உ
சிவாயநம திருச்சிற்றம்பலம்.
பதியும் பணியே பணியாய் அருள்வாய்.
*கோவை கு கருப்பசாமி.*
_________________________________________
*தினமும் ஒரு தேவார பாடல் பெற்ற தல தரிசனம்:*
நேரில் சென்று தரிசித்ததைப் போல............
______________________________________
*தேவாரம் பாடல் பெற்ற சிவ தல தொடர் எண்: (11).*
*சிவ தல அருமைகள் பெருமைகள்.*
*🏜சுவேதாரன்யேஸ்வரர் கோயில், திருவெண்காடு.*
________________________________________
தேவாரம் பாடல் பெற்ற தலங்களில் காவிரி வடகரையில் அமைந்துள்ள இத்தலம் பதினொன்றாவது தலமாகப் போற்றப் படுகிறது.
*🌙இறைவன்:* சுவேதாரன்யேஸ்வரர், வெண்காட்டுநாதர்.
*🔱இறைவி:* பிரம்மவித்யா நாயகி.
*🌴தல விருட்சம்:* வட ஆலமரம்.
*🌊தல தீர்த்தம்:* சூரிய தீர்த்தம், சந்திர தீர்த்தம், அக்னி தீர்த்தம் என, முக்குள தீர்த்தங்கள். (இந்த மூன்று தீர்த்தங்களும் வெளிப்பிரகாரத்தில் இருக்கின்றன.)
இங்கு வந்து தீர்த்தமாடுவோர் முதலில் அக்னி தீர்த்தத்திலும், இரண்டாவதாக சூரிய தீர்த்தத்திலும், இறுதியாக சந்திர தீர்த்தத்திலும் என வரிசை முறையாக நீராடுகின்றனர்.
*🔍ஆலயப் பழமை:* ஆயிரத்திலிருந்து இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னதானது.
*📖தேவார பதிகம்:* திருநாவுக்கரசர், இரண்டு பதிகங்கள்,
திருஞானசம்பந்தர், மூன்று பதிகங்கள்,
சுந்தரர், ஒரேயொரு பதிகம்.
ஆக மொத்தம் இத்தலத்திற்கு ஆறு பதிகங்கள்.
*🛣இருப்பிடம்:*
சீர்காழியில் இருந்து பூம்புகார் செல்லும் வழிச்சாலையில், சீர்காழியில் இருந்து சுமார் பதின்மூன்று கி.மி. தொலைவில் திருவெண்காடான இத்தலம் அமைந்திருக்கிறது.
சீர்காழியில் இருந்து நகரப் பேருந்து வசதிகள் இருக்கிறது.
நவக்கிரக ஸ்தலங்களில் திருவெண்காடு புதன் ஸ்தலமாக விளங்குகிறது.
*📮ஆலய அஞ்சல் முகவரி:*
அருள்மிகு சுவேதாரன்யேஸ்வரர் திருக்கோயில்.
திருவெண்காடு.
திருவெண்காடு அஞ்சல்.
சீர்காழி வட்டம்.
நாகப்பட்டினம் மாவட்டம்.
PIN - 609 114
*🌸ஆலயப் பூஜை காலம்:*
நாள்தோறும் காலை 6.00 மணி முதல் பகல் 1.00 மணி வரையிலும், மாலை 4.00 மணி முதல் இரவு 9.00 மணி வரையிலும் ஆலயம் திறந்திருக்கும்.
காவிரிக் கரையில் உள்ள ஆறு சிவஸ்தலங்கள் காசிக்கு சமமாக விளங்குகின்றன.
அவற்றில் திருவெண்காடான இத்தலமும் ஒன்றாகும்.
பிற;
1. திருவையாறு,
2. திருசாய்க்காடு (சாயாவனம்),
3. திருவிடைமருதூர்,
4. திருவாஞ்சியம் மற்றும்,
5. மயிலாடுதுறை.
*🏜கோயில் அமைப்பு:*
சுமார் பன்னிரண்டு ஏக்கர் நிலப்பரப்புடன் இந்த
திருக்கோயில் அமைந்திருக்கிறது.
ஐந்து நிலைகளைத் தாங்கிக் காட்சியான இராஜகோபுரத்தை *சிவ சிவ* என மொழிந்து வணங்கிக் கொண்டோம்.
கோயிலைச் சுற்றி மதில்சுவர்கள் முழுமையும் சுத்தத்துடன் அழகாக காட்சி தந்தன..
வெளிப்பிரகாரத்திலிருந்து உள் புகுந்ததும், அக்னி தீர்த்தக் கரைக்கு வந்தோம்.
கரையினில், விநாயகர் சந்நிதியும், மெய்கண்டார் சந்நிதியும் இருந்தன. இருவரையும் வணங்கிவிட்டு, தீர்த்தத்தை அள்ளியெடுத்து சிரசிற்கு வார்த்து இறைவனை நினைந்து வணங்கிக் கொண்டோம்.
அடுத்து சூரிய தீர்த்தக் கரையினில், சூரிய தீர்த்த லிங்கமும், முருகப் பெருமான் சந்நிதியும், அடுத்து அம்பாள் தனிக்கோயில் கொண்டும், புதன் சந்நிதியும் இதையடுத்து சந்திர தீர்த்தமும் இருந்தன.
