Friday, August 3, 2018

Lalit sahasranama


ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் J.K. SIVAN

2 திருமீயச்சூர் லலிதாம்பா

திருவாரூர் நன்னிலம் தாலுக்கா சென்றால் பேரளம் என்பது எல்லோருக்கும் தெரிந்த பெயர். அதற்கு மேற்கே ஒன்றரை கி.மீ. தூரத்தில் ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது திருமீயச்சூர். அங்கே தான் அற்புதமான ஸ்ரீ லலிதாம்பாள் சமேத மேகநாத சுவாமி சிவ ஆலயம் உள்ளது. சிவனுக்கு சகல புவனேஸ்வரர் என்ற பெயரும் உண்டு. செம்பியன் மா தேவி புனருத்தாரணம் செய்த கற்றளி கோவில்களில் இதுவும் ஒன்று. ஐந்து நிலை கம்பீரமான ராஜகோபுரம். ஐந்தடி உயரத்தில் நேரே நிற்பது போல் ஸ்ரீ சக்ரத்தில் அமர்ந்து காட்சியளிக்கிறாள் ஸ்ரீ லலிதாம்பா. வலது காலை மடக்கி ஆசனத்தில் அமர்ந்திருக்கும் நேர்த்தி எழுத்தில் சொல்லமுடியாது. இடது கால் சுகாசன நிலையில் காண்கிறது. மனோன்மணி ஸ்வரூப அம்பாள். சாந்தநாயகி.

காஸ்யப ரிஷிக்கு ரெண்டு மனைவிகள். வினதை கருடன் தாயார். கர்த்ரு நாக மாதா. ஏதோ ஒரு போட்டி அவர்களுக்குள் அதில் வினதை ஏமாற்றப்பட்டு கர்த்தருவின் அடிமையாகிறாள். விஸ்தாரமாக எனது ஐந்தாம் வேதம் புத்தகத்தில் எழுதியிருக்கிறேன்.

அந்த இருவருக்குமே புத்ரபாக்யத்திற்காக வந்த ஊர் திருமீயச்சூர். சூரியன் பாப விமோசனத்துக்கு வழிபட்ட ஸ்தலம்.

இந்த ஆலயத்தின் சிற்ப நேர்த்திக்கு ஒரு உதாரணம் ஒரு அழகான சிலை. சிவன் பார்வதியின் கன்னத்தை ஏந்தி கோபமாக இருப்பவளை சமாதானப் படுத்துவது போல் ஒரு சிற்பம். இன்றைக்கும் அந்த சிலையை ஒரு கோணத்தில் பார்த்தால் கோபமாக இருப்பதும் மற்றொரு கோணத்தில் இருந்து பார்த்தால் வெட்கத்தோடு நாணுவது தெரியும். எப்படி ஒரு முகத்தில் இரு உணர்ச்சிகளை சிற்பி வடித்தான்? இதல்லவோ உலக அதிசயம். எங்கோ ஒரு முஸ்லீம் ராஜா தனது பல மனைவிகளில் ஒருவள் இறந்தபிறகு எழுப்பிய பளிங்கு கல்லறை நினைவிடமா???

அகஸ்தியர் இங்கே லலிதா நவரத்தினமாலை பாடி லலிதாவை போற்றியிருக்கிறார். சம்பந்தர், அப்பர் ஆகியோர் பாடல் பெற்ற சிவஸ்தலம்.

இங்கு சண்டீஸ்வரர்க்கு நான்கு சிரங்கள் .நவகிரஹ சந்நிதி கிடையாது. பன்னிரண்டு ல் ராசிக்கு பன்னிரண்டு நாகங்கள்.கர்த்ரு வழிபட்ட இடமல்லவா.

லலிதா மகா திரிபுரசுந்தரி சிவனோடு ஒன்றிணைந்த பாகம்பிரியாத ஆதி பரம்பொருள். சிவசக்தி. அவளை ஆயிரம் பெயர்களில் போற்றுவது தான் லலிதா சஹஸ்ரநாமம். பாராயணம் செய்தவர்கள் பெறும் பலனை பட்டியல் போட முடியாது. சகல தோஷ நிவாரணி. லலிதாவை வேண்டினால் சகல தெய்வங்களையும் வழிபட்ட பலன். சிவனுக்கே சகல புவன ஈஸ்வரன் என்றுதானே இங்கே பெயர். இனி மகா சக்திவாய்ந்த ஸ்ரீ லலிதாவின் ஆயிர நாமங்களை அறிவோம்:

ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம்

ஸ்ரீ ,மஹா திரிபுரசுந்தரி, உனது ஸ்ரீ லலிதா யந்த்ரம் எனும் சக்ரமஹிமை தியானம் செய்பவர்களுக்கு உலகறிந்த உண்மை ஆதி சங்கரர் சௌந்தர்ய லஹரியில் எல்லையில்லாமல் இதை விவரிக்கிறார்.

