ஸ்ரீமத்பாகவதம் - ஸ்கந்தம்2- அத்தியாயம் 6
அத்தியாயம் 6
பிரம்மா மேலும் கூறலானார்.
பகவானுடைய முகத்தில் இருந்து வாக்கு பிறந்தது. இதன் அதிஷ்டான தேவதை அக்னி. ஏழு தாதுக்களும் காயத்ரி முதலிய ஏழு சந்தஸாகும். யக்ஞங்களில் ஆஹுதி செய்யும் தேவர்களின் பாகமாகிய ஹவிஸ், பித்ருக்களின் பாகமாகிய கவிஸ் இரண்டும் அவர் நாவிலிருந்து தோன்றியவை.
நாசித்வாரங்களிலிருந்து பிராணன் , அதன் அதிஷ்டான தேவதை வாயு. அவருடைய கந்த உணர்வு அச்விநிதேவர்கள் பிறப்பிடம். அதிலிருந்து மூலிகைகள் மணமுள்ளவைகள் தோன்றின.
அவர் கண்கள் சந்திரனும் சூரியனும். அவர் செவிகள் திசைகளின் உற்பத்திஸ்தானம். அவருடைய கரங்கள் திசைகளின் தேவதைகளின் இருப்பிடம்.அவர் பாதங்கள் அபீஷ்டங்களை கொடுக்க வல்லது.
அவர் ரத்தகுழாய்களே நதிகள். எலும்புகள் மலைகள். அவர் உதரம் சகல ஜீவராசிகளின் இருப்பிடம். அவருடைய சித்தம் எனபது தர்மம். நான் நீ அனைத்து ரிஷிகள் அனைத்து ஜீவராசிகள் எல்லாம் அவரிடம் இருந்து உற்பத்தியானவை.
ஸர்வம் புருஷமேவேதம் பூதம் பவ்யம் பவச்ச யத்
தேநேதம் ஆவ்ருதம் விச்வம் விதஸ்திம் அதிதிஷ்டதி( ஸ்ரீமத் பாக. 2.6.15)
சிருஷ்டி எல்லாமே பகவான்தான். கடந்த காலம் நிகழ்காலம் வரும் காலம் எல்லாம் அவனே.
புருஷ ஏவ இதம் ஸர்வம் யத் பூதம் யத் ச பவ்யம்
உதாம்ருதஸ்ச்யசான: யதன்னேனாதிரோஹதி (புருஷசூக்தம் )
யத் பூதம்- எது இருந்ததோ
யத் பவ்யம்- யது இருக்கப்போவதோ
இதம் – எது இப்போது இருக்கிறதோ
சர்வம் இது எல்லாம்
புருஷ: ஏவ- பரமபுருஷனே
உத-மேலும் பரமபுருஷனே
அம்ருதத்வஸ்ய – அழிவின்மைக்கும்
ஈசான:-அதிபன்
யத் –எது
அன்னேன- அன்னமயமான இந்த பிரபஞ்சத்தை
அதிரோஹதி- கடந்து நிற்கிறதோ ( அதுவும் பரம புருஷனே) . எங்கும் வியாபித்து, அதைக் கடந்து நிற்கிறான்.
,' ஸ பூமிம் விச்வதோ வ்ருத்வா அத்யதிஷ்டத் தசாங்குலம்.' (புருஷசூக்தம். )
பரமபுருஷன் உலகை வியாபித்து அதற்கு மேல் பத்து விரல் எண்ணிக்கை அளவு கடந்து நிற்கிறார்.
பத்து விரல்களால் எண்ணும் எண்ணிக்கையை கடந்து நிற்கிறார் என்பதற்கு என்ன அர்த்தம் என்று பார்க்கலாம்.
இது கணிதத்தில் அளவு என்ற பொருளைக் குறிக்கும் சொல். எண்ணிக்கைக்கு ஆரம்பம் பத்து விரல்கள் அல்லவா? அதைகடந்து நிற்கிறான் என்றால்அது இறைவனின் எல்லையில்லாத் தன்மையைக் குறிக்கிறது. அதாவது அனந்தம் infinity.
அவர் ஸ்வயம் பிரகாசமானவர். எவ்வாறு சூரியன் தன் பிரகாசிக்கச் செய்துகொண்டு வெளியிலும் பிரகாசிக்கிரானோ அதுபோலபிரம்மாண்டத்திற்கு உள்ளும் வெளியிலும் பிரகாசிக்கிறார்.