ஒவ்வொன்றையும் தொடர்ச்சியாக வணங்கிக் கொண்டு நகர்ந்தோம்.
அடுத்து, பிரம்மனுக்கு அம்பாள் உபதேசித்த பிரம்ம பீடம் இருக்க பணிந்து தொழுது வணங்கினோம்.
வலப்புறமாக இருந்த பள்ளியறை திருக்கதவினைத் தொட்டு வணங்கி ஒற்றிக் கொண்டோம்.
பிள்ளை இடுக்கி அம்பாள் எனும் பெயரில், நின்ற திருமேனியையும், சுக்கிரவார அம்மனையும் வணங்கிக் கொண்டோம்.
வெளிவலம் பூரணமாக, அங்கே காணப்பெற்ற கொடிமரத்து முன் விழுந்து தொழுதெழுந்தோம்.
மேலும் தொடர, இப்பிரகாரத்தில் சோமாஸ்கந்தர், அறுபத்து மூவர் திருத்திருமேனிகள் இருபுற வரிசையுடன் காணக்கிடைக்கின்றன கூப்பிய கரங்களுடன் தொடர்ச்சியாக வணங்கிக் கொண்டு நகர்ந்தோம்.
இதற்கடுத்து, பத்திரகாளி சந்நிதியும், வீரபத்திரர், இடும்பன், சுகாசன மூர்த்தி, நாகலிங்கம், விநாயகர், நால்வர், விஸ்வேஸ்வரர், முதலான திருமேனிகள் முன்நின்று குறுகக் குனிந்து பணிந்து வணங்கிக் கொண்டோம்.
கஜலட்சுமியைத் தரிசித்ததும் அடுத்ததாக, இத்தலத்தின் சிறப்பிற்குரிய மூர்த்தியான அகோரமூர்த்தி நிற்கும் திருமேனியழகுடன், சூலங்கள் இரண்டையும் இரு கரங்களில் சாய்த்துப் பிடித்து எட்டுக் கரமாய், தலையை சிறிது சாய்த்தவாறும், திருவடிகளை முன்னும் பின்னும் வைத்தவாறு இருந்த காட்சியும், உண்மையிலேயே அகோரமானதாக தெரிந்தாலும், இக்காட்சிக் கோலத்துள் அழகும் பொதிந்திருந்தது.
இவர் அருகே பக்கத்தில், உற்சவ அகோரமூர்த்தியின் திருவடியின் கீழ், மருத்துவன் என்பவன் இழிந்து தலை தொங்கி விழுந்த அமைப்பைக் காண இத்தலம் வராதவர்கள் கண்டிப்பாக ஒவ்வொருவரும் இத்தலம் வந்து காண வேண்டும் வணங்க வேண்டும்!.
இதைத் தரிசித்துத் திரும்ப, நந்தி நம்மைப் பார்க்க, அவருகே வந்து நின்று வணங்கிப் பணிந்தோம்.
அடுத்திருந்த பைரவரை வணங்கித் திரும்பினோம்.
நடராஜ சபை தில்லையிலிருக்கும் அமைப்புடன் செப்பறையில் அமைந்திருந்தது. வணங்கிக் கொண்டு சில நிமிடப் பொழுது ஆடவல்லானை இமையாது பார்த்து விட்டு நகர்ந்தோம்.
இக்கோவிலில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டுகளில் இருந்து அக்காலத்து சோழ மன்னர்கள் ஆதித்திய சோழன், ராஜராஜ சோழன் ஆகியோர் பல தானங்களை இக்கோவிலுக்குச் செய்திருப்பது உரைத்தன.
ஆதிசிதம்பரம் என்ற பெயரும் பெருமையும் திருவெண்காடு ஸ்தலத்திற்கு உண்டு.
மூலவர் சுயம்பு வடிவானவர். இங்கும் சிதம்பரம் போன்றே நடராஜர் சபை, ஸ்படிக லிங்கம், மற்றும் ரகசியம் இருக்கிறது.
ஸ்படிக லிங்கத்திற்கு தினமும் நான்கு முறை அபிஷேகமும், நடராஜருக்கு வருடத்திற்கு ஆறு முறை அபிஷேகமும் நடைபெறுகின்றன என கேட்டுத் தெரிந்து கொண்டோம்.
இத்தலத்தில் உள்ள துர்க்கை சந்நிதியும், காளி சந்நிதியும் மிகவும் பிரசித்தி பெற்றவை.
துர்க்கை அம்மனின் உருவச் சிற்பமும், காளிதேவியின் உருவச் சிற்பமும் மிகுந்த கலை அழகுடன் பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தும் தன்மையுடன் காணப்படுகிறது.
சிதம்பரத்தில் உள்ளதைப் போன்றே இங்கும் நடராஜர் சபைக்கு அருகிலேயே மஹாவிஷ்னுவின் சந்நிதியும் இங்கு அமைந்து இருக்கிறது.
*தல அருமை:*
இங்குள்ள அகோரமூர்த்தி இந்த ஆலயத்தின் தனிச் சிறப்பு பெற்றவராவார்.
பிரம்மாவிடம் பெற்ற வரங்கள் காரணமாக மருத்துவன் என்ற அசுரன் தேவர்களை துன்புறுத்தி வந்தான், அவர்கள் திருவெண்காடு வந்து தங்கி இருந்தனர்.
