நாரத பக்திசூத்ரம் -5
சூத்ரம் 5
யத் ப்ராப்ய ந கிஞ்சித் வாஞ்சதி ந சோசதி ந த்வேஷ்டி ந ரமதே ந உத்ஸாஹீ பவதி
இந்த பராபக்தியை அடைந்த ஒருவன் எதுவும் வேண்டுவதில்லை, துக்கப்படுவதில்லை , வெறுப்பை அடைவதில்லை , எதையும் அனுபவிக்க ஆசை இல்லை தன்னலமாக எதிலும் ஈடுபடுவதில்லை.
கீதையில் சொல்லப்பட்ட ஸ்திதபிரக்ஞனின் நிலை இது. அப்படிப்பட்ட ஒருவன் துக்கேஷு அனுத்விக்ன மனா: கஷ்டம் வந்தபோது அயர்வுறுவதில்லை. ஸுகேஷு விகதச்ப்ருஹ: சுகம் வந்தபோது அதில் பற்றுக் கொள்வதில்லை . ஏனென்றால் அவன் வீதராகபயக்ரோத: , இச்சை த்வேஷம் பயம் இவையற்றவன். என்று கூறுகிறான் கண்ணன கீதையில் .(BG-II-55 to76)
இந்த நிலை பராபக்தியின் மூலம் வருகிறது. கீதையில் பன்னிரண்டாவது அத்தியாயத்தில் ஒரு பக்தன் எவ்வாறு உள்ளான் என்று கண்ணன் விவரிக்கிறான்.
மய்யர்பித மனோபுத்தி:, என்னிடத்தில் ஆழ்ந்த பக்தியை உடையவன் , ந ஹ்ருஷ்யதி ந த்வேஷ்டி, வேறு எதிலும் விருப்பு வெறுப்பற்றவன் ஆகிறான் . அதனால் ந சோசதி ந காங்க்க்ஷதி, அவனுக்கு வருத்தமும் இல்லை ஆசையும் இல்லை.
இதைத்தான் இந்த சூத்ரம் 'நகின்சித் வாஞ்சதி ,' அவனுக்கு வேண்டுவது ஒன்றும் இல்லை என்று குறிப்பிடுகிறது. ஆசை இல்லாமையால் துக்கம் இல்லை . இதுதான் ந சோசதி என்பதன் பொருள்.
பக்தன் எங்கும் இறைவனையே காண்கிறான். 'பருகும் நீர் உண்ணும் சோறு தின்னும் வெற்றிலை எல்லாம் கண்ணன்,; என்ற மனோபாவத்தில் இருப்பதால் எதனிடமும் எவரிடமும் வெறுப்பு ஏற்படுவதில்லை. அதுதான் ந த்வேஷ்டி என்பது உணர்த்துகிறது,
பக்தனுக்கு உலகம்முழுவதும் உறவாகவே தெரிகிறது. 'வசுதைவ குடும்பகம்.'
நான் எனது என்ற எண்ணம் இல்லாததால் எங்கும் சமத்ருஷ்டி ஏற்படுகிறது.
ந ரமதே என்ற சொல்லுக்கு அவனுக்கு ஒருவித இன்ப அனுபவமும் கிடையாது என்பதல்ல அர்த்தம். எப்போதும் அவன் மனம் ஆனந்தம் நிரம்பி இருப்பதால் எந்த சுகானுபவமும் தனியாக ஏற்படுவதில்லை.
ந உத்சாஹீ பவதி என்பதற்குப் பொருள் என்னவென்றால் சுயநலத்திற்காக அவன் எந்தச் செயலையும் மேற்கொள்வதில்லை. இதைத்தான் கீதையில் , பக்தி யோகத்தைப் பற்றி சொல்லும்போது 'சர்வாரம்ப பரித்யாகீ ,; என்று கண்ணன் குறிப்பிடுகிறான். (BG XII-25)
அதனால் ஒரு பக்தன் ஒன்றுமே செய்யாமல் வெட்டியாக காலத்தைக் கழிக்கிறான் என்பதல்ல பொருள். அவன் செய்யவேண்டியதெல்லாம் செய்கிறான் ஆனால் இறைவனின் கருவியே தான் என்ற எண்ணத்துடன் செய்கிறான். அதனால் அவனுக்கு கர்மம் செய்தாலும் கர்மப் பயன் ஒட்டுவதில்லை அதன்மூலம் அந்தப் பலனை அனுபவிக்க மீண்டும் மீண்டும் பிறப்பெடுக்க வேண்டுவதில்லை. அவன் செய்யும் செயல் யாவும் பகவதாராதனையாக ஆகிறது.
இதைத்தான் சங்கரர் பஜகோவிந்தத்தில் ,
யோகரதோ வா போகரதோ வா சங்கரதோ வா சங்க விஹீன:
யஸ்ய பிரம்மணி ரமதே சித்தாம் நந்ததி நந்ததி நந்ததி ஏவ ,
என்றார்.
என்ன செய்தாலும் எங்கிருந்தாலும் தனியாகவோ மற்றவர்களுடனோ எவ்வாறிருப்பினும் இறைவனிடம் யாருடைய சித்தம் லயிக்கிறதோ அவன் எப்போதும் உடலாலும் உள்ளத்தாலும் புத்திபூர்வமாகவும் ஆனந்தத்தில் திளைக்கிறான் என்றார்.
No comments:
Post a Comment