Tuesday, August 7, 2018

Srimad Bhagavatam skanda 1 adhyaya 1&2 in tamil

Courtesy:smt.Dr.Sraoja Ramanujam

ஸ்ரீமத்பாகவதம்-ஸ்கந்தம் 1- அத்தியாயம் 1(தொடர்ச்சி)அத்தியாயம் 2


நைமிஷே அனிமிஷக்ஷேத்ரே ரிஷய: சௌனகாதய: 
ஸத்ரம் ஸ்வர்காய லோகாய ஸஹஸ்ர ஸமம் ஆஸத

நைமிஷே -நைமிசாரண்யம் என்ற 
அனிமிஷக்ஷேத்ரே- பகவான் கண்கொட்டாமல் வீற்றிருக்கும் க்ஷேத்திரத்தில் சௌனகாதய: -சௌனகர் முதலிய முனிவர்கள் 
ஸ்வர்காய லோகாய – தேவர்களும் அடைய விரும்பும் உலகத்தை (வைகுண்டத்தை)
ஸஹஸ்ர ஸமம்- ஆயிரம் வருடங்கள் 
ஸத்ரம் ஆஸத- யாகம் செய்தார்கள்.

.நைமிசாரண்யத்தில் பகவான் வன ரூபத்தில் இருக்கிறார் என்பதது ஐதீஹம் . அவர் அனிமிஷ அல்லது கண் கொட்டாமல் பார்த்துக்கொண்டு இருக்கிறார் என்று கூறப்படுகிறது.

நைமிசாரண்யம் என்பதன் பொருள் நேமி: சீர்யதே யத்ர, அதாவது கர்மா என்ற சக்கரத்தின் முனை இங்கு மழுங்கப்படுகிறது என்பதாகும்.: அதாவது பிறப்பு இறப்பு என்ற சம்சாரத்தின் சுழற்சி நின்றுவிடுகிறது. ஏனென்றால் பகவானின் கண்கொட்டாத பார்வை இந்த க்ஷேத்ரத்தில் எப்போதும் கிடைப்பதால். 
ஸ்வர்கம் என்ற சொல் இங்கு ஸ்வர்பி: கீயதே இதி ஸ்வர்க்க: : என்று பொருள் கூறப்படுகிறது . அதாவது சுவர்க்கவாசிகளும் விரும்பும் உலகம் , பரமபதமாகிற வைகுண்டம் அல்லது மோக்ஷம்.

.அச்சமயம் அங்கு சூதபௌராணிகர் வருகிறார்.. அவரை அந்த ரிஷிகள் சில கேள்விகள் கேட்கிறார்கள் அதன் விடையாக அவர் ஸ்ரீமத்பாகவத புராணத்தைக் கூறுகிறார்.

1. எல்லா சாஸ்திரங்களுடைய சாரமானது எது? 
2. பகவான் எதற்காக தேவகி வசுதேவரிடம் தோன்றினார்
3.அவருடைய அவதாரங்களைப்பற்றி கூறுங்கள்.
4. தன்னை மறைத்துகொண்டு மனிதனைப்போல் நடித்த அவருடைய மனித இயல்பினை மீறிய செயல்களைப் பற்றி கூறுங்கள்.
5.கிருஷ்ண பகவான் மறைந்த பிறகு தர்மம் யாரை சரண் அடைந்திருக்கிறது?

அத்தியாயம் 2- 
புராணங்களை கூறுபவர் சூதபௌராணிகர் எனப்படுவர். வியாசரின் சீடரான ரோமஹர்ஷணரின் புத்திரர் உக்ரஸ்ரவஸ் இங்கு பாகவத புராணத்தைக் கூறுகிறார். முதலில் குருவையும் பிறகு பகவானையும் வந்தனம் செய்து ஆரம்பிக்கிறார்

யம் ப்ரவ்ரஜந்தம் அனுபேதம் அபேதக்ருத்யம் 
த்வைபாயனோ விரஹகாதர ஆஜூஹாவ 
புத்ரேதி தன்மயதயா தரவோ அபிநேது: 
தம் சர்வபூதஹ்ருதயம் முனிம் ஆனதோ அஸ்மி