லலிதா த்ரிசதி எனும் முன்னூறு நாமங்களும் ,லலிதா சஹஸ்ரநாமம் எனும் ஆயிர நாமங்களை ஹயக்ரீவர் அகஸ்தியருக்கு எடுத்துச் சொல்வது போல் அமைந்தவை.

सिन्दूरारुण विग्रहां त्रिनयनां माणिक्यमौलि स्फुरत् 
तारा नायक शेखरां स्मितमुखी मापीन वक्षोरुहाम् ।वक्षोरुहाम् 
पाणिभ्यामलिपूर्ण रत्न चषकं रक्तोत्पलं बिभ्रतीं
सौम्यां रत्न घटस्थ रक्तचरणां ध्यायेत् परामम्बिकाम् ध्यायेत् ॥परामम्बिकाम्

Sindhuraruna vigraham trinayanam manikya mouli spurath
Thara Nayaga sekaram smitha mukhi mapina vakshoruham,
Panibhayam alipoorna ratna chashakam rakthothpalam vibhrathim,
Soumyam ratna gatastha raktha charanam, dhyayeth paramambikam.

ஸிந்தூராருணவிக்ரஹாம் 
த்ரிநயனாம் மாணிக்யமௌலிஸ்புரத்
தாராநாயக ஷேகராம் 
ஸ்மிதமுகீமாபீனவக்ஷோருஹாம் |
பாணிப்யா மலிபூர்ணரத்னசஷகம் 
ரக்தோத்பலம் பிப்ரதீம் 
ஸௌம்யாம் ரத்னகடஸ்த ரக்தசரணாம்
த்யாயேத் பராமம்பிகாம் ||

தேவர்கள் பண்டாசுரனின் கொடுமைகளால் அவதியுற்று பார்வதியை வேண்டுகிறார்கள். அவள் அக்னியில் உதயமாகி அணிமா ,மஹிமா முதலான சக்திகள் உருவம் பெற்று, ப்ராஹ்மி,கௌமாரி, வைஷ்ணவி, வராஹி, மஹேந்திரி ,சாமுண்டி, மஹாலக்ஷ்மி என பலவாகிறாள். தேவர்கள் குறை தவிர்க்கிறாள். பண்டாசுரன் பாசுபதாஸ்திரத்தால் வதம் செய்யப்படுகிறான் என்கிறது புராணம்.

''யோகிகள், முனிவர்கள் ரிஷிகள் ஏன் காவி வஸ்திரம் அணிகிறார்கள்? அது ஸ்ரீ லலிதாம்பிகையின் மேனியின் நிறம். சர்வ சக்தி வாய்ந்ததல்லவா? சிவனோடு ஐக்யமானவள் முக்கண்ணியாக காட்சியளிப்பதில் என்ன ஆச்சர்யம்? நவரத்ன மகுடம் தரித்தவள். பிறைச்சந்திரன் சூடியவள். சிவை அல்லவா? சதாகாலமும் அனைத்து உள்ளங்களையும் காந்தமென கவரும் புன்னகை முகத்தாள் . பெண்மையின் இலக்கணம். சிவந்த மலர்களை ஏந்திய கரமுடையாள் . சாந்த ஸ்வரூபி; கருணைக்கடல். சிவந்த பாதங்களை நவரத்ன பீடத்தில் இருத்தி தரிசனம் தருபவள். ஸ்ரீ லலிதா உனக்கு நமஸ்காரம் தேவி.

Arunam Karuna Tarangitaksim Dhrta Pasankusa Puspa banacapam
Animadibhiravrtam Mayukhairahamityeva Vibhavaye bhavanim

அருணாம் கருணாதரங்கிதாக்ஷீம் 
த்ருதபாஷாங்குஷ புஷ்பபாணசாபாம் |
அணிமாதிபி ராவ்ருதாம் மயூகை:
அஹமித்யேவ விபாவயே பவாநீம் ||

உன்னை நினைக்கையில் அம்பா பவாநீ , உன் உருவம் உதய சூரியனின் தக தக வென ஜொலிக்கும் பொன்வண்ணமாக அல்லவோ தோன்றுகிறது. கண்களா கருணை நிறைந்த கடலா? காருண்ய சாகரம் இதுதானா? அட உன் வில் உன்னைப்போல் கரும்பால் ஆன 'இனிய' தண்டனை வழங்கும் ஆயுதமா? மலர்கள் தான் கூரான அம்புகளா? பாச அங்குசம் தரித்தவளே . புண்ய புருஷர்கள் பக்தர்களாக புடை சூழ அருள்பவளே ''எல்லாம் நான் '' என்பது நீ தானோ?


ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் 3 J.K. SIVAN

இந்த பகுதியுடன் அம்பாள் ஸ்ரீ லலிதாம்பிகையின் தியான ஸ்லோகங்கள் நிறைவு பெரும். இனி அவளது ஆயிர நாமங்களை ருசிக்கப்போகிறோம்.