அசுரன் திருவெண்காட்டிற்கு வந்து மேலும் தேவர்களுக்கு துன்பத்தைத் தரத் துணிய..... ரிஷபதேவர் அசுரனுடன் போரிட்டு தேவர்களைக் காப்பாற்றினார்.
மருத்துவாசுரன் ரிஷபதேவர் மீது மாயச் சூலத்தை ஏவ, அச்சூலம் நந்தியின் உடலை ஒன்பது இடங்களில் துளைத்துவிட்டுச் சென்றன.
இதனால், இறைவன் சிவபெருமான் கோபமுற்று அவருடைய ஐந்து முகங்களில் ஒன்றான ஈசான்ய முகத்தில் இருந்து அகோரமூர்த்தி தோன்றிக் கொண்டார்.
அகோரமூர்த்தியான ரூபத்தைக் கண்ட அசுரன் சிவனிடம் சரணாகதி அடைந்தான்.
அகோரமூர்த்தியாக வடிவு கொண்டு வந்து மருத்துவாசுரனை அழித்தநாள் ஞாயிற்றுக்கிழமை பூரநட்சத்திரம் ஆகும்.
இதனால் இன்றும் இத்திருக்கோயிலில் ஞாயிற்றுகிழமைகளில் இரவு பத்து மணிக்குமேல் (இரண்டாங்கால நேர முடிவில்) அகோரமூர்த்திக்குச் சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது.
*📣குறிப்பு:*
திருவெண்காடு தலத்தைத் தரிசிக்கச் செல்வோர், ஞாயிற்றுக் கிழமை நாளாக, நீங்கள் புறப்பட்டுச் செல்லுங்கள்.
அன்றிரவு அங்கு தங்கி, ஆலயத்தில் இவ்வழிபாடு நடைபெறும் சரியான நேரத்தைக் கேட்டுத் தெரிந்துகொண்டு கட்டாயம் இவ்வழிபாட்டைத் தரிசியுங்கள்.
அசுரன் எறிந்த சூலாயுதம் ஏற்படுத்திய ஒன்பது துளைப்புகள்,
சுவாமி சந்நிதிக்கு எதிரில் வெளியே இருக்கும் நந்தியின் உடம்பில் இருப்பதைக் காணலாம்.
சிவனின் அறுபத்துநான்கு மூர்த்தங்களுள் ஒன்றான அகோர மூர்த்தியை இத்தலத்தில் மட்டுமே காணலாம்.
இத்தலத்தில் உள்ள மூர்த்திகள் மூன்று.
*1.சுவேதாரண்யேஸ்வரர்*
*2.நடராஜர்,*
*3.அகோரமூர்த்தி.*
இத்தலத்தில் உள்ள சக்திகள் மூன்று.
*1.பிரம்ம வித்யாநாயகி*
*2.காளிதேவி,*
*3.துர்க்கை.*
இத்தலத்தில் உள்ள தீர்த்தங்கள் மூன்று.
*1.சூரிய தீர்த்தம்,*
*2.சந்திர தீர்த்தம்,*
*3.அக்கினி தீர்த்தம்.*
இத்தலத்தில் உள்ள தலவிருட்சங்கள் மூன்று. *1.வடவால்,*
*2.வில்வம்,*
*3.கொன்றை.*
இக்கோவிலில் உள்ள சந்திர தீர்த்தம் அருகில் உள்ள ஆலமரத்தின் அடிப்பகுதியில் ருத்ரபாதம் இருக்கிறது.
இதில் சிவபெருமானின் திருவடிகள் வரையப்பட்டுள்ளன.
இந்த ஆலமரத்தின் அருகில் நமது முன்னோர்களுக்கு திதி தர்ப்பணங்கள் செய்தால் நல்ல பலன் கிடைக்கும் என்று திதி கொடுத்தோர் கூறினர்.
திதி தர்ப்பணங்கள் செய்வதற்கு உகந்த தலங்களில் திருவெண்காடு தலமும் முக்கியமான ஒன்றாகும்.
*🌸ஆதி சிதம்பரம்:*
திருவெண்காடு தலத்தை *ஆதி சிதம்பரம்* என்று போற்றப்படுவது உண்டு.
*🌼சிறப்பு:*
சிவபெருமான் இத்தலத்தில்....
ஆனந்த தாண்டவம்,
காளி தாண்டவம்,
கெளரி தாண்டவம்,
முனி தாண்டவம்,
சந்தியா தாண்டவம்,
திரிபுர தாண்டவம்,
புஜங்க தாண்டவம்,
சம்ஹார தாண்டவம்,
பைஷாடனம் ஆகிய ஒன்பது தாண்டவங்களை ஆடியுள்ளார்.
சிறுத்தொண்டர் இளமையில் வாழ்ந்தாலும், அவர்தம் மனைவி திருவெண்காட்டு நங்கையும், சந்தனத்தாதி பிறந்ததும், பட்டினத்தடிகள் சிவதீட்சை பெற்றதும் இத்தலமாகும்.
மேலும், சிவஞானபோதம் என்றும் சைவ சித்தாந்த முழுமுதற் நூலை அருளியவரான மெய்கண்டார் அவதரித்த தலமும் இது.
*நவக்கிரக ஸ்தலம்:*
திருவெண்காடு நவக்கிரகங்களில் புதனுக்கு உரிய ஸ்தலமாகும்.
