Monday, August 6, 2018

Pasupatheswarar temple Thiruvetkalam - Thevara paadal petra sthalam

சிவாயநம. திருச்சிற்றம்பலம்.
பதியும் பணியே பணியாய் அருள்வாய்.
*கோவை.கு.கருப்பசாமி.*
••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••
*தினமும் ஒரு தேவாரம்  பாடல் பெற்ற தல தரிசனம்:*
(எல்லோரும் தரிசிக்க செல்வதற்காக......................)
_____________________________________
*தல எண்: 02.*

*பாடல் பெற்ற சிவ தல தொடர்.*

*சிவ தல அருமைகள் பெருமைகள்.*

*🏜பாசுபதேஸ்வரர் கோவில், திருவேட்களம்.*
•••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••
தேவாரம் பாடல் பெற்ற தலங்களில் காவிரி வடகரையில் அமைந்துள்ள இத்தலம் இரண்டாவது தலமாககப் போற்றப் படுகிறது.

*🌙இறைவன்:* பாசுபதேஸ்வரர், பாசுபதநாதர்.

*🔱இறைவி:* நல்லநாயகி, சற்குனாம்பாள்.

*🌴தல விருட்சம்:* மூங்கில்.

*🌊தல தீர்த்தம்:* நள தீர்த்தம், கிருபா தீர்த்தம்.

*💥ஆகமம்:* காமிக ஆகமம்.

*🔍ஆலயப் பழமை:* ஆயிரத்திலிருந்து இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னதானது.

*📖பதிகம்:* திருநாவுக்கரசர். 
திருஞானசம்பந்தர்.

*📣புராணப்பெயர்கள்:*
திருவேட்களம், மூங்கில் வனம்.

*இருப்பிடம்:*
சிதம்பரத்தில் இருந்து இரண்டு கி.மி. தொலைவில் அண்ணாமலை பல்கலைக் கழகம் வளாகத்தின் உள்ளே புகுந்து பின்புறம் சங்கீதக் கல்லூரியைக் கடந்து சென்று இத்தலத்தை அடையலாம்.

*📮அஞ்சல் முகவரி:* அருள்மிகு பாசுபதேஸ்வரர் திருக்கோவில்,
திருவேட்களம்,
அண்ணாமலை நகர் அஞ்சல்,
சிதம்பரம்.
கடலூர் மாவட்டம்.
PIN - 608 002

*🍃ஆலயப் பூஜை காலம்:* நாள்தோறும் காலை 6.45 மணி முதல் 11.30 மணி வரையிலும், மாலை 5.30 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் ஆலயம் திறந்திருக்கும் 

*🏜கோயில் அமைப்பு:*
தற்போது மூன்று அடுக்கு ராஜகோபுரத்துடன் கோயில் கிழக்கு பார்த்து அமைந்துள்ளது. கோபுரத்தைக் கண்டு *சிவ சிவ* என மொழிந்து வணங்கிக் கொண்டோம்.

கோபுர வாயிலைக் கடந்து உள்ளே செல்லும்போது பிரகாரத்தில் சித்திவிநாயகரைக் கண்டோம்.

விடுவோமா? படீரென காதைப் பிடித்துத் திருகி தோப்புக்கரணமிட்டுக் தொழுது வணங்கிவிட்டு நகர்ந்தோம்.

சோமஸ்கந்தர் சந்நிதிக்குச் சென்று கைதொழுது கொண்டோம்.

முன் மண்டபத்தில் தெற்கு நோக்கிய அம்பிகையின் சன்னதிக்கு வந்தோம். மனமுருக பிரார்த்தனை செய்து வணங்கிக் கொண்டு அர்ச்சகரிடம் குங்குமப் பிரசாதம் பெற்றுக் கொண்டு வெளிவந்தோம்.

இங்கு நான்கு தூண்களிலும் அர்ஜுனன் தன் ஆயுதங்களை வைத்தல்,

ஒரு காலில் நின்று தவம் புரிதல்,

இறைவன் வேட  வடிவம் எடுத்தல்,

சிவனும் அர்ஜுனனும் சண்டையிடுதல் போன்றவை சிறப்பாக செதுக்கப்பட்டிருந்ததைக் காணும் போது மிக மிக பிரமிப்பாக இருந்தது.

