Thursday, December 20, 2018

Kamakshi padi alappa - Periyavaa

காமாக்ஷி படியளப்பாள்னு சொன்னதை நம்ப முடியாம முணங்கினியே...இப்போ அவ படியளந்ததை நீ படியால அளந்துண்டு இருக்கே போல இருக்கு!"-பெரியவா

(இந்த பூமி வறண்டு கிடக்கறதைப் பார்த்தாலே தெரியறதே.அம்பாள் படியளக்கறது"-முணங்கின மடத்து நிர்வாகியிடம் பெரியவா சொன்னது மேலே)

கட்டுரையாளர்-பி.ராமகிருஷ்ணன்
நன்றி-குமுதம் பக்தி)
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.

1934-ம் வருஷம் காசியாத்திரை நடந்துண்டு இருந்த சமயத்துல, ஒருநாள் வறட்சியான கிராமத்துவழியா நடந்துண்டு இருந்த மகாபெரியவா, தான் அந்த இடத்துல ரெண்டு மூணு நாள் தங்கப்போறதாக திடீர்னு அறிவிச்சு, முகாமை அங்கே அமைக்கச் சொல்லிட்டு ஒரு ஆலமரத்தடியில் உட்கார்ந்துட்டார்.

அவரோட யாத்திரை போயிண்டிருந்த மடத்துக்காரா பலரும் ஆசார்யா அங்கே தங்கறதுக்கான ஏற்பாடுகளை அவசர அவசரமா செய்ய ஆரம்பிச்சா.

எல்லாரும் பரபரப்பா இருந்த அந்த சமயத்துல ஒருத்தர் மட்டும் கொஞ்சம் சிடுசிடுப்பா இருந்தார்.'திடுதிப்புன்னு இப்படிச் சொன்னா எப்படி? காய்ஞ்சு கெடக்குற இந்த கிராமத்துல தங்கினா, இந்த யானை,ஒட்டகைக்கெல்லாம் தீனிபோடறது எப்படி? மடத்தை நிர்வாகம் பண்றதுக்கே சிரம தசையில இருக்கறப்போ, தாரித்ரியம் பிடிச்சாப்புல இருக்கிற இந்த இடத்துல தங்கினா எடுத்து செலவழிக்க மடத்தில என்ன கொட்டியா கிடக்கு!" கொஞ்சம் வேகமாவே வார்த்தைகள் வந்தது.மடத்து நிர்வாகியான அவர்கிட்டேர்ந்து.

மகாபெரியவா பீடத்துக்கு வர்றதுக்கு முன்னாலேர்ந்தே மடத்துல இருக்கிற அவர், எதனாலேயோ அன்னிக்கு கொஞ்சம் கடுமையான வார்த்தைகளை விட்டுட்டார்.

அவர் கொஞ்சம் சத்தமாவே பேசினதால,விஷயம் நேரடியாவே மகாபெரியவா காதுல விழுந்தது.எல்லாரும் மகாபெரியவா என்ன சொல்லப் போறாரோ! ஒரு வேளை கோவிச்சுப்பாரோன்னெல்லாம் நினைச்சு படபடப்பா பார்த்துண்டிருந்தா.

தன்னைத்தான் குறை சொல்றார்னு தெரிஞ்சும் கொஞ்சமும் வருத்தமோ கோபமோ இல்லாம, சாந்தமா அவரைக் கூப்பிட்டார், மகாபெரியவா.

"என்ன ஆயிடுத்து இப்போன்னு இப்படிப் பதட்டப்படறே? என்னவோ நீயும் நானும்தான் இந்த மடத்தை ரக்ஷணம் பண்ணிண்டு இருக்கோமா என்ன? எல்லாத்தையும் அந்தக் காமாக்ஷின்னா நடத்திண்டு இருக்கா? நல்ல காரியத்தை உத்தேசித்து நாம யாத்ரை பண்ணிண்டிருக்கோம். லோகத்துக்கே படியளக்கற அந்தக் காமாக்ஷி கைவிட்டுடுவாளா என்ன? எல்லாம் அவ பார்த்துப்பா? அமைதியாகச் சொன்ன ஆசார்யா அதுக்கப்புறம் கொஞ்ச நேரம் தியானத்தில் ஆழ்ந்துட்டார்.