அம்பாள் பிரம்ம வித்யா நாயகியின் கோவிலுக்கு இடது பக்கத்தில் தனி சந்நிதியில் புத பகவான் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.
புதனின் தந்தையான சந்திரனின் சந்நிதியும், சந்திர புஷ்கரணி தீர்த்தமும் புதன் சன்னதிக்கு எதிரில் அமைந்துள்ளது.
புத பகவானை வழிபட்டால் உடலில் உள்ள நரம்பு சம்பந்தமான நோய்கள் நீங்குதல், கல்வி மேன்மை, நா வன்மை, செய்யும் தொழில் சிறப்பு ஆகிய நலன்கள் உண்டாகும் அதற்காக, புதன் கிரகத்தை பிரதானமாகக் கொண்டு விடாதீர்கள்.
அனைத்தும் தீர்க்கவல்ல தல ஈசனை நீங்கள் சரண் புக வேண்டும். முற்றும் தெளிவாக்குபவர் ஈசன்தான்.
*🌸நன்மக்கட்பேறு அமைய:*
திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் ஆலயத்தில் உள்ள அக்கினி தீர்த்தம், சூரிய தீர்த்தம், சந்திர தீர்த்தம், என்னும் முக்குளங்களிலும் முறையே நீராடி மூலவர் சுவேதாரண்யேஸ்வரை வழிபட்டால் பெரும் பலனும் நன்மக்கட்பேறும் இறைவன் அருளால் கிடைக்கும்.
திருஞானசம்பந்தர் இத்தலத்து இறைவன் மேல் பாடிய பதிகங்கள் ஒன்றின் இரண்டாவது பாடலில் இதை குறிப்பிடுகிறார்.
பேயடையா பிரிவெய்தும் பிள்ளையினோடு உள்ளநினைவு ஆயினவே வரம்பெறுவர் ஐயுறவேண்டா ஒன்றும் வேயனதோள் உமைபங்கன் வெண்காட்டு முக்குளநீர் தோய்வினையார் அவர்தம்மைத் தோயாவாம் தீவினையே
*🌼வழிபட்டோர்கள்:*
இந்திரன், ஐராவதம், சுவேதகேது, சுவேதன், மகாவிஷ்ணு, சூரியன், சந்திரன், அக்னி ஆகியோர்.
*📖திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்:*
1.💐மந்திர மறையவர் வானவரொடும்
இந்திரன் வழிபட நின்ற எம்மிறை
வெந்த வெண்ணீற்றர் வெண்காடு மேவிய
அந்தமும் முதலுடை அடிகள் அல்லரே.
🙏🏾பஞ்சாக்கர மந்திரத்தைத் தனி நடுப்பகுதியில் கொண்ட வேதங்களும், தேவர்களும், இந்திரனும் வழிபட வீற்றிருக்கின்ற எங்கள் இறைவனாய், வெந்த வெண்ணீற்றினைத் திருமேனியில் பூசித் திருவெண்காடு என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்ற சிவபெருமான் அந்தமும், ஆதியுமாகிய அடிகள் அல்லவோ.
2.💐படையுடை மழுவினர் பாய்புலித் தோலின்
உடைவிரி கோவணம் உகந்த கொள்கையர்
விடையுடைக் கொடியர் வெண்காடு மேவிய
சடையிடைப் புனல் வைத்த சதுரர் அல்லரே.
🙏🏾இறைவர் மழுவைப் படையாக உடையவர். பாய்கின்ற புலித்தோலை ஆடையாக உடையவர். கோவணத்தை உகந்து அணிந்தவர். இடபவடிவம் பொறிக்கப்பட்ட கொடியுடையவர். திருவெண்காடு என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்ற சிவபெருமான் சடையிலே கங்கையைத் தாங்கிய திறமையானவர் அல்லரோ?.
3.💐பாலொடு நெய் தயிர் பலவும் ஆடுவர்
தோலொடு நூலிழை துதைந்த மார்பினர்
மேலவர் பரவு வெண்காடு மேவிய
ஆலமது அமர்ந்த எம் அடிகள் அல்லரே.
🙏🏾இறைவர் பாலொடு, நெய், தயிர் மற்றும் பலவற்றாலும் திருமுழுக்கு ஆட்டப்படுபவர். யானைத் தோலைப் போர்வையாகவும், புலித்தோலை ஆடையாகவும் அணிந்தவர். முப்புரி நூலணிந்த மார்பினர், சிவஞானிகள் துதிக்கின்ற திருவெண்காடு என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும் சிவபெருமான் கல்லால மரத்தின் கீழ் வீற்றிருந்து அறம் உரைத்த எம் தலைவர் அல்லரோ?.
4.💐ஞாழலும் செருந்தியும் நறுமலர்ப் புன்னையும்
தாழை வெண்குருகு அயல் தயங்கு கானலில்
வேழமது உரித்த வெண்காடு மேவிய
யாழினது இசையுடை இறைவர் அல்லரே.
🙏🏾புலிநகக் கொன்றையும், செருந்தியும், நறுமணமிக்க புன்னை மலர்களும், தாழையும், குருக்கத்தியும் விளங்கும் கடற்கரைச் சோலையுடைய திருவெண்காடு என்னும் திருத்தலத்தில், யானையின் தோலையுரித்த ஆற்றல் உடையவராயும், யாழிசை போன்ற இனிமை உடையவராயும் உள்ள சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்றார் அல்லரோ?.