கோயிலின் சுற்றுப்பகுதியில் நுழையவும், நர்த்தன விநாயகர், அனுக்கிரக தட்சிணாமூர்த்தி, இந்திரன் மயில் மீதமர்ந்த முருகன் ஆகியோர் அனைவரையும் ஒவ்வொருவரையும் தொடர்ச்சியாக வணங்கிக் கொண்டோம்.

சூரியனும் சந்திரனும் அருகருகே இத்தலத்தில் இருப்பது விசேஷம்.

இவர்களை சூரிய, சந்திர கிரகணங்களின் போது வழிபட்டால் கிரக தோஷங்கள் நீங்கும் என்று அங்கிருந்தோர் கூறுகின்றனர்.

இறைவனைக் காண அவர் சந்நிதிகளுக்குச் சென்றோம். மூலவர் கருவறையில் கிழக்கு நோக்கு அருளி எழுந்தருளியுள்ளார்.

கண்குளிரத் தரிசித்து, மனமுருக பிரார்த்தித்து வணங்கிக் கொண்டு அர்ச்சகரிடம் வெள்ளிய விபூதியை பெற்று வெளிவந்தோம்.

கோஷ்ட மூர்த்திகளாக உச்சி விநாயகர், நர்த்தன கணபதி, தட்சிணாமூர்த்தி, இலிங்கோத்பவர், பிரம்மா ஆகியோரையும் கண்டு தொழுது வணங்கி நகர்ந்தோம்.

அடுத்து, சண்டேசுவரர் சந்நிதிக்குச் சென்று, இவரை வணங்கும் முறையுடன் வணங்கித் திரும்பினோம்

இத்தலத்து முருகப்பெருமானை அருணகிரிநாதர் தனது திருப்புகழில் பாடியுள்ளார்.

திருப்புகழில் இத்தலத்து முருகன் மீது இரண்டு  பாடல்கள் உள்ளன.

இத்தலத்தில் முருகப்பெருமான் பன்னிரு திருக்கரங்களுடன் தனது தேவியர் இருவருடன் மயில் மீது கிழக்கு நோக்கி எழுந்தருளியதைக் கண்டு வணங்கிக் கொண்டோம்.

திருவாசியுடன் ஒரே கல்லில் அமைந்த இத்திருவுருவத்திற்கு வைகாசி விசாக விழா இத்தலத்தில் மிகச் சிறப்பாக கொண்டாடப்படுகிறது என்று அர்ச்சகர் ஒருவர் கூறினார்.

திருஞானசம்பந்தர் சிதம்பரத்தில் தங்கியிருப்பதற்கு மனமில்லாமல் திருவேட்களம் என்ற இத்தலத்திலிருந்து கொண்டு தான் சிதம்பரத்திற்கு எழுந்தருளி நடராஜப் பெருமானை தரிசித்து வந்தார்.

திருநாவுக்கரசர் இயற்றியுள்ள இத்தலத்திற்கான இப்பதிகம் ஐந்தாம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது.

தனது பதிகத்தின் முதல் பாடலில் இத்தல இறைவனைத் தொழுதால் நம் வினைகள் யாவும் தொலைந்து விடும், என்றும் இன்பம் தழைக்க இருந்து உய்யலாம் என்றும் குறிப்பிடுகிறார்.

மேலும் தனது பதிகத்தின் ஆறாவது பாடலில் *"கவலைகளாற் கட்டப்பெற்று வீழ்ந்திடாது,* விரைந்து உயிர்போவதற்கு முன்பே உயர்ந்த இறைவர் எழுந்தருளியுள்ள திருவேட்களம் இறைவனைத் கைதொழுவீர்களாக, அப்படி தொழுதால் பொருந்திய வல்வினைகள் அனைத்தும் கெடும்" என்றும் குறிப்பிடுகிறார்.

*🍁சிறப்பு:*
சந்நிதி வாயிலின் முன்னால் இருபுறமும் தலப்பதிக கல்வெட்டுக்கள் இருப்பதைக் காணலாம்.

நடராசர் மகுடமணிந்து காட்சி தருகிறதைப் பார்த்தோம். மிக மிக மிக சிறப்பாக இருந்தது.

