Tuesday, August 7, 2018

Greatness of feet dust- Soundarya lahari

சௌந்தர்யலஹரி :                                       பாடல் : 3

        விரும்பியதை  தரும்  அன்னையின்  
                        திருவடித்துகள் 

  அவித்யாநாம்   அந்தஸ்திமிர  மிஹிரத்வீபநகரீ 
        ஜடாநாம்   சைதன்ய  ஸ்தப   மகரந்தஸ்ருதிஜரீ ।
  தரீத்ராணாம்   சிந்தாமணிகுணநிகா   
                                                       ஜன்மஜலதௌ
  நிமக்நாநாம்   தம்ஷ்ட்ரா   முரரிபுவராஹஸ்ய  
                                                                பவதி  ॥

      இந்த  ஸ்லோகமும், இதற்கு  முந்தைய  ஸ்லோகமும்  சேர்த்தே  ஒன்றாக  அன்னையின்  பாததூளியின்  மஹிமையை  விளக்குவதாக  உள்ளதால்  இரண்டையும்  சாதனைக்கு  ஒன்றாக  எடுத்துக்கொள்ள  வேண்டும்  என்கிறார்  தேதியூர்  சுப்பிரமணிய  சாஸ்திரிகள். சகல  பிராணிகளுக்கும் மற்றும்  இந்த  மானுட  ஜன்மாவில்  ஒருவன்  சம்பாதித்துக்கொள்ள  வேண்டிய  புருஷார்த்தங்களில்  மிக  முக்கியமானதும், பிறவிப்பிணிக்கு  அருமருந்தாக  விளங்கும்  மோக்ஷத்தை  தரக்கூடிய  பரதேவதையின்  திருவடிதூளியே  ஸம்ஸார  ஸாகரத்திலிருந்து  வெகு சுலபமாக மேலேற்றி  மோக்ஷபதத்தை  ஒருவனுக்கு  கொடுத்துவிடும். காம , க்ரோத , லோப , மோஹ , மத , மார்ச்சர்ய , என்ற  கற்களையும்  கட்டிக்கொண்டு  அமிழ்ந்து  கொண்டு  இருக்கின்ற  ஜீவர்களுக்கு இந்த  கஷ்டத்திலிருந்து  மீட்டுட்டெடுக்கும்  ஒரே  சாதனம்  அன்னையின்  பாததூளியே ! எவ்வாறுஎனில்  அப்படி  தத்தளிக்கும்  ஜீவராசிகளுக்கு  தன்னுடைய  எல்லையற்ற  அருட்கடாக்ஷத்தால்  அவனது  உள்ளத்தில்  அன்னையை  முன்கூறிய  பாடலின்  பிரகாரம்  கடாக்ஷித்து  தன்னுடைய  பாத  தூளியினை  பூஜிக்கும்  அறிவினை  தருவதன்  மூலம்   ஜீவப்ரம்ம ஐக்கியத்தை  அவனுக்கு  வழங்குகிறாள் !

         இதனை  வராஹ மூர்த்தியின்  கதைமூலம்  நமக்கு  பகவத்பாதாள்  விளக்குகிறார். முன்பு  ஹிரண்யாட்க்ஷகனால்  தேவி  அபகரிக்கப்பட்டு மீட்கப்படுத்தல்  என்பது ,  இந்த  ஜீவன்  காமுகனான  ஹிரண்யாட்சஷகன்  போன்ற  குணங்களால்  அபகரிக்கப்பட்டு  ஸம்ஸார  சாகரதினில்  சிறை  வைக்கப்படும்போது  வரஹாமூர்த்தியின்  தெத்துப்பல்லாகிய  பாத தூளியின்  மகிமையால்  வெளியே  கொண்டுவரப்படுகிறான் என்பதை  முமுக்ஷுக்களுக்கு  அன்னையின்  பாததூளியின் மஹிமையை  மோக்ஷ  சாதனமாக  சொல்லப்படுகிறது.

           இந்த  குடும்பிகள்  ஐஸ்வர்யம்  வேண்டி  எததனையோ  செய்து கொண்டு  இருக்கிறார்களே !  விஷயம்  நன்கறிந்தவர்கள்  பரதேவதையின்  பாததூளியே  பற்பல " சிந்தாமணிக்கு " நிகரானது  என  ஐயம்  திரிபற  தெளிந்து  அதனை  வழிபடுவர். எனவே  புபுஷுக்கள் ( போகிகள் )  அன்னையின்  பாத தூளியினை  மேற்சொன்ன  முறையில் விதிவத்தாக   வழிபட்டு  அஷ்ட ஐஸ்வர்யங்களையும்  பெறுகின்றனர்.  இதன்மூலம்  ஐஸ்வர்ய  ப்ரதம்  அம்பிகையின்  பாததூளியே  என்பதும்  பிரதானமாகிறது.