ப்ரவ்ரஜந்தம் – முற்றும் துறந்தவராய் 
அனுபேதம் – துணை இன்றி
அபேதக்ருத்யம் – செயல்களைத் துறந்து சென்ற 
யம்- எந்த சுகரை 
த்வைபாயன:- வியாசர் 
விரஹகாதர: மகனின் பிரிவினால் வருந்தி
புத்ர இதி – மகனே என்று
ஆஜூஹாவ – கூப்பிட்ட போது
தன்மயதயா- அவர் பிரம்ம ஞானியாக பிரபஞ்சத்துடன் ஒன்றாக கலந்துவிட்டதால் 
தரவ: -மரங்கள் எல்லாம் 
அபிநேது: - வியாசருக்கு பதில் குரல் கொடுத்ததோ ( சுகர் பேசவில்லை) 
தம் –அப்படிப்பட்ட 
சர்வபூதஹ்ருதயம் – எல்லா ஜீவராசிகளுக்கும் உள்ளம் ஆகி நின்ற 
முனிம் – சுக முனிவரை 
மானதோ அஸ்மி- வணங்குகிறேன்

வியாசர் பாகவதத்தை இயற்றினாலும் அதை முதலில் கூறியது சுகப்ரம்மரிஷிதான். அதனால் அவரை சரணம் அடைந்து இந்தப் புராணத்தை சொல்கிறேன் என்கிறார்.

ய: ஸ்வானுபாவம் அகிலஸ்ருதிசாரம் ஏகம் 
அத்யாத்மதீபம் அதி திதீர்ஷதாம் தமோ அந்தம் 
ஸம்ஸாரிணாம் கருணயா ஆஹ புராணகுஹ்யம்
தம் வ்யாசசூனும்உபயாமி குரும் முனீனாம்

ய: - எவர் 
ஸ்வானுபாவம் – ஆத்மானுபவத்தை அளிப்பதாகவும்
அகிலஸ்ருதிசாரம்- வேதங்களின் சாரமாகவும்
ஏகம் – ஒப்பற்றதும்
அத்யாத்மதீபம் – ஆத்மஞானத்தைக் காட்டும் தீபம் போன்றதும்
தமோ அந்தம் –அக்ஞான இருளை
அதிதீர்ஷதாம் – கடக்க ஆவல் கொண்ட 
ஸம்ஸாரிணாம்-சம்சார பந்தத்தில் அகப்பட்டு இருப்போர்க்கு 
கருணயா- கருணையுடன் 
புராணகுஹ்யம் –இந்த அரிய புராணத்தை 
ஆஹ- உபதேசித்தாரோ 
தம் வ்யாச சூனும்- அந்த வ்யாசபுத்திரரான 
குரும் முனிம்- சுகமுனிவரை 
உபயாமி- சரணம் அடைகிறேன்

நாராயணம் நமஸ்க்ருத்ய நரம் சைவ நரோத்தமம் 
தேவீம் ஸரஸ்வதீம் வ்யாஸம் ததோ ஜயம் உதீரயேத்

ஜயம்- ஜெயம் என்ற இந்தப் புராணத்தை 
நாராயணம்- நாராயணனையும்
நரோத்தமம் – புருஷ ஸ்ரேஷ்டனான 
நரம் – நரனையும் (நர நாராயண வந்தனம்)
தேவீம் ஸரஸ்வதீம் – சரஸ்வதி தேவியையும்
வ்யாசம் – வியாசரையும் 
நமஸ்க்ருத்ய –வணங்கி 
தத: -பிறகு
உதீரயேத் – கூற வேண்டும்.

சாதாரணமாக மகாபாரதமே ஜயம் எனப்படும். ஜய என்ற எழுத்துக்கள் கடபயாதி சாங்க்யையின் படி 18 என்ற எண்ணைக் குறிக்கும்.மகாபாரதம் பதினெட்டு பர்வங்களைக் கொண்டது. பாரதப்போர் நடந்தது பதினெட்டு நாள். மகாபாரதத்தின் ஹ்ருதயம் எனக்கூறப்படும் பகவத்கீதை பதினெட்டு அத்தியாயங்கள் கொண்டது. இதனால் ஜயம் என்று சொல்லப்படுகிறது.

பாகவதம் 18௦௦௦ ஸ்லோகங்கள் கொண்டது. கிருஷ்ண மந்திரம் பதினெட்டு அக்ஷரங்களைக் கொண்டது., பாகவதத்தை ஜயaம் என்று குறிப்பிட்டதற்கு இன்னொரு காரணம், இதனால் சம்சாரமானது வெல்லப்பட்டதாகிறது, 'ஜயதி அனேன ஸம்ஸாரம் இதி ஜய:'

No comments:

Post a Comment