Tuesday, August 14, 2018

Tyagesar temple, Achaalpuram

உ.
சிவாயநம. திருச்சிற்றம்பலம்.
பதியும் பணியே பணியாய் அருள்வாய்.
*கோவை கு கருப்பசாமி.*
"""""""""""""""'''''''''""""""""'""''''""""""''"'''''''''''''''''''''"""""''''''
*தினமும் ஒரு பாடல் பெற்ற தல தரிசனம்:*
(எல்லோரும் தரிசிக்கச் செல்வதற்காக...............)
"""""""""""""""""""""""""""""""""""''""""""""""""""""""""""""
*தேவார பாடல் பெற்ற தல எண்:05*

*தேவாரம் பாடல் பெற்ற சிவ தல தொடர்.*

*சிவ தல அருமைகள் பெருமைகள்.*

*🏜சிவலோக தியாகேசர் கோவில், திருநல்லூர் பெருமணம்.*
""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
தேவாரம் பாடல் பெற்ற தலங்களில் காவிரி வடகரையில் அமைந்துள்ள இத்தலம் ஐந்தாவது தலமாகப் போற்றப் படுகிறது.

திருநல்லூர் பெருமணம் என்னும் இத்தலத்தை தற்போது *ஆச்சாள்புரம்* என்று வழங்கப்பட்டு வருகிறது

*🌙இறைவன்:* சிவலோக தியாகேசர், பெருமண முடைய மகாதேவர்.

*🔱இறைவி:* திருவெண்ணீற்று உமையம்மை, சுவேத விபூதி நாயகி, விபூதி கல்யாணி.

*🔅உற்சவர்:* பாலதிருஞானசம்பந்தர், கல்யாண திருஞானசம்பந்தர்.

*🌴தல விருட்சம்:* மாமரம்.

*🌊தீர்த்தம்:* பஞ்சாக்கர தீர்த்தம், பிருகு தீர்த்தம், அசுவ தீர்த்தம், வசிஷ்ட தீர்த்தம், அத்திரி தீர்த்தம், சமத்கனி தீர்த்தம், வியாச தீர்த்தம், மிருகண்டு தீர்த்தம்.

*🔍ஆலயப் பழமை:* ஆயிரத்திலிருந்து இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னதானது.

*🎡திருவிழாக்கள்:* மகாசிவராத்திரி.

*📞தொடர்புக்கு:*
91 4364 278 272
91 4364 277 800

*புராணப்பெயர்கள்:* நல்லூர், திருமணவை, முக்திபுரம், சிவலோகபுரம், ஆச்சாள்புரம்.

*📖தேவாரம் பதிகம் பாடியவர்கள்:*
திருஞானசம்பந்தர்.

*🛣இருப்பிடம்:*
சிதம்பரத்தில் இருந்து சீர்காழி செல்லும் சாலையில் கொள்ளிடம் பாலத்தைக் கடந்து சென்றால் கொள்ளிடம் ஊர் வரும்.

இங்கிருந்து ஆச்சாள்புரம் செல்லும் கிளைச் சாலையில் சுமார் ஐந்து கி. மி. சென்று இந்த சிவஸ்தலத்தை அடையலாம்.

இதே சாலையில் மேலும் ஆறு கி.மீ. செல்ல 
*மயேந்திரப்பள்ளி* என்ற மற்றொரு பாடல் பெற்ற தலத்தை வணங்கப் பெறலாம்.

சிதம்பரம், சீர்காழியில் இருந்து மயேந்திரப்பள்ளி செல்லும் நகரப் பேருந்துகள் ஆச்சாள்புரம் வழியாகச் செல்கின்றன.

*📮அஞ்சல் முகவரி:* அருள்மிகு சிவலோக தியாகேசர் திருக்கோவில்
ஆச்சாள்புரம்,
ஆச்சாள்புரம் அஞ்சல்,
சீர்காழி வட்டம்,
நாகப்பட்டினம் மாவட்டம்,
PIN - 609 101

*🍃ஆலயப் பூஜை காலம்:*
நாள்தோறும் காலை 6.00 மணி முதல் பகல் 12.00 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 8.00 மணி வரையிலும் ஆலயம் திறந்திருக்கும்.

