Tuesday, August 7, 2018

Navavarana puja teaching - real story

ஶ்ரீ பராசக்தி மஹிமை:

"ஸார்!! நேக்கு ஶ்ரீவித்யோபதேசம் ஆய்டுத்து. தீக்ஷையும் குருநாதர் பண்ணி வைச்சுட்டார்!! ஆனால் நவாவரண பூஜை மாத்ரம் எடுத்து வைக்கல்லே!! பின்னாடி கத்துக்கோடான்னுட்டு போய்ட்டார். நேக்கும் வயஸாய்டுத்து!! நவாவரண பூஜை சித்த கத்துக்குடுப்பேளோ!!" சென்னை பாரிஸின் பூக்கடைத் தெருவில் வஸிக்கும் ஶ்ரீஸுந்தர தீக்ஷிதர் ஶ்ரீஶ்ரீசிதாநந்தநாதாளிடம் ப்ரார்த்தித்தார். பள்ளிக்கூடத்தில் உத்யோகத்தில் இருந்தததால் சிஷ்யர்கள் உட்பட அனைவருமே ஶ்ரீசிதாநந்தநாதாளை "ஸார்" என்றே அழைப்பது வழக்கம்.

"அதுக்கென்ன !! தாராளமாக!! வர்ற பௌர்ணமாஸ்யை நானே ஆத்துக்கு வந்து கத்துக்கொடுத்துடறேனே!!" ஶ்ரீஸார் பதிலுரைத்தார்.

பௌர்ணமாஸ்யை நெருங்கியது. ஶ்ரீஸுந்தர தீக்ஷதருக்கும் பரபரப்பு. நவாவரண பூஜை ஸாதாரண விஷயம் இல்லையே!! ஆவரண பூஜைக்கு தேவையென ஶ்ரீஸார் சொன்ன அத்தனையுமே திட்டமாக ஏற்பாடு செய்து விட்டு காத்திருந்தார் ஶ்ரீஸுந்தர தீக்ஷிதர்.

ஶ்ரீசிதாநந்தாளின் க்ருஹம் பழவந்தாங்கல். அங்கிருந்து பூக்கடைக்கு வரவே நாழியாகும். மின்சார ரயில் பிடித்து சென்ட்ரல் வந்து பின் அங்கிருந்து டவுன் பஸ் ஏறி வர வேண்டும்!!

ஶ்ரீஸார் க்ருஹத்தில் "ஶ்ரீப்ரஹ்மவித்யா விமர்சினி ஸபா" என்று ஏற்படுத்தி பற்பல ஶ்ரீவித்யா க்ரந்தங்களை உபந்யஸிப்பது வழக்கம். அனறும் சனிக்கிழமை பௌர்ணமாஸ்யை ஆனதினால் ஶ்ரீஸுந்தர தீக்ஷிதரிடம் நவாவரணம் கற்றுக்கொடுக்க வருகிறேன் என்றுரைத்ததை மறந்து ஶ்ரீஸார் அன்று க்ருஹத்திற்கு வந்திருந்தவர்களுக்கு உபந்யஸிக்கத் தொடங்கினார்.

மாலையிலிருந்து ஶ்ரீஸுந்தர தீக்ஷிதர் ஶ்ரீஸாரின் வருகையை நினைத்துக் காத்திருந்தார். வருகிறேன் என்று சொல்லி வைத்த நேரத்தை விட ஒன்றரை மணி நேரம் கடந்தே விட்டது. ஸாரைக் காணும். ஆனால் திடிரென வாயில் மணி ஒலித்தது.

சிகப்பு ஒன்பது கெஜம் அணிந்து, மெட்டியும் கொலுசும் ஸப்திக்க ஸாக்ஷாத் லலிதாம்பிகை போன்றே ஒரு ஸ்த்ரீ வெளியில் நின்றிருந்தாள். 
"ஸுந்தர தீக்ஷிதர் ஆம் தானே!!" 

"ஆமாம் மாமி!! நீங்க!!"

"ஒன்னுமில்லே!! ஸார்க்கு திடீர்னு வேலை வந்துடுத்து!! சித்த நீங்க போய் ஸுந்தர தீக்ஷிதருக்கு நவாவரண பூஜை பண்ணி வையுங்கோ மாமி!! சீக்ரம் வந்துடறேன்னார்!! அதான் வந்தேன்!! ஆமா!! பூஜைக்கு எல்லாம் தயாராகிடுத்தோ!!" மாமி கேட்டாள் தீக்ஷிதரை.

"ஆஹா!! எல்லாம் ரெடி மாமி!!" தீக்ஷிதர் ஸந்தோஷமாக இயம்பினார். என்னவோ ஒரு விவரிக்க முடியாத ஆனந்தம் அவர்க்குள்.

"ஸந்தோஷம்!! சரி நவாவரணம் ஆரம்பிக்கலாம்!! எல்லாம் சரியா இருக்கோ!! ஆங்!! உளுந்து வடை இருக்கோ!!" திடீரெனக் கேட்டாள் மாமி.

"இல்லையே மாமி!! சக்கரைப் பொங்கல் தான் பண்ணிருக்கேன்!!" இழுத்தார் ஸுந்தர ஸாஸ்த்ரிகள்.

"ஓ!! நவாவரண பூஜைக்கு வடை அவச்யம் தேவையாச்சே!! சித்த இருங்கோ!! பக்கத்ல சேட்டு கடைல சூடா வடை போட்டுண்ட்ருக்கா!! வாங்கிண்டு வந்துடறேன்!!" தானே வலியச்சென்று வடையையும் வாங்கிக் கொண்டு வைத்து பூஜையைத் தொடங்கினாள் மாமி.