இவருக்கு இடப்புறத்தில் நால்வர் உற்சவத் திருமேனிகளும் அதைத் தொடர்ந்து உற்சவ மூர்த்தங்களும் வைக்கப்பட்டிருந்ததைக் காணக் கிடைத்தது.

இம்மூர்த்தங்களைப் பார்த்ததும், நெஞ்சுக்கு நேராக நம் கைகள் இயல்பாகவே குவிந்தது.

இம்மூர்த்தங்களுள் பாசுபதம் ஏந்திய மூர்த்தியும், அருச்சுனன் திருமேனியும் தல வரலாற்றுத் தொடர் புடையவை என அருகிருந்தோர் சுட்டினார்.

இந்த இரண்டு மூர்த்தங்களும் மிகப் பழங்காலத்தியவையாம். தூர் வாரிய போது, அப்போது குளத்திலிருந்து கிடைத்ததாகச் சொல்கிறார்கள்.

பல்லவ அரசர்களால்
செங்கற்களால் கட்டப்பட்டிருந்த இக்கோயிலை 1914 ஆம் ஆண்டு கானாடுகாத்தான் பெத்த பெருமாள் செட்டியார் என்பவரால் கருங்கற்களால் செப்பனிடப்பட்டார்.

அதன்பின்பே மூன்றடுக்கு ராஜகோபுரம் கிழக்கு பார்த்து அமைத்திருக்கிறார்கள்.

தெட்சிணாமூர்த்தியின் காலடியில் உள்ள முயலகன் இடப்பக்கம் தலைவைத்துள்ளார்.

*தல அருமை:*
அர்ஜுனன் தவம் செய்து, பாசுபதம் பெற்ற முதன்மைத் தலமாகக் கருதப்படுவது திருவேட்களம்.

பாரதப்போரில் வெற்றி பெறுவதற்காக அர்ஜுனன் பாசுபதம் பெற விரும்பி சிவபெருமானை நோக்கி மூங்கில் காடாக இருந்த திருவேட்களத்தில் கடும் தவம் செய்கிறான்.

அர்ஜுனனின் தவத்தைக் கெடுக்க துரியோதனன் மூகாசுரனை பன்றி வடிவில் அனுப்பினான்.

சிவபெருமான் பார்வதியுடன் வேடன் உருவில் வந்து தனது அம்பால் பன்றியை கொன்றார்.

அதே பன்றியின் மீது அர்ஜுனனும் அம்பெய்தினான்.

அந்த பன்றியை யார் கொன்றார்கள் என்பது குறித்து சிவனுக்கும் அர்ஜுனனுக்கும் சொற்போரும், விற்போரும் நடந்தது.

விற்போரில் அர்ஜுனின் வில் முறிந்தது. இதனால் கோபமடைந்த அவன் முறிந்த வில்லால் வேடனை அடித்தான்.

இந்த அடி மூவுலகத்தில் உள்ள அனைத்து உயிர்களின் மீதும் விழுந்தது. இதனால் அன்னை பார்வதி கோபமடைந்தாள்.

சிவன் பார்வதியை சமாதானப்படுத்தி தனது திருவடியால் அர்ஜுனனை தூக்கி எறிகிறார்.

அவன் சிவனின் பாத தீட்சை பெற்று, அன்னையின் கருணையால் இத்தல தீர்த்தத்தில் விழுகிறான்.

சிவன், உமாதேவியுடன் காட்சிகொடுத்து, அர்ஜுனனுக்கு பாசுபதம் கொடுத்து அருளினார்.

அர்ஜுன் வில்லால் அடித்த தழும்பு லிங்கத்தின் மீது இருப்பதை இன்றும் காணலாம்.

கிராதமூர்த்தியாக பாரவதிதேவியுடன் பாசுபதாஸ்திரம் கையில் ஏந்திய இறைவனின் உற்சவ விக்கிரகமும், அர்ஜுனன் உற்சவ விக்கிரகமும் இவ்வாலயத்தில் உள்ளன.

வைகாசி மாதம் விசாக நட்சத்திரத்தில் அர்ஜுனனுக்கு பாசுபதாஸ்திரம் அளித்த உற்சவம் நடைபெறுகிறது.