ध्यायेत् पद्मासनस्थां विकसितवदनां पद्मपत्रायताक्षीं
हेमाभां पीतवस्त्रां करकलितलसद्धेमपद्मां वराङ्गीम् ।
सर्वालङ्कार युक्तां सतत मभयदां भक्तनम्रां भवानीं
श्रीविद्यां शान्त मूर्तिं सकल सुरनुतां सर्व सम्पत्प्रदात्रीम् ॥

Dyayeth padmasanastham vikasitha vadanam padma pathrayathakshim,
Hemabham peethavasthram karakalitha-lasadhema padmam varangim,
Sarvalangara yuktham sathatham abhayadam bhaktha namram bhavanim.
Srividyam santhamuthim sakala suranutham sarva sampat pradhatrim.

த்யாயேத் பத்மாஸநஸ்தாம் விகஸித
வதநாம் பத்ம பத்ராயதாக்ஷீம் 
ஹேமாபாம் பீதவஸ்த்ராம் கரகலிதலஸத்தேம 
பத்மாம் வராங்கீம் |
ஸர்வாலங்கார - யுக்தாம் ஸததமபய 
தாம் பக்தநம்ராம் பவாநீம் 
ஸ்ரீ வித்யாம் சாந்தமூர்த்திம் 
ஸகலஸுரநுதாம் ஸர்வஸம்பத்ப்ரதாத்ரீம் ||

அம்மா ஸ்புடம் போட்ட பொன் போல ஜொலிக்கும் ஸ்ரீ வித்யாவாகிய, லலிதாம்பிகே, சிவந்த உடை உடுத்த, அமைதி தவழும் புன்னகை பூத்த திவ்ய முகத்தாளே , தாமரை ஆசனத்தில் அமர்ந்த மாதா, தாமரை போல் மலர்ந்த உருண்ட கருணை விழி கொண்ட ஜகன்மாதா, தங்கத்தாமரை கரத்திலேந்தியவளே, பக்தர் விரும்புவதெல்லாம் அருளும் பவானி, சகல லோக ரக்ஷகி, பக்தர்களை கனிவோடு காப்பவளே, சர்வ தேவாதி தேவர்களும் தொழும் தாயே, தயாளு, செல்வங்களை வளங்களை வாரி வழங்கும் உன்னை மனதார பிரார்த்திக்கிறேன், தியானிக்கிறேன்.

सकुङ्कुम विलेपनामलिकचुम्बि कस्तूरिकां
समन्द हसितेक्षणां सशर चाप पाशाङ्कुशाम् ।पाशाङ्कुशाम्
अशेषजन मोहिनीं अरुण माल्य भूषाम्बरां
जपाकुसुम भासुरां जपविधौ स्मरे दम्बिकाम् ॥दम्बिकाम्

Sakumkumalepana –malikachumbi-Kasthurikam,
Samanda hasithekshanam sashra chapa pasangusam,
Asesha jana mohinim –maruna malya bhoosham bara,
Japa-kusuma-basuram japa vidhou smarathembikam.

ஸகுங்குமவிலேபநா - மளிகசும்பி - கஸ்தூரிகாம் 
ஸமந்த - ஹஸிதேக்ஷணாம் 
ஸசரசாப பாஸாங்குஸாம் |
அசேஷஜநமோஹிநீ - மருணமால்ய பூஷாம்பராம் 
ஜபாகுஸும - பாஸுராம் 
ஜபவிதௌ ஸ்மரேதம்பிகாம் ||

நாம் யாரை விடாமல் தொழவேண்டும் தெரியுமா? யார் தனது தேகத்தில் குங்குமத்தை குழைத்து பூசியிருப்பவளோ, வண்டுகள் சுற்றி வாசம் பெரும் கஸ்தூரியை கமகமவென தரித்திருப்பவளோ, எல்லாவற்றையும் மிஞ்சும் காந்த புன்னகை கொண்டவளோ, கரும்பு வில்லை, மலரம்புகளையும், பாசாங்குசமும் ஏந்தியவளோ, சகல ஜீவன்களையும் கவர்ந்தவளோ, செம்மலர்மாலை அணிந்தவளோ, ஈடிணையற்ற ஆபரணதாரியோ, செவ்விதழ் மலரை ஒத்த நிறத்தவளோ,அம்மா, லலிதாம்பிகே உன்னை சரணடைந்து அருள் வேண்டி பிரார்த்திக்கிறேன்.

ஸ்ரீ லலிதாம்பிகை ஆலய சிற்பங்கள் சிலவற்றை இணைத்துள்ளேன். ஸ்ரீ லலிதாம்பிகை சஹஸ்ரநாமம் தோன்றிய ஆலயம் இது. வாழ்வில் ஒருமுறையாவது ஒவ்வொருவரும் தரிசிக்க வேண்டிய முக்கிய ஆலயம்


No comments:

Post a Comment