5.💐பூதங்கள் பலவுடைப் புனிதர் புண்ணியர்
ஏதங்கள் பல இடர் தீர்க்கும் எம்இறை
வேதங்கள் முதல்வர் வெண்காடு மேவிய
பாதங்கள் தொழ நின்ற, பரமர் அல்லரே.
🙏🏾எம் இறைவர், பூதகணங்கள் பல உடைய புனிதர். புண்ணிய வடிவினர். தம்மை வழிபடுபவர்களின் குற்றங்களையும், துன்பங்களையும் தீர்த்தருளுபவர். அவர் வேதங்களில் கூறப்படும் முதல்வர். திருவெண்காடு என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும் அவர்தம் பாதங்கள் அனைவராலும் தொழப்படும் நிலையில் விளங்கும் பரம்பொருள் அல்லவோ?.
6.💐மண்ணவர் விண்ணவர் வணங்க வைகலும்
எண்ணிய தேவர்கள் இறைஞ்சும் எம் இறை
விண்ணமர் பொழில் கொள் வெண்காடு மேவிய
அண்ணலை அடிதொழ அல்லல் இல்லையே.
🙏🏾மண்ணுலகத்தோரும், விண்ணுலகத்தோரும், மற்றுமுள்ள தேவர்களும் தினந்தோறும் எங்கள் இறைவனை வழிபட்டுப் போற்றுகின்றனர். வானளாவிய சோலைகளையுடைய திருவெண்காடு என்னும் திருத்தலத்தில் வீற்றிருக்கின்ற அப்பெருமானின் திருவடிகளை வணங்குபவர்கட்குத் துன்பம் இல்லை.
7.💐நயந்தவர்க்கு அருள் பல நல்கி இந்திரன்
கயந்திரம் வழிபட நின்ற கண்ணுதல்
வியந்தவர் பரவு வெண்காடு மேவிய
பயந்தரு மழுவுடைப் பரமர் அல்லரே.
🙏🏾விரும்பி வழிபடும் அடியவர்கட்கு வேண்டுவன வேண்டியவாறு அருளி, இந்திரனின் வெள்ளையானை வழிபட அதற்கும் அருள்புரிந்தவர் நெற்றிக்கண்ணுடைய சிவபெருமான் ஆவார். அனைவரும் அந்த இன்னருளை வியந்து போற்றும்படி திருவெண்காடு என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும் சிவபெருமான் பயந்தரு மழுப்படையுடைய பரமர் அல்லரோ?.
8.💐மலையுடன் எடுத்தவல் அரக்கன் நீள்முடி
தலையுடன் நெரித்து அருள் செய்த சங்கரர்
விலையுடை நீற்றர் வெண்காடு மேவிய
அலையுடைப் புனல் வைத்த அடிகள் அல்லரே.
🙏🏾கயிலை மலையை எடுத்த கொடிய அரக்கனாகிய இராவணனின் நீண்ட முடி, தலை, உடல் ஆகியவற்றை நெரித்து, பின் அவன் தவறுணர்ந்து சாமகானம் பாட, அருள் செய்த சங்கரர், மதிப்புடைய திருநீற்றினைப் பூசியவர். அலையுடைய கங்கையைச் சடையில் தாங்கித் திருவெண்காடு என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும் பெருமான் அவர் அல்லரோ?.
9.💐ஏடவிழ் நறுமலர் அயனும் மாலுமாய்த் தேடவும் தெரிந்து அவர் தேரகிற்கிலார்
வேதம் அது உடைய வெண்காடு மேவிய
ஆடலை அமர்ந்த எம் அடிகள் அல்லரே.
🙏🏾பூவிதழ்களுடைய நறுமணம் கமழும் தாமரையில் வீற்றிருக்கும் பிரமனும், திருமாலும் திருமுடியையும், திருஅடியையும் காணத்தேடியும் காண்பதற்கு அரியவராய் நெருப்புமலையாய் விளங்கியவரும், பலபல வேடம் கொள்பவருமான இறைவன் திருவெண்காடு என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்து திருநடனம் புரிதலை விரும்பிய அடிகள் அல்லரோ?.
10.💐போதியர் பிண்டியர் பொருத்தம் இல்லிகள்
நீதிகள் சொல்லியும் நினையகிற்கிலார்
வேதியர் பரவ வெண்காடு மேவிய
ஆதியை அடிதொழ அல்லல் இல்லையே.
🙏🏾புத்தரும், சமணரும் பொருத்தம் இல்லாதவராய், இறையுண்மையை உணர்த்தும் நீதிகளை எடுத்துரைத்தும், நல்வாழ்வு இல்லாமையால் அவற்றை நினைத்துப் பார்த்தலும் செய்யாதவர் ஆயினர். எனவே அவர்களைச் சாராது, வேதம் ஓதும் அந்தணர்கள் பரவித் துதிக்கின்ற திருவெண்காடு என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்ற அனைத்துலகுக்கும் முதற்பொருளாகிய சிவபெருமான் திருவடிகளைத் தொழத் துன்பம் இல்லையாம்.