"ஆமாம் இந்த பூமி வறண்டு கிடக்கறதைப் பார்த்தாலே தெரியறதே.அம்பாள் படியளக்கறது" மெதுவா முணுமுணுத்துண்டார் அந்த ஆசாமி.

கொஞ்சநேரம் ஆச்சு.மழைக்காலம் தொடங்கறதுக்கு முன்னால வரைக்கும் எங்கே இருந்ததுன்னே தெரியாம திடீர்னு புறப்பட்டு வருமே புற்று ஈசல். அந்த மாதிரி கூட்டம் கூட்டமா பக்தர்கள் புறப்பட்டு பரமாசார்யாளை தரிசனம் பண்ணறதுக்காக அங்கே வர ஆரம்பிச்சுட்டா.

எந்த அறிவிப்பும் கிடையாது.மகா பெரியவாளோட யாத்ரைப் பாதையில அங்கே தங்கப்போறதான முன்னேற்பாடும் செய்யப்படலை. திடுதிப்புன்னு ஆசார்யாளா தீர்மானம் பண்ணி முகாமிட்ட இடம். அப்படி இருக்கறச்சே இவ்வளவு பேருக்கு விஷயம் தெரிஞ்சுது?ன்னு எல்லாரும் ஆச்சரியப்பட்டுண்டு இருக்கறச்சே, இன்னொரு ஆச்சர்யமும் நடந்தது.

ஆசார்யாளை தரிசனம் பண்ணறதுக்காக கனி வர்க்கம், புஷ்பம் எல்லாம் எடுத்துண்டு வந்திருந்ததோட,பலரும் அப்போதைய புழக்கத்துல இருந்த வெள்ளி நாணயம், ஒரு ரூபாய் நாணய காசுகளா கொண்டு வந்து மகாபெரியவாகிட்டே சேர்ப்பிக்க ஆரம்பிச்சுட்டா.

ரெண்டு நாள் அங்கே முகாமிட்டிருந்துட்டு மறுநாள் கார்த்தால அங்கேர்ந்து புறப்படலாம்னு சொன்னார் மகாபெரியவா.

அப்போ அங்கே சேர்ந்திருந்த நாணயங்களை எண்ணி முடியாதுன்னு தீர்மானிச்சு, படியால அளந்து அளந்து கொட்டி மூட்டைகளா கட்ட ஏற்பாடு பண்ணினார், மடத்தோட நிர்வாகி.

அந்த சமயத்துல மெதுவா அங்கே வந்த ஆசார்யா,

"என்ன, லக்ஷ்யம் நல்லதா இருந்தா காமாக்ஷி படியளப்பாள்னு சொன்னதை நம்ப முடியாம முணங்கினியே...இப்போ அவ படியளந்ததை நீ படியால அளந்துண்டு இருக்கே போல இருக்கு!" அமைதியா புன்னகை தவழ சொன்னார்.

யாத்ரைப் பாதையில இந்த இடத்துல மடத்தோட சிரமதிசை தீர்றதுக்கு அம்பாளோட அனுகிரஹம் கிடைக்கப் போறதுன்னு மகாபெரியவாளுக்கு முன்கூட்டியே தெரிஞ்சுதா? இல்லை,அம்பாள் படியளப்பாள்னு சொன்ன பரமாசார்யாளோட வாக்கைக் காப்பாத்தறதுக்காக அப்படி ஒரு அற்புதத்தை அந்த அம்பாள் நடத்தினாளா?எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் ஆயிரம் பேர் தரிசிக்க வந்தது எப்படி?

பரமாசார்யாளுக்கு மட்டும்தான் தெரியும்

No comments:

Post a Comment