Monday, January 7, 2019

20 th paasuram - mupattu moovar thiruppavai in tamil

Courtesy:Smt.Dr.Saroja Ramanujam

திருப்பாவை-2௦- முப்பத்து மூவர்

20.முப்பத்து மூவர் அமரர்க்கு முன்சென்று
கப்பம் தவிர்க்கும் கலியே! துயிலெழாய்
செப்பம் உடையாய் திறலுடையாய் செற்றார்க்கு
வெப்பம் கொடுக்கும் விமலா! துயிலெழாய்
செப்பென்ன மென்முலைச் செவ்வாய்ச் சிறு மருங்குல்
நப்பின்னை நங்காய்! திருவே! துயிலெழாய்
உக்கமும் தட்டொளியும் தந்துஉன் மணாளனை
இப்போதே எம்மை நீராட்டேலோர் எம்பாவாய்

முப்பத்துமூவர் அமரர் – வசுக்கள் 8, ருத்ரர்கள் 11, ஆதித்யர்கள் 12, இந்திரன், பிரஜாபதி.

முன் சென்று- அமரர்களிலும் முதன்மையானவன்-' அயர்வறும் அமரர்கள் அதிபதி.' அவர்களுக்கு முன்னாள் சென்று அவரைக் காப்பவன்.

.கப்பம் தவிர்க்கும் – கப்பம் என்றால் கம்பம் அதாவது நடுக்கம் என்ற பொருள். அமரர்களின் பயத்தைப் போக்குபவன்.

கலியே- பெருமை உடையவனே
செப்பம் – ஆர்ஜவம் அல்லது நேர்மை . திரிகரண சுத்தம் . மனஸ், வாக்கு , உடல் இவைகளில் நேர்மை..

திறலுடையாய்-நேர்மையுடன் பராக்ரமமும் சேர்ந்துள்ளது . இல்லாவிடில் நேர்மைக்கு மதிப்பு இருக்காது.

செற்றார் –செற்றார் என்றால் எதிர்ப்பவர்கள். பகவானுக்கு எதிரிகளே கிடையாது. ஸமோஹம் ஸர்வ பூதேஷு , எல்ளா உயிர்களையும் சமமாக பாவிக்கிறேன் என்றவன். ஆயினும் பக்தர்களுக்கு தீங்கிழைப்பவ்ர்களை எதிரியாக பாவித்து தண்டிக்கிறான்.

விமலா- விரோதியின் குற்றத்தை தண்டித்து அவனை தூயவன் ஆக்குவான்.
'அமலன் ஆதிபிரான்' என்ற பாசுரத்தில் திருப்பாணாழ்வார் பகவானை அமலன் விமலன் நிமலன் என்கிறார். 
அமலன்- மலப்ரதிபடன்- பாவங்களை அழிக்கிறவன். 
விமலன் – அக்ஞானம் முதலிய தோஷமற்றவன்.
நிமலன்-அணுகுவதற்கெளியவன்.

திருவே- திருமகளே நப்பின்னையாகக் கூறப்படுகிறாள். கருணையே உருவானவள் ஆதலால் அவளை முதலில் எழுப்புகிறார்கள். பகவான் கேட்டபிறகுதான் ரக்ஷிப்பான் . ஆனால் திருமகளோ 'பாபாநாம் வா சுபானாம் வா வதார்ஹாணாம் ப்லாவங்கம, கார்யம் கருணம் ஆர்யேண , ந கச்சித் நாபராத்யாதி,' என்று சீதாபிராட்டியாக , "பாவியோ நல்லவனோ , கொல்லத் தகுந்தவனோ யாராயினும் உயர் குணத்தோர் மன்னிக்க வேண்டும். குற்றம் செய்யாதவர யார்? " என்றுரைத்தவள்.

உக்கம் , தட்டொளி, - உக்கம் என்பது விசிறி, தட்டொளி என்பது கண்ணாடி. இதன் உண்மை அர்த்தமென்னவென்றால், அஹங்கார மமகாரங்களை விசிறி அகற்றி, ஆத்மச்வரூபத்தைக் கண்ணாடி போல் காட்டுவது.

  
 

No comments:

Post a Comment