11.💐நல்லவர் புகலியுள் ஞானசம்பந்தன்
செல்வன் எம் சிவனுறை திருவெண்காட்டின் மேல்
சொல்லிய அருந்தமிழ் பத்தும் வல்லவர்
அல்லலோடு அருவினை அறுதல் ஆணையே.
🙏🏾பசு புண்ணியம், பதி புண்ணியம் செய்த நல்லவர்கள் வசிக்கின்ற திருப்புகலியுள் அவதரித்த ஞானசம்பந்தன், செல்வனாகிய எம் சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்ற திருவெண்காட்டின் மேல் பாடிய அருந்தமிழ்ப் பாக்கள் பத்தினையும் பக்தியோடு ஓதவல்லவர்களுடைய துன்பங்களோடு அவற்றிற்குக் காரணமான அருவினையும் அறும் என்பது நமது ஆணையாகும்.
திருச்சிற்றம்பலம்.
*🎡திருவிழாக்கள்:*
மாசி மகத்தில் இந்திரப் பெருவிழா. வளர்பிறை துவாதசி. புனர்பூச நட்சத்திரத்தில் கொடியேற்றம் நடந்து பதினோரு நாட்கள் உற்சவம் நடைபெறும்.
அகோரமூர்த்திக்கு காரணாகமத்தின்படியும், சுவேதாராண்யேஸ்வரருக்கு காமிகாகமத்தின்படியும் பூஜைகள் நடைபெறுகின்றன.
அகோரமூர்த்திக்கு திருக்கோயில் பெருவிழாவில் ஐந்தாம் நாளன்று சிறப்பு வழிபாடும் நடந்து பின்பு, வீதியுலா நிகழ்வு நடைபெறுகிறது.
*📞தொடர்புக்கு:*
தட்சிணாமூர்த்தி குருக்கள்.
94434 02597
04364- 256424
04364- 256531
*சிறப்புகள்:*
அச்சுத களப்பாளர் மூலமாக மெய்கண்டார் அவதாரத்தை நாட்டுக்களித்து நலம் செய்த முக்குள தீர்த்தம் உள்ள பதி இது.
இத்திருக்கோயிலில் உள்ள முக்குளத்தில் (வெண்காட்டு முக்குளநீர்) நீராடி இறைவனை வழிபடுவோர்க்கு நினைத்த காரியம் கைகூடும் என்பது திருஞானசம்பந்தரின் அமுதவாக்கு.
*"சங்குமுகம் ஆடி சாயாவனம் பார்த்து, முக்குளமும் ஆடி முத்திபெற வந்தானோ"* என்று ஒரு தாலாட்டுப் பாட்டும் இத்தல முக்குளச் சிறப்பை விளக்குகின்றது.
இத்தலம் புதன் கிரகம் உரியவர்கள் வழிபடவேண்டிய சிறப்புத் தலமாகும்.
புதன் சந்நிதிக்குப் பக்கத்தில் முள் இல்லாத வில்வமரம் இருக்கிறது.
இத்தலத்தில் சந்திரன் வழிபட்ட லிங்கம் இருக்கிறது.
அகோரமூர்த்தியின் மூல மற்றும் உற்சவ திருமேனிகள் அற்புத வேலைபாடுகளுடன் அமைந்திருப்பது நேர்த்தியிலும் நேர்த்தி.
*சம்பந்தர் தேவாரம்:*
1.🌿கண்காட்டு நுதலானுங் கனல்காட்டுங் கையானும்
பெண்காட்டு முருவானும் பிறைகாட்டுஞ் சடையானும்
பண்காட்டு மிசையானும் பயிர்காட்டும் புயலானும்
வெண்காட்டி லுறைவானும் விடைகாட்டுங் கொடியானே.
🙏🏾வெண்காட்டில் உறையும் பெருமானே, நுதலிடைக் கண் கொண்டவனே, கையில் கனல் ஏந்தியவனே, உமையம்மையை ஒரு கூறாகக் கொண்ட திருமேனியனே, பிறையணிந்த சடைமுடியினனே, பண்ணில் இசைவடிவானவனே, பயிரை வளர்க்கும் மேகமானவனே, விடைஏந்திய கொடியை உடையவனே.
2.🌿பேயடையா பிரிவெய்தும் பிள்ளையினோ டுள்ளநினை
வாயினவே வரம்பெறுவ ரையுறவேண் டாவொன்றும்
வேயனதோ ளுமைபங்கன் வெண்காட்டு முக்குளநீர்
தோய்வினையா ரவர்தம்மைத் தோயாவாந் தீவினையே.
🙏🏾மூங்கில் போன்ற திரண்ட தோளினை உடைய உமையம்மை பங்கன் எழுந்தருளிய திருவெண்காட்டை அடைந்து, அங்குள்ள முக்குளநீரில் மூழ்கி எழுந்து வழிபடுவாரைப் பேய்கள் சாரமாட்டா. பேய் பிடித்திருந்தாலும் விலகுமே. மகப்பேறு வாய்க்குமே. மனவிருப்பங்கள் ஈடேறுவதை இறைவர்பால் அவர் பெறுவரே. சிறிதும் சந்தேகம் வேண்டாதே.