பிரம்மா கூறினார் .
நான் அவருடைய நாபியில் இருந்து உண்டானபோது அவரைத்தவிர வேறு எதையும் காணவில்லை . அவருடைய அவயவங்களில் இருந்தே ஆராதிக்கும் முறைகள் பொருட்கள் எல்லாமே என்னால் கல்பிக்க ப்பட்டன வேள்விப் பொருள்களையும் இவ்வாறு கல்பித்து, யக்ஞபுருஷரான அவரை ஆராதித்தேன்.
அவரால் ஏவப்பட்டு நான் படைக்கிறேன். அவருக்கு வசப்பட்டு ருத்ரன் அழிக்கிறார். அவரே விஷ்ணுரூபத்தில் உலகை பரிபாலிக்கிறார்.
யஸ்யாவதார கர்மாணி காயந்திஹி அஸ்மதாதய:
ந யம் விதந்தி தத்வேன தஸ்மை பகவதே நம: (ஸ்ரீ. பா. 2.6.37)
எவருடைய அவதாரலீலைகளை நம்போன்றவர்கள் கீர்த்தனம் செய்கிறார்கள் ஆனாலும் அவரை உள்ளபடி அறியமாட்டார்களோ அந்த பகவானுக்கு நமஸ்காரம்
நாயம் ஆத்மா ப்ரவசனேன லப்ய:
ந மேதயா பஹுணா ஸ்ருதேன
யமைவேஷ வ்ருணுதி தேன லப்ய:
தஸ்ய எஸ ஆத்மா வ்ருணுதே தானும் ஸ்வாம் ( கட. உப. 2.23)
வேதங்களைக் கற்றதாலோ நுண்ணறிவினாலோ நிறைய கேட்பதனாலோ இந்த ஆத்மா(பகவான்) அடையப்படுவதன்று. எவன் உண்மையாக பிரார்த்திக்கிறானோ அவனுக்கு உண்மை ஸ்வரூபம் தானாக வெளிப்படுகிறது.
ஸ ஏவ ஆத்ய: புருஷ: கல்பே கல்பே ஸ்ருஜதி அஜ:
ஆத்மா ஆத்மனி ஆத்மனா ஆத்மானம் ஸம்யச்சதி ச பாதி ச(ஸ்ரீ.பா. 2.6. 38)
பிறப்பில்லாத அந்த புருஷன் கல்பம் தோறும் தானே தன்னிடத்தில் தன்னாலேயே தன்னையே ஆக்கவும் அழிக்கவும் செய்துகொள்கிறார்.
விசுத்தம் கேவலம் ஞானம் ப்ரத்யக் ஸமயக் அவஸ்திதம்
சத்யம் பூர்ணம் அநாத்யந்தம் நிர்குணம் நித்யம் அத்வயம் (2.6.39)
அவர் ஸ்வரூபமானது பரிசுத்தமாகவும் ஞானமே உருவாயும்,அனைத்துள்ளும் நிறைந்து நித்யமாகவும் ஸத்தியமாகவும் பூரணமாகவும் அடிமுடியற்று நிர்குணமான ஒன்றேயானது.
நாரதரே, உடலும் இந்திரியங்களும் மனமும் அமைதி பெற்ற முனிவர்கள் அந்த ஸ்வரூபத்தை அறிகிறார்கள்.
நாஹம் பிரகாச: ஸர்வஸ்ய யோகாமாயாஸமாவ்ருத:
மூடோயம் நாபிஜானாதி லோகோ மாம் அஜம் அவ்யயம் (ப.கீ. 7.25)
கீதையில் பகவான் சொல்கிறார்.
நான் யோகமாயையால் மறைக்கப்பட்டு எல்லோருக்கும் தெரிவதில்லை. அறியாமையால் இந்த உலகத்தில் என்னை பிறப்பற்றவன் நிலையானவன் என்று அறிவதில்லை.
பரம புருஷனின் ஆதி அவதாரம் விராட்புருஷ வடிவாகும்.அதிலிருந்து ,காலம், பிரகிருதி, மனம் , பஞ்சபூதங்கள் , அஹங்காரம் முக்குணங்கள் , இந்த்ரியங்கள் ,ஸ்தாவர ஜங்கமங்கள் தோன்றின .
இவ்வாறு பகவானின் பெருமைகளின் சுருக்கத்தை உனக்கு உபதேசித்தேன் என்று கூறினார் பிரம்மா
No comments:
Post a Comment