Monday, January 21, 2019

Vallalaar part2

மஹான்கள் -- J.K. SIVAN 
அருட்சோதி வள்ளலார் -

2. நீதி மன்றத்தில் ஆஜர்

நாளை தைப்பூசம். என்றோ நிகழ்ந்த ஒரு ஆச்சர்ய அதிசய சம்பவம் நினைவுக்கு வருகிறது..

கோர்ட்டில் ஒரு கேஸ். ' இவர் போலி சாமியார். ஏமாற்று வித்தைக்காரர், மக்களை தனது பக்கம் வசப்படுத்தி துன்பப் படுத்தக் கூடியவர். இவர் பாடல்களை வெளியே வராமல் தடை போடவேண்டும்'. இவரது பாக்கள் அருட்பா என்று மக்களை ஏமாற்றுகிறார். அவை உண்மையில் மருட்பாக்கள்'' என்று அந்த வழக்கு.

கோர்ட்டில் ஆஜராக வெள்ளைக்கார மாஜிஸ்திரேட் கோர்ட் ஒரு உத்தரவு போட்டு விட்டது. 
அந்த கோர்ட் பண்ணின பாக்கியம் வழக்கில் ஆஜரானவர் நம்மோடு அண்மையில் வாழ்ந்த சிதம்பரம் ராமலிங்கம் பிள்ளை என்கிற வள்ளலார் சுவாமிகள். நீதிமன்றத்தில் தனது வெள்ளை மேலாடை போர்த்தியவாறு வந்து நீதிபதி முன் நின்றார். என்ன தோன்றியதோ அந்த ஆங்கிலேய நீதிபதிக்கு. அவர் வந்து நின்ற உடனேயே கோர்ட்டில் அத்தனை பேரும் எழுந்து நின்றதைப் பார்த்துவிட்டு தானே தனது இருக்கையில் இருந்து தன்னிச்சையாக எழுந்து நின்று அவரை வணங்கினார். ஒரே வரி தீர்ப்பு. ''கேஸ் தள்ளுபடி செய்யப்பட்டது''

ஒரு ஆச்சர்யமான மனிதர் அருட்சோதி வள்ளலார் ஸ்வாமிகள் . அவர் தமிழ்க் கையெழுத்தை பார்த்திருக்
கிறீர்களா?. அந்தக்கால மரக்கட்டை பேனா, நீண்ட உலோக ஊசி மாதிரி ஒரு முனை - ஸ்டீல் பேனா என்பார்கள். அதை மசியில் தோய்த்து காகிதத்தில் எழுதி மை காய்வதற்கு ஒரு காகிதம். அதை BLOTTING பேப்பர் என்ற ஒன்றை ஒரு கட்டையில் சுற்றி ஈர எழுத்தின் மேல் ஒற்றினால் ஈரம் காய்ந்து விடும். இப்படி எழுதப்பட்ட வெள்ளைக்காரன் கால தஸ்தாவேஜ்கள் இன்னும் செயின்ட் ஜார்ஜ் கோட்டை அருங்காட்சி அகத்தில் படிக்கலாம். மாதிரிக்கு ஒரு பக்கத்தை இத்தோடு இணைத்திருக்கிறேன். அதில் எழியுள்ள வாசகம் கீழே தந்துள்ளேன்.

அன்பெனும் பிடியில் அகப்படும் மலையே
அன்பெனும் குடில் புகும் அரசே
அன்பெனும் வலைக்குள் படுபரம் பொருளே
அன்பெனும் கரத்தமர் அமுதே
அன்பெனும் கடத்துள் அடங்கிடும் கடலே
அன்பெனும் உயிர் ஒளிர் அறிவே
அன்பெனும் அணுவுள் அமைந்தபேர் ஒளியே
அன்புரு வாம் பரசிவமே !

வள்ளலாரின் வாக்கியங்கள் நீளமானவை. சற்று நிதானமாக வார்த்தை வார்த்தையாக படித்தால் விஷயம் உள்ளே புகும்.

