Thursday, December 20, 2018

5th paasuram maayanai mannu- thiruppavai in tamil

Courtesy:Smt.Dr.Saroja Ramanujam

திருப்பாவை- மாயை மன்னு

5.மாயனை மன்னு வட மதுரை மைந்தனை 
தூய பெருநீர் யமுனைத் துறைவனை 
ஆயர்குலத்தினில் தோன்றும் அணிவிளக்கை 
தாயைக் குடல் விளக்கம் செய்த தாமோதரனை 
தூயோமாய் வந்து நாம் தூமலர் தூவித்தொழுது 
வாயினால் பாடி மனதினால் சிந்திக்க 
போய பிழையும் புகுதருவான் நின்றனவும் 
தீயினில் தூசாகும் செப்பேலோரெம்பாவாய்

.கண்ணனின் பிறப்பிலிருந்து அவன் மதுரை சென்றது வரை எல்லாமே அவன் மாயத்தைக் காட்டுபவையாதலால் அவனை மாயன் என்கிறாள்.

தூயபெருநீர் யமுனைத்துறைவன்- யமுனைத்துறையில் அவன் செய்த லீலைகள் குறிப்பிடப்படுகின்றன. தூய யமுனை என்றால் கண்ணன் தொடர்பினால் தூயதாக உள்ள என்று பொருள் . மேலும் தூய என்பதற்கு இன்னொரு பொருள், யமுனை கம்சனிடம் பயம் இல்லாமல் வசுதேவருக்கு வழிவிட்டது. ராவணனுக்கு பயந்து ராமன் கேட்டபோது பதில் கூறாமல் இருந்த கோதாவரியைப் போல இல்லாமல். கோதை யின் பெயர் கொண்டதாலேயே கோதாவரி தூயதாயிற்று என்று வேதாந்த தேசிகர் கோதாச்துதியில் சொல்கிறார்.

ஆயர்குலத்தினில் தோன்றும் – ஆயர்குலத்தில் அவன் தோன்றினான் ,பிறக்கவில்லை. ஏனென்றால் பகவானுக்குப் பிறவி என்பது கிடையாது. ஸம்பவாமி ஆத்மமாயயா என்று கீதையில் சொன்னது போல தன் மாயையால் பிறப்பதுபோல் தோன்றுகிறான். எங்கேயாவது நான்கு கரங்களில் ஆயுதங்களுடநும் ஆபரணங்களுடனும் ஒரு குழந்தை பிறக்குமா. அதனால்தான் 'தம் அத்புதபாலகம்' அதிசயக்குழந்தை என்கிறது பாகவதம்,

அணிவிளக்கை –ஆயர்பாடியையே ஒளிமயமாக்கும் குழந்தை. 
தாயைக் குடல் விளக்கம் செய்த தாமோதரன் – தாம என்றால் கயிறு. உதரம் என்றால் வயிறு. வயிற்றில் கயிறுடன் உரலில் கட்டுப்பட்டதால் அவனுக்கு தாமோதரன் என்று பெயர்.

தாயைக்குடல் விளக்கம் செய்த- தான் பிறந்ததால் தாய்க்குப் பெருமை சேர்த்தவன்.
தூயோமாய் வந்தோம்- தூயோம் என்பது உள்ளத்தூய்மையைக் குறிக்கிறது. வந்தோம் என்பது வந்துசேர்ந்தோம் ( உரிய இடத்திற்கு) என்னும் பொருளில் சொல்லப்படுகிறது.

தூமலர் தூவித்தொழுது – புஷ்பங்கள் தூவி வழிபடுவது, உடலால் செய்வது.
வாயினால் பாடி- நாமசங்கீர்த்தனம், வாக்கினால் செய்வது. 
மனத்தினால் சிந்திக்க – தியானம், மனதால் செய்வது.

போயபிழையும்- இன்னும் பலன் கொடுக்க ஆரம்பிக்காத கர்மா, ஸஞ்சித கர்மா. 
புகுதருவான்- இனிமேல் பலன் கொடுக்கும் கர்மா. ஆகாமி கர்மா. 
நின்றனவும்- இப்போது பலன் கொடுத்துக்கொண்டிருக்கும் பிராரப்த கர்மா .
தீயினில் தூசாகும்- மூன்றும் தீயிலிட்ட தூசுபோல் எரிந்துவிடும்.

செப்பேலோரெம்பாவாய்- ஆதலால் கூறுங்கள் 
பகவானின் ஐந்து ரூபங்களான பர, வ்யூஹ, விபவ, அரச்ச , அந்தயாமி, இவைகளை இந்தப் பாசுரம் குறிப்பிடுகிறது.

மாயன் என்பது பரரூபமாகிய பரவாசுதேவன். மதுரை மைந்தன் விபவ ரூபமாகிய அவதாரங்கள். துறைவன் என்பது நான்கு வ்யூஹரூபங்களான வாசுதேவ, ஸங்கர்ஷண , பிரத்யும்ன , அநிருத்தர்களைக் குறிக்கும். இந்த நான்கும் கிருஷ்ணாவதாரத்தில் இருக்கின்றன.
விளக்கு என்பது அந்தர்யாமியையும், தாமோதரன் என்பது அர்ச்சாவதாரத்தையும் குறிக்கும்

வடமதுரை என்பது வைகுண்டத்தைக் கூறுவதாகவும் வைத்துக்கொள்ளலாம். வட என்ற சொல் வடமொழியில் உத்தர. இதற்கு வடக்கு திசை என்றும் மேல் உள்ளது என்றும் பொருள். மதுரை அல்லது மதுரா என்றால் மது ராதி இதி , தேனைக் கொடுப்பது என்று பொருள். இங்கு தேன் என்பது பகவானே. வேதம் ரஸோ வை ஸ: அவன்தான் ரஸம் என்று சொல்வதால்.

குடல் விளக்கம் என்பதற்கு பகவான் தன் அவதாரத்தின் மூலம் காயத்ரி மந்திரத்தையும் அஷ்டாக்ஷர மந்திரத்தையும் விளக்குகிறான் என்று பொருள் கொள்ளலாம். ஏனென்றால் இவையிரண்டும் தாய் என்று கூறப்படுகின்றன. 
தாமோதரன் என்றால் பக்தியான கயிற்றுக்கு கட்டுப்படுபவன் என்று பொருள்.,

https://drive.google.com/…/1iv7X3DEq2hLVU2QAZGQoK1hJeKWdVP1…

  

No comments:

Post a Comment