*🏜கோயில் அமைப்பு:*
சிவலோக தியாகேசர் ஆலயத்திற்கு வந்தபோது, கிழக்கு நோக்கி ஐந்து நிலைகளைத் தாங்கிய இராஜ கோபுரத்தைக் காணப் பெற்றதும் *சிவ சிவ, சிவ சிவ* என மொழிந்து வணங்கிக் கொண்டோம்.

இவ்வாலயத்திற்கு பதினோறு தீர்த்தங்கள் உண்டு. இதில் ஒன்றான பஞ்சாட்சர தீர்த்தம் கோயிலுக்கு எதிரில் உள்ளது.

இராஜ கோபுரத்தின் வாயில் வழியாக உள்ளே நுழைந்தவுடன் கவசமிட்ட கொடி மரமத்தைக் கண்டு வணங்கிக் கொண்டோம்.

அடுத்திருக்கும் நந்தி மண்டபத்திற்கு அருகாக வந்து நின்று நந்தியை வணங்கிக் கொண்டு நகர்ந்தோம்.

அடுத்து, நூற்றுக்கால் மண்டபத்தருகே வந்தோம்.

நூற்றுக்கால் மண்டபத்தில் திருஞானசம்பந்தரும் அவர் மனைவி ஸ்தோத்திர பூராணாம்பிகையுடனும் மணக்கோலத்துடன் தனி சந்நிதியில் காட்சியளிக்க வணங்கி நகர்ந்தோம்.

இதை அடுத்து கிழக்கு நோக்கிய சிவலோக தியாகேசர் சந்நிதி இருக்க, வீழ்ந்தெழுந்து வணங்கிக் கொண்டோம்.

மூலவர் சன்னதிக்கு வந்தோம். மனமுருக பிரார்த்தனை செய்தோம். ஈசன் கண்குளிர அருட்தரிசனம் அருளினார்.

அவ்வருளை அள்ளியெடுத்து நெஞ்சில் பொதிந்து வைத்துக் கொண்டோம்.

அர்ச்சகர் தந்த வெள்ளியவிபூதியைப் பெற்றுக் கொண்டு, அப்படியே திரித்து நெற்றியில் தரித்துக் கொண்டு வெளிவந்தோம்.

சுவாமி கருவறை கோஷ்டத்தில், மூர்த்தங்களாக விநாயகரைக் கண்டு, சடுதியில் காதுகளைப் பிடித்துத் திருகி, தோப்புங்கரணமிட்டு தொழுது நகர்ந்தோம்.

அடுத்து, அருமையான  வேலைப்பாடமைந்த தட்சிணாமூர்த்தியும், மற்றும் லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை ஆகியோர்களைக் கண்டு ஒவ்வொருவரையும் தொடர்ச்சியாக வணங்கிக் கொண்டோம். 

சுவாமி சந்நிதி வாயிலிலருகே வந்தபோது, சந்நிதியின் மேற்புறத்தில் வண்ணச் சுதையிலான சம்பந்தர் ஐக்கியமான காட்சியை அமைத்திருக்கிறார்கள்.

அடுத்து, ஸ்ரீரிணவிமோசனர் சந்நிதியும், இதையும் அடுத்து ஸ்ரீமகாலட்சுமி சந்நிதியும் கருவறை மேற்கு சுற்றுப் பிரகாரத்தில் இருக்க தொடர்ச்சியாக வணங்கிக் கொண்டோம்.

இறைவி திருவெண்ணீற்று உமையம்மை சந்நிதி தனிக்கோயிலாக மேற்கு வெளிப் பிரகாரத்தில் மதில் சூழ்ந்த தனி வாயிலுடன் ஒரு சுற்றுப் பிரகாரத்துடன் அமைந்திருக்க, அம்மையை மனமுருக பிரார்த்தனை செய்து வணங்கிக் கொண்டு, திருநீற்றுப் பிரசாதம் பெற்றுக் கொண்டு, அம்மை சந்நிதியைச் சுற்றி வலம் வந்தோம்.

