உ
சிவாயநம திருச்சிற்றம்பலம்.
பதியும் பணியே பணியாய் அருள்வாய்.
*கோவை கு கருப்பசாமி.*
________________________________________
*தினமும் ஒரு பாடல் பெற்ற தல தரிசனம்:*
*பாடல் பெற்ற சிவ தல தொடர்.*
*சிவ தல அருமைகள் பெருமைகள்.*
*🏜சாயாவனேஸ்வரர், திருச்சாய்க்காடு, (சாயாவனம்.)*
(நேரில் சென்று தரிசித்ததைப் போல..............)
___________________________________________
தேவாரம் பாடல் பெற்ற தலங்களில் காவிரி வடகரையில் அமைந்துள்ள இத்தலம் ஒன்பதாவது தலமாகப் போற்றப் படுகிறது.
__________________________________________
*🌙இறைவன்:* சாயாவனேஸ்வரர், இரத்தினச்சாயாவனேஸ்வரர்.
*🔱இறைவி:* கோஷாம்பாள், குயிலினும் நன்மொழியம்மை.
*🌴தல விருட்சம்:* கோரை, பைஞ்சாய்.
*🌊தல தீர்த்தம்:* காவிரி, ஐராவத தீர்த்தம், கோரைத் தீர்த்தம், சங்க முக தீர்த்தங்கள்.
*🔍புராணப்பெயர்கள்:* திருச்சாய்க்காடு, மேலையூர்.
*ஊர்:* சாயாவனம்.
*🔍ஆலயப் பழமை:* ஆயிரத்திலிருந்து இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னதானது.
*கட்டட அமைப்பு:* கொட்செங்கட்ச் சோழன். (மாடக் கோயில்.)
*பதிகம்:* திருநாவுக்கரசர் இரண்டு பதிகம்.
திருஞானசம்பந்தர் இரண்டு பதிகம். ஆக மொத்தம் நான்கு பதிகங்கள்.
*🛣இருப்பிடம்:*
சீர்காழியில் இருந்து பூம்புகார் செல்லும் சாலையில் திருவெண்காடு தாண்டி மூன்று கி.மி. தொலைவில் உள்ளது சாயாவனம் கிராமம்.
சாயாவனேஸ்வரர் கோவிலுக்கு அருகிலேயே பேருந்து நிறுத்தம் அமைந்து உள்ளது.
சாலையோரத்திலேயே கோவில் உள்ளது.
மயிலாடுதுறை - பூம்புகார் சாலை வழியாகவும் சாயாவனத் தலத்தை அடையலாம்.
*📮ஆலய அஞ்சல் முகவரி:* அருள்மிகு சாயாவனேஸ்வரர் திருக்கோவில்,
சாயாவனம்.
காவிரிப்பூம்பட்டினம் அஞ்சல்.
சீர்காழி வட்டம்.
நாகப்பட்டினம் மாவட்டம்.
PIN - 609 105
*🍃ஆலயத் தரிசன காலம்:*
நாள்தோறும் காலை 7.00 மணி முதல் பகல் 12.00 மணி வரையிலும், மாலை 5.00 மணி முதல் இரவு 8.00 மணி வரையிலும் திறந்திருக்கும்.
சாய் என்பதற்குத் தமிழில் *கோரை* என்று பொருள். கோரை என்ற ஒரு வகைப் புல் தாவரம் அடர்ந்து வளர்ந்த காடாக இத்தலம் இருந்ததால் சாய்க்காடு என்று இத்தலம் பெயர் பெற்றது.
காவிரிக் கரையில் உள்ள காசிக்கு சமானமாக கருதப்படும் ஆறு சிவஸ்தலங்களில் திருசாய்க்காடு தலமும் ஒன்றாகும்.
பிற....
1. திருவையாறு
2. திருவெண்காடு,
3. திருவிடைமருதூர்,
4. திருவாஞ்சியம் மற்றும்
5. மயிலாடுதுறை ஆகும்.
சோழ மன்னன் கோச்செங்கட் சோழனால் கட்டப்பெற்ற மாடக்கோவில்களுள் இத்தலத்திலமாக உள்ள சாயவனேஸ்வரர் ஆலயமும் ஒன்றாகும்.
*🌾கோயில் அமைப்பு:*
கிழக்கிலும், தெற்கிலும் முகப்பு வாயில்களுடன் இவ்வாலயம் அமைந்திருந்தது.
கிழக்கு முகப்பு வாயில் வழியாக உள்ளே நுழைந்தோம்.
ஆலயத்தின் மூன்று நிலை கோபுரத்தைக் கண்டு *சிவ சிவ, சிவ சிவ* என மொழிந்து கோபுரத்தை வணங்கிக் கொண்டோம்.
கோபுரத்திற்கு வெளியே இடதுபுறம் ஐராவத தீர்த்தம் இருந்தது. இங்கு சென்று தீர்த்தத்தை அள்ளியெடுத்து சிரசிற்கு வார்த்து இறைவனை நினைந்து வணங்கிக் கொண்டு திரும்பி வந்தோம்.
கோபுர வாயிலைக் கடந்து உள்புகுந்தோம். கொடி மரம் காணக்கிடைக்கவில்லை.
அதற்குப் பதிலாக கொடிமரத்து விநாயகர் இருந்தார்.