*🍁திருநாவுக்கரசு சுவாமிகள் தேவாரம்:*
01.🔔நன்று நாள்தொறும் நம் வினை போய் அறும் 
என்றும் இன்பம் தழைக்க இருக்கல் ஆம் 
சென்று நீர் திருவேட்களத்துள் உறை 
துன்று பொற்சடை யானைத் தொழுமினே.

🙏🏾திருவேட்களத்துள் உறைகின்ற நெருங்கிய பொலிவார்ந்த சடையுடைய ஈசனைத் தொழுவீர்களாக அங்ஙனம் தொழுதால் நாள்தொறும் நம்வினை பெரிதும் தொலையும் என்றும் இன்பம் தழைக்க இருந்து உய்யலாம்.

02.🔔கருப்பு வெஞ்சிலைக் காமனைக் காய்ந்தவன் 
பொருப்பு வெஞ்சிலையால் புரம் செற்றவன் 
விருப்பன் மேவிய வேட்களம் கைதொழுது 
இருப்பன் ஆகில் எனக்கு இடர் இல்லையே.

🙏🏾கரும்பாகிய விருப்பத்தை விளைக்கும் வில்லை உடைய மன்மதனைக் காய்ந்தவனும், மேருமலையாகிய வில்லினால் முப்புரங்களைச் செற்றவனும், அடியார்களிடத்து விருப்பம் உடையவனும் ஆகிய பெருமான் உறையும் வேட்களத்தைக் கைதொழுது இருந்தேனாயின், எனக்கு இடர்களே இல்லை.

03.🔔வேட்களத்து உறை வேதியன் எம் இறை
ஆக்கள் ஏறுவர் ஆன் ஐஞ்சும் ஆடுவர்
பூக்கள் கொண்டு அவன் பொன்னடி போற்றினால் 
காப்பர் நம்மை கறைமிடற்று அண்ணலே.

🙏🏾வேட்களத்துறையும் வேதியனும், எம் இறைவனும், திருநீலத் திருமிடறு உடைய தலைவனும் ஆகிய பெருமான் விடையுகந்து ஏறுவர், பஞ்சகவ்வியம் ஆடுவர் பூக்களைக் கொண்டு திருவடி போற்றினால் நம்மைக் காப்பர்.

04.🔔அல்லல் இல்லை அருவினை தான் இல்லை
மல்கு வெண்பிறை சூடும் மணாளனார்
செல்வனார் திருவேட்களம் கைதொழ 
வல்லர் ஆகில் வழியது காண்மினே.

🙏🏾நிறைந்த வெண்பிறையைச் சூடும் மணவாளராகிய திருவேட்களத்து அருட்செல்வரைக் கைகளால் தொழ வல்லவராகில் அதுவே வழியாகும், காண்பீர்களாக அவ்வழியே நின்றால் அல்லல்கள் இல்லை அரிய வினைத் துன்பங்களும் இல்லையாம்.

05.🔔துன்பம் இல்லை துயர் இல்லை யாம் இனி 
நம்பனாகிய நன்மணி கண்டனார் 
என் பொனார் உறை வேட்கள நன்னகர்
இன்பன் சேவடி ஏத்தி இருப்பதே.

🙏🏾நம்மவராகிய திருநீலகண்டனும், என் பொன் போன்றவனும் ஆகிய இறைவன் உறைகின்ற திருவேட்கள நன்னகரில் இன்பமே வடிவாகிய அவன் சேவடியை ஏத்தியிருப்பதனால், இனித் துன்பமும் இல்லை துயரங்களும் இல்லை.

06.🔔கட்டப் பட்டுக் கவலையில் வீழாதே 
பொட்ட வல்லுயிர் போவதன் முன்னம் நீர் 
சிட்டனார் திருவேட்களம் கைதொழப்
பட்ட வல்வினை ஆயின பாறுமே.

🙏🏾கவலைகளாற் கட்டப் பெற்று வீழ்ந்திடாது, விரைந்து உயிர் போவதற்கு முன்பே நீர், உயர்ந்த இறைவர் எழுந்தருளியுள்ள திருவேட்களம் கைதொழுவீர்களாக ; தொழுவீராயின், பொருந்திய வல்வினைகள் அனைத்தும் கெடும்.

