Wednesday, January 2, 2019

Bikshadanar

🌹 *பிச்சாடனர் கோலம் அவதரித்த சிவபெருமான்*🌹

பிச்சாடனர் கோலம் தாருகாவனத்து ரிஷிகளின் ஆணவத்தினை அழிப்பதற்காக சிவனார் எடுத்த கோலமாகும். இக் கோலத்தில் இறைவன் 'பிச்சை உவக்கும் பெருமான்' என்றும் அழைக்கப்படுவார்...

பஞ்சகுண சிவமூர்த்திகளில் பிட்சாடனர் வசீகர மூர்த்தி என்று அறியப்பெறுகிறார்... 

தாருகா வனத்தில் மகரிஷிகள் நிறைந்திருந்தனர். அவர்கள் கல்விச் செருக்கினாலும், தவ வலிமையாலும் ஆணவம் கொண்டிருந்தனர். தாருகாவனத்து முனிவர்கள் சிவபக்தியை விட யாகமே சிறந்தது என்று மமதையில் எண்ணற்ற யாகங்கள் செய்யலானார்கள். அவர்கள் மமதையை அடக்க சிவபெருமான் எண்ணினார்.

உலகில் தாமே பெரியவர்கள் என்றும், மக்களை வழிப்படுத்த தாமே போதுமென்றும், ஒருவருடைய கர்மாவே அவரவர் நற்செயல், தீய செயலுக்குரிய பலனை அளிப்பதாகவும் அவர்கள் நினைத்தனர். எனவே சிவபக்தி தேவையற்றது என்றும் இறைவன் என்ற ஒருவன் தேவையில்லை என்றும் கர்வம் கொண்டனர். இவர்கள் கர்வம் கொண்டால் அவர்களது பத்தினிகள் சும்மா இருப்பார்களா? 

முப்பெருந்தேவியர், தேவலோகப் பெண்கள், பூவுலகப் பெண்கள் யாவரும் தங்களைவிட அழகில் குறைந்தவர்களே என்றும், ஈரேழு உலகத்திலும் பேரழகிகள் தாமே எனவும் ரிஷி பத்தினிகள் ஆணவம் கொண்டிருந்தனர். இத்தகைய ரிஷிகளையும், ரிஷிபத்தினிகளையும் நெறிப்படுத்த விரும்பினார் சிவபெருமான். எந்த ஒரு இடத்திற்கும் தங்கு தடையின்றி சென்று வரவும் எந்த வீட்டுக் கதவையும் சுலபமாகத் தட்டி, வேண்டியதைக் கேட்டுப் பெறவும், பிச்சைக்காரன் கோலமே சிறந்தது என எண்ணினார் ஈசன். எனவே, திடகாத்திரமான வாலிப உடலமைப்புடன் அழகுத் திருமேனி கொண்ட பிச்சைக்காரனாக உருமாறினார். 

திருமாலை, மோகினி அவதாரம் தரிக்கச் செய்து தன்னுடன் அழைத்துக் கொண்டார். தற்போது அமையப்பெற்றிருக்கும் உத்தமர் கோவிலில் இருந்து சுமார் 15 கி.மீ. தொலைவில் முனிவர்கள் யாகம் செய்து கொண்டிருந்த தாருகாவனத்தை அடைந்தார். முதலில் பெண்களின் ஆணவத்தை அடக்க எண்ணிய ஈசன், அவர்கள் இல்லம் சென்று, தனது காந்தக் குரலில் பிச்சையிடுமாறு வேண்டினார். வாட்ட சாட்டமான பிச்சைக்காரனைப் பார்த்த ரிஷிபத்தினிகள் அவர் அழகில் மயங்கினர். மோகினியைப் பார்த்ததும் அவர்களுக்கு வியப்பு! உலகில் இப்படி ஒரு பேரழகியா? 

ஏழு உலகிலும் தாமே அழகிகள் என்று இதுவரை எண்ணி வந்ததை நினைத்து வெட்கினர். அவர்கள் கர்வம் அழிந்தது. பின், ரிஷிபத்தினிகள் பின் தொடர பிச்சாடனரும், மோகினியும் யாகசாலையை அடைந்தனர். புதிய பிச்சைக்காரனின் அழகில் மயங்கி நிற்கும் தங்கள் பத்தினிகளைப் பார்த்ததும் முனிவர்களுக்கு கோபம் ஏற்பட்டது. எனவே, அந்தப் பிச்சைக்காரனை அழிக்க முற்பட்டனர். யாக குண்டத்திலிருந்து ஒரு யானையை தோன்றச் செய்து, அதை பிச்சாடனரை நோக்கி ஏவினர். ஆவேசமாக வந்த யானையை வீழ்த்தி அதன் தோலை உரித்து உடலில் அணிந்து கொண்டார் பிச்சாடனர். 

பிறகு அவர்கள் அனுப்பிய புலியைக் கொன்று அதன் தோலை இடையில் ஆடையாக உடுத்திக் கொண்டார். அடுத்து அனுப்பப்பட்ட பாம்பும், பிற நச்சுப் பிராணிகளும் அவருடைய அணிகலன்களாக மாறின. அவர்கள் அனுப்பிய பூதத்தை தனது வலது பாதத்தின் கீழ் போட்டு வதம் செய்தார். அவர்கள் அனுப்பிய மந்திரங்களை உடுக்கை ஒலியாக கையில் ஏந்தினார். வேதங்களை பாத சிலம்பின் ஒலியாக மாற்றினார். சூலத்தை தோளில் ஏந்தி, தன் விரிசடை எட்டுத் திக்கும் விரிந்தாட ஈசன் திருநடனம் புரிந்தார். வந்திருப்பது பரமேஸ்வரனே என உணர்ந்த முனிவர்கள் தங்கள் தவறை மன்னிக்கும்படி அவரது பாதங்களில் விழுந்து வணங்கினார்.  

கல்வி கற்பது மனிதன் மேம்படவே என்றும், தவம் இருப்பது உலகிற்கு நன்மை செய்வதற்கே என்றும் முனிவர்களுக்கு உணர்த்திய சர்வேஸ்வரன் தனது பிச்சாடனர் வேடத்தை கலைத்தார்

திருச்சிக்கு அருகே உத்தமர் கோயிலில் இந்த பிச்சாடனருக்குத் தனிச்சந்நதி உள்ளது. அந்த சந்நதியின் அருகே அன்னை பராசக்தி, சௌந்தர்ய பார்வதியாக தனியே அருள்பாலிக்கிறாள். முனிவர்கள் மற்றும் அவரது மனைவிகளின் கர்வங்களை அழித்த பிச்சாடனரை வணங்குவதால் தம்மிடம் உள்ள கர்வம் முதலான தீய குணங்கள் மெல்ல மெல்ல கரையும் என நம்புகின்றனர் பக்தர்கள். 

திருச்சி - சேலம் சாலையில் திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து 15 கி.மீ. தொலைவில் இந்த ஆலயம் உள்ளது🌹

No comments:

Post a Comment