விடுவோமா? காதைப் பிடித்துத் திருகி தோப்புக்கரணமிட்டுக் தொழுது வணங்கிக் கொண்டோம்.
வெளிப்பிரகார வீதியில் சூரியன், இந்திரன், மற்றும் இயற்பகைநாயனார், அவர் துணைவியாருடன் சந்நிதிகள் இருந்தன.
தூக்கிய கைகளை இறக்கிக் கொள்ள மனம் வரவில்லை. இயற்பகையாரின் தொண்டை நினைந்து நனைந்தோம்.
அடுத்து, விநாயகர், சுப்பிரமணியர், கஜலட்சுமி, உயர்ந்த பீடத்தில் பைரவர், நவக்கிரக சந்நிதி முதலிய சந்நிதிகளுக்குச் சென்று ஒவ்வொருத்தரையும் தொழுதவாறே வலம் முடித்து படிகளேறி வெளவால் நெத்தி மண்டபத்துக்கு வந்து சேர்ந்தோம்.
இதனின் வலதுபுறமாக பள்ளியறையும் இருந்தன. கண்டு நகர்ந்தோம்.
காலதாமதமாக நாம் ஆலயத்துள் சென்றதால் பள்ளியறைத் தரிசனம் பெறும் பாக்கியம் எமக்கு வாய்க்கவில்லை.
இதனின் பக்கத்திலேயே அம்மன் சந்நிதியும் இருக்க.......
முதலில் மூலவர் சந்நிதிக்கு விரைந்தோம். சாயவனேஸ்வரர் சந்நிதியில் கிழக்கு நோக்கிய வண்ணம் அருளிக் கொண்டிருந்தார்.
இங்கு இவர் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். மனமுருகப் பிரார்த்தனை செய்து வணங்கிக் கொண்டு அர்ச்சகரிடம் வெள்ளிய விபூதியை பெற்று வெளிவந்தோம்.
மூலவரின் வலப்பக்கத்தில், நடராஜர் சபை இருந்தது. ஆடவல்லானின் ஆடற்கலை நயத்தைக் கண்டு, பக்தியின் பாங்கால், கண்ணீர் திரள அருளாகி வணங்கிக் கொண்டோம்.
உட்பிரகாரத்திலிருக்கும் மூலவர் சந்நிதிக்கு அருகிலேயே, தெற்கு நோக்கிய வண்ணம் அம்மை குயிலினும் நன்மொழியம்மை சந்நிதிக்கு வந்தோம்.
அம்மையை மனங்குளிர ஆராதித்து, கண்குளிர தரிசனம் பார்த்து, அவளருளை அள்ளி மனதுள் வைத்து பொதிந்து கொண்டு, அர்ச்சகரிடம் குங்குமப் பிரசாதம் பெற்றுக் கொண்டு வெளிவந்தோம்.
*வில்லேந்திய முருகர்:*
அம்பாள் சந்நிதியை விட்டு வெளிவந்ததும், வெளியே அங்குள்ள மண்டபத்தில் வலதுபுறமாக இருக்கும் இக்கோவிலில், உற்சவ மூர்த்தியான முருகப்பெருமான் வில்லேந்தி அபூர்வ வடிவில் காட்சி தந்துகொண்டிருந்தார்.
சிரமேற் கைகுவித்து உயர்த்தி தொழுது வணங்கிக் கொண்டோம்.
முருகன், திருமுகத்துடன், நான்கு திருக்கரங்ளுடன் வாகன மயிலுடன் காட்சியருளியதில் அழகும் அருளும் கலவையாயிருந்தன.
அழகை ரசித்துக் கொண்டோம், அருளை வாரிக் கொண்டோம்.
ஒரு கரத்தில் கோதண்டம் தாங்கியிருந்தார். மறு கரத்தில் அம்பு ஏந்தியிருந்தார். ஒரு கரத்தில் வில்லும், மற்றெரு கரத்தில் கொடியும் கொணடிருந்த இந்த அருட்காட்சி அருளின் மேன்மை.
இத்திருமேனி பீடத்துக்கு அடிக்கீழே *திருசெந்திலாண்டவர்* என்று எழுத்துப் பொறிக்கப்பட்டிருந்தது.
இவர் ஆயுதம் தாங்கி நின்ற கோலம், போருக்குப் புறப்படும் நிலையிலுள்ள காட்சியாகும்.
இவர் தந்தை சிவபெருமான் தந்த வீரகண்டமனியை இவர் காலில் அணிந்திருக்கிறார்.
சிக்கல் தலத்தில் அம்பாள், எதிரிகளை அழிக்க முருகனுக்குக் கொடுத்த வேல் போன்று, சிவபெருமானும் முருகனுக்கு இந்த வீரகண்டமனியை கொடுத்தார். எதிரிகளை அழிக்க இந்த வீரகண்டமனி இவருக்குப் பயன்பட்டது.
இவரும் தெற்கு நோக்கியே காட்சி தருகிறார்.
திருச்செந்தூர் கோவிலைச் சார்ந்த இத்திருவுருவினை டச்சுக்காரர்கள் கப்பலில் வெளிநாட்டிற்குக் கடத்திச் செல்ல முயன்ற போது, கடலில் புயல் உருவாகி கப்பல் சிக்கி அலைக்கழிந்தது.