07.🔔வட்ட மென் முலையாள் உமை பங்கனார்

எட்டும் ஒன்றும் இரண்டும் மூன்று ஆயினார் 
சிட்டர் சேர் திருவேட்களம் கைதொழுது 
இட்டம் ஆகி இரு மட நெஞ்சமே.

🙏🏾அறியாமை உடைய நெஞ்சமே! வட்ட வடிவாகிய மென்முலைகளை உடைய உமா தேவியை ஒரு பங்கில் உடையவரும், எட்டு மூர்த்தியானவரும், ஒரு பரம்பொருளானவரும், இரண்டு (சிவம், சத்தி) ஆனவரும், மும்மூர்த்தியானவரும் உறைகின்ற சிறப்புடையதும், உயர்ந்தவர்கள் சேர்ந்ததுமான திருவேட்களம் கைதொழுது விருப்புற்று இருப்பாயாக.

08.🔔நட்டம் ஆடிய நம்பனை நாள்தொறும் 
இட்டத்தால் இனிதாக நினைமினோ
வட்டவார் முலையாள் உமை பங்கனார்
சிட்டனார் திருவேட்களம் தன்னையே.

🙏🏾வட்ட வடிவமாகிய மென்முலைகளை உடைய உமா தேவியை ஒருபங்கில் உடையவரும், உயர்ந்தவரும் ஆகிய பெருமான் உறையும் திருவேட்களத்தையும், அங்கு நட்டமாடிய நம்பனையும், நாள்தோறும் விருப்பத்துடன் இனிது நினைப்பீராக.

09.🔔வட்ட மாமதில் மூன்று உடை வல்லரண்
சுட்ட கொள்கையர் ஆயினும் சூழ்ந்தவர் 
குட்ட வல்வினை தீர்த்துக் குளிர்விக்கும் 
சிட்டர் போல் திருவேட்களச் செல்வரே.

🙏🏾திருவேட்களத்து அருட்செல்வர் வட்டமாக வளைந்த மதில்கள் சூழ்ந்த திரிபுரங்கள் மூன்றையும் சுட்ட கொள்கையர் ஆயினும், தம்மைச் சூழ்ந்தவர் வல்வினைகளைத் தீர்த்து அவர்களைக் குளிர்விக்கும் சிட்டராவர்.

10.🔔சேடனார் உறையும் செழு மாமலை 
ஓடி அங்கு எடுத்தான் முடிபத்து இற 
வாட ஊன்றி மலரடி வாங்கிய 
வேடனார் உறை வேட்களம் சேர்மினே.

🙏🏾பெருமை உடையனாய பெருமான் உறையும் திருமாமலையாகிய திருக்கயிலாயத்தை ஓடி எடுத்தவனாகிய இராவணன் முடிகள் பத்தும் இறும்படியாக வாட ஊன்றி, மலரடியினை வளைத்த வேடனார் உறைகின்ற திருவேட்களம் சேர்வீராக.

          திருச்சிற்றம்பலம்.

*🍁சம்பந்தர் தேவாரம்:*
🔔அந்தமுமாதியு மாகியவண்ணல்
ஆரழலங்கை யமர்ந்திலங்க
மந்தமுழவ மியம்ப
மலைமகள் காணநின்றாடிச்
சந்தமிலங்கு நகுதலைகங்கை
தண்மதியம் மயலேததும்ப
வெந்தவெண் ணீறுமெய்பூசும்
வேட்கள நன்னகராரே.

🙏🏾உலகங்களைப் படைப்பவரும், இறுதி செய்பவருமாகிய, தலைமைத் தன்மையுடைய சிவபிரான் பிறரால் பொறுத்தற்கரிய தீகையின்கண் விளங்க, மெல்லென ஒலிக்கும் முழவம் இயம்ப, மலைமகளாகிய பார்வதிதேவி காணுமாறு திருநடம் புரிந்து, அழகு விளங்கும் கபாலமாலை, கங்கை, தண் பிறை ஆகியன தலையின்கண் விளங்க, வெந்த வெண்ணீறு மெய்யில் பூசியவராய்த் திருவேட்கள நன்னகரில் எழுந்தருளியுள்ளார். 

🔔சடைதனைத்தாழ்தலு மேறமுடித்துச்
சங்கவெண்டோடு சரிந்திலங்கப்
புடைதனிற் பாரிடஞ்சூழப்
போதருமா றிவர்போல்வார்
உடைதனினால்விரற் கோவணவாடை
யுண்பதுமூரிடு பிச்சைவெள்ளை
விடைதனை யூர்திநயந்தார்
வேட்கள நன்னகராரே.

