கவிஞனும் கிழவியும் -- J K. SIVAN
அவள் கிழவியே அல்ல. ஆனால் கிழவி! தானே விரும்பி இளைமையிலேயே முதுமை வேண்டி பெற்றவள். சிறந்த தமிழ் ஞானி. பிள்ளையாருக்கு அவன் தம்பி முருகனுக்கு ரொம்ப பிடித்தவள். அவள் காசுக்காக பாடாதவள் ஒரு குவளை கூழுக்காக கவி பாடுபவள். பெரிய பெரிய ராஜாக்கள் எல்லாம் அவளை காலில் விழுந்து வணங்கி கௌரவித்தனர். ஆனால் அவள் யாரிடமும் சுகமான வாழ்க்கையை விரும்பி வாழ நினைக்காதவள். ஒவ்வொரு தேசமாக ஸ்தல யாத்திரை செல்பவள். அவளே ஒளவை
கம்பை ஊன்றிக்கொண்டு மனதில் ஏதோ கவிதை உருவாகியவாறு மர நிழலில் நடந்து கொண்டிருந்தாள். வெயில் சுள்ளென்று சுட்டது. வயிற்றில் பசியும் ஞாபகப்படுத்தியது. சோழ தேசத்தில் அம்பர் என்ற ஊரில் ஒளவை இவ்வாறு நடந்து சென்றுகொண்டிருந்தபோது களைத்து ஒரு வீட்டு திண்ணையில் அமர்ந்தாள். அப்போதெல்லாம் எல்லார் வீட்டு வாசலிலும் திண்ணைகள் உண்டு. மழை வெயில் இரண்டிலிருந்தும் காத்துக்கொள்ள வழிப்போக்கர்கள் எந்த வீட்டு திண்ணையிலும் ஓய்வெடுத்து தங்குவார்கள். பல வீட்டுக்காரர்கள் உணவு நீர் எல்லாம் கொடுத்து உபசரிப்பார்கள்.
ஒளவையார் தங்கிய திண்ணை வீடு ஒரு தாசி, சிலம்பி, என்பவளுடையது. சிலம்பி வீட்டிலிருந்தாள் . இரவு ஆரம்பிக்கும் நேரத்தில் ஒரு கிழவி தன்வீட்டு திண்ணையில் களைத்து அமர்ந்தபோது வீட்டிற்குள் தனக்கு வைத்திருந்த கூழ் ஒரு பெரிய லோட்டாவில் கொண்டு வந்து தந்தாள்.
''ரொம்ப சந்தோஷம் தாயே, நீ நன்றாக இரு'' என்று அவளை வாழ்த்தி கூழு நிறைந்த பாத்திரத்தை தூக்கி குடிக்க முயன்ற ஒளவை கண்களில் அந்த திண்ணையை ஒட்டிய சுவற்றில் யாரோ கறியில் எழுதிய ரெண்டு தமிழ் வரிகள் பட்டதும் ஆச்சர்யம் அடைந்தாள்.
"தண்ணீருங் காவிரியே தார் வேந்தன் சோழனே
மண்ணாவதுஞ் சோழ மண்டலமே"
ஆஹா யார் இப்படி ஒரு அற்புதமான தமிழ் கவிதை பாதி எழுதி விட்டு சென்றது. இதை இன்னும் ரெண்டு வரி மீதி சேர்த்து ஒரு வெண்பாவாக்கினால் என்ன? ஒளவைக்கு பசி பறந்து போய்விட்டது. ஒரு புதிய உற் சாகம் தெம்பை அளித்தது.
எதிரே நின்ற சிலம்பியை அருகே அழைத்த ஒளவை '' இது யார் எழுதியது. நீயா?? எதற்கு பாதி கவிதை உன் சுவற்றில்?
