Monday, August 27, 2018

Mahamagam and kumbakonam -Periyavaa

தஞ்சாவூர் ஜில்லாக்காரர்களுக்கு அதிகம் தெரிந்த ஒரு கதை கும்பகோணத்தையும் அதன் சுற்றுப்பட்ட க்ஷேத்ரங்களையும் இணைக்கிறது:

பிரளயத்தின் போது பிரம்மா அடுத்த சிருஷ்டிக்கான பீஜங்களை அமிருதத்தில் வேத சப்தங்களோடு சேர்த்து ஒரு மண் கும்பத்தில் (குடத்தில்) போட்டு அதற்கு யதோக்தமாக மாவிலை, தேங்காய் வைத்துப் பூணூல் போட்டு மேரு உச்சியில் வைத்துவிட்டார். பிரளய வெள்ளத்தில் அது மிதந்து வந்தபோது பரமேச்வரன் மறுபடி சிருஷ்டியை ஆரம்பித்து வைக்கவேண்டுமென்று நினைத்தார். அப்போது கும்பத்தின் மேலே வைத்திருந்த தேங்காய் புயலின் ஆட்டத்திலே சரிந்து விழுந்து விட்டது. உடனே பிரளய வெள்ளத்திலிருந்து அந்தப் பிரதேசம் வெளியிலே வந்துவிட்டது. தேங்காய் விழுந்த இடத்திற்குக் கிட்டேதான் பிற்பாடு அமிருதம் மஹாமகக் குளமாகப் பெருகிற்று. இப்போதும் அங்கே ஸ்வாமிக்கு நாரிகேளேச்வரர் என்று பெயர் இருக்கிறது. (நாரிகேளம் என்றால் தேங்காய்.) அவர் மேற்குப் பார்க்க இருப்பதால் 'அபிமுகேச்வரர்' என்கிறார்கள். அப்புறம் மாவிலை விழுந்தது. அந்த இடமும் பிரளயத்தை மீறிக் கொண்டு பூப்பிரதேசமாக வெளியில் வந்தது. 

கும்பகோணத்திற்கு வடமேற்கே நாலு மைலில் உள்ள 'திருப்புறம்பயம்தான்' அது. 'பயம்' என்றால் 'பயஸ்' – ஜலம், அதாவது பிரளயம்; 'புறம்' – புறம்பாக இருப்பது. பிரளயத்துக்குப் புறம்பாக அதை மீறி இருப்பது திருப்புறம்பயம். அப்புறம் பூணூலும் இப்படியே விழுந்தது. அது மஹாமகக்குளத்தின் கிட்டே ஒரு இடம். அங்கேயுள்ள கோவிலில் ஸ்வாமி பெயர் 'ஸூத்ரநாதர்' என்றே இருக்கிறது. ஸூத்ரம் என்றால் பூணூல். 'உபவீதம்' என்றாலும் பூணூல். அதனால் 'உபவீதேச்வரர்' என்றும் சொல்வதுண்டு. அங்கே கௌதம மஹரிஷி பூஜை செய்ததால் 'கௌதமேச்வரர்' என்றே அதிகம் வழங்குகிறது.

இந்த கும்பத்துக்கு வாயைத் தவிர மூக்கும் இருந்தது, கிண்டி, கமண்டலு முதலியவற்றுக்கு இருப்பது போல! நான் வைத்துக் கொண்டிருக்கிற கடத்துக்குக் கூட மேல் பக்கம் வாய் இருப்பதோடு, பக்கவாட்டில் மூக்கும் இருக்கிறதல்லவா? கடம் அல்லது குடத்தை உள்ளே நிரப்புவதற்கு வாய் வழியாக ஜலம் விடவேண்டும். அதிலிருந்து ஜலத்தை வெளியில் விடவேண்டுமானால் மூக்கு வழியாகத்தான் விடவேண்டும். இம்மாதிரி சாஸ்திரோக்தமான குடமாகவே அந்த அமிருத கடமும் இருந்திருக்கிறது. பரமேச்வரன் பார்த்தார் – கும்பம் தானாகக் கவிழ்ந்து சிருஷ்டி பீஜமும் அமிருதமும் வெளியில் வராததால் தாம் பாணத்தினால் அடித்துக் கும்பத்தை உடைத்து அவற்றை வெளிப்படுத்தி விடுவது என்று தீர்மானம் பண்ணினார். உடனே பாணத்தையும் போட்டார். பாணபுரி என்ற 'பாணத்துறை'யான அந்த இடத்தைத்தான் இப்போது 'வாணாதுறை' என்கிறார்கள். அங்கே ஸ்வாமிக்குப் பேர் பாணபுரீச்வரர். 

குடத்தின் வாய் சிதறி விழுந்த இடம் (குடவாசல்) என்று பெயர் பெற்றது. ஆனால் சாஸ்திரோக்தமாக மூக்கு வழியாக அமிருதம் வெளி வரவேண்டும் என்று ஸ்வாமி நினைத்ததால் மூக்கு உடைந்து அமிருதம் வெளிவந்த க்ஷேத்திரமே மற்ற க்ஷேத்திரங்களைவிடப் பெருமை உடையதான 'கும்பகோணம்' ஆயிற்று. 'கோணம்' என்றால் மூக்கு. கும்பத்தின் கோணம் விழுந்து இடம் 'கும்பகோணம்'. 'குடமூக்கு' என்பதே அதற்குத் தேவாரத்தில் உள்ள பெயர். அங்கே லிங்கமாக அந்த மண் கலயமே வைக்கப்பட்டு விட்டது. இப்போதும் அப்படித்தான் இருக்கிறது. கவசம் போட்டுத்தான் அதற்கு அபிஷேகம் நடக்கிறது. 'கும்பேச்வரர்' என்று பெயர். அமிருதம் விழுந்த இடம்தான் மஹாமகக் குளம்.

இது அமிருதம் வெளிவந்த க்ஷேத்ரம் என்பதற்குப் பொருத்தமாக இங்கேயுள்ள சார்ங்கபாணிப் பெருமாளை "ஆரா அமுதன்" என்றே ஆழ்வார்கள் பாடியிருக்கிறார்கள்! வைஷ்ணவர்கள் கும்பகோணத்தைக் குடந்தை என்பார்கள்.

இப்படிப் பல க்ஷேத்ரங்கள் inter-connected ஆக இருந்து கொண்டு ஸ்தல புராணங்கள் நிஜந்தான் என்று உறுதிப்படுத்துகின்றன. 

- தெய்வத்தின் குரல் 

தொகுப்பு: Kabilan

No comments:

Post a Comment