🙏🏾திருவேட்கள நன்னகர் இறைவன், தாழ்ந்து தொங்கும் சடைமுடியை எடுத்துக் கட்டிச் சங்கால் இயன்ற வெள்ளிய தோடு காதிற் சரிந்து விளங்கவும், அருகில் பூதங்கள் சூழ்ந்து வரவும், போதருகின்றவர். அவர்தம் உடையோ நால்விரல் அகலமுடைய கோவண ஆடையாகும். அவர் உண்பதோ ஊரார் இடும் பிச்சையாகும். அவர் விரும்பி ஏறும் ஊர்தியோ வெண்ணிறமுடைய விடையாகும். 

🔔பூதமும்பல்கண மும்புடைசூழப்
பூமியும்விண்ணு முடன்பொருந்தச்
சீதமும்வெம்மையு மாகிச்
சீரொடுநின்றவெஞ் செல்வர்
ஓதமுங்கானலுஞ் சூழ்தருவேலை
யுள்ளங்கலந்திசை யாலெழுந்த
வேதமும்வேள்வியு மோவா
வேட்கள நன்னகராரே.

🙏🏾கடல்நீர்ப் பெருக்கும் சோலையும் சூழ்ந்ததும், அந்தணர்கள் மனங்கலந்து பாடும் இசையால் எழுந்த வேத ஒலியும், அவர்கள் இயற்றும் வேள்விகளும் இடையறாது நிகழும் இயல்பினதும், ஆகிய திருவேட்கள நன்னகர் இறைவர், பூதங்களும் சிவகணங்களும் அருகில் சூழ்ந்து விளங்க, விண்ணும் மண்ணும் தம்பால் பொருந்தத் தண்மையும் வெம்மையும் ஆகிப் புகழோடு விளங்கும் எம் செல்வராவார். 

🔔அரைபுல்குமைந்தலை யாடலரவ
மமையவெண்கோவணத் தோடசைத்து
வரைபுல்குமார்பி லொராமை
வாங்கியணிந் தவர்தாந்
திரைபுல்குதெண்கடல் தண்கழியோதங்
தேனலங்கானலில் வண்டுபண்செய்ய
விரைபுல்குபைம்பொழில் சூழ்ந்த
வேட்கள நன்னகராரே.

🙏🏾இடையிற் பொருந்திய ஐந்து தலைகளை யுடையதாய், ஆடும் பாம்பை வெண்மையான கோவணத்தோடும் பொருந்தக்கட்டி, மலை போன்று அகன்ற மார்பின்கண் ஒப்பற்ற ஆமை ஓட்டை விரும்பி அணிந்தவராய் விளங்கும் சிவபெருமானார் அலைகளையுடைய தௌந்த கடல்நீர் பெருகிவரும் உப்பங்கழிகளை உடையதும், வண்டுகள் இசைபாடும் தேன்பொருந்திய கடற்கரைச் சோலைகளை உடையதும், மணம் கமழும் பைம்பொழில் சூழ்ந்ததுமாகிய திருவேட்கள நன்னகரில் எழுந்தருளி உள்ளார். 

🔔பண்ணுறுவண்டறை கொன்றையலங்கல்
பால்புரைநீறுவெண் ணூல்கிடந்த
பெண்ணுறுமார்பினர் பேணார்
மும்மதிலெய்த பெருமான்
கண்ணுறுநெற்றி கலந்தவெண்டிங்கட்
கண்ணியர்விண்ணவர் கைதொழுதேத்தும்
வெண்ணிறமால்விடை யண்ணல்
வேட்கள நன்னகராரே.

🙏🏾திருவேட்கள நன்னகர் இறைவர், இசை பாடும் வண்டுகள் சூழ்ந்த கொன்றை மாலையை அணிந்தவராய், பால் போன்ற வெண்ணீறு பூசியவராய், முப்புரி நூலும் உமையம்மையும் பொருந்திய மார்பினராய்ப் பகைவர்களாகிய அசுரர்களின் மும்மதில்களையும் எய்து அழித்த தலைவராய், நெற்றிக் கண்ணராய், பிறைமதிக் கண்ணியராய் விண்ணவர் கைதொழுது ஏத்தும் வெண்மையான பெரிய விடை மீது ஊர்ந்து வருபவராய் விளங்கும் தலைவராவார். 