கப்பலைச் செலுத்தியவர்கள் இத்திருவுருவினை காவிரிப்பூம்பட்டிணக் கரையில் போட்டுச் சென்றதாகவும் அதனைக் கண்டெடுத்து இந்த திருக்கோவிலில் வைத்துள்ளதாகவும் புராணம் கூறுவர்.
*தல அருமையும், இயற்பகையாரும்:*
எதைக் கேட்டாலும் இல்லை என்றும், அப்புறம் பார்க்கலாம் என்றும், சொல்லும் கலி இது.
தன்னிடம் உள்ளதைக் கேட்டாலும் இல்லை என்று சொல்லாத தனிச் சிறப்பு வாய்ந்தவர் இயற்பகை நாயனார்.
ஆதலால்தான், சுந்தரமூர்த்தி நாயனார், *"இல்லையே என்னாத இயற்பகைக்கும் அடியேன்"* என்று சிறப்பித்து மொழிந்தார்.
வணிகர் குலத்தில் தோன்றிய இயற்பகையார் , சிவனடியார்களுக்கு வேண்டிய அனைத்தையும் இல்லை என்று சொல்லாமல் கொடுப்பதை நியமமாகக் கொண்டு வாழ்ந்து வந்தவர்.
இவரது மனைவியாரும் தனது கணவனாரின் நெறிக் குறிப்பின்படியே அனைத்து அறங்களையும் உடனிருந்து செய்து வந்தார் இந்த உத்தமி.
இவரது பெயரைக் *கற்பினுக்கரசியார்* என்றும் வழங்குகினார்கள்.
அறுபத்துமூவர் நாயன்மார்களில் ஒருவரான இயற்பகை நாயனார் பிறந்து வளர்ந்து முக்தி அடைந்த தலம் இது.
இவரது மனைவியும் சிறந்த சிவ பக்தையாவார்.
இவர்களது சிவபக்தியை உலகிற்கு எடுத்துக்காட்ட சிவன் விரும்பினார்.
ஒரு முறை இவர்களது இல்லத்திற்கு சிவனடியார் வேடமிட்டு வந்தார். இயற்பகையாரிடம் *"நீ கேட்டதையெல்லாம் இல்லை என்று கூறாமல் சிவனடியார்களுக்கு அள்ளி கொடுப்பவன் என்பதை அறிவேன். எனவே உனது மனைவியை என்னுடன் அனுப்பி வை"* என்றார்.
இயற்பகையாரும் சிறிதும் யோசிக்காமல் தன் மனைவியை சிவனுடன் அனுப்பி வைத்தார்.
அதற்கு இவரது மனைவியும் சம்மதித்தார். அடுத்து நான் என்ன செய்ய வேண்டும் என இயற்பகையார் சிவனடியாரிடம் கேட்க.......
அதற்கு சிவவேடமிட்ட இறைவர், *"நான் உனது மனைவியை அழைத்து செல்வதால் உனது உறவினர்கள் என் மீது வெறுப்பு கொள்ள நேரிடும். எனவே இந்த ஊர் எல்லையை கடக்கும் வரை எங்களுக்கு நீ பாதுகாப்பு தர வேண்டும்"* என்றார்.
இயற்பகையார் இதற்கும் சம்மதித்து கையில் பெரிய வாள் ஒன்றை எடுத்துக்கொண்டு, சிவனடியாரையும் தன் மனைவியையும் முன்னே செல்ல கூறிவிட்டு அவர்களுக்கு பாதுகாப்பாக அவர்கள் பின்னே சென்றார்.
தடுத்த சுற்றத்தார் அனைவனையும் எல்லாம் வெட்டி வென்றார்.
ஊர் எல்லையை அடைந்தவுடன் சிவனடியார்...... *"நான் உன் மனைவியுடன் செல்கிறேன், நீ ஊர் திரும்பலாம்"* என்றார்.
இயற்பகையாரும் அதன்படி திரும்பிக் கூட பார்க்காமல் தன் ஊரை நோக்கி செல்லத் தொடங்கினார்.
திடீரென *இயற்பகை* என குரலிட்டுவிட்டு, சிவனடியார் மறைந்து, வானத்தில் அன்னை உமையவளுடன் தோன்றினார்.
இயற்பகை திரும்பிப் பார்க்க....
*"நீ உனது துணைவியாருடன் இந்த பூவுலகில் பல காலம் சிறப்புடன் வாழ்ந்து, என் திருவடி வந்து சேர்க"* எனக்கூறி மறைந்தார்.
இறந்த உறவினர்களை மீண்டும் உயிர் பிழைக்கச் செய்தார்.
*தல அருமை:*
தேவேந்திரனின் தாயான அதிதிக்கு பூமியில் உள்ள சாயாவனேஸ்வரரை வழிபட வேண்டும் என்ற ஆசை நீண்ட காலமாக இருந்தது.
அந்த ஆசையை நிறைவேற்ற அவள் பூமிக்கு வந்து இறைவனை பூஜித்தாள்.
தேவலோகத்தில் தாயைக் காணாத இந்திரன், அவள் சாய்க்காட்டில் இருப்பதை அறிந்து, இத்தலத்தின் சிறப்பை தெரிந்துணர்ந்து கொண்டான் இந்திரன்.
