Tuesday, July 24, 2018

Bhaja govindam slokas 27,28,29 in tamil

Courtesy:Smt.Dr.Saroja Ramanujam

பஜகோவிந்தம் - ஸ்லோகம் 27- 29

கேயம் கீதா நாம ஸஹஸ்ரம்
த்யேயம் ஶ்ரீபதி ரூபமஜஸ்ரம்;
நேயம் ஸஜ்ஜன ஸங்கே சித்தம்−
தேயம் தீன ஜனாய ச வித்தம்! (27)

துதிப்பாய் இறைவனின் நாமமும், கீதையும்;
பதிப்பாய் அவனின் மலரடி நெஞ்சில்;
பெறுவாய் நல்லவர் சேர்க்கையை நாளும்−
தருவாய் ஏழைக்கு முடிந்ததை நீயும்! (27)
(Padma Gopal)

இந்த ஸ்லோகம் சுமதி என்பவரால் கூறப்பட்டதாகக் கருதப்படுகிறது. மீதி ஸ்லோகங்கள் சங்கரரே கூறியனவாகும்

கீதா நாமஸஹஸ்ரம்- கீதையையும் ஸஹஸ்ரநாமத்தையும் , கேயம்- கீர்த்தனம் செய்ய வேண்டும். ஸ்ரீபதிரூபம்- ஸ்ரீபதியான நாராயணனை அஜஸ்ரம் – எப்போதும், த்யேயம்-த்யானிக்க வேண்டும். ஸஜ்ஜனஸங்கே – சத்சங்கத்தில், சித்தம் – மனதை , நேயம்- செலுத்தவேண்டும். தீனஜனாய – ஏழைகளுக்கு , வித்தம்- பொருளை , தேயம் – கொடுக்க வேண்டும்.

சம்சார துக்கத்தில் இருந்து விடுபட நான்கு வழிகள் இந்த ஸ்லோகத்தில் கூறப்படுகின்றன.,
காயேன வாசா மனஸா இந்த்ரியைர்வா , உடலினாலும், வாக்கினாலும் மனதினாலும் இந்த்ரியங்களாலும் எதெது செய்கிறோமோ அது எல்லாம் பகவதர்ப்பணமாகவே செய்யவேண்டும் என்பது இதன் பொருள்.

வாக்கினால் செய்பவது கீதை, ஸஹஸ்ரநாம பாராயணம். மனதினால் செய்யவேண்டியது பகவத் தியானம் . சரீரத்தினால் செய்ய வேண்டியது சத்சங்கத்தை நாடுதல். இந்த்ரியங்களால் செய்யக்கூடியது தானம்.

இதை பினபற்றாமல் உலக சுகங்களில ஈடுபட்டால் வருவதென்ன என்பதை அடுத்த ஸ்லோகம் விளக்குகிறது.

ஸுகத: க்ரியதே ராமா போக:
பஸ்சாத் ஹந்த ஸரீரே ரோக:
யத்யபி லோகே மரணம் சரணம்
ததபி ந முஞ்சதி பாபாசரணம்! 
(28)

பெண் அவள் சேர்க்கை தருவது இன்பம்−
பின்னால், வருவது, நோயினால் துன்பம்;
இறப்பது உலகில் நியதி என்றிருந்தும்−
மறப்பதில்லை மனம், பாவம் புரிந்திட! (28)

ராமாபோக: - காம இன்பம் ( எல்லா வித புலன் இன்பமும் இதில் அடக்கம்) 
ஸுகத: க்ரியதே- செய்யும்போது சுகமாக உள்ளது. ஹந்த- - கஷ்டம்! –சரீரே ரோக:- உடல் நோய் , பஸ்சாத் – வருவது பின்னர். 
லோகே – உலகில் , மரணம் சரணம்- மரணமே முடிவில் , யத்யபி- என்று இருந்தாலும், ததபி- அப்போதும் , பாப ஆசரணம் – பாபம் செய்வதை, ன முஞ்சதி- மனிதன் விடுவதில்லை.