' உள்ளபடி பசியால் வருந்துகின்ற சீவர்களுக்கு ஆகாரங்கொடுக்க நினைத்தபோது, நினைத்த புண்ணியரது மனம் வேறு பற்றுக்களை விட்டுச் சுத்தக் கரணமாகி நினைத்தபடியால், அந்தப் புண்ணியர்களை
யோகிகளென்றே உண்மையாக அறியவேண்டும். ஆகாரங் கொடுக்க நினைத்தபடி உபசரித்துக் கொடுக்கும்போது, அவருண்ணுவது தாமுண்ணுவதாக அறிந்து களிக்கின்ற படியால், ஞானிகளென்றே உண்மையாக அறியவேண்டும். ஆகாரங்கொடுக்க உண்டு பசி தீர்ந்தவர்களுக்கு அத்தருணத்தில் ஆன்மாவின் உள்ளும் புறத்தும் கீழும் மேலும் நடுவும் பக்கமும் நிறைந்து கரண முதலிய தத்துவங்களெல்லாம் குளிர்வித்துத் தேகமுழுதும் சில்லென்று தழைய முகத்தினிடமாகப் பூரித்து விளங்குகின்ற கடவுள் விளக்கத்தையும் திருப்தியின்பமாகிய கடவுளின் இன்பத்தையும் பிரத்தியட்சத்தில் தரிசித்து அனுபவிக்கின்றார்க ளாதலால், அந்தப் புண்ணியர்கள் கடவுளைக் கண்டவர்களென்றும் கடவுளின்பத்தை அனுபவிக்கின்ற முத்தரென்றும் அறியவேண்டும். பசி நீங்க உண்டு சந்தோஷி'த்தவர்கள் இந்தப் புண்ணியர்களைத் தெய்வமாகப் பாவிக்கின்றார்களாதலால், இவர்களே தெய்வமுமென்று உண்மையாக அறியவேண்டும்.''

ராமலிங்க அடிகளார் ஒரு ம்ருது பாஷி . உரக்கவே பேசமாட்டார். நம்மை மாதிரி எதையாவது சாப்பிட்டுவிட்டு இடுப்பு வேஷ்டியில் கையைத் துடைத்துக் கொள்ளும் ரகமல்ல. ஒரு கைக்குட்டை எப்போதும் இடுப்பில் தொங்கும் . கைகளை வீசி நடக்கவே மாட்டார். எப்போதும் கை கட்டியே காணப்படும். காலும் தலையும் எப்போதும் மறைத்தே வைத்திருக்க வேண்டும் என்ற கொள்கை. ஒரே துணி உடம்பைச் சுற்றி தலையையும் சுற்றி இருக்கும். அதுவும் வெள்ளைத்துணி. காலுக்கு செருப்பு இல்லாமல் நடக்க மாட்டார். எதிரே வரும் யாரையும் முகமோ, நிறமோ ,உருவமோ எதையுமே பார்க்கமாட்டார். அப்படி அவர்கள் உருவம் கண்ணில் பட்டுவிட்டால் என்னால் அவர்களுக்கு ஏதேனும் துன்பம் நேர்ந்து விட்டதோ என்ற பயமும் கவலையும் அவரைத் தின்று விடும்.

நான் மேலே சொன்னதை அவரே அவர் பற்றி சொல்வது:

''கையற வீசி நடப்பதை நாணிக்
கைகளை கட்டியே நடந்தேன்
மெய்யுற காட்ட வெருவி வெண் துகிலால்
மெய்யெலாம் அய்யகோ மறைத்தேன்.
வையமேல் பிறர் தம் கோலமும் நடையும்
வண்ணமும் அண்ணலே சிறிதும்
பைய நான் ஊன்றிப்பார்த்ததே இல்லை.
பார்ப்பனேல் பயமிகப் படைப்பேன் ''

அர்த்தம் தான் மேலே சொல்லியிருக்கிறேனே .

Image may contain: text

No comments:

Post a Comment