தனது தாய் தினமும் இத்தலத்தை தரிசிக்க வசதியாக, இந்த கோயிலையே தனது ஐராவத யானையை வைத்து தேர் பூட்டி இந்திரலோகம் இழுத்து செல்ல முயற்சித்தான்.
அப்போது அம்பாள் பார்வதி குயில் போல இனிமையாக கூவினாள்.
எனவே தான் அம்மனுக்கு குயிலினும் இனிமொழியம்மை என்ற திருநாமம் ஏற்பட்டது.
இறைவன் சாயாவனேஸ்வரர் தோன்றி இந்திரனிடம் இந்த கோயிலை தேவலோகம் கொண்டு சென்று வழிபடவேண்டும் என்று நினைக்கும் எண்ணத்தை விட்டுவிடும் படியும், இங்கேயே தனது அன்னையும் இங்கே வந்து வழிபட்டு நலமடையும் படியும் கூறினார்.
ஐராவதம், கோவிலை இழுத்துச் செலவதற்காக பூமியை தன் கொம்புகளால் கீறியதால் தீர்த்தம் உண்டானது.
அந்தத் தீர்த்தமே கோவிலுக்கு எதிரில் உள்ள ஐராவத தீர்த்தமாகும்.
*🔔அடியார் ஒருவர் அனுப்பியிருந்த பாடல்:*
சாயா வனத்தில் சாத்திரம் படைத்தவனே
ஓயாத மனத்தை ஒடுங்க வைப்பவனே
வில்லினைத் தாங்கிய வேலனுடன் நின்று
மல்லுக்கு நிற்பவரை மண்ணிலே அழிப்பவனே!
தந்திரமாய் கோவிலை தாயின் பக்திக்கு
இந்திரனின் ஐராவதம் இழுக்க முயற்சிக்க
நந்திஉயர விநாயகர் நாயகராய் நிற்க
மந்திர ஐந்தெழுத்து மண்ணினைக் காக்குமே!
இயற்பகை நாயனார் இனிதே தொழுதிட
உயர்சிவ பக்தியுடன் உன்னைப் பணிந்திட
இனிய மனைவியை இயற்பகை அனுப்பிட
பணிந்த தம்பதியை பதவிசாய் காத்தவனே!
குயிலினும் இனிய குரலுடை அம்மையுடன்
கயிலை சிவனைக் கண்முன் கண்டிட
மேலையூர் வந்து மேவியவனை வணங்கி
திருச்சாய்காடு கோவிலில் திருநீறு பெறுவோமே!!!!!
சிவ சிவ. திருச்சிற்றம்பலம்.
*📖நாவுக்கரசர் தேவாரம்:*
1.🔔வானத்து இளமதியும் பாம்பும் தன்னில்
வளர்சடைமேல் ஆதரிப்ப வைத்தார் போலும்
தேனைத் திளைத்து உண்டு வண்டு பாடும்
தில்லை நடமாடும் தேவர் போலும்
ஞானத்தின் ஒண்சுடராய் நின்றார் போலும்
நன்மையும் தீமையும் ஆனார் போலும்
தேன் ஒத்து அடியார்க்கு இனியார் போலும்
திருச்சாய்க்காட்டு இனிது உறையும் செல்வர் தாமே.
🙏🏾திருச்சாய்க்காட்டில் இனிதுறையும் செல்வரே வானத்து விளங்கிய இளமதியும் பாம்பும் தம்முள் நிலவும் பகை நீங்கி வாழ அவற்றை நீள் சடைமேல் வைத்தவரும், வண்டு தேனை உண்டு மகிழ்ந்து பாடும் தில்லையில் நடனமாடும் தேவரும், ஞானமாகிய ஒளிப்பிழம்பாய் நின்றவரும், நன்மையும் தீமையும் ஆனவரும், அடியார்க்குத் தேன் போன்று தித்திப்பவரும் ஆவார்.
2.🔔விண்ணோர் பரவ நஞ்சு உண்டார் போலும்
வியன் துருத்தி வேள்விக் குடியார் போலும்
அண்ணாமலை உறையும் அண்ணல் போலும்
அதியரைய மங்கை அமர்ந்தார் போலும்
பண்ணார் களி வண்டு பாடி ஆடும்
பராய்த்துறையுள் மேய பரமர் போலும்
திண்ணார் புகார் முத்து அலைக்கும் தெண்ணீர்த்
திருச்சாய்க்காட்டு இனிது உறையும் செல்வர் தாமே.
🙏🏾மணல்செறிந்த புகாரின்கண் முத்துக்களை எறிகின்ற தெளிந்த நீரையுடைய திருச்சாய்க்காட்டில் இனிதுறையும் செல்வரே, விண்ணோர்கள் தொழுது வேண்ட நஞ்சுண்டவரும், பரந்த துருத்தியிடத்தும் வேள்விக்குடியிடத்தும் உறைபவரும், அண்ணா மலையில் உறையும் அண்ணலவரும், அதியரைய மங்கையில் அமர்ந்தவரும், மிக்குப் பொருந்திய மதுக்களிப்பையுடைய வண்டுகள் பண்ணினைப் பாடிப் பறந்துலவும் பராய்த்துறையிடத்து மேவிய பரமரும் ஆவார்.