அர்த்தமனர்த்தம் பாவய நித்யம்
நாஸ்தி தத: ஸுகலேஸ ஸத்யம்;
புத்ராதபி தன பாஜாம் பீதி:
ஸர்வத்ரைஷா விஹிதா ரீதி: (29)

தனத்தினால் சுகமென்று அலைவது வீணே!
மனதில் இதை நீ நிறுத்திடு, நண்பா!
மகனும் பகையே, செல்வம் சேர்ந்ததும்−
அகிலத்தில் இது தான் என்றும் நியதியே! (29)

அர்த்தம் – தனம் , அனர்த்தம்- அனர்த்தத்தை விளைவிப்பதாக , .நித்யம் பாவய – எப்போதும் நினைவு கொள். தத: - செல்வத்தினால், ஸுகலேச: -சிறிதளவும் சுகம் , நாஸ்தி- இல்லை. தனபாஜாம் – செல்வந்தர்களுக்கு , புத்ராத் அபி- பிள்ளைகளிடமிருந்தும் , பீதி: - பயம் ஏற்படுகிறது. ஸர்வத்ர – எங்கும் ,ஏஷா- இதுதான், விஹிதா ரீதி: - விதிக்கப்பட்ட நியதி.

காம, காஞ்சன, பெண்ணாசை பொன்னாசை , இது இரண்டுமே மனிதனை படுகுழியில் வீழ்த்துகின்றன. முந்தைய ஸ்லோகத்தில் பெண்ணாசையைப் பற்றி கூறி இங்கு பொன்னாசையை விவரிக்கிறார்.

நாம் பொதுவாக எங்கும் பணத்தினால் தீமையே அதிகம் என்று பார்க்கிறோம். பணம் பணம் என்று வாழ்க்கையைத் தொலைத்தவர்கள் தங்களின் இழப்பை உணரும்போது காலம் சென்றுவிடுகிறது. ஒருவரின் வீடு பெரிய மாளிகையாக இருக்கலாம். பணம் கோடிகோடியாக இருக்கலாம். பத்து கார்கள் இருக்கலாம்.

ஆனால் அவர் பணத்தைத்தேடி அலைந்ததன் பலனாக உடல் கெட்டுவிட்டதென்றால் , குடும்பவாழ்க்கை அற்று விட்டதென்றால் அதனால் என்ன பயன்.

அவருடைய காரில் சமையற்காரர் கடைக்குப்போய் கறிகாய் வாங்குவார். ஆனால் இவர் டாக்டர் சொன்னதற்காக தினம் நடக்க வேண்டும். வீட்டில் மற்றவர் அருசுவை அன்னம் உண்ணுவார். இவர் சாப்பிடுவது கோதுமைக் கஞ்சி.

அது மட்டுமா? நெருங்கிய உறவினர் கூட அவருடைய பணத்தின்மேல்தான் கண்ணாயிருப்பர். இந்த காலத்தில் பெற்ற பிள்ளைகளையே நம்ப முடிவதில்லை என்று கண்கூடாகக் காண்கிறோம்.,

இதனால் பணமே சம்பாதிக்கக்கூடாது என்று அர்த்தம் இல்லை. ஒரு அளவுக்கு மேல் பணத்தாசை இருக்கக்கூடாது என்றுதான் பொருள். அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் விஷம் அல்லவா?

இதற்கு என்னதீர்வு என்பதைத்தான் 'கேயம் கீதா நாமஸஹஸ்ரம் எனற ஸ்லோகத்தில் கூறப்பட்டுள்ளது. பகவத் தியானம் எப்போதும் இருக்குமானால் எந்த ஆசையும் நம்மை வசப்படுத்தாது.

கீதையில் பகவான் தர்மத்தை ஒட்டி வரும் ஆசையே நான் என்கிறார்., 
இந்த ஸ்லோகங்கள் சன்யாசிக்குக் கூறப்பட்டன அல்ல. க்ருஹஸ்தர்களுக்கே கூறப்பட்டன. அதனால் நான்கு புருஷார்த்தங்களும் இருக்கவேண்டிய விகிதாசாரத்தில் இருக்கவேண்டும் என்பதே இதன் சாராம்சம்.

தர்மம், அர்த்தம், காமம், மோக்ஷம் இவைகளில் தர்மத்தை ஒட்டி அர்த்தம் ( பொருள்) சேர்க்கவேண்டும். காமம் அலல்து ஆசை மோக்ஷத்தின் மீது இருக்க வேண்டும். இது சத்சங்கத்தினால் வருவது.

தேயம் தீனஜனாய வித்தம் என்று சொன்னதன் பொருள், தேவைக்குமேல் உள்ளதை மற்றவர்க்குக் கொடுத்து உதவவேண்டும் என்பது. ஆனால் தேவை என்பது அளவுக்கு மீறி இருக்கக் கூடாது.,

மக்களுக்கு செல்வம் சேர்த்து வைப்பதை விட அந்த செல்வத்தை சம்பாதிக்கும் அறிவை கொடுப்பது மேலானது. வித்யாதனம் சர்வதனாத் பிரதானம்.




No comments:

Post a Comment