ஸ்ரீமத்பாகவதம்- ஸ்கந்தம்6-அத்தியாயம் 16
நாரதர் தன் யோகபலத்தால் இறந்த ஜீவனை வரவழைத்தார். அதனிடம் பின் வருமாறு கூறினார்.
"ஜீவாத்மாவே உனக்கு மங்களம் உண்டாகட்டும்.உன் தாயையும் தந்தையையும் உற்றார் உறவினரையும் பார். அவர்கள் உன்னைப் பிரிந்து மிகவும் துக்கப்படுகிறார்கள். ஆகவே நீ மீண்டும் இந்த உடலில் புகுந்து அவர்களை சந்தோஷப்படுத்துவாயாக."
அதற்கு அந்த ஜீவன் பதிலுரைத்தது.
" எல்லோரும் எல்லோருக்கும் மாறி மாறி பந்துக்களாகவும், மித்திரர்களாகவும், சத்ருக்களாகவும் அந்ததந்த பிறவிகளில் ஆகின்றனர். பண்டமாற்றுப் பொருள் போல் ஜீவனும் வெவ்வேறு பிறவிகளில் மாதா பிதாக்களிடம் மாறி மாறி பிறக்கின்றது.
ஜீவன் நித்தியமானவன். உறவு என்பது அந்தந்த உடலில் உள்ளபோதுதான்.. . மற்றபடி உறவுமில்லை பகையுமில்லை. "
இவ்விதம் கூறிவிட்டு அந்த ஜீவன் போய்விட்டான். இவ்விதம் சித்ர கேதுவும் அங்கிரஸின் உபதேசங்களால் புத்தி தெளிந்தவனாக வீட்டினின்று வெளியேறினான். இந்த்ரியங்களை அடக்கினவனும் பக்தனும் சரண் புகுந்தவனுமான அவனுக்கு நாரதர் ஸங்கர்ஷண வித்தையை உபதேசித்தார்.
சித்ரகேதுவும் நாரதர் உபதேசித்தவாறு அவ்வித்தையை ஏழு நாட்கள் நிலை பெற்ற மனதுடன் ஜலபானம் மட்டும் செய்து ஜபம் செய்தான். ஏழாவது நாள் முடிவில் மந்திரஜபத்தின் மகிமையால் எங்கும் தடையற்று செல்லும் வித்யாதரர்களை ஆளும் பதவியை அடைந்தான்.
அதற்குச் சில நாட்களுக்குப்பின் மந்திர சக்தியால் சங்கர்ஷணன் பகவானுடைய சரண கமலங்கள் சமீபத்தை அடைந்து அவரைத் துதித்தான். அதனால் ப்ரீதியடைந்த ஸங்கர்ஷணன் கூறினார். "
நாரதராலும் அங்கிரசாலும் என்னைப்பற்றிய உபதேசம் பெற்று நீ ஸித்தனாய் விளங்குகிறாய்.
ஸ்வப்னத்திலும் , விழிப்பு நிலையிலும் ஆழ்ந்த தூக்கத்திலும் சாட்சியாய் நிற்பது எதுவோ அதுவே பிரம்மம் என்றறிவாய்.
ஜீவன் தன் நிஜ ஸ்வரூபமான பிரம்மத்தை விட்டு விலகும்போது பிறப்பு இறப்பு என்ற சுழலில் சிக்கிக் கொள்கிறது. இந்த உலக வாழ்க்கையில் துக்கத்திலிருத்து விடுதலை இல்லை. பிரம்மத்தை உணர்ந்தவர் மட்டுமே இதிலிருந்து பூர்ண விடுதலை அடைகின்றனர்.
இதை மனதில் கொண்டு நீ சீக்கிரத்தில் பிரம்மஞானம் பெறுவாயாக. " இதைக் கூறிவிட்டு பகவான் ஹரியானவர் மறைந்தார்.
No comments:
Post a Comment