🔔கறிவளர்குன்ற மெடுத்தவன்காதற்
கண்கவரைங்கணை யோனுடலம்
பொறிவள ராரழலுண்ணப்
பொங்கிய பூதபுராணர்
மறிவளரங்கையர் மங்கையொர்பங்கர்
மைஞ்ஞிறமானுரி தோலுடையாடை
வெறிவளர்கொன்றையந் தாரார்
வேட்கள நன்னகராரே.

🙏🏾திருவேட்கள நன்னகர் இறைவர், மிளகுக்கொடிகள் வளர்ந்து செறிந்த கோவர்த்தன மலையைக் குடையாக எடுத்த திருமாலின் அன்பு மகனும், அழகு மிக்கவனும், ஐங்கணை உடையவனுமாகிய மன்மதனின் உடல், பொறி பறக்கும் அரிய அழல் உண்ணும்படி சினந்த பழையோரும், மான் ஏந்திய கரத்தினரும், மங்கை பங்கரும், கருநிறமுடைய யானையின் தோலை உரித்து ஆடையாகப் போர்த்தவரும், மணங்கமழும் கொன்றை மாலையை அணிந்தவருமாவார். 

🔔மண்பொடிக்கொண்டெரித் தோர்சுடலை
மாமலைவேந்தன் மகள்மகிழ
நுண்பொடிச்சேர நின்றாடி
நொய்யன செய்யலுகந்தார்
கண்பொடிவெண்டலை யோடுகையேந்திக்
காலனைக்காலாற் கடிந்துகந்தார்
வெண்பொடிச் சேர்திருமார்பர்
வேட்கள நன்னகராரே.

🙏🏾திருவேட்கள நன்னகர் இறைவர் மண்ணும் பொடியாகுமாறு உலகை அழித்து, ஒப்பற்ற அச்சுடலையில் சிறப்புத் தன்மையை உடைய இமவான் மகளாகிய பார்வதி தேவி கண்டு மகிழ, சுடலையின் நுண்பொடிகள் தம் உடலிற் படிய, நின்று ஆடி, அத்திருக்கூத்து வாயிலாக நுட்பமான பஞ்ச கிருத்தியங்கள் செய்தலை உகந்தவரும், கண் பொடிந்து போன வெள்ளிய தலையோட்டினைக் கையில் ஏந்தியவரும், காலனைக் காலால் கடிந்துகந்தவரும் வெள்ளிய திருநீறு சேர்ந்த அழகிய மார்பினரும் ஆவார்.

🔔ஆழ்தருமால்கட னஞ்சினையுண்டார்
அமுதமமரர்க் கருளிச்
சூழ்தருபாம்பரை யார்த்துச்
சூலமோடொண் மழுவேந்தித்
தாழ்தருபுன்சடை யொன்றினைவாங்கித்
தண்மதியம்மய லேததும்ப
வீழ்தருகங்கை கரந்தார்
வேட்கள நன்னகராரே.

🙏🏾திருவேட்கள நன்னகர் இறைவர், ஆழமான பெரிய கடலிடத்துத் தோன்றிய அமுதத்தைத் தேவர்க்கு அளித்தருளி நஞ்சினைத் தாம் உண்டவரும், சுற்றிக்கொள்ளும் இயல்பினதாய பாம்பினை இடையிற் கட்டி, சூலம், ஒளி பொருந்திய மழு ஆகியவற்றைக் கைகளில் ஏந்தியவரும், உலகையே அழிக்கும் ஆற்றலோடு பெருகி வந்த கங்கை நீரைத் தம் பிறை அயலில் விளங்கத் தலையிலிருந்து தொங்கும் மெல்லிய சடை ஒன்றினை எடுத்து அதன்கண் சுவறுமாறு செய்தவரும் ஆவார். 

🔔திருவொளிகாணிய பேதுறுகின்ற
திசைமுகனுந் திசைமேலளந்த
கருவரையேந்திய மாலுங்
கைதொழ நின்றதுமல்லால்
அருவரையொல்க வெடுத்தவரக்க
னாடெழிற்றோள்க ளாழத்தழுந்த
வெருவுறவூன்றிய பெம்மான்
வேட்கள நன்னகராரே.