3.🔔கானிரிய வேழம் உரித்தார் போலும்
காவிரிப் பூம்பட்டினத்து உள்ளார் போலும்
வானிரிய வரு புரம் மூன்று எரித்தார் போலும்
வடகயிலை மலையது தம் இருக்கை போலும்
ஊனிரியத் தலை கலனா உடையார் போலும்
உயர் தோணிபுரத்து உறையும் ஒருவர் போலும்
தேனிரிய மீன் பாயும் தெண்ணீர்ப் பொய்கைத்
திருச்சாய்க்காட்டு இனிது உறையும் செல்வர் தாமே.
🙏🏾மலர்களிடத்துத் தேன் ஒழுகும் வண்ணம் மீன்கள் அவற்றைத் தாக்குகின்ற தெளிந்த நீர்ப் பொய்கைகள் மிக்க திருச்சாய்க்காட்டில் இனிதுறையும் செல்வரே காட்டினின்றும் மற்ற விலங்குகள் நீங்கிப்போமாறுவரும் களிற்றியானையை உரித்தவரும், காவிரிப் பூம்பட்டினத்து உள்ளவரும், தேவர்கள் கெட்டோடும் வண்ணம் வானத்தில் பறந்து வரும் திரிபுரங்களையும் எரித்தவரும், வடகயிலையைத் தம் இருக்கையாகக் கொண்டவரும், தசை நீங்கிய அத்தலையை உண்கலமாக உடையவரும், பிரளய காலத்து ஊழி வெள்ளத்து மேலே உயர்ந்து விளங்கும் தோணிபுரத்து உறையும் ஒப்பற்றவரும் ஆவார்.
4.🔔ஊனுற்ற வெண்தலை சேர் கையர் போலும்
ஊழி பல கண்டிருந்தார் போலும்
மானுற்ற கரதலம் ஒன்று உடையார் போலும்
மறைக்காட்டுக் கோடி மகிழ்ந்தார் போலும்
கானுற்ற ஆடல் அமர்ந்தார் போலும்
காமனையும் கண் அழலால் காய்ந்தார் போலும்
தேனுற்ற சோலை திகழ்ந்து தோன்றும்
திருச்சாய்க்காட்டு இனிது உறையும் செல்வர் தாமே.
🙏🏾தேன் நிறைந்த சோலைகளின் நடுவில் விளங்கித் தோன்றும் திருச்சாய்க்காட்டில் இனிதுறையும் செல்வரே, தசை பொருந்தி இருந்த வெள்ளிய தலையோடு சேர்ந்த கையினரும், பல ஊழிகளைக் கண்டவரும், மான் பொருந்திய கரதலம் ஒன்றுடையவரும், திருமறைக்காட்டை அணுகியுள்ள கோடிக்கரையில் மகிழ்ந்து உறைபவரும், காட்டில் ஆடலை விரும்பியவரும், காமனைக் கண்ணிடத்துத் தோன்றிய அழலால் அழித்தவரும் ஆவார்.
5.🔔கார் மல்கு கொன்றை அம்தாரார் போலும்
காலனையும் ஓர் உதையால் கண்டார் போலும்
பார் மல்கி ஏத்தப்படுவார் போலும்
பருப்பதத்தே பல்லூழி நின்றார் போலும்
ஊர் மல்கு பிச்சைக்கு உழன்றார் போலும்
ஓத்தூர் ஒருநாளும் நீங்கார் போலும்
சீர் மல்கு பாடல் உகந்தார் போலும்
திருச்சாய்க்காட்டு இனிது உறையும் செல்வர் தாமே.
🙏🏾திருச்சாய்க்காட்டில் இனிதுறையும் செல்வரே கார் காலத்தில் நிரம்பப் பூக்கும் கொன்றைப் பூவாலாகிய தாரினை உடையவரும், காலனை ஓருதையால் வீழக்கண்டவரும், நிறைந்து நின்று பூமியினுள்ளாரால் புகழப் படுபவரும், திருப்பருப்பதத்தில் எக்காலத்தும் மகிழ்ந்து நின்றவரும், மிக்க பிச்சை பெறுதற்காக ஊரின்கண் அலைபவரும், ஓத்தூரை ஒருகாலும் நீங்காதவரும், தாள அறுதியுடன் கூடிய பாடலை விரும்புபவரும் ஆவார்.
6.🔔மாவாய் பிளந்து உகந்த மாலும் செய்ய
மலரவனும் தாமேயாய் நின்றார் போலும்
மூவாத மேனி முதல்வர் போலும்
முதுகுன்ற மூதூர் உடையார் போலும்
கோவாய முனிதன்மேல் வந்த கூற்றைக்
குரை கழலால் அன்று, குமைத்தார் போலும்
தேவாதி தேவர்க்கு அரியார் போலும்
திருச்சாய்க்காட்டு இனிது உறையும் செல்வர் தாமே.
🙏🏾திருச்சாய்க்காட்டில் இனிதுறையும் செல்வரே, கேசி என்னும் குதிரையின் வாயைக் கிழித்து மகிழ்ந்த திருமாலும், தாமரை மலரில் வீற்றிருக்கின்ற நான்முகனும் ஆகிய இருவரும் தாமேயாய் நின்றவரும், என்றும் மாறுபடாமல் ஒருபடித்தாய்த் திகழும் மேனியுடைய முதல்வரும், முதுகுன்றமாகிய மூதூரினரும், முனிவர் தலைவனாகிய மார்க்கண்டேயன் மேல் வந்த கூற்றுவனை ஒலிக்கும் கழல் அணிந்த பாதத்தால் அன்று உதைத்தழித்தவரும் தேவர்க்குத் தலைவர் ஆகிய பிரம விட்டுணு இந்திரர்க்கு அரியவரும் ஆவார்.