திருஞானசம்பந்தர் திருமணத்திற்கு வந்தவர்களுக்கு உமையம்மையே நேரில் வந்து திருநீறு அளித்ததால் அம்பிகைக்கு திருவெண்ணீற்று உமையம்மை என்ற பெயர் ஏற்பட்டது.

ஆதலால், இறைவியின் சந்நிதியில் குங்குமத்திற்கு பதிலாக திருநீறு தான் பிரசாதமாக வழங்கப்படுகிறது.

*நமச்சிவாய திருப்பதிகம்:*
திருஞானசம்பந்தர் தன் பெற்றோரின் விருப்பப்படி திருமணம் புரிந்து கொண்டு தம் மனைவியுடன் சுற்றம் சூழ திருநல்லூர் பெருமணம் ஆலயம் வந்து இறைவனைத் துதித்தார்.

கோவிலில் பெருஞ்சோதி தோன்றி ஒரு வாயிலையும் வகுத்துக் காட்டியது.

சம்பந்தர் தன்னுடன் வந்த சுற்றத்தாரையும் அடியார்களையும் சிவசோதியில் கலந்து முக்தி அடையும் படி கூறினார்.

சிலர் நெருப்புச் சோதியைக் கண்டு தயக்கமும் அச்சமும் கொள்ள,.......

சம்பந்தர் அவர்களுக்கு நமச்சிவாய மந்திரத்தின் மேன்மையைக் கூறி நமச்சிவாய திருப்பதிகம் பாடி தம்முடன் வந்தோரை எல்லாம் அச்சோதியில் புகுமாறு சொல்லி, கடைசியில் தாமும் தன் மனைவியுடன் சோதியுட் புகுந்து இறைவன் திருவடியைச் சேர்ந்தார்.

சம்பந்தருடன் சேர்த்து திருநீலகண்ட யாழ்ப்பாணர், முருக நாயனார், திருநீலக்க நாயனார் ஆகிய நான்கு நாயன்மார்கள் ஒரே நாளில், ஒரே இடத்தில் முக்தி அடைந்த தலம் என்ற் பெருமையும் இத்தலத்திற்கு உண்டு.

இத்தகைய சிறப்பு மிக்க சம்பவம் நடைபெற்ற பெருமை உடைய சிவஸ்தலம் திருநல்லூர் பெருமணம் சிவலோகத் தியாகேசர் ஆலயம் இதுவாகும்.

ஆச்சாள்புரத்தில் இருந்து மிக அருகில் உள்ளது நல்லூர் என்ற கிராமம். இந்த நல்லூர் கிராமத்திலிருந்து தான் சம்பந்தர் திருமணத்திறகு பெண் அழைப்பு நடைபெற்றது.

திருஞானசம்பந்தர்  பாடியருளிய இத்தலத்திற்கான இப்பதிகம் மூன்றாம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது.

*சம்பந்தர்:*
சிவபாத இருதயரின் மகனாக சைவமும், தமிழும் தழைக்க சீர்காழியில் அவதரித்தவர் திருஞானசம்பந்தர்.

மூன்று வயதில் அம்பிகையால் ஞானப்பால் ஊட்டப்பட்டு, சிவஞானம் பெற்றார்.

ஈசனின் அருளால் அடியார்களுடன் சிவத்தலங்கள் பல சென்று பதிகம் பாடி, அற்புதங்கள் நிகழ்த்தினார்.

சிவபெருமானைப் போற்றிப் பாடி திருக்கோலக்கா திருத்தலத்தில் சம்பந்தர் பொற்றாளம் பெற்றார்.

பட்டீஸ்வரம் திருத்தலத்தில் முத்துப்பந்தல் பெற்றார்.

திருவாவடுதுறை திருத்தலத்தில் பொற்கிழி பெற்றார்.

திருவீழிமிழலையில் படிக்காசு பெற்றார்.

நஞ்சினால் இறந்த வணிகனுக்கு, பதிகம் பாடி திருமருகல் திருத்தலத்தில் உயிர்ப்பித்தார்.

திருமறைக்காடு எனும் வேதாரண்யத்தில் அப்பர் பெருமானுடன் சேர்ந்து, திறக்காத அத்தலத்தின் கோயில் கதவை திறக்கவும், அடைக்கவும் செய்தார்.