"அம்மா, எங்கள் ராஜா குலோத்துங்க சோழ மன்னனின் அரண்மனையில் ஆஸ்தான புலவர் ஒருவர் இருக்கிறார். கம்ப நட்டாழ்வார் என்று பெயர். நல்லவர் தான். சரஸ்வதி கடாக்ஷம் பெற்றவர் என்று சொல்வார்கள். அவர் யாரையாவது புகழ்ந்து பாடினால் அவர்கள் ஓஹோ என்று சிறப்பான வாழ்க்கை பெறுவார்கள். ஆகவே வாழ்வில் ரொம்ப கஷ்டப்படும் நான் அவரிடம் சென்றேன். என் மீது ஒரு ஒரு பாடல் பாடுங்கள் என்றேன். ஏ
''பெண்ணே இந்த கம்பன் பாடல் ஒவ்வொன்றும் ஆயிரம் பொற்காசு பெறுபவை. உன்னால் தரமுடியுமா? என்று கேட்டார்
''நான் சேர்த்து வைத்திருந்த அத்தனை பொற்காசுகளை எண்ணினால் 500 காசு தான் தேறியது, அவரை வீட்டுக்கழைத்த்தேன். என்னிடம் ஐநூறு பொற்காசுகள் தான் இருந்தது தெரிந்ததும்,
''நீ கொடுத்த காசுக்கு பாதி பாடல் தான் கிடைக்கும் என்று இந்த ரெண்டு வரிகளை எழுதி வைத்து விட்டு சென்றார். இருக்கும் கைப்பணம் எல்லாம் இழந்து என் தலைவிதியை நொந்து வாழ்கிறேன்'' என்றால் சிலம்பி.
''ஓஹோ இது தான் கம்பர் கவிதை பற்றிய கதையா.... சரி அழாதே இளம் பெண்ணே. உள்ளே போய் ஒரு கரித்துண்டு எடுத்து வா நான் இந்த மீதி ரெண்டு அடிகளை பூர்த்தி பண்ணுகிறேன் உனக்கு '' என்றாள் ஒளவை.
கரித்துண்டை கையில் பிடித்து சுவற்றில் அந்த ரெண்டு வரிகளுக்கு அடியே மீதி ரெண்டு அடிகளை எழுதி பாடலை நிறைவு செய்தாள்
''பெண்ணாவாள் அம்பர்ச் சிலம்பி அரவிந்தத் தாளணியும்
செம்பொற் சிலம்பே சிலம்பு''
சிலம்பி வீட்டு சுவற்றில் இப்போது ஒரு வெண்பா:
"தண்ணீருங் காவிரியே தார்வேந்தன் சோழனே
மண்ணாவ துஞ்சோழ மண்டலமே - பெண்ணாவாள்
அம்பர்ச் சிலம்பி அரவிந்தத் தாளணியும்
செம்பொற் சிலம்பே சிலம்பு "
இதைக் கேளுங்கள் மானுடர்கள், தண்ணீர் என்றால் அது காவிரி மட்டுமே. வேந்தன் என்றால் அது சோழன் மட்டுமே. பூமி என்றால் நிகரற்ற சோழ மண்டலம் மட்டும் தான். பெண் என்றால் முதலில் அம்பர் ஊரில் வாழும் சிலம்பி தான் அழகானவள்.. அவள் காலில் அணிந்துள்ள செம்பொன் சிலம்பு ஒன்றே சோழநாட்டிலேயே அழகான சிலம்பு.
இவ்வாறு ஒளவை எழுதியதன் பலன் கைமேல் அல்ல கால்மேல் கிட்டியது. வெகு சீக்கிரம் செம்பொன்னாலான சிலம்பு அவளுக்கு கிடைத்தது
கம்பருக்கு விஷயம் எட்டியது. தான் 500 பொற்காசுகள் வாங்கி பாடிய பாடல் வரிகளுக்கு ஈடாக அதைவிட மேலாக ஒரு லோட்டா கூழுக்கு பாடி நிறைவு செய்த ஒளவை மேல் கோபமும் பொறாமையும் வளர்ந்தது. அவளை பழிவாங்க ஒரு சந்தர்ப்பமும் கம்பருக்கு கிடைத்தது.