7.🔔கடு வெளியோடு ஓர் ஐந்தும் ஆனார் போலும்
காரோணத்து என்றும் இருப்பார் போலும்
இடி குரல் வாய்ப் பூதப்படையார் போலும்
ஏகம்பம் மேவி இருந்தார் போலும்
படி ஒருவர் இல்லாப் படியார் போலும்
பாண்டிக்கொடு முடியும் தம்மூர் போலும்
செடிபடு நோய் அடியாரைத் தீர்ப்பார் போலும்
திருச்சாய்க்காட்டு இனிது உறையும் செல்வர் தாமே.
🙏🏾திருச்சாய்க்காட்டில் இனிதுறையும் செல்வரே, பெரிய ஆகாயத்தோடு கூட்டி எண்ணப்படுகின்ற ஐம்பூதங்களும் ஆனவரும், காரோணத் தலங்களில் என்றும் இருப்பவரும், இடிக்கும் குரலைக் கொண்ட வாயையுடைய பூதப்படையினரும், ஏகம்பத்தை விரும்பி அதன் கண் இருந்தவரும் பிறர் ஒருவரும் ஒப்பில்லாத இயல்பினை உடையவரும், பாண்டிக்கொடுமுடியையும் தம் ஊராகக் கொண்டவரும் அடியாருடைய துன்பத்திற்குக் காரணமான நோயைத் தீர்ப்பவரும் ஆவார்.
8.🔔விலையிலா ஆரஞ்சேர் மார்பர் போலும்
வெண்ணீறு மெய்க்கு அணிந்த விகிர்தர் போலும்
மலையினார் மங்கை மணாளர் போலும்
மாற்பேறு காப்பாய் மகிழ்ந்தார் போலும்
தொலைவிலார் புரம் மூன்றும் தொலைத்தார் போலும்
சோற்றுத்துறை துருத்தி உள்ளார் போலும்
சிலையினார் செங்கண் அரவர் போலும்
திருச்சாய்க்காட்டு இனிது உறையும் செல்வர் தாமே.
🙏🏾திருச்சாய்க்காட்டில் இனிதுறையும் செல்வரே, விலையில்லாத மாலையணிந்த மார்பரும், வெண்ணீற்றை மெய்யிற் பூசிய விகிர்தரும், (மற்றையாரின் வேறுபட்டவர்) மலையரையன் மங்கையின் மணாளரும், மாற்பேற்றினைத் தம் இடமாய்க் கொண்டு மகிழ்ந்தவரும், தோல்வி அறியாத பகைவருடைய மூன்று புரங்களையும் தொலைத்தவரும், சோற்றுத்துறை, துருத்தி ஆகிய தலங்களில் உள்ளவரும், வில்லில் நாணாகப் பூட்டிய பாம்பினை உடையவரும் ஆவார்.
9.🔔அல்லல் அடியார்க்கு அறுப்பார் போலும்
அமருலகம் தம் அடைந்தார்க்கு ஆட்சிபோலும்
நல்லமும் நல்லூரும் மேயார் போலும்
நள்ளாறு நாளும் பிரியார் போலும்
முல்லை முகை நகையாள் பாகர் போலும்
முன்னமே தோன்றி முளைத்தார் போலும்
தில்லை நடமாடும் தேவர் போலும்
திருச்சாய்க்காட்டு இனிது உறையும் செல்வர் தாமே.
🙏🏾திருச்சாய்க்காட்டில் இனிதுறையும் செல்வரே, அடியாருடைய அல்லலை அறுப்பவரும், தம்மை அடைந்தார்க்கு அமருலக ஆட்சியை அளிப்பவரும், நல்லத்திலும் நல்லூரிலும் பொருந்தி நின்று காட்சி அளிப்பவரும், நள்ளாற்றை என்றும் பிரியா தவரும், முல்லைமொட்டுப் போன்ற பற்களை உடைய பார்வதியின் பாகரும், உயர்திணை யஃறிணைப் பொருள்கள் யாவற்றிற்கும் முன்னே தோன்றியவரும், தில்லை அம்பலத்தில் திருக்கூத்தியற்றும் தேவரும் ஆவார்.
10.🔔உறைப்புடைய இராவணன் பொன்மலையைக் கையால்
ஊக்கம் செய்து எடுத்தலுமே உமையாள் அஞ்ச
நிறைப் பெருந்தோள் இருபதும் பொன் முடிகள் பத்தும்
நிலஞ்சேர விரல் வைத்த நிமலர் போலும்
பிறைப்பிளவு சடைக்கணிந்த பெம்மான் போலும்
பெண் ஆண் உருவாகி நின்றார் போலும்
சிறப்புடைய அடியார்கட்கு இனியார் போலும்
திருச்சாய்க்காட்டு இனிது உறையும் செல்வர் தாமே.
