறிவதற்கு இது போல ஒரு அறிகுறியும் இல்லை.
3. உபமானம் – ஒன்றை உதாரணமாகக் கூறுதல். இறைவனுக்கு சமானமாக எதுவும் இல்லாததால் எதையும் உதாரணமாகக் கூற முடியாது. உயர்வற உயர்நலம் உடையவன்
4. சப்தம் அல்லது வேதம் – அவனைப்பற்றி வேதம் மூலம் அறியலாமோ என்றால் வேத வேத்யன் வேதத்தின் மூலமே அறியக்கூடியவன் என்று கூறப்பட்டாலும் வேதங்களுக்கும் அப்பாற்பட்டவன் என்பதை உபநிஷத் 'யதோ வாசோ நிவர்தந்தே அப்ராப்ய மனஸா ஸஹ,' என்று வலியுறுத்துகிறது. வாக்கும் மனமும் இறைவனை அறிய முடியாமல் திரும்பிவிட்டன என்பது இதன் பொருள்.
அப்படியானால் வேதங்களின் பயன் என்ன என்ற கேள்வி எழுகிறது. வேதங்கள் ஒரு வழிகாட்டியாக மட்டுமே செயல் படுகின்றன. ஒரு இடத்திற்குப் போவதற்கு ஒரு guidebook அவசியம். ஆனால் அதைப் பின்பற்றி நாம் நடந்தால் தான் அங்கு போய்ச்சேர முடியும். அதுபோல வேதங்களின் அறிவுரையை நாம் பின்பற்றினால் இறைவனை அடையலாம்.
வேதாந்த தேசிகர் யாதவாப்யுதயத்தில் கூறுகிறார்,
'ஏகைககுணப்ராந்தே ஸ்ராந்தா: நிகமவந்தின: யதாவத் வர்ணனே அஸ்ய,' என்று.
வேதங்கள் இறைவனுடைய குணங்களை வர்ணிக்க முற்படுகையில் ஒரு குணத்தை வர்ணிக்கவே ச்ரமப்படுகின்றனவாம்.
அதனால் அவன் அப்ரமேயன் , ப்ர்மாணை: பிரமாதும் ந சக்ய:, பிரமாணங்களால் அறியப்படாதவன் ஆகிறான்..
47. ஹ்ருஷீகேச: - ஹ்ருஷீக என்றால் இந்த்ரியங்கள். ஹ்ருஷீகானாம் ஈச: அதாவது இந்த்ரியங்களை செயல் படுத்துபவன்.
ஹ்ருஷி என்றால் கதிர் அல்லது கிரணம் என்றும் பொருள் கொள்ளலாம். கிரணங்களைப்போல் ம்விரிந்த கேசம் உடையவன் ஹ்ருஷீகேசன்., அல்லது சூரியன் சந்திரன் முதலியவற்றிற்கு ஈசனாக இருந்து ஒளி தருபவன்.
48. பத்மநாப: -பத்மம் என்ற சொல்லுக்கு தாமரை , சங்கு, செல்வம்( சங்க நிதி பத்ம நிதி) என்று பல பொருள்கள். பூமி நீரிலிருந்து தோன்றியதால் அதை தாமரையோடு ஒப்பிடலாம். இது சிருஷ்டியைக் குறிக்கும் அதை நாபியில் தாங்கியவன் , அதாவது உலகம் அவனிடம் இருந்து தோன்றியது என்று பொருள் கொள்ளலாம்.
சாதாரணமாக எல்லோரும் அறியக்கூடிய பொருள் பத்மநாபன், ஸ்ருஷ்டிகர்த்தாவாகிய பிரம்மாவை உடைய தாமரையை நாபியில் தாங்கியவன்.
49. அமரப்ரபு: -தேவர்களின் தலைவன். – அயர்வறும் அமரர்கள் அதிபதி.
50.விஸ்வகர்மா- கர்ம என்றால் செயல் action. விச்வம் கர்ம யஸ்ய ஸ: விஸ்வகர்மா.எல்லாம் எவனுடையசெயலோ அவன் விஸ்வகர்மா எனப்படுகிறான். விச்வம் என்றால் பிரபஞ்சம் என்று எடுத்துக் கொண்டால் இந்த பிரபஞ்சத்தை ஸ்ருஷ்டித்தவன் என்று பொருள்.
51. மனு: - மந்யதே சர்வம் ஜாநாதி இதி மனு: எல்லாம் அறிந்தவன் மனனம் என்றால் சங்கல்பம் என்றும் பொருள். எல்லாமே அவன் சங்கல்பம் என்பதால் மனு எனப்படுகிறான்.
52. த்வஷ்டா –த்வஷ்டா என்றால் சிற்பி என்று பொருள்.த்வக்ஷத் என்றால் செதுக்குவது. ஒரு சிற்பி அல்லது தச்சனைபோல இறைவன் இந்த உலகிற்கு வடிவம் கொடுப்பதால் த்வஷ்டா எனப்படுகிறான்.
53. ஸ்தவிஷ்ட:- திடமான அல்லது பரந்த என்பது இதன் பொருள். எல்லாவற்றையும் தாங்கி எங்கும் நிறைந்தவன் . யஸ்மாத் பரம் நாபரம் அஸ்தி கிஞ்சித்' அந்த பிரம்மத்தைக் காட்டிலும் பெரியது அல்லது மேலானது எதுவும் இல்லை என்பது வேத வாக்கியம்.
54. ஸ்தவிர:-புராண புருஷன்
55. துருவ:- மாறுதலற்றவன்.
ஸ்தவிர: தருவ: என்று இரண்டு நாமாக்களையும் சேர்த்தால் சர்வ வ்யபகத்வம் , எங்கும் நிறைந்தவன் என்ற பொருள் கிடைக்கிறது.
No comments:
Post a Comment