திருப்பாவை- ஏற்ற கலங்கள்.
21. ஏற்ற கலங்கள்
ஏற்ற கலங்கள் எதிர் பொங்கி மீதளிப்ப
மாற்றாதே பால்சொரியும் வள்ளல் பெரும்பசுக்கள்
ஆற்றப் படைத்தான் மகனே! அறிவுறாய்
ஊற்றம் உடையாய்! பெரியாய்! உலகினில்
தோற்றமாய் நின்ற சுடரே! துயிலெழாய்
மாற்றார் உனக்கு வலிதொலைந்து உன்வாசற்கண்
ஆற்றாது வந்துஉன் அடிபணியுமா போலே
போற்றியாம் வந்தோம் புகழ்ந்தேலோர் எம்பாவாய்.
ஏற்ற கலங்கள் -----பெரும் பசுக்கள். பசுக்கள் வள்ளல் போல் பால் கொடுக்கையில் கறப்பவன் தகுந்த பாத்திரத்தில் கறப்பது அவன் திறமை. அதேபோல பகவான் வள்ளலென எல்லாம் தரச் சித்தமாயிருக்கையில் நாம் அல்ப பலனை வேண்டுவது நம் குற்றமேயன்றி அவன் குற்றமன்று.
மாற்றாதே – எல்லோருக்கும் சமமாகப் பால் கொடுக்கத் தயாராய் உள்ள பசுக்கள் போல பகவானும் எது கேட்டாலும் தரத் தயாராக உள்ளான் ஏற்ற கலங்கள் எடுத்துச்செல்வது எவ்வாறு கறப்பவனின் திறமையோ அதுபோல நாம் எதைக் கேட்கவேண்டும் என்ற அறிவைப் பெற வேண்டும்.
பரமபதத்தையே தரச் சித்தமாயுள்ள அவனிடம் அல்ப உலக போகங்களைக் கேட்பது குபேரனிடத்தில் சென்று சில பொற்காசுகள் கேட்பதற்கொப்பானது.
ஆற்றப்படைத்தான் –இது நந்தகோபரைக் குறிக்கிறது. ஆயர்களுக்கு பசுக்கள் தான் செல்வம். கண்ணன் தான் வருவதன் முன்பே நந்தகோபரை பெரும் செல்வம் உடையவ்ராகச் செய்துவிட்டானாம்.
ஊற்றம் உடையாய் – இரட்சிக்கவும் கருணை காட்டவும் வல்லவன்:
பெரியாய் – வைதாரையும் வாழவைக்கும் உயரிய பண்புள்ளவன்.
ஊற்றம் உடையாய்-----சுடரே- இந்த வரிகள் கண்ணன் பரப்ரம்மமே என்பதைக் காட்டுகின்றன.
எவரிடம் இருந்து எல்லாம் தோன்றினவோ எவரால் எல்லாம் காக்கப் படுகின்றனவோ எவரிடம் முடிவில் எல்லாம் ஒடுங்குகின்றனவோ அதை அறிக. அதுதான் பிரம்மம் என்கிறது உபநிஷத்.
ஊற்றம் உடையாய் என்பது இதைத்தான் குறிப்பிடுகிறது. பெரியாய் என்பது பிரபஞ்ச சிருஷ்டியைக் குறிப்பிடுகிறது.
உலகெலாம் தோற்றமாய் நின்ற எனபது அவனுடைய சர்வவ்யாபித்துவம்.
சுடரே- எல்லா உயிர்களுக்கும் உள்ளே அந்தராத்மாவாக இருப்பவன். அந்தர்யாமித்துவம்.
அல்லது ஊற்றம் உடையாய் என்பது பரத்வத்தையும், பெரியாய் என்பது வ்யூஹ ரூபத்தையும்., உலகெலாம் தோற்றமாய் என்பது விபவரூபத்தையும் , நின்ற என்பது அர்சாவதாரத்தையும் சுடரே என்பது அந்தர்யாமியையும் குறிக்கும் என்றும் கொள்ளலாம்.
ஊற்றம் உடையாய் -பரவாசுதேவன் ஆவரண ஜலத்தைப் போன்று துர்லபம்., அது வைகுண்டத்தில் மட்டுமே காணக்கிடைக்கும் ரூபம்.
பெரியாய்- வ்யூஹ ரூபம் . திருப்பாற்கடல் போன்று தேவர்களால் மட்டுமே அடையக்கூடியது.
உலகெலாம் தோற்றமாய் –விபவ ரூபம் . பருவ மழை போன்று அவ்வப்போது எல்லோரும் காண கிடைப்பது.
நின்ற- எப்போதும் எல்லோரும் எளிதில் காண அர்ச்சவதாரமாய் (விக்ரஹரூபம்) நின்றது எப்போதும் கிடைக்கும் ஏரி, குளம் போன்ற ஜலம்.
சுடரே- அந்தர்யாமியாக கண்ணுக்குத் தெரியாமல் ஊற்று ஜலம் போல தோண்டத் தோண்ட வருவது.
மாற்றார் ----வந்து நின்றோம்- பகைவர்கள் உனக்கு உனக்கடிமை செய்ய வந்து நிற்பது போல நாங்கள் உன் குணங்களுக்குத் தோற்று உன் திருவடிகளை ஆச்ரயிக்கிறோம்.
ராமானுஜரைப் போன்ற ஆச்சார்யர்கள் ஆற்றப் படைத்தான் . அவர்களுடைய சிஷ்யபரம்பரையே பெரும்பசுக்கள். ஏற்ற கலம் என்றால் தகுந்த சிஷ்யர்களிடம் மாற்றாதே பால் சொரிவது போல எல்லாம் உபதேசிப்பார்.
ஆற்றப்படைத்தான் என்பது ராமானுஜர் என்று வைத்துக் கொண்டால் அவர் மகன் என்பது யார்? செல்வபிள்ளாய் என்று அவரால் அழைக்கப்பட்ட பகவானேயாகும்.
No comments:
Post a Comment