🙏🏾திருச்சாய்க்காட்டில் இனிதுறையும் செல்வரே! எடுத்த வினையை முடிப்பதில் தீவிரம் மிக்க இராவணன் ஊக்கம் மிக்கு அழகிய கயிலை மலையைக் கையால் பெயர்த்தலும், உமையாள் அஞ்ச, வெற்றி நிறைதலையுடைய அவன் பெருந்தோள்கள் இருபதும் முடிகள் பத்தும் சோர்ந்து நிலத்தில் வீழும் வண்ணம் கால்விரலை ஊன்றிய நிமலரும், பிறைச் சந்திரனை அணியாகச் சடையிடத்துக் கொண்ட பெருமானாரும், பெண்ணுருவும் ஆணுருவும் கலந்து நின்ற அம்மையப்பரும், பதிஞானச் சிறப்புடைய அடியவர்களுக்கு இனிய வரும் ஆவார்.
திருச்சிற்றம்பலம்
*📖சம்பந்தர் தேவாரம்:*
1.🔔நித்த லுந்நிய மஞ்செய்து நீர்மலர் தூவிச்
சித்த மொன்றவல் லார்க்கரு ளுஞ்சிவன் கோயில்
மத்த யானையின் கோடும்வண் பீலியும் வாரித்
தத்துநீர்ப் பொன்னி சாகர மேவுசாய்க் காடே.
🙏🏾நாள்தோறும் நியமமாக நீரையும் மலரையும் தூவி மனம் ஒன்றி வழிபடுவார்க்கு அருள்புரியும் சிவபிரான் உறையும் கோயில், மதயானைகளின் தந்தங்களையும், மயிலினது வளமான பீலிகளையும் வாரித்தவழ்ந்துவரும் நீரினை உடைய காவிரியாறு கடலிடைக் கலக்கும் இடத்தே அமைந்துள்ளதிருச்சாய்க்காடு ஆகும்.
2.🔔பண்ட லைக்கொண்டு பூதங்கள் பாடநின் றாடும்
வெண்ட லைக்கருங் காடுறை வேதியன் கோயில்
கொண்ட லைத்திகழ் பேரிமு ழங்கக் குலாவித்
தண்ட லைத்தட மாமயி லாடுசாய்க் காடே.
🙏🏾பண்ணிசையோடு பூதங்கள் பாட நின்று ஆடுகின்றவனும் வெண்மையான தலையோடுகளை உடைய கரிய காட்டில் உறைபவனும் ஆகிய வேதியன் கோயில், மேகங்களைப் போலப் பேரிகைகள் முழங்கச் சோலைகளில் பெரிய மயில்கள் குலாவிஆடும் திருச்சாய்க்காடு ஆகும்.
3.🔔நாறு கூவிள நாகிள வெண்மதி யத்தோ
டாறு சூடு மமரர் பிரானுறை கோயில்
ஊறு தேங்கனி மாங்கனி யோங்கிய சோலைத்
தாறு தண்கத லிப்புதன் மேவுசாய்க் காடே.
🙏🏾மணம்வீசும் வில்வம், மிக இளையபிறை ஆகியவற்றோடு கங்கையையும் முடியில் சூடும் அமரர்தலைவனாகிய சிவபிரான் உறையும் கோயில், சுவை ஊறுகின்ற தெங்கின் காய் மாங்கனி ஆகியன ஒங்கிய சோலைகளும், குளிர்ந்த பழத்தாறுகளை உடைய வாழைப்புதர்களும் பொருந்திய சாய்க்காடு ஆகும்.
4.🔔வரங்கள் வண்புகழ் மன்னிய வெந்தை மருவார்
புரங்கள் மூன்றும் பொடிபட வெய்தவன் கோயில்
இரங்க லோசையு மீட்டிய சரக்கொடு மீண்டித்
தரங்க நீள்கழித் தண்கரை வைகுசாய்க் காடே.
🙏🏾வரங்கள் பலவும் தரும் வளமையான புகழ் பொருந்திய எந்தையும், பகைவரின் முப்புரங்கள் பொடியாகுமாறு கணைஎய்து அழித்தவனும் ஆகிய சிவபிரான் உறையும் கோயில், நெய்தல் நிலத்துக்குரிய இரங்கல் ஓசையைக் கொண்டதும் வணிகர்கள் சேர்த்த சரக்குகளைக் கொண்டுவந்து சேர்ப்பதும் ஆகிய கடலினது நீண்ட கழியின் குளிர்ந்த கரையில் அமைந்த திருச்சாய்க்காடு ஆகும்.
5.🔔ஏழை மார்கடை தோறு மிடுபலிக் கென்று
கூழை வாளர வாட்டும் பிரானுறை கோயில்
மாழை யொண்கண் வளைக்கை நுளைச்சியர் வண்பூந்
தாழை வெண்மடற் கொய்துகொண் டாடுசாய்க் காடே.
🙏🏾மகளிர் வாழும் இல்லங்கள் தோறும் சென்று அவர்கள் இடும் பலிக்காகக் கூழையான ஒளிபொருந்திய பாம்பை ஆடச் செய்து மகிழ்விக்கும் பரமன் உறையும் கோயில், பொன் போன்ற ஒண்கண்ணையும், வளையணிந்த கையையும உடைய நுளைச்சியர் வளமையான தாழை மரத்தில் பூத்துள்ள மலரின் வெண்மடல்களைக் கொய்து மகிழும் திருச்சாய்க்காடு ஆகும்.