🙏🏾திருவேட்கள நன்னகர் இறைவர், அழகிய பேரொளிப் பிழம்பைக் காணும்பொருட்டு மயங்கிய நான்முகனும், எண்திசைகளையும் அளந்தவனாய்ப் பெரிதான கோவர்த்தன மலையைக் குடையாக ஏந்திய திருமாலும், அடிமுடி காண இயலாது கைதொழுது நிற்க, கயிலைமலை தளருமாறு அதனை எடுத்த இராவணனின் வெற்றியும் அழகு மிக்க தோள்களும் ஆழத் தழுந்தவும் அவன் அஞ்சி நடுங்கவும் தம் கால் விரலை ஊன்றிய பெருமான் ஆவார். 

🔔அத்தமண்டோய்துவ ரார்அமண்குண்டர்
யாதுமல்லாவுரை யேயுரைத்துப்
பொய்த்தவம் பேசுவதல்லாற்
புறனுரையாதொன்றுங் கொள்ளேல்
முத்தனவெண்முறு வல்லுமையஞ்ச
மூரிவல்லானையி னீருரிபோர்த்த
வித்தகர்வேத முதல்வர்
வேட்கள நன்னகராரே.

🙏🏾செந்நிறமான காவி மண் தோய்ந்த ஆடைகளை அணிந்த பௌத்தர்கள், சமண் குண்டர்கள் ஆகியோர் பொருளற்றவார்த்தைகளை உரைத்துப் பொய்த்தவம் பேசுவதோடு சைவத்தைப் புறனுரைத்துத் திரிவர். அவர்தம் உரை எதனையும் கொள்ளாதீர்.முத்துப் போன்ற வெண் முறுவல் உடைய உமையம்மை அஞ்சுமாறு வலிய யானையின் தோலை உரித்துப் போர்த்த வித்தகரும் வேத முதல் வருமாகிய வேட்கள நன்னகர் இறைவரை வணங்குமின். 

🔔விண்ணியன்மாடம் விளங்கொளிவீதி
வெண்கொடியெங்கும் விரிந்திலங்க
நண்ணியசீர்வளர் காழி
நற்றமிழ் ஞானசம்பந்தன்
பெண்ணினல்லாளொரு பாகமமர்ந்து
பேணியவேட்கள மேன்மொழிந்த
பண்ணியல்பாடல் வல்லார்கள்
பழியொடு பாவமிலாரே.

🙏🏾விண்ணுற வோங்கிய மாட வீடுகளையும், வெண்மையான கொடிகள் எங்கும் விரிந்து விளங்கும் ஒளி தவழும் வீதிகளையும் உடையதும், பொருந்திய சீர்வளர்வதும் ஆகிய சீகாழிப்பதியுள் தோன்றிய நற்றமிழ் வல்ல ஞானசம்பந்தன் பெண்ணில் நல்லவளான நல்ல நாயகியை ஒரு பாகமாக விரும்பி ஏற்று எழுந்தருளியுள்ள திருவேட்களத்து இறைவர்மீது பாடியருளிய பண்பொருந்திய இப்பதிகப் பாடல்களை ஓத வல்லவர் பழி பாவம் இலராவர். 

         திருச்சிற்றம்பலம்.

*🙏🏻வழிபட்டோர்கள்:*
நாரதர், அர்ச்சுனன்.

*🎡திருவிழாக்கள்:*
சித்திரை முதல் தேதி.
வைகாசி விசாகம்.
ஆணித் திருமஞ்சனம்.
விநாயகர் சதுர்த்தி.
நவராத்திரி.
தீபாவளி.
மகாசிவராத்திரி.
பங்குனி உத்திரம்.

*📞தொடர்புக்கு:*
91 98420 08291
91 98433 88552

தேவாரம் பாடல் பெற்ற சிவ தலங்களில் காவிரி வடகரையில் அமைந்துள்ள தலங்களின் நாளைய தலப்பதிவு *உச்சிநாதேஸ்வரர் திருக்கோயில், திருநெல்வாயில்.*

No comments:

Post a Comment