திருப்பாவை-மாலே மணிவண்ணா
26. , மாலே! மணிவண்ணா! மார்கழி நீராடுவான்
மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல்
ஞாலத்தையெல்லாம் நடுங்க முரல்வன
பாலன்ன வண்ணத்து உன் பாஞ்சசன்னியமே
போல்வன சங்கங்கள் போய்ப்பாடுடையனவே
சாலப்பெரும் பறையே பல்லாண்டிசைப்பாரே
கோல விளக்கே கொடியே விதானமே
ஆலினிலையாய்! அருளேலோர் எம்பாவாய்
இந்தப் பாசுரம் 26-வது. இந்த எண் பரமாத்மாவைக் குறிக்கிறது. எப்படி என்றால், பிரக்ருதியின் தத்துவங்கள் இருபத்து நான்கு.அதாவது மூலப்ரக்ருதி, புத்தி அல்லது மஹத், அஹங்காரம், ஐந்து ஞாநேத்ரியங்கள் ஐந்து கர்மேந்த்ரியங்கள், மனஸ், பஞ்ச தன்மாத்திரைகள் ( சூக்ஷ்ம பஞ்ச பூதங்கள்) பஞ்ச பூதங்கள் இவையாவன. புருஷன் அல்லது ஜீவாத்மா 25-வது 26 பரமாத்மா.
26 என்பது அஷ்டாக்ஷரத்தையும் த்வய மந்திரத்தையும் குறிக்கும் என்று கருதப்படுகிறது. 2+6=8. இது அஷ்டாக்ஷரம். 2 என்பது த்வயம்., 6 என்பது அதன் 6 பதங்கள்,.
மாலே – திருமாலே கண்ணனாக வந்துள்ளான் என்று பொருள்.
மணிவண்ணா- இந்த்ரநீல மணி போல் வண்ணமுடையவன்
மேலையார் செய்வனகள் – முன்னோர்கள் செய்தபடி நாங்களும் செய்ய முன்வந்துள்ளோம்.
அதற்கு வேண்டுவன,
1. சங்கம் – பாஞ்சஜன்யம் போல்வன
2. பறை – கொட்டும் வாத்தியம்.
3. பல்லாண்டிசைப்பாரே- பெருமாள் புறப்பாட்டின் போது பல்லாண்டு பாடுவோர்.
. 4 கோல விளக்கு-ஊர்வலத்தின் போது கொண்டு செல்லும் விளக்குகள்
.5. கொடி- ஊர்வலத்தில் பிடிக்கும் கொடி
.6. விதானம்- பெருமாள் மேல் உள்ள பந்தல்
இவைகளுள் சங்கத்துக்கு மட்டுமே மூன்று வரிகள். ஏனென்றால்,
1. மூன்று மாத்திரைகள் கொண்ட ப்ரணவத்துக்கு ஒப்பானது.
2. கடலில் பிறந்து பஞ்சஜனன் என்றார் அசுரனின் உடலில் வளர்ந்து, கடைசியில் பகவானின் கையில் வந்தமர்ந்தது ஆகிய மூன்று நிலைகள்.
3.கிருஷ்ணன் அதேபோல மதுரையில் பிறந்து, கோகுலத்தில் வளர்ந்து துவாரகையில் குடியேறினான்.
போய்ப்பாடு உடையனவே –பாஞ்ச ஜன்யம் உள்ளே விசாலமானது.
பாலன்ன வண்ணத்து- வெண் சங்கு உரத்த சப்தத்த்தைக் கொடுக்கும். வெண்மை சத்துவ குணத்தைக் குறிக்கும்
சாலப்பெரும்பறை- பெரியதாக உள்ள பறை வாத்தியமானது மிகுந்த சப்தத்தை எழுப்புவதால் மற்ற சப்தங்கள் காதில் விழாமல் பெருமாளின் திவ்ய மங்கள ஸ்வரூபத்தில் மனதை செலுத்த முடியும்.
கண்ணன், "எனக்கிருப்பது ஒரே சங்கு அதை எப்படி உங்களுக்குக் கொடுப்பேன் ,' என்று சொல்வதை எதிரபார்த்தது போல ,
ஆலின் இலையாய் -ஒரு ஆலிலை மேல் பள்ளி கொண்டு இந்த உலகத்தையே ஸ்ருஷ்டித்தவனுக்கு பாஞ்ச ஜன்யம் போன்ற சங்கங்களை உண்டாக்குவது ஒரு பெரிய காரியமா? என்கிறாள்.
ஆலமரம் ஓர் சேனைக்கே நிழல் கொடுக்க கூடியது. அதேபோல பகவானும் ஸாதுக்களுக்கெல்லாம் நிழல் போன்றவன்.
இந்தப்பாசுரம் சரணாகதியின் ஆறு அங்கங்களைக் குறிக்கும். அவையாவன,
1. ஆனுகூல்ய சங்கல்பம்-அவனுக்கு அனுகூலமான வேத விஹித கர்மங்களையே செய்ய வேண்டும் என்ற ஸங்கல்பம்.
சாலப்பெரும்பறையே பறை என்பது –நோன்பைக் குறிக்கும் விஹிதகர்மா. பெரும் பறை என்பது அதைச்செய்வதில் தீவிர ஈடுபாடு.
2.ப்ராதிகூல்ய வர்ஜனம்- செய்யவேண்டாம் என்று விலக்கியவைகளை விட வேண்டும். ஞாலத்தை எல்லாம் ----போய்ப்பாடுடையனவே- வெண் சங்கு சத்வ குணத்தைக் குறிக்கிறது. மனத்தூய்மையுடன் ரஜஸ் தமஸ் இவைகளை விடுதல்.
பாஞ்ச ஜன்யம்- பஞ்ச இந்திரியங்களால் ஏற்படும் செய்கைகள் . பாலன்னவண்ணமாக அதாவது சத்வகுணம் மேலோங்கி இருப்பது. போய்ப்பாடு என்றால் இந்த்ரியங்களின் வேண்டாத செயலகளைத் தவிர்ப்பது.
3.மஹா விசுவாசம்- அவனிடம் அடைக்கலம் புகுந்தால் ரக்ஷித்தே தீருவான் என்ற திட நம்பிக்கை.
கோல விளக்கு – நம்பிக்கை குத்துவிளக்கின் ஜ்வாலையைப் போல நேராகவும் உறுதியாகவும் இருக்க வேண்டும்
4.கோப்த்ருத்வவரணம் –அவனையே பிரார்த்திக்க வேண்டும்.
விதானம் மேலே இருந்து காப்பதைப்போல அவன் நம்மை காக்கவேண்டும் என்று ப்ரார்த்தித்தல்.
5. கார்பண்யம் அல்லது ஆகிஞ்சன்யம்- மற்ற உபாயங்களில் நாட்டம் இல்லாமல் இருத்தல்.
கொடி- கொடி என்றால் படரும் கொடியையும் குறிக்கும் ஆதலால் கொடி படரும் கொழு கொம்புபோல் அவனையே அண்டி இருப்பது
6. பலத் தியாகம்- அவனை உபாசிக்கும் பலனையும் அவனுக்கே அர்ப்பணித்தல்.
பல்லாண்டிசைப்பார். – அவனைப் பாடும் பணி தவிர வேறு எதையும் வேண்டாத மனப்பாங்கு.
No comments:
Post a Comment