நாரத பக்தி சூத்ரம் – அத்யாயம் 1 – பரபக்தி ஸ்வரூபம்
சூத்ரம் என்பது ஒரு formula போன்றது. ஒரு வாக்கியத்தில் பேருண்மைகளை சுட்டுவது. வியாசரின் பிரம்ம சூத்ரம் உபநிஷத்துக்களின் உண்மை கருப்பொருள் பிரம்மமே என்பதை விளக்குகின்றது. ஜைமினியின் தர்மசூத்ரம் கர்ம மார்கத்தின் பொருளையும் பதஞ்சலி யோகசூத்ரம் யோகமார்கத்தையும் விளக்குகின்றன.
இதைத்தவிர பாணினியின் வியாகரண சூத்ரங்கள் வடமொழி இலக்கணத்தை விளக்குகின்றன.
நாரதர் வியாசரிடம் வருகிறார் . அப்போது வியாசர் மனவ்யாகூலத்தில் இருக்கக் கண்டு காரணத்தை கேட்கிறார். வியாசர் " நான் மகாபாரதம் எழுதினேன். எவ்வளவோ தர்மங்களை விவரித்தேன். ஆனாலும் என் மனம் அமைதியுறவில்லை ." என்று கூற நாரதர் மகாபாரதத்தில் பகவான் கிருஷ்ணரைப் பற்றி கூறியிருந்தபோதும், பக்தியின் பெருமையையோ பகவானின் பெருமையையோ முழுதும் கூற வில்லை என்று சொல்லி வியாசரை பாகவதம் எழுதத் தூண்டுவதற்காக பக்தியின் பெருமையை இந்த சூத்ரங்கள் மூலமாகக் கூறுகிறார்.
இப்போது அந்த சூத்திரங்களைப் பார்க்கலாம்.
சூத்ரம் 1
அத அதோ பக்திம் வ்யாக்யாஸ்யாம:
அத (अथ) - இப்பொழுது
அத:-(अत: )- ஆகையால்
பக்திம்- (भक्तिं )- பக்தி என்பது என்ன என்று
வ்யாக்யாயாம:-(व्याख्यास्याम:)-விளக்குவோமாக
அத (अथ) என்ற சொல் ஒரு செயலுக்கோ எண்ணத்துக்கோ பிறகு தொடர்வதைக் குறிக்கிறது. இங்கு வியாசரின் பக்தியைப் பற்றி அறியும் ஆர்வத்தை தூண்டிய பிறகு அத:-(अत: )-பக்தி என்பது மிகவும் முக்கியம் ஆகையால் பக்தியைப் பற்றி விளக்குகிறேன் என்று சொல்கிறார் நாரதர்.
இந்த அத (अथ) என்னும் சொல் தர்மசூத்ரம், பிரம்மசூத்ரம் யோகசூத்ரம் எல்லாவற்றிற்கும் ஆரம்பமாக இருக்கிறது. தர்மசூத்ரத்தில், ஸ்வர்க்க அபிலாஷை அடுத்த ஜன்மத்தில் அடைய வேண்டிய பலன்கள் இவைகளைக் குறிக்கும் ஆர்வத்தையும், ஆகையால் அதை விளைவிக்கும் யாக யக்ஞாதிகளைப்பற்றிய விளக்கமும் , பிரம்மசூத்ரத்தில் இவைகளால் சம்சாரத்தில் இருந்து விடுபட முடியாது என்ற எண்ணத்தில் தோன்றிய பிரம்மத்தை பற்றி அறியும் ஆர்வமும் ஆகையால் அதைப பற்றிய விளக்கமும் குறிப்பிடப்படுகிறது.
பக்தி முக்கியமான மார்க்கம் என்று ஏன் சொல்லப்படுகிறது? இது யாவராலும் பின்பற்றக்கூடியது. ஞான மார்கத்திற்கு தேவையான சாஸ்த்ர ஞானம் யோகாப்யாசம் இவை எல்லோராலும் அனுஷ்டிக்க முடியாதவை. பக்தி செய்ய எந்த தகுதியும் தேவை இல்லை.ம். நம்பிக்கையின் விளைவாக ஏற்பட்ட அன்பு ஒன்றே போதுமானது.அதனால்தான் கீதையில் என் பக்தர்கள் எவ்வர்ணத்தாராயினும் அவர்கள் என்னையே பற்றி மேலான கதியை அடைகிறார்கள். என்கிறார்.
ஆகையால் (அத:) பக்தியைப் பற்றி விரிவாக சொல்கிறேன், 'பக்திம் வ்யாக்யாஸ்யாமி என்கிறார் நாரதர்.
