திருப்பாவை-கூடாரை வெல்லும்
27. கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா! உன்தன்னைப்
பாடிப்பறை கொண்டு யாம் பெறும் சம்மானம்
நாடுபுகழும் பரிசினால் நன்றாக
சூடகமே தோள் வளையே தோடேசெவிப் பூவே
பாடகமே யென்றனைய பல்கலனும் யாமணிவோம்
ஆடையுடுப்போம் அதன் பின்னே பாற்சோறு
மூடநெய் பெய்து முழங்கை வழிவாரக்
கூடியிருந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய்
கூடாரை வெல்லும் சீர்- சீர் என்றால் அவனுடைய குணங்கள். அதன் மூலம் கூடாரை, அவனிடம் வராதவரைக் கூட வசப்படுத்துகிறானாம்.வாலி முதலில் ராமனைக் குறை கூறினான். பிறகு அவனை உணர்ந்து புகழ்ந்து தன் மகனை அவனிடம் ஒப்படைத்தான். தாரையும் மந்தோதரியும் அவர்கள் கணவனைக் கொன்ற பிறகும் அவனைப் புகழ்ந்தனர். ராமன் ராவணனை வீரத்தாலும், சூர்பனகையை அழகினாலும், விபீஷணனை குணத்தினாலும் வென்றான்.
கோவிந்தா- இந்த நாமம் பக்தர்களுக்கு மட்டும் அன்றி பகவானுக்கும் பிரியமானது. (இந்த நாமத்தின் பல்வேறு பொருள்கள் அடுத்த பாசுரத்தில் விவரிக்கப்படும்)
உந்தன்னை----சன்மானம்- என்ன சன்மானம் என்பதைப் பிறகு சொல்கிறாள்.
பல்கலனும் யாம் அணிவோம் ஆடை உடுப்போம்- மையிட்டெழுதோம் மலரிட்டு நாம் முடியோம் என்று ஆரம்பத்தில் சொன்னது உன் அருளைப் பெரும் வரைதான். பின்னர் எல்லா ஆபரணங்களும் அணிந்து புத்தாடை உடுப்போம் என்கிறாள்.
அதன்பின்னே பாற்சோறு மூட நெய்பெய்து முழங்கை வழி வார- நெய்யுண்ணோம் பாலுண்ணோம் என்றதற்கு மாற்றாக உன் அருள் கிடைத்துவிட்டால் நெய் வழியும் சர்க்கரைப் பொங்கல் உண்போம் என்கிறாள்.அதன் பின்னே என்றது, கோவிந்த நாமத்தைப் பாடிய பின்னர் என்று பொருள். நாம சங்கீர்த்தனம் செய்தபின்தானே பிரசாதம்.
பதினாறாவது பாசுரம் பகவானின் இருப்பிடத்தை அடைவதைக் கூறுகிறது. அதிலிருந்து பார்த்தால் இது பதினொன்றாவது பாசுரம் ஆகிறது. அதாவது ஏகாதசம். ஏகாதசி விரதம் முடிந்த பின்னால் சர்க்கரைப்பொங்கலுடன் சாப்பிடுவது நியாயம்தானே!
முழங்கை வழி வார- மூட நெய் பெய்து அதை ஏன் முழங்கை வழி வார விட்டு நிற்கவேண்டும், சாப்பிட வேண்டியதுதானே? மூட நெய் என்றால் அப்போது உருக்கின நெய். அது மூடும்படி செய்த சர்க்கரைப் பொங்கல். அதை கையில் வாங்கியும் அவன் திருமுகத்தைப் பார்த்துக் கொண்டே நின்று அதை உண்ண மறந்து விடுகின்றனராம்.
கூடி இருந்து குளிர்ந்து- அவனோடு கூடவே பிரிவு என்பதையே அறியாமல் இருப்பது. சாயுஜ்யம். ஆண்டாள் ஆயர்சிறுமியர் என்று கூறுகையில் அவன் கண்ணன் இருந்த ஆயர்பாடியில் உள்ள சிறுமியராக தங்களைக் கூறுகிறாள். அது ஸாலோக்கியம். நந்தகோபன் மாளிகையில் வந்தது சாமீப்யம். பாஞ்ச ஜன்யம் முதலியவைகளைக் கேட்டது .சாரூப்யம். இந்த பாசுரம் சாயுஜ்யம்.
தோள்வளையாவது சங்கு சக்கர அடையாளம். தோடு என்பது திருமந்திரம், அஷ்டாக்ஷரம். செவிப்பூ த்வய மந்திரம். பாடகமாவது சரமச்லோகம்., பகவான் பாதத்தில் சரணம் அடைவது.
பல்கலன் என்பது பக்தனின் சிறந்த ஆபரணங்களான பக்தி, ஞானம், வைராக்கியம்.
ஆடை என்பது சேஷத்வம்.
பாற்சோறு கைங்கர்யம்.
மூடநெய்பெய்து என்றால் பகவத்சேவையில் கிடைக்கும் ஆனந்தம்.
இதிலும் அடுத்த இரண்டு பாசுரங்களிலும் கோவிந்தா என்ற நாமம் கூறப்படுகிறது. த்ரௌபதி மூன்று முறை கோவிந்தா என்றாள். கோதையும் மூன்று முறை கோவிந்தா என்கிறாள். கோவிந்தா நாமமே த்ரௌபதியைக் காத்தது.
No comments:
Post a Comment