திருவோத்தூர் திருத்தலத்தில் சம்பந்தர் ஆண் பனை மரத்தை, பெண் பனை மரமாக்கினார்.

சென்னை மயிலாப்பூரில் இறந்து போன பூம்பாவை எனும் பெண்ணை, அவளது அஸ்தி மற்றும் எலும்பை கொண்டு ஈசன் அருளால் உயிர்ப்பித்தார்.

இப்படி பல அற்புதங்களை நிகழ்த்திய திருஞானசம்பந்தருக்கு, அவரது பதினாறாவது வயதில் திருமணம் செய்து வைக்க அவர் தந்தையார் முடிவு செய்தார்.

முதலில் மறுத்த சம்பந்தர், பின் ஈசனின் விளையாட்டோ? இது! என்று கருதி சம்மதித்தார்.

சீர்காழியிலிருந்து வடகிழக்கே எட்டு மைல் தொலைவிலுள்ள திருநல்லூரில் வசித்த நம்பியாண்டார் நம்பியின் மகள் தோத்திரப் பூர்ணாம்பிகையை மணம் பேசி முடித்தனர்.

பெருமணம் சிவாலயத்தில் வைத்து சம்பந்தருக்கு திருமணம் செய்ய முடிவானது.

வைகாசி மாதம் மூல நட்சத்திரத்தன்று பெருமணம் சிவாலயத்தில் வைத்து திருமணம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது.

திருமண நாளும் வந்தது. திருநீலகண்ட யாழ்ப்பாணர், முருக நாயனார், திருநீலநக்க நாயனார் மற்றும் சம்பந்தரின் உறவினர்களும், அடியவர்களும் ஒருங்கே திருநல்லூர் எனும் அந்த ஊரில் உள்ள பெருமணம் சிவாலயத்தில் திரண்டனர்.

அப்போது அன்னை உமையவள் அங்கு தோன்றி, சம்பந்தரின் திருமணம் காணவந்த அனைவருக்கும் திருநீறு அளித்தாள்.

எனவேதான் இத்தல அம்பிகைக்கு திருவெண்ணீற்று உமையம்மை என்னும் திருநாமம் வந்தது.

இதன் பொருட்டே இன்றும் இத்தல அம்பிகை சன்னிதியில் குங்குமத்திற்கு பதிலாக திருநீறே பிரசாதமாக வழங்கப்பட்டு வருகிறது.

ஆச்சாள் எனும் அம்பிகையே சம்பந்தர் திருமணத்திற்கு நேரில் வந்திருந்து அனைவருக்கும் திருநீறு வழங்கி அருளியதால் இத்தலம் அதுமுதல் ஆச்சாள்புரம் என வழங்கலாயிற்று.

மணமேடையில் சம்பந்தரின் வலப் பாகத்தில் மணமகளை அமர வைத்தனர்.

சம்பந்தரின் திருமணக் கோலத்தை கண்டு அவையோர் மகிழ்ந்தனர்.

வேள்வி சடங்குகள் நடந்தன.

திருநீலநக்க நாயனார் மணவிழா சடங்குகளை செய்தார்.

சம்பந்தர் அக்னியை வலம் வரும் போது, இருவினைக்கு வித்தாகிய இல்வாழ்க்கை நம்மை சூழ்ந்ததே, இனி இவளோடும் அந்தமில் சிவன் தாள் சேர்வேன் என்று கூறி, நல்லூர்ப் பெருமணம் எனத் தொடங்கும் பதிகம் பாடினார்.

அப்போது அங்கு அசரீரி யாவருக்கும் கேட்கும் வண்ணம் ஒலித்தது.

சம்பந்தா! இப்போது கருவறையில் எமது லிங்கத்திருமேனியில் இருந்து பெருஞ்ஜோதி தோன்றும்.

அந்த ஜோதியில் யாம் ஒரு வாசலையும் அமைத்திருப்போம். அந்த வாசலின் வழியே நீயும், உம் திருமணம் காணவந்த அனைவரும் மற்றும் அடியவர்களும் சிவஜோதியில் புகுந்து எம்முள் கலந்திடுக என்றது.

