Thursday, January 3, 2019

Snake bite -Periyavaa

#பாம்பென்றால்_படையும் #நடுங்கும்..... ஏனென்றால்...பாம்பு கடிக்காவிட்டாலும் கூட, அதன் தர்ஶனமே நமக்கு கிலி பிடிக்க வைத்துவிடும்....

அப்போது நம்முடைய ஸ்ரீமடம் கும்பகோணத்தில் இருந்த ஸமயம் ! ஒருநாள் ஸ்ரீ சந்த்ரமௌலீஶ்வர பூஜை முடிந்து, தீர்த்த ப்ரஸாதம் குடுத்துவிட்டு, சிலருடன் பேசிக் கொண்டிருந்தார் நம் பெரியவா.

"ஸாமீ!....தெய்வமே!.....எம் மவனை காப்பாத்துங்க ஸாமீ !..."

திடீரென்று ஒரு குடியானவ பக்தன் அலறிக் கொண்டே பெரியவாளிடம் ஓடிவந்து, பாதங்களில் விழுந்து அழுதான்!

"என்னப்பா?...என்னாச்சு?....."

"ஸாமீ ! எனக்கு ஒரே ஒரு மவன்....கறியாப்பில [கறிவேப்பிலை] கொத்தாட்டம்! வயல்ல ஸாப்பாடு ஸாப்ட்டுகிட்டு இருந்தான் ஸாமீ! அவன..... பாம்பு கடிச்சிருச்சு ஸாமீ !......"

"ஸெரியா சொல்லு..... பாம்பு கடிச்சுதா?....."

"மயக்கம் போட்டு விளுந்துட்டான் ஸாமீ! பாம்புக் கடிக்கி, மந்திரிக்கிறவங்க யாருமே இங்க.. இல்லீங்க ஸாமீ! காப்பாத்துங்க தெய்வமே!..."

பெரியவா எதுவும் பேசாமல், அவருடைய கையில் விபூதியைப் போட்டார்.

"பையனோட நெத்தில பூசு....."

"ஸெரிங்க...."

"வீட்டுல அரப்பு, சீயக்கா பொடி இருக்கா?..."

"இருக்குங்க ஸாமீ !......"

"பையனோட ஒதட்டை பிரிச்சு, அவனோட வாய்ல, அரப்பு பொடியை தடவு! அவன் கசக்கறது-ன்னு துப்பினா.... பாம்பு கடிக்கலேன்னு அர்த்தம்! திதிப்பா இருக்கு-ன்னு சொன்னா.... பாம்பு கடிச்சிருக்குன்னு அர்த்தம்! அதுக்கான வைத்யம் பண்ணணும்...."

"கடவுளே! எம்மவன் பொளைப்பானா?..."

"மொதல்ல போயி.... அரப்பு பொடிய குடு....."

குடியானவன் ஓடிப்போய், பையனின் வாயில் அரப்புப் பொடியை தடவினான்......

"ஐயே!.... கசக்குதுப்பா.....!.."

துப்பினான்!

அப்பாக்காரருக்கு பெரிய நிம்மதி!

"பாம்பு கடிக்கலடா...!.... நம்ம ஸாமீ காப்பாத்திட்டாரு..."

உடனே பையன் நெற்றியில் பெரியவா குடுத்த விபூதியைப் பூசிவிட்டு, அன்று மாலையே, மனைவியையும், மகனையும் பெரியவாளை தர்ஶனம் பண்ண அழைத்துக் கொண்டு வந்தார்.

"இவன... பாம்பு கடிக்கல...! பயப்டாதே! மேல ஏறி ஊர்ந்து போயிருக்கு! அவ்ளோதான்....! பயத்ல மயக்கம் போட்டு விழுந்துட்டான்!....

பையனின் அம்மாவிடம் சொன்னார்.....

வீட்ல, தெனோமும் நல்லெண்ணெய் விட்டு, வெளக்கு ஏத்தி வை!..."

"ஸரிங்க... எசமான்..."

நமஸ்காரம் பண்ணிவிட்டுச் சென்றனர்.

பாம்பு கடித்திருக்கிறதா? இல்லையா? என்பதை சுளுவாக, ஊர்ஜிதப்படுத்தப்படுத்திக் கொள்ள, என்ன ஒரு ஸிம்பிளான test!

இந்தக் காலத்தில், shampoo-வை வாயில் விட்டு test பண்ண முடியுமா? அப்படிப் பண்ணினால், பாம்பு நிஜமாகவே கடித்திருக்காவிட்டால் கூட, கடித்த மாதிரி நுரை வந்து இன்னும் பயமுறுத்தும்!

ஸ்ரீமடத்தில் ஒருநாள் நட்ட நடு நிஸியில், ஶ்ரீமடத்து யானை ஏனோ பயந்து கொண்டு பயங்கரமாக பிளிறியது. ஶிஷ்யர்கள் எல்லோரும் பாவம் அஸந்து தூங்கிவிட்டதால்யாரும் எழுந்திருக்கவில்லை.

ஸாதாரணமாக யானைக்கு..... எலி, தவளை, குருவி போன்ற சிறு ப்ராணிகளிடம் அதிக பயம் உண்டு. ராத்ரி நேரம் எலியோ, தவளையோ வந்திருக்கும் என்று நினைத்து பெரியவா எழுந்து யானை கொட்டகைக்கு போனார்.

அப்படி அந்த கால் நேரத்தில் பெரியவா எழுந்து போனதே..... பரம கருணை!

ஆனால், அங்கே....எலி, தவளை எதுவும் இல்லை! பயங்கரமாக, கருகருவென்று ஒரு பெரிய நல்ல பாம்பு யானைக்கு சற்று தள்ளி, படம் எடுத்து ஆடிக்கொண்டிருந்தது! நடுநடுவில் "உஸ் உஸ்" என்று சீறல் வேறு!

பெரியவாளைக் கண்டதும், யானை பிளிறுவதை நிறுத்திவிட்டது!

இனி என்ன கவலை? பகவானை அழைக்க வேண்டியது மட்டுந்தான் நாம் செய்ய வேண்டியது! இனி பகவான் பார்த்துக் கொள்வான்!... என்பது, யானைக்குக் கூட புரிந்திருக்கிறது!

பாம்பைக் கண்டதும், பெரியவா ஶிஷ்யர்களை கூப்பிட்டார். எல்லோரும் தடி, கம்புடன் ஓடி வந்தனர்.

"இரு! இரு! எதுக்கு கம்பு கிம்பெல்லாம்?"

"பாம்பை அடிக்க!..."

"பாம்பை அடிக்கப்டாது ! நல்லெண்ணெய் வெளக்கு ஏத்தி வை.... பாம்பு போய்டும்"

அதே போல் நல்லெண்ணெய் விளக்கு ஏற்றியதும், அதுவரை கன ஜோராக படம் எடுத்து கொண்டிருந்த பாம்பு, வெளியே ஊர்ந்து போய்விட்டது!

#இறை_உணர்வோடு
           #ஸ்ரீராமஜயம்

No comments:

Post a Comment