3.🌿மண்ணொடுநீ ரனல்காலோ டாகாய மதியிரவி
எண்ணில்வரு மியமான னிகபரமு மெண்டிசையும்
பெண்ணினொடாண் பெருமையொடு சிறுமையுமாம் பேராளன்
விண்ணவர்கோன் வழிபடவெண் காடிடமா விரும்பினனே.
🙏🏾மண், நீர், அனல், காற்று, ஆகாயம், மதி, இரவி, என எண்ணற்றனவாயுள்ள உயிர்கள் ஆகிய எட்டு மூர்த்தங்களுடன் இம்மை, மறுமை எண்திசை என, பெண் ஆண் ஆகியனவாகவும் பெரியதில் பெருமை, சிறியதில் சிறுமை ஆகியனவாகவும் விளங்கும் புகழாளனாகிய சிவபிரானே, இந்திரன் வழிபடத்திருவெண்காட்டைத் தனது இருப்பிடமாக்கிக் கொண்டு எழுந்தருளியுள்ளோனே!.
4.🌿விடமுண்ட மிடற்றண்ணல் வெண்காட்டின் றண்புறவின்
மடல்விண்ட முடத்தாழை மலர் நிழலைக் குருகென்று
தடமண்டு துறைக்கெண்டை தாமரையின் பூமறையக்
கடல்விண்ட கதிர்முத்தம் நகைகாட்டுங் காட்சியதே.
🙏🏾நஞ்சுண்ட கண்டனாகிய சிவபிரான் எழுந்தருளிய வெண்காட்டை அடுத்துள்ள தண்காட்டில் மடல்விரிந்த வளைந்த தாழைமலர் நிழலைக் குருகு என்றெண்ணி நீர்நிலையில் வாழும் கெண்டைமீன்கள் தாமரைப்பூவின் அடியில் மறைய அதனைக்கண்ட கடல்முத்துக்கள் நகைப்பது போல ஒளி விடும் காட்சியால் புலப்படுவதுவே!.
5.🌿வேலைமலி தண்கானல் வெண்காட்டான் றிருவடிக்கீழ்
மாலைமலி வண்சாந்தால் வழிபடுநன் மறையவன்றன்
மேலடர்வெங் காலனுயிர் விண்டபினை நமன் றூதர்
ஆலமிடற் றானடியா ரென்றடர வஞ்சுவரே.
🙏🏾கடல்நீர் நிரம்பிய குளிர்ந்த சோலைகள் சூழ்ந்த வெண்காட்டு இறைவன் திருவடிகளை மாலைகளாலும் நிறைந்த வளமையான சந்தனத்தாலும் வழிபட்ட மறையவராகிய சுவேதகேதுவின் உயிரைக் கவரவந்த இயமனை அச்சிவன் உதைத்து அழித்ததால் அந்த இயமனுடைய தூதர்கள் சிவபிரான் அடியவர் என்றால் அஞ்சி விலகுவரே.
6.🌿தண்மதியும் வெய்யரவுந் தாங்கினான் சடையினுடன்
ஒண்மதிய நுதலுமையோர் கூறுகந்தா னுறைகோயில்
பண்மொழியால் அவன்நாமம் பலவோதப் பசுங்கிள்ளை
வெண்முகில்சேர் கரும்பெணைமேல் வீற்றிருக்கும் வெண்காடே.
🙏🏾தனது சடைமுடியோடு தண்மதியையும் வெய்ய அரவையும் தாங்கியவனும் ஒளி பொருந்திய மதி போன்ற நுதலை உடைய உமையம்மையை ஒருபாகமாகக் கொண்டவனும் ஆகிய சிவபிரானே, உறையும் கோயில், பசிய கிளிகள் இனிய குரலால் இறைவன் திருப்பெயர்களை ஓதிக்கொண்டு வெண்முகில் சேரும் உயரிய கரியபனை மீது வீற்றிருக்கும் வெண்காடே.
7.🌿சக்கரமாற் கீந்தானுஞ் சலந்தரனைப் பிளந்தானும்
அக்கரைமே லசைத்தானும் அடைந்தயிரா வதம்பணிய
மிக்கதனுக் கருள்சுரக்கும் வெண்காடும் வினைதுரக்கும்
முக்குளநன் குடையானு முக்கணுடை யிறையவனே.
🙏🏾திருமாலுக்குச் சக்கராயுதம் அளித்தவனும், சலந்தராசுரனைப் பிளந்து அழித்தவனும், இடையில் எலும்புமாலை அணிந்துள்ளவனும், தன்னை அடைந்து ஐராவதம் பணிய அதற்கு மிகுதியான அருளைச் சுரப்பவனும், வினைகளைப் போக்கும் முக்குளங்களை உடையவனும் திருவெண்காட்டில் எழுந்தருளிய முக்கண்ணனாகிய இறையவனே.
8.🌿பண்மொய்த்த வின்மொழியாள் பயமெய்த மலையெடுத்த
உன்மத்த னுரநெரித்தன் றருள்செய்தா னுறைகோயில்
கண்மொய்த்த கருமஞ்ஞை நடமாடக் கடன் முழங்க
விண்மொய்த்த பொழில்வரிவண் டிசைமுரலும் வெண்காடே.