6.🔔துங்க வானவர் சூழ்கடல் தாங்கடை போதில்
அங்கொர் நீழ லளித்தவெம் மானுறை கோயில்
வங்க மங்கொளி ரிப்பியு முத்து மணியுஞ்
சங்கும் வாரித் தடங்கட லுந்துசாய்க் காடே.
🙏🏾உயர்வுடைய தேவர்கள், உலகைச் சூழ்ந்துள்ள கடலைத்தாங்கள் கடையும் பொழுது எழுந்த நஞ்சினை உண்டு அவர்கட்கு அருள் நிழல் தந்த எம்தலைவன் உறையும் கோயில், பெரிதான கடல், மரக்கலங்களையும், அதன்கண் ஒளிர்கின்ற இப்பி, முத்து, மணி, சங்கு ஆகியவற்றையும் வாரி வந்து சேர்க்கும் திருச்சாய்க்காடு ஆகும்.
7.🔔வேத நாவினர் வெண்பளிங் கின்குழைக் காதர்
ஓத நஞ்சணி கண்ட ருகந்துறை கோயில்
மாதர் வண்டுதன் காதல்வண் டாடிய புன்னைத்
தாது கண்டு பொழின்மறைந் தூடுசாய்க் காடே.
🙏🏾வேதங்களை அருளிய நாவினர். வெண்மையான பளிங்கால் இயன்ற குழையணிந்த காதினர். கடலிடை எழுந்த நஞ்சினை நிறுத்திய கண்டத்தை உடையவர். அத்தகைய சிவபிரானார் எழுந்தருளிய கோயில், பெண் வண்டு தன்மீது காதல் உடைய ஆண் வண்டோடு புன்னைமலர்த்தாதில் ஆடி மகிழ்ந்து பின் பொழிலிடை மறைந்து ஊடும் சாய்க்காடாகும்.
8.🔔இருக்கு நீள்வரை பற்றி யடர்த்தன் றெடுத்த
அரக்கன் ஆகம் நெரித்தருள் செய்தவன் கோயில்
மருக்கு லாவிய மல்லிகை சண்பகம் வண்பூந்
தருக்கு லாவிய தண்பொழி னீடுசாய்க் காடே.
🙏🏾தான்வீற்றிருக்கும் நீண்ட கயிலைமலையைப் பற்றிப் பெயர்த்து எடுத்த இராவணனின் உடலை நெரித்துப் பின் அருள்செய்த சிவபிரானது கோயில், மணம் பொருந்திய மல்லிகை, சண்பகம் ஆகிய வளமான பூக்களைக்கொண்ட மரங்கள் விளங்கும் தண்பொழில்களை உடைய சாய்க்காடாகும்.
9.🔔மாலி னோடயன் காண்டற் கரியவர் வாய்ந்த
வேலை யார்விட முண்டவர் மேவிய கோயில்
சேலி னேர்விழி யார்மயி லாலச் செருந்தி
காலை யேகன கம்மலர் கின்றசாய்க் காடே.
🙏🏾திருமால் பிரமர்களால் காணுதற்கு அரியவனும் பொருந்திய கடலிடை எழுந்த விடத்தை உண்டவனும், ஆகிய சிவபெருமான் உறையும் கோயில், சேல்மீன் போன்றகண்களைக் கொண்ட மகளிர் வாழ்வதும், தோகையை விரித்து மயில்கள் ஆடுவதும் செருந்திமரங்கள் செம்பொன் போலக் காலையில் மலர்ந்து மணம் பரப்புவதுமான சாய்க்காடு ஆகும்.
10.🔔ஊத்தை வாய்ச்சமண் கையர்கள் சாக்கியர்க் கென்றும்
ஆத்த மாக வறிவரி தாயவன் கோயில்
வாய்த்த மாளிகை சூழ்தரு வண்புகார் மாடே
பூத்த வாவிகள் சூழ்ந்து பொலிந்தசாய்க் காடே.
🙏🏾அழுக்கேறிய வாயினை உடைய சமணர்களாகிய கீழ் மக்களுக்கும் சாக்கியர்களுக்கும் எக்காலத்தும் அன்புடையனாதலின்றி அறிதற்கும் அரிதாயிருப்பவனது கோயில், ஏற்புடைய மாளிகைகள் சூழ்ந்த புகார் நகரின் அருகே பூத்துள்ள மலர் வாவிகள் சூழ்ந்து பொலியும் சாய்க்காடாகும்.
11.🔔ஏனை யோர்புகழ்ந் தேத்திய வெந்தைசாய்க் காட்டை
ஞான சம்பந்தன் காழியர் கோனவில் பத்தும்
ஊன மின்றி யுரைசெய வல்லவர் தாம்போய்
வான நாடினி தாள்வரிம் மானிலத் தோரே.
🙏🏾சமண பௌத்தர்கள் அன்றி ஏனையோர்புகழ்ந்து ஏத்தும் எம்தந்தையாகிய இறைவர் விளங்கும் சாய்க்காட்டை, காழியர் கோனாகிய ஞானசம்பந்தன் போற்றிப் பாடிய இப்பதிகப்பாடல்கள் பத்தையும் குற்றமற்றவகையில் உரைசெய்து வழிபட வல்ல இம் மாநிலத்தோர் வான நாடு சென்று இனிதாக அரசாளுவர்.
திருச்சிற்றம்பலம்.
No comments:
Post a Comment