       இந்த  யோகிகள்  பற்பல  சாதனங்களால்  ஏதேதோ  செய்து  மூச்சடக்கி , பேச்சடக்கி , உண்டி சிறுத்து , மிகுந்த  வேதனைகள்  பட்டு  இறந்தகாலம் , எதிர்காலம்  அறியும்  சக்தியினை  பெறுகின்றனர். இவற்றால்  அவர்களுக்கு  எந்த  பிரயோஜனமும்  இல்லை.  நாளை  ஏற்படப்போகும்  துன்பம்  அறிவதால்  இன்னும்  இருக்கும்  நேரமெல்லாம்  துன்பம்  அன்றோ ! இந்த  ஸ்தூல , சூட்சும விஷயாதிகளை  அறிந்துகொள்ளும்  ,  இந்த  " ஸர்வங்ஞதுவம் " பெற  என்னென்ன  பாடுபடுகிறார்கள் !  ஆனால்  மிக  எளிதாக  அன்னையின்  பாததூளியினை  பூஜிக்கும்  ஒரு  உத்தம  பக்தனுக்கு  இவைகள்  அவனது  பாதத்தினருகில்  கிடக்கின்றன. அத்தகையோனால்  மிக  எளிதாக  இவற்றையெல்லாம்  அறிந்துகொண்டாலும் , அவனது  கவனம்  மீண்டும் , மீண்டும்  பரதேவதையின்  பாத  தூளியின்  அருளிலேயே  மூழ்குபவனாகின்றான். இவற்றை  அவன்  ஏறெடுத்தும்  பார்ப்பதில்லை  எனில்  அவனின்  கவனம்  முழுமையும்  தன்னகத்தே  கொண்ட  பரதேவதையின்  பாததூளியின்  மஹிமைதான்  என்னவென்று  சொல்வது ?

           அதுமட்டுமல்லாமல் , " ஆத்மா  என்பது  என்ன ? அதனை  அடைவது  எவ்வாறு ? " என்று  புத்தி  என்ற  கடும், கொடுமையான  காட்டில்  பிரவேசித்து  வாழ்நாளையெல்லாம்  வீணடித்து தர்க்க   வாதங்களால்  வெளிவர  வழிதெரியாது   ஒன்றும்  அறியாது  வெறுமனே  இறந்துபோகும்  வெற்று  பண்டிதர்கள்  மாய  இருளை  நீக்கும்  சூரியனாக  " பாததூளி " ஒன்றே  அவனுக்கு   தெளிய வேண்டியதெல்லாம்  தெளிவித்து ,  ஆத்மதத்துவதை  அவனுள்  நன்றாக  பிரகாசிக்க  செய்கிறது  என்பதனையே,  ஜீவகோடியின்  ஹ்ருதயத்திலுள்ள  இருளினை  போக்கடிப்பவள்  என்பதை ....

              "  ஹார்த்தமஸ்தமஸாபஹா  "  

  என்ற  ஸ்ரீ  லலிதா  த்ரிசதி  நாமம்  விளக்குகிறது. எனவே  மாயையிலிருந்து  விடுபடவேண்டுமானால்  தேவியின்  திருவடிதூளியினை  ஆச்ரயித்துதான்  ஆகவேண்டும்.

      இதனால் , தேவியின்  திருவடிதூளியினை  மேற்கண்ட  முறைப்படி   ஆராதிக்கின்றவர்கள்   மாயையிலிருந்து  விடுபட்டு, பராசக்தியானவள்  அவர்களுக்கு  ஸர்வக்ஞத்துவ  சக்தியும் , ஸகல  அகண்ட   ஐஸ்வர்யங்களையும்  அளித்து, இங்கு  வாழும்போதே  சகல  அமானுஷ்யமான  திவ்ய  போகங்களையும்  அனுபவிக்கச்செய்து  க்ரமமாக  தனது  ஸாயுஜ்யம்  என்ற  கைவல்யத்தையும்  கொடுத்து  அனுபவிக்கசெய்கிறாள்  என்பது  தெளிவாகிறது. எனவே  ச்ரேயஸை  இச்சிகின்ற  ஜனங்கள்  தேவியினுடைய  தூளியை  மேற்கண்ட  விதிவத்தால்  ஆராதிக்க வேண்டும்  என்பது  சித்தமாகிறது.

யந்த்ரம் , பீஜாக்ஷரம் :  தங்கத்தகடு - வடக்கு  அல்லது  கிழக்காக  உட்கார்ந்து  ஜபம்.
ஸ்லோகம்  சொல்லவேண்டிய  எண்ணிக்கை :  2000  எண்ணிக்கை  தினம்தோறும்.
பூஜை  செய்ய  வேண்டிய  மொத்த தினங்கள் : 45 தினங்கள்.
நிவேதனம் : உளுந்துவடை.
பூஜா பலன் : ஸகல  வித்யா  ப்ராப்தி,  மோஹனம் , விரும்பிய  பொருள் எல்லாம்  கைகூடும்.

No comments:

Post a Comment