Monday, July 23, 2018

Bhaja govindam slokas 24,25,26 in tamil

Courtesy:Smt.Dr.Saroja Ramanujam

பஜகோவிந்தம் ஸ்லோகம் 24,25,26

இந்த ஸ்லோகம் யோகானந்தரால் கூறப்பட்டது.

த்வயி மயி சான்யத்ரைகோ விஷ்ணு:
வ்யர்த்தம் குப்யஸி மய்ய ஸஹிஷ்ணு:
பவ ஸமசித்த: ஸர்வத்ர தவம் 
வாஞ்சஸி அசிராத் யதி விஷ்ணுத்வம்

உன்னிலும், என்னிலும், இருப்பவன் ஒருவன்;
வீண் சண்டை வேண்டாம்−அவனே இறைவன்!
வேற்றுமை மனதில் தோன்ற விடாமல்,
மற்றவரிடமும், தனையே காண்பாய்! (24)
(Padma Gopal )
இந்த ஸ்லோக்ம் சுரேந்த்ரரால் கூறப் பட்டது. த்வயி – உன்னிடத்திலும் ,மயி – என்னிடத்திலும் , அன்யத்ர ச – வேறு எவரிடமும் , ஏகோ விஷ்ணு: - இருப்பது ஒரே விஷ்ணுதான். வ்யர்த்தம் – வீணே , மயி- என்னிடத்தில் , அஸஹிஷ்ணு: - பொறுமை இன்றி , குப்யஸி- கோபம் கொள்கிறாய். அசிராத் – சீக்கிரத்தில், விஷ்ணுத்வம் -இறைத்தன்மை , யதி வாஞ்சசி – அடைய வேண்டுமானால்., ஸர்வத்ர – எல்லோரிடத்த்திலும் , ஸமசித்த: - ஒரே மனப்பான்மையுடன், பவ- இருப்பாயாக. 
.
சத்ரௌ மித்ரே புத்ரே பந்தௌ
மா குரு யத்னம் விக்ரஹ ஸந்தௌ;
ஸர்வஸ்மின்னபி பச்யாத்மானம்,
ஸர்வத்ரோத்ஸ்ருஜ பேத ஜ்ஞானம்! (25)

பகைவன், நண்பன், பிள்ளை, உறவினன்−என
வகை செய்து, நீயும் உறவு கொள்ளாதே!
சம நோக்கினில், நீ எவரையும் வைப்பாய்;
தனையே, பிறரில் தெளிவுற காண்பாய்! (25)
(Padma Gopal )
இது மேதா தீர்த்தர் கூறியது.
சத்ரௌ- எதிரியினிடத்திலோ , மித்ரே- நண்பனிடத்திலோ , புத்ரே- பிள்ளையிடத்திலோ , பந்தௌ- உறவினரிடத்திலோ, விக்ரஹ ஸந்தௌ- பகையோ பற்றோ, மாகுