நாரதபக்தி சூத்திரம்
51.அனிர்வசநீயம் பிரேமச்வரூபம்
பக்தி என்பது
சொற்களால் விவரிக்க முடியாதது.
பக்தி என்பது அனுபவத்தால்தான் தெரியுமே தவிர சொற்களால் விவரிக்க முடியாதது. மன உணர்ச்சிகள் எதுவுமே விவரிக்க முடியாதவை. உதாரணமாக முதல் குழந்தை பிறந்தவுடன் அனுபவிக்கும் உணர்ச்சியை எவ்வாறு ஒரு பிரம்மச்சாரிக்கு எடுத்துரைக்க முடியும்?
சர்க்கரையின் இனிப்பு அதை சாப்பிட்டவர் மட்டுமே உணர முடியும்.அப்படி இருக்க இந்த உலகானுபவத்திற்கு மேலான இறை உணர்ச்சியை எவ்வாறு எடுத்தியம்ப இயலும்?
கண்டவர் விண்டிலர் விண்டவர் கண்டிலர் என்றபடி இறைவனை நேரில் கண்டுணர்ந்தவர் எவரும் அதைப்பற்றி பேச இயலார். பேசுபவர்கள் அதை இன்னும் உணரவில்லை என்று பொருள். கேனோபநிஷத் சொல்கிறது. 'யஸ்ய அமதம் தஸ்ய மதம், மதம் யஸ்யந வேத ஸ:.' எவர் தெரிந்துவிட்டதாக நினைக்கிறாரோ அவர் தெரிந்து கொள்ளவில்லை. தெரியாது ( அதாவது புத்திக்கு எட்டாதது) என்று எவர் உணர்கிறாரோ அவரே தெரிந்தவர்.,
52.மூகஸ்வாதனவத் –ஒரு ஊமை இனிப்புப் பண்டத்தை சாப்பிட்டால் அவனால் எவ்வாறு அதை விவரிக்க முடியாதோ அது போல.
ஊமையால் தான் பெற்ற இன்பத்தை வார்த்தைகளால் சொல்ல முடியாததைப் போல பக்தனால் பகவதனுபவத்தை பிறருக்கு எடுத்துக் கூற முடியாது.
53. பிரகாசதே க்வாபி பாத்ரே
சில சமயங்களில் சில மனிதர்களிடத்தில் அது வெளிப்படுகிறது.
பக்தி என்பது விவரிக்க முடியாதது என்றால் பக்தர்கள் எவ்வாறு பிறருக்கு வழிகாட்ட முடியும்? அதற்காக பகவான் சிலரிடம் சில சமயங்களில் வெளிப்படும்படி செய்கிறான்.
மஹாத்மாக்கள் ஆழ்வார்கள், மீரா, துகாரம் முதலிய பக்தர்கள் இவர்களைப் பார்த்துப் பிறரும் பக்தி நெறியைப் பின்பற்றுகிறார்கள். சத்சங்கம் என்பது பக்தியை வளர்க்கிறது.
பக்தர்களை எளிதில் கண்டறியலாம் .ஆனால் அவர்களுடைய அனுபவத்தை நம் சொந்த அனுபவத்தால் மட்டுமே அடைய முடியும். ஆயினும் பக்தி மேலீட்டால் அவர்கள் அடையும் ஆனந்தத்தைக் கண்கூடாகப் பார்க்க முடிகிறது.
54.குணரஹிதம் காமனாரஹிதம் ப்ரதிக்ஷணவர்த்தமானம் அவிச்சின்னம் சூக்ஷ்மதரம் அனுபவரூபம்.
பக்தி என்பது குணங்களுக்கு அப்பாற்பட்டது. பயனை எதிர்பார்த்துச் செய்வதில்லை. ஒவ்வொரு க்ஷணமும் வளர்வது , இடையறாதது, சூக்ஷ்மமான உள்ளத்து அனுபவம்.
1. குணரஹிதம்- மூன்று குணங்களால் ஆன உலக அனுபவத்திற்கு அப்பாற்பட்டது. பகவான் குணாதீதன் ஆதலால் அவனைப் பற்றிய அனுபவம் குணங்களை மீறியது.
2. காமனாரஹிதம்- பக்தி என்பது இச்சை அல்ல இச்சை என்பது நம்மைத் தவிர வேறு ஒன்றை விரும்புவது. பக்தி என்பது பகவானுடன் ஒன்றுவது. குழந்தைக்குத் தாயிடம் வரும் அன்புக்கு ஒப்பானது,( ஏதாவது வேண்டி பகவானைத் தொழல் பக்தி அன்று.)
3.ப்ரதிக்ஷண வர்த்தமானம் – இது பக்தியை பிற உணர்ச்சிகளில் இருந்து வேறுபடுத்துகிறது. வெளி விஷயங்களினால் ஏற்படும் சுகமும் துக்கமும் அந்த விஷயங்கள் நீங்கினால் மறைகின்றன. ஒருபோதும் வளர்வதில்லை.பக்தி ஒன்றுதான் அனுபவிக்க அனுபவிக்க வளர்கிறது.
4. அவிச்சின்னம் –தைலதாரையைப் போல் தொடர்ந்து தியானிப்பதே பக்தி. இன்று இருக்கும் நாளை போகும் என்றால் அது பக்தியல்ல.
5. சூக்ஷ்மதரம்- சூக்ஷ்மமான ஆத்ம உணர்வு.
6.அனுபவரூபம்- உணர்ந்தே அறியவேண்டியது. 'தன்னந்தனி நின்று அதுதான் அறிய இன்னம் ஒருவர்க்கிசைவிப்பதுவோ,' கந்தரனுபூதி.
No comments:
Post a Comment