ஒரு நாள் ஔவையார் அரசவைக்கு வருகை தந்தார். சோழன் ஓடிச்சென்று அவளை வரவேற்றான்:
''ஒளவைப்பிராட்டியே, உங்கள் புலமை நாடறியும். நான் ஒரு சிலேடை தொடர் சொல்கிறேன். அதை நிறைவு செயகிறீர்களா என்கிறார் கம்பர். அவள் தோற்று தோல்வியை ஒப்புக்கொள்வாள் என்று நம்பிக்கை கம்பருக்கு. சோழன் புலமைப் போட்டியை ரசித்தான்.
கம்பர் ஒரு சிலேடை இயற்றினார் :
'ஒரு காலடீ நாலிலைப் பந்தலடீ'........ ( எது ஒரு காலைக் கொண்டதாக இருந்தாலும் நான்கு கூரைகளை பந்தலாக கொண்டது??) இதற்கு விடை என்னவென்றால் ''ஆரை'' என்ற ஒரு கீரை வகை, நாலு நாலு இலைகள் கொண்ட கீரை. ஒரே ஒரு தண்டுதான் அதற்கு. இதைத்தான் கம்பர் கேட்கிறார். ''டீ'' என்று கம்பர் சேர்த்த சொல் மரியாதை அற்றது.
ஒளவைக்கு கம்பர் எண்ணம் புரிந்தது.அவர் கர்வம் எரிச்சலை தந்தது. மரியாதையற்று ''டீ'' என்று சொல் சேர்த்தது அவருக்கு தக்க பாடம் கற்பிக்க வேண்டும் என்ற தீர்மானத்தை அவள் மனதில் தந்தது. ஒரு பதில் பாடல் அடுத்த கணமே சோழன்
டீ" என்கின்ற எழுத்து பெண்களை மரியாதையின்றி மற்றும் தரக்குறைவாக குறிக்க பயன்படுத்தப்படும் எழுத்தாகும். கம்பர் அந்த எழுத்தினை சொல்லில் பயன்படுத்தி விடுகதையினை கேட்டார்.
கம்பரின் குறும்பினை ஒளவையார் புரிந்து கொண்டார். அதே பாணியில் சொல்லி, அவரை வாயடங்கச் செய்தார். அந்தப் பாடல் இது.
"எட்டேகால் லட்சணமே, எமனேறும் பரியே
மட்டில் பெரியம்மை வாகனமே முட்டமேற்க்
கூறையில்லா வீடே, குலராமன் தூதுவனே
ஆரையடா சொன்னாயது."
''"அ" என்ற எழுத்து 8 என்ற நம்பரைக் குறிக்க எழுதுவது. "வ" என்பது கால் பாக அளவை குறிப்பது ரெண்டையும் சேர்த்தால் ''அவ'' ஆகிறது. எட்டேகால் லக்ஷணமே என்றால் அதன் அர்த்தம் ''அவ'' லக்ஷணமே பொருள் தருகிறது அல்லவா. ஒளவை எப்படி? பரி என்றால் குதிரை வாகனம். எமனின் குதிரை எது ? எருமைக்கடா. மட்டில் பெரியம்மை வாகனம்: இதன் அர்த்தம் : மூதேவியின் வாகனம். அடே குட்டிச்சுவரே என்பதை தான் பாலிஷ் போட்டு ''கூரையில்லா வீடு'' என்கிறாள் ஒளவை. கம்பர் ராமாயணம் எழுதி புகழ் பெற்றவர் என்பதை சுட்டிக்காட்டி குரங்கே என்று திட்டுகிறாள் '' இக்ஷ்வாகு குல ராமனின் தூதுவன்: ஹனுமான் அல்லவா.
அவலக்ஷணமே, எருமையே, குரங்கே, மூதேவி வாகனமே, குட்டிச்சுவரே எதை பற்றி நீ கீட்டையோ அது ''ஆரை '' என்பதை யாரைப்பார்த்து என்ன கேள்வியடா கேட்டாய் என்று டா போட்டு டீக்கு பதில் சொல்கிறாள் ஒளவை.
தமிழில் நல்ல செல்வங்கள் ஆழ்முத்துக்கள், அள்ள அள்ள குறையாமல் இருக்கிறதே. படிக்க தான் ஆள் இல்லை.


No comments:
Post a Comment