ஸுவாஸினி பூஜை ஸமயம். "சாஸ்த்ரிகளே!! நானே நித்ய ஸுவாஸினி தான்!! எனக்கே பூஜை பண்ணுங்கோ!!" மாமியில் குரலில் ஒரு ஆகர்ஷணம்.

ஸாக்ஷாத் லலிதா பரமேச்வரியாகவே மாமியை பாவனை செய்து நமஸ்கரித்தார் ஸுந்தர ஸாஸ்த்ரிகள்.

ஒரு மந்த்ரத்திற்கு கட்டுப்பட்டது போல் நவாவரண பூஜையை பூர்த்தி செய்தார்.

"சரி!! எல்லாம் நல்லபடியாக ஆச்சு!! இனி ஶ்ரீராஜராஜேச்வரீ ப்ரத்யக்ஷமாக ஆத்துக்கு வந்தாச்சுன்னு நினைச்சுக்கோங்கோ!!" என்று புன்னகைத்தாள் மாமி!!

"ஆஹா!! பாக்யம் மாமி!! தாம்பூலம் ஸ்வீகரிச்சுக்கனும்!!" தாம்பூலத்தையும், மங்கல த்ரவ்யங்களையும் அளித்தார் ஸாஸ்த்ரிகள்.

"ஆமா!! ஸார் கடைசி வரை வரவேயில்லையே!!" அப்போது தான் ஶ்ரீசிதாநந்தநாதாள் வராததே தோன்றுகிறது ஸாஸ்த்ரிகளுக்கு.

"ஒன்னுமில்லே!! ஏதானு கார்யமா இருந்துருப்பார்!! அவரைப் பார்க்கறச்சே சொல்லிடுங்கோ!! நீங்க அனுப்பிச்ச மாமி நல்லபடியாக நவாவரண பூஜை செய்து கொடுத்தான்னு!! நான் வறேன்!!" கூறிவிட்டு நகர்ந்தாள் மாமி.

மாமி வெளியே சென்ற சில நொடிகளில் ஶ்ரீஸார் நுழைந்தார் ஸாஸ்த்ரிகள் க்ருஹத்திற்குள்!!
"ஸாஸ்த்ரிகளே!! மன்னிச்சுக்கோங்கோ!! ஸுத்தமா நினைப்பில்லே!! ஆத்துக்கு நிறைய பேர் வந்துட்டா!! உபந்யாஸத்ல மூழ்கிட்டேன்!! அப்றம் தான் சடார்னு ஞாபகம் வந்தது!! உடனே எலட்ரிக் ட்ரெயின் பிடிச்சு சென்ட்ரல் வந்து அங்கேந்தே ரிக்க்ஷால வந்தேன்!!  தாமஸமாயிடுத்து!! இருந்தாலும் பரவாயில்லே!! ராத்ரி நவாவரணம் விஷேஷம் தான் ஆரம்பிக்கலாமா!!" மூச்சுவிடாது கூறி முடித்தார் ஶ்ரீஸார்.

"ஸார்!! என்ன சொல்றேள்!! நீங்க அனுப்பிச்சதா ஒரு மாமி வந்து அத்புதமா நவாவரண பூஜையை கத்துக்கொடுத்துட்டு சித்த மின்னாடி தான போறா!!" திகைத்தார் ஶ்ரீஸாஸ்த்ரிகள்.

"நானா!! எந்த மாமியையும் அனுப்பல்லியே!! என்ன சொல்றேள்!!" ஶ்ரீசிதாநந்தநாதாள் திகைத்தார்.

"அப்போ வந்தது!!......" 

"ஆஹா!! ஸாக்ஷாத் ஶ்ரீராஜராஜேச்வரீ!! லலிதா பரமேச்வரீ!! மஹாத்ரிபுரஸுந்தரயே தான்!! காமாக்ஷி!! தாயே!! ஶ்ரீவித்யே!! காமேச்வர வல்லபே!! ஸாக்ஷாத் நீயேவா வந்து நவாவரண பூஜை சொல்லிக் கொடுத்தே!! மஹாபாக்யம்டீ தாயே!!"

இதில் எந்த மஹிமையை புரிந்து கொள்ள இயலும்!! ஶ்ரீசிதாநந்தநாதாளுக்காக ஸாக்ஷாத் லலிதாம்பாளே வந்து நவாவரணம் சொல்லிக் கொடுத்ததற்கா!! ஶ்ரீஸுந்தர ஸாஸ்த்ரிகள் ஶ்ரீலலிதாம்பாளிடமே நவாவரணம் கற்றுக்கொண்டதற்கா!!

அன்றி பஞ்சப்ரஹ்மங்களுக்கும் காக்ஷியளிக்காத பவானீ லலிதேச்வரீ தானே வந்த நவாவரணம் கற்றுக் கொடுத்த மஹிமையையா!!

இப்போ தெரியறதா!! ஶ்ரீலலிதா மஹாத்ரிபுரஸுந்தரி ஏன் அவ்யாஜ கருணா மூர்த்தி!! கருணாம்ருத ஸாகரான்னு!!

ஶ்ரீஶ்ரீ Arutsakthi Nagarajan மாமா அவர்கள் கூறியது இச்சரித்ரம்!!

ஶ்ரீகாமாக்ஷி சரணம் மம

ஶ்ரீமாத்ரே நம:
லலிதாம்பிகாயை நம:

No comments:

Post a Comment