🙏🏾பண்ணிசை போலும் இனிய மொழியினளாகிய பார்வதிதேவி அஞ்சுமாறு கயிலை மலையைப் பெயர்த்தெடுத்த பித்தனாகிய இராவணனின் மார்பை நெரித்துப்பின் அருள் செய்த சிவபிரான் உறையும் கோயில், கண்கள் பொருந்திய தோகையைக் கொண்ட நீலமயில்கள் நடனமாடவும், கடல் முழங்கவும், வானளாவிய பொழிலில் வரிவண்டுகள் இசைபாடவும் விளங்கும் திருவெண்காடே.
9.🌿கள்ளார்செங் கமலத்தான் கடற்கிடந்தா னெனவிவர்கள்
ஒள்ளாண்மை கொளற்கோடி யுயர்ந்தாழ்ந்து முணர்வரியான்
வெள்ளானை தவஞ்செய்யு மேதகுவெண் காட்டானென்
றுள்ளாடி யுருகாதா ருணர்வுடைமை யுணரோமே.
🙏🏾தேன் பொருந்திய செந்தாமரையில் எழுந்தருளிய நான்முகன் கடலிடைத் துயிலும் திருமால் ஆகியோர் தன்முனைப்பு நீங்கிச் சிறந்த அடியவர் ஆதற் பொருட்டு மிகஉயர்ந்தும் ஆழ்ந்தும் அவர்கள் உணர்தற்கு அரியவனாகிய சிவபிரான் வெள்ளானை தவஞ்செய்து வழிபடும் நிலையில் சிறந்த திருவெண்காட்டில் எழுந்தருளியுள்ளான் என்று மனங்கசிந்து உருகாதவரின் ஞானத்தை மதியோம்.
10.🌿போதியர்கள் பிண்டியர்கள் மிண்டுமொழி பொருளென்னும்
பேதையர்க ளவர்பிறிமின் அறிவுடையீ ரிதுகேண்மின்
வேதியர்கள் விரும்பியசீர் வியன்றிருவெண் காட்டானென்
றோதியவர் யாதுமொரு தீதிலரென் றுணருமினே.
🙏🏾போதிமரத்தின் அடியில் தவம் செய்யும் புத்தர்கள், அசோகமரநிழலில் தவம் செய்யும் சமணர்கள் கூறும் வன்புரைகளைப்பொருளாகக் கருதும் பேதையர்களைப் பிரிவீர்களாக. அறிவுடையவரே! இதனைக் கேளுங்கள். வேதியர்கள் விரும்பும் புகழுடைய பெரிய திருவெண்காட்டில் உறையும் ஈசன் பெயர்களை ஓதியவர் ஒரு தீங்கும் இலராவர் என்று உணருமின்.
11.🌿தண்பொழில்சூழ் சண்பையர்கோன் றமிழ்ஞான சம்பந்தன்
விண்பொலிவெண் பிறைச்சென்னி விகிர்தனுறை வெண்காட்டைப்
பண்பொலிசெந் தமிழ்மாலை பாடியபத் திவைவல்லார்
மண்பொலிய வாழ்ந்தவர்போய் வான்பொலியப் புகுவாரே.
🙏🏾குளிர்ந்த பொழிலால் சூழப்பட்ட சண்பை நகர்த்தலைவனாகிய தமிழ்ஞானசம்பந்தன், விண்ணிற் பொலியும் பிறைமதி சேர்ந்த சென்னியினை உடைய விகிர்தன் உறையும் திருவெண்காட்டைப் பண்ணிசை பொலியப்பாடிய இச்செந்தமிழ் மாலைபத்தையும் வல்லவர், மண்பொலிய வாழ்வதோடு வான்பொலியவும் சென்று வாழ்வர்.
திருச்சிற்றம்பலம்.
*குறிப்பு:*
ஈசன் ஆலயப் பதிவுகளுடன், திருமுறை பாடல்களும் சேர்ந்து பதிந்து அனுப்புவதால், நீளமாக இருக்கிறது. படிக்க முடியவில்லை என்று ஒருசாரார் கூறுகின்றனர்.
ஆனால் நிறைய பேர்கள் தேவாரம் புரட்டாத கைகளில் தினமும், அந்தந்தத் தலபுராணத்துடன் தேவாரத்தையும் சேர்த்து படிக்கச் செய்து விட்டீர்கள் என்று நன்றியுடன் நெக்குருகுகின்றனர் பலர்.
எனவே, அடியார்கள் வருத்தம் கொள்ள வேண்டாம். சேமித்து வைத்து நேரம் கிடைக்கும்போது வாசியுங்கள்.
சமீபத்தில்தான் தேவாரத் திருமுறை தொகுப்பு முழுமையும் நான்காயிரம் ரூபாய்க்கு வாங்கினேன்.
என்னாலும் படிக்க முடியவில்லை. அதற்காக பூஜை அலமாரியை மட்டும் சுமக்கச் செய்யவில்லை?.....
வாசிக்க முடியாத நாள்களில், பன்னிருதிருமுறை நூல்களை என் தலைமேல் சிறிது நேரம் சுமந்து வைத்து ஈசனை வணங்கிப் பின் இறக்கி வைப்பேன்.
சிவ சிவ சிவ சிவ சிவ
சிவ சிவ சிவ சிவ சிவ
சிவ சிவ சிவ சிவ சிவ
சிவ சிவ சிவ சிவ சிவ
சிவ சிவ சிவ சிவ சிவ.
திருச்சிற்றம்பலம்.
No comments:
Post a Comment