Wednesday, January 2, 2019

Narada bhakti sutram 49,50 in tamil

Courtesy:Smt.Dr.Saroja Ramanujam

நாரத பக்தி சூத்திரம்

49. யோ வேதானபி ஸந்த்யஜதி கேவலம் அவிச்சின்ன அனுராகம் லபதே

வேதங்களை விட்டவனும் அளவில்லாத பக்தியை உடையவனும் மாயையை வெல்கிறான்.

வேதங்களை விட்டவன் என்றால் வேதகர்மாக்களின் பலனை விட்டவன் என்று பொருள். வேதத்தின் கர்மகாண்டத்தில் பல யக்ஞங்கள் ஜபங்கள் இவை இகபர சுகத்தை அடைவதற்காக கூறப்பட்டுள்ளன., பக்தனுக்கு பகவானை அடைவது தவிர வேறு எதிலும் விருப்பம் இல்லை.

வேதத்தை விடுவது என்றால் என்ன? இதற்கு மூன்று படிகள். 
1. ஸ்வதர்மத்தை பின்பற்றி செய்யப்படும் வேத கர்மாக்களை செய்தாக வேண்டும். ஆயினும் இதை கடமை என்ற முறையிலேயே செய்யவேண்டும்.

2. அடுத்து இவைகளையும் பகவானுக்கு அர்ப்பணமாக செய்யவேண்டும்.

3. பக்தியின் பரிபக்குவ நிலையில் எல்லா கர்மாக்களும் தானாகவே விலகிவிடும்.

இதைத்தான் சர்வதர்மான் பரித்யஜ்ய மாமேகம் சரணம் வ்ரஜ என்று கண்ணன் கூறுகிறான். அதனால் ஆத்மாவை அறிந்தவனுக்கு கர்மம் இல்லை.

போக வேண்டிய இடத்தை அடைந்ததும் குதிரையை விட்டு நீங்குவது போலவும், மேல் தளத்தை அடைந்தவன் படியை விட்டு நீங்குவது போலவும், அக்கறையை அடைந்தவன் படகை விட்டுச் செல்வது போலவும் பிரம்மஞானி வேதங்களை விடுகிறான்.

வேதங்கள் ஞான காண்டம் உட்பட பகவானைப்பற்றிய அறிவைத்தான் தரும். அனுபவத்தில் பகவானைக்கண்ட பக்தன் வேதங்களைத் தாண்டிவிட்டவன்.

வேதங்கள் முக்குண ரூபமான மாயைக்குட்பட்டவை . அதைக் கடந்தால்தான் மாயையைத் தாண்ட முடியும். அதனால் தான் கீதையில் 'த்ரைகுண்ய விஷயா வேதா: நிஸ்த்ரைகுண்யோ பவார்ஜுன,' "அர்ஜுனா வேதங்கள் முக்குணங்களைப் பற்றியவை. குணங்களைக் கடந்துவிடு" என்று கூறுகிறார்.

50. ஸ தரதி ஸ தரதி ஸ லோகான் தாரயதி
மாயையைக் கடந்தவன் உலகத்தவரையும் மாயையைக் கடக்க வைக்கிறான். ( ஜடபரதர் ரஹுகணனுக்கு உபதேசித்தது போல். )

46-ம் சூத்திரத்தில் கர்மயோக முறையிலும்
47- ம் சூத்திரத்தில் த்யான யோக முறையிலும்
48- ம் சூத்திரத்தில் ஞான யோக முறையிலும்
49.- ம் சூத்திரத்தில் பக்தியோக முறையிலும் ,
மாயையைக் கடந்தவர் தான் மட்டும் அன்றி பிறரையும் மாயையைத் தாண்டசெய்கிறார் என்பது இந்த சூத்திரத்தின் விளக்கம்.

அடுத்து பக்தியின் குணம் வர்ணிக்கப் படுகிறது

No comments:

Post a Comment