அப்போது கருவறை லிங்கம் பிளந்து அதில் இருந்து தோன்றிய சிவஜோதியைக் கண்டு சிலர் தயக்கமும் அச்சமும் கொண்டனர்.

சம்பந்தர் அவர்களுக்கு நமசிவாய மந்திரத்தின் மேன்மையைக் கூறி, காதலாகி கசிந்து கண்ணீர் மல்கி எனும் நமசிவாய திருப்பதிகம் பாடி தம்முடன் வந்தோரை எல்லாம் கருவறையில் தோன்றிய சிவலிங்க ஜோதியில் புகுமாறு சொன்னார்.

அவரும் தனது மனைவியுடன் அந்த ஜோதியில் புகுந்தார்.

உடனே கருவறையில் ஜோதி மறைந்து பிளந்திருந்த சிவலிங்கம் முன்புபோல மீண்டும் ஒன்றாகியது. ஆம்! சம்பந்தர் மற்றும் அவரது திருமணத்திற்கு வந்த அனைவருக்கும் இத்தல ஈசன், முக்தி தந்தருளியதால் இத்தல ஈசனுக்கு சிவலோக தியாகேசர் என்னும் திருநாமம் வந்தது.

இப்படி தம்முடைய சிவலிங்க பிளவுக்குள் சம்பந்தர், அவரது மனைவி, திருநீலகண்ட யாழ்ப்பாணர், முருக நாயனார், திருநீலநக்க நாயனார் மற்றும் பல அடியவர்களையும் உள்வாங்கிய லிங்கம், இன்றும் நமக்கு சிவலோக பதவி வழங்க காத்தருளிக் கொண்டிருக்கிறது.

ஆண்டுதோறும் வைகாசி மூல நட்சத்திர நன்னாளில் இத்தலத்தில் சம்பந்தர் திருமணமும், சம்பந்தர் சிவஜோதியில் கலக்கும் வைபவமும் வெகு சிறப்பாக நடக்கிறது.

வைகாசி மூல நட்சத்திர நாளில் சம்பந்தரின் திருமண வைபவத்தில், காலை 7.00 மணி முதல் 8.45 மணி வரை திருஞான சம்பந்தர் உபநயனமும், மாலை 5.00 மணிக்கு திருமுறைகள் வீதிவலமும், 6.30 மணிக்கு மாலை மாற்றும் வைபவமும், இரவு 9.00 மணி முதல் 10.30 மணிக்குள் திருமணமும் நடைபெறும்.

பின்பு அதிகாலை 2.00 மணிக்கு தேவார திருமுறை சம்பந்தர் உடன் ஆலய வீதி உலா நடைபெறும்.

அதிகாலை 4.45 மணிக்கு சம்பந்தர் சிவஜோதியில் கலத்தலை தரிசித்து பெரும் புண்ணிய பேறு பெறுவார்கள்.

பொதுவாக எந்த ஆலயத்திலும் உற்சவரை கருவறைக்குள் எடுத்துச் செல்ல மாட்டார்கள். ஆனால் இங்கு திருஞான சம்பந்தரின் திருமணம் முடிந்தபின், சம்பந்தரின் உற்சவ மூர்த்தியை கருவறைக்குள் கொண்டு சென்று மூலவர் காலடியில் வைக்கிறார்கள்.

அதன்பின்பு மிகப்பெரிய கற்பூரக் கட்டிகளை ஏற்றி தீபாராதனை செய்வார்கள்.

அப்போது சம்பந்தர் ஜோதியில் கலப்பதாக ஐதீகம். இக்காட்சியைக் காண கண்கோடி வேண்டும்.

இதைக்கண் பார்த்தவர்களுக்கு மறுபிறப்பே இல்லாதிருந்தர் என்று கூறப்படுகிறது.

அதேபோல் இதைவாசித்தோர் நிலையும், மறுபிறப்பில்லா நிலை ஏதுவாக அடியேனின் உளமார எண்ணம்.

பிறப்பில்லா நிலை எய்ய, சிலவானவைகளை நாம் கடையொழுக வேண்டும்.

No comments:

Post a Comment