பஜகோவிந்தம் -9
ஸத்ஸங்கத்வே, நிஸ்ஸங்கத்வம்;
நிஸ்ஸங்கத்வே, நிர்மோஹத்வம்;
நிர்மோஹத்வே, நிஸ்சல தத்வம்;
நிஸ்சல தத்வே, ஜீவன் முக்தி; (9)
நல்லவர் சேர்க்கை, நலம் செய்ய வைக்கும்;
நலமே செய்தால், தன்னலம் மறக்கும்;
தன்னலம் மறந்தால், தெளிவது பிறக்கும்;
தெளிவும் பிறந்தால், தெய்வமும் அணைக்கும்!
(9)(Padma Gopal)
ஸத்ஸங்கம் என்பது நல்லவர்கள் சேர்க்கை . அதன் மூலம் இவ்வுலகப்பற்று அகல்கின்றது. நிஸ்ஸங்கத்வம், பற்றின்மை வாய்க்கின்றது. அதனால் நிர்மோஹத்வம், மனதில் இவ்வுலக சுகங்கள் நிலையானவை என்ற மயக்கம் அழிகின்றது. அதனால் நிஸ்சலதத்வம் , என்றும் நிலையான உண்மை எது என்ற அறிவு பிறக்கின்றது. அதனால் ஜீவன் முக்தி , அதாவது சம்சார பந்தத்தில் இருந்து விடுதலை கிடைத்து மறுபடி பிறவாநிலை வாய்க்கிறது. இதுதான் முமுக்ஷுப்படி, முக்திநிலை அடையும் படிகள்.
இதை ஒவ்வொன்றாகப் பார்க்கலாம்.சத்சங்கம் என்றால் என்ன? ஆன்மீகத்தில் நாட்டம் உள்ளவர்களுடன் சேர்க்கை., அல்லது ஆன்மீக நூல்களை படித்தல், அதைப்பற்றி கேட்டல் இவையாகும்.இதனால் இந்த உலக வ்யவஹாரங்களில் பற்று விடுகின்றது இந்த்ரிய சுகங்களில் ஆசையும் குறைகிறது. இறைப்பற்று பெருகப்பெருக இப்பற்று விடுகின்றது. இதுதான் நிஸ்ஸங்கத்வம்.
இத்தனை நாளாக இதற்காகவா ஆசைப்பட்டு பாடுபட்டு பல பிறவி எடுத்து அல்லல் உற்றோம் என்ற அறிவு தோன்றியபின் மனமயக்கம் தெளிகிறது. அதாவது நிர்மோஹத்வம். தெளிவான மனதில் உண்மைஅறிவு பிறக்கிறது. எது ஒன்று என்றும் அழியாததோ அதுதான் ஆத்மா அதுதான் நான் என்ற, , அதாவது நிஸ்சலதத்வத்தைப் பற்றிய ஞானம் பிறக்கிறது.
அதன்பின் வேறு என்ன ? ஜீவன் முக்திதானே ?
இங்கு சங்கரர் ஆத்மஞானத்தை அடையும் படிகள் யாவை என்று விவரிக்கிறார. கீதையில் கண்ணன் அழியாத ஆத்மா அஞ்ஞானத்தால் மறைக்கப்படுவதால் எவ்வாறு மனிதன் அழிகிறான் என்று விளக்குகிறான் .அதாவது கீழ் நோக்கிச்செல்லும் படிகள்.
த்யாயதோ விஷயான் பும்ஸ: ஸங்க: தேஷு உபஜாயதே
ஸங்காத் ஜாயதே காம: காமாத் க்ரோதோபஜாயதே
க்ரோதாத் பவதி ஸம்மோஹ: ஸம்மோஹாத் ஸ்ம்ருதிவிப்ரம:
ஸ்ம்ருதிப்ரம்சாத் புத்திநாச: புத்திநாசாத் விநச்யதி.
த்யாயதோ விஷயான் பும்ஸ:- இதுதான் வீழ்ச்சிக்கு முதல் படி. கண் பார்க்கிறது. காது கேட்கிறது. இவ்விதம் இந்த்ரியங்கள் விஷயான், உலகில் உள்ள எல்லாவற்றையும் உணர்கின்றன. இது தவறு அல்ல. ஆனால் அதைப்பற்றியே நினைத்துக்கொண்டு இருப்பதைத்தான் த்யாயதோ என்ற சொல் குறிக்கிறது.
அப்போது ஸங்க: தேஷு உபஜாயதே, அவற்றில் பற்று உண்டாகிறது. இந்த பற்றைத்தான் சங்கரர் எவ்வாறு ஒழிப்பது என்று கூறியிருக்கிறார் .
ஸங்கம் அல்லது பற்று வந்த பின் அதில் ஆசை கொண்டு மனம் நாடி ஓடுகிறது. ஸங்காத் ஜாயதே காம:. அந்த ஆசை நிறைவேறவில்லை என்றால் அதிலிருந்து கோபம் உண்டாகிறது. காமாத் க்ரோதோபஜாயதே. கோபம் வந்தால் மனம் மயக்கமடைகிறது. க்ரோதாத் பவதி ஸம்மோஹ:. அதனால் எது சரி எது தவறு என்ற அறிவு போய் விடுகிறது. கோபம் வந்த மனிதன் வேண்டியவர் வேண்டாதவர் என்ற பாகுபாடையே மறந்துவிடுகிறான்.
இதை ஆஞ்சநேயர் சுந்தரகாண்டத்தில் அழகாகக் கூறுகிறார். இலங்கையை எரித்த பின் சீதை என்ன ஆனாளோ என்ற பயத்தில் தன் கோபத்தின் மீதே வெறுப்பு கொண்டு சொல்கிறார்.
க்ருத்த: பாபம் நர: குர்யாத் க்ருத்த: ஹன்யாத் குரூன் அபி
கோபம் வந்த மனிதன் பாபம் செய்கிறான். குருவைப்போல் வணங்கத் தக்கவரையும் கொல்வான்.
இதைத்தான் கண்ணன் ஸ்ம்ருதிவிப்ரமம் என்று குறிப்பிடுகிறான்.
ஸ்ம்ருதிப்ரம்சாத் புத்திநாச: - அதனால் அறிவு மழுங்கி , புத்திநாசாத் விநச்யதி- புத்தி நாசமடைவதால் அழிகிறான்.
இதை விட மண்டையில் அடித்தது போல கண்ணனைத் தவிர யாரால் சொல்ல முடியும்?
No comments:
Post a Comment