நாரத பக்தி சூத்ரம்
சூத்ரம் 2
ஸா து அஸ்மின் பரமப்ரேம ரூபா
ஸா து- அந்த பக்தியோவேன்றால்
அஸ்மின்- இறைவனிடத்தில்
பரமப்ரேமரூபா- எல்லை அற்ற அன்பு என்பது.
பக்தி என்பது இருவகைப்படும். ஏதோ ஒன்றை வேண்டியோ இல்லையேல் பழக்கத்தினாலோ செய்யும் பூஜை புனஸ்காரம் எல்லாம் அபரா பக்தி எனப்படும். அதாவது பூஜை செய்தாலோ கோவிலுக்குப் போனாலோ ஸ்தோத்திரங்கள் ராமாயணம் முதலியவைகளை படித்தாலோ நன்மை என்று அதைச் செய்வது. இதில் தவறொன்றும் இல்லை., ஆனால் அது நம் பராபக்திக்கு வழி வகுக்காது.,
அப்படி என்றால் பராபக்தி என்பது என்ன? சாதாரணமாக ஒருவர் பக்திமான் என்று கருதப்படுவது இந்த வெளிப்படையான செயல்களால்தான். இதற்கு மேல் உள்ளது பராபக்தி. அதற்கு உதாரணம் மீரா, ஆண்டாள் , ஆழ்வார்கள் முதலானோர்.
ராமானுஜர் பக்தி என்றால் என்ன என்பதை கீழ்க்கண்டவாறு கூறுகிறார் . த்ருவச்ம்ருதி , அதாவது தைல தாரையைப் போல் இடையறாத பகவத்யானம். கோபாலபூர்வதாபினி உபநிஷத்தில் அது பின்வருமாறு சொல்லப்படுகிறது. 'பக்தி: அஸ்ய பஜனம்;ஏதத் இஹா ஆமுத்ர உபாதி நைராச்யேன அமுஷ்மின் மன:கல்பனம்.'இதன் பொருள்,
இம்மையிலோ மறுமையிலோ எந்த எதிர்பார்ப்பும் இன்றி அவன் மேல் ஈடுபாட்டுடன் பக்தி செய்வது. இதத்தான் தொண்டரடிப்பொடி ஆழ்வார் 'இச்சுவை தவிர யான் போய் இந்திரலோகம் ஆளும் அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்கமாநகருளானே .' என்றார்.
பாகவதத்தில் கிருஷ்ணர் கோபியரின் அன்பைப் பற்றி உத்தவரிடம் கூறுகிறார் ,
தா ந அவிதன் மயி அனுஷங்கபத்த திய:
ஸ்வாத்மானம் அதை: ததா இதம்
யதா சமாதௌ முனைய: அப்திதோயே
நத்ய: பிரவிஷ்டா இவ நாமரூபே (பாக.11.12)
"எண்ணங்கள் என்னிடம் லயிக்க அவர்கள் தங்கள் உடலையோ காலதேசத்தையோ உணர்ந்தாரில்லை. அவர் நிலை யோகிகள் ஸமாதி நிலையை ஒத்தது. எவ்வாறு நதிகள் கடலை அடைந்த பின் தங்கள் நாமரூபத்தை இழக்கின்றனவோ அதுபோல."
தேஹ புத்த்யா து தாஸோ அஹம் ஜீவபுத்த்யாது த்வதம்சக:
ஆத்மபுத்த்யா த்வமேவ அஹம் இதி மே நிச்சிதா மதி:
நான் தேஹம் என்ற பாவனையில் உன்னுடைய தாசன்., நான் ஜீவன் நீ என் அந்தராத்மா என்ற நிலையில் நான் உன் அம்சம். நாதான் ஆத்மா என்ற பாவனையில் நீயே நான்.
இதைவிட த்வைதம் , விசிஷ்டத்வைதம், அத்வைதம் இவைகளை தெளிவாக விளக்க முடியாது.
இதுவே பராபக்தி.,
நாரத பக்தி சூத்ரம் 5
சூத்ரம் 5
யத் ப்ராப்ய ந கிஞ்சித் வாஞ்சதி ந சோசதி ந த்வேஷ்டி ந ரமதே ந உத்ஸாஹீ பவதி
இந்த பராபக்தியை அடைந்த ஒருவன் எதுவும் வேண்டுவதில்லை, துக்கப்படுவதில்லை , வெறுப்பை அடைவதில்லை , எதையும் அனுபவிக்க ஆசை இல்லை தன்னலமாக எதிலும் ஈடுபடுவதில்லை.
கீதையில் சொல்லப்பட்ட ஸ்திதபிரக்ஞனின் நிலை இது. அப்படிப்பட்ட ஒருவன் துக்கேஷு அனுத்விக்ன மனா: கஷ்டம் வந்தபோது அயர்வுறுவதில்லை. சுக்ஹெஷு விகதச்ப்ருஹ: சுகம் வந்தபோது அதில் பற்றுக் கொள்வதில்லை . ஏனென்றால் அவன் வீதராகபயக்ரோத: , இச்சை த்வேஷம் பயம் இவையற்றவன். என்று கூறுகிறான் கண்ணன கீதையில் .(BG-II-55 to76)
இந்த நிலை பராபக்தியின் மூலம் வருகிறது. கீதையில் பன்னிரண்டாவது அத்தியாயத்தில் ஒரு பக்தன் எவ்வாறு உள்ளான் என்று கண்ணன் விவரிக்கிறான்.
மய்யர்பித மனோபுத்தி:, என்னிடத்தில் ஆழ்ந்த பக்தியை உடையவன் , ந ஹ்ருஷ்யதி ந த்வேஷ்டி, வேறு எதிலும் விருப்பு வெறுப்பற்றவன் ஆகிறான் . அதனால் ந சோசதி ந காங்க்க்ஷதி, அவனுக்கு வருத்தமும் இல்லை ஆசையும் இல்லை.
சங்கரர் பஜகோவிந்தத்தில் சொல்வது போல அப்படிபட்டவன் 'நந்ததி நந்ததி நந்ததி ஏவ, ' எப்போதும் உடல் ரீதியாகவும் மனோரீதியாகவும் புத்தி பூர்வமாகவும் எப்போதும் ஆனந்தத்தில் ஆழ்கிறான். இதைத்தான் இந்த சூத்ரம் 'நகின்சித் வாஞ்சதி ,' அவனுக்கு வேண்டுவது ஒன்றும் இல்லை என்று குறிப்பிடுகிறது. ஆசை இல்லாமையால் துக்கம் இல்லை . இததான் ந சோசதி என்பதன் பொருள்.
பக்தன் எங்கும் இறைவனையே காண்கிறான். 'பருகும் நீர் உண்ணும் சோறு தின்னும் வெற்றிலை எல்லாம் கண்ணன்,; என்ற மனோபாவத்தில் இருப்பதால் எதனிடமும் எவரிடமும் வெறுப்பு ஏற்படுவதில்லை. அதுதான் ந த்வேஷ்டி என்பது உணர்த்துகிறது, பக்தனுக்கு உலகம்முழுவதும் உறவாகவே தெரிகிறது. 'வசுதைவ குடும்பகம்.'
நான் எனது என்ற எண்ணம் இல்லாததால் எங்கும் சமத்ருஷ்டி ஏற்படுகிறது.
ந ரமதே என்ற சொல்லுக்கு அவனுக்கு ஒருவித இன்ப அனுபவமும் கிடையாது என்பதல அர்த்தம். எப்போதும் அவன் மனம் ஆனந்தம் நிரம்பி இருப்பதால் எந்த சுகானுபவமும் தனியாக ஏற்படுவதில்லை.
ந உத்சாஹீ பவதி என்பதற்குப் பொருள் என்னவென்றால் சுயநலத்திற்காக அவன் எந்தச் செயலையும் மேற்கொள்வதில்லை. இதைத்தான் கீதையில் , பக்தி யோகத்தைப் பற்றி சொல்லும்போது 'சர்வாரம்ப பரித்யாகீ ,; என்று கண்ணன் குறிப்பிடுகிறான். (BG XII-25)
அதனால் ஒரு பக்தன் ஒன்றுமே செய்யாமல் வெட்டியாக காலத்தைக் கழிக்கிறான் என்பதல்ல பொருள்.
அவன் செய்யவேண்டியதெல்லாம் செய்கிறான் ஆனால் இறைவனின் கருவியே தான் என்ற என்னன்த்துடன் செய்கிறான். அதனால் அவனுக்கு கர்மம் செய்தாலும் கர்மப் பயன் ஒட்டுவதில்லை அதன்மூலம் அந்தப பலனை அனுபவிக்க மீண்டும் மீண்டும் பிறப்பெடுக்க வேண்டுவதில்லை. அவன் செய்யும் செயல் யாவும் பகவதாராதனையாக ஆகிறது.
இதைத்தான் சங்கரர் பஜகோவிந்தத்தில் ,
யோகரதோ வா போகரதோ வா சங்கரதோ வா சங்க விஹீன:
யஸ்ய பிரம்மணி ரமதே சித்தாம் நந்ததி நந்ததி நந்ததி ஏவ ,
என்ன செய்தாலும் எங்கிருந்தாலும் தனியாகவோ மற்றவர்களுடனோ எவ்வாறிருப்பினும் இறைவனிடம் யாருடைய சித்தம் லயிக்கிறதோ அவன் எப்போதும் உடலாலும் உள்ளத்தாலும் புத்திபூர்வமாகவும் ஆனந்தத்தில் திளைக்கிறான் என்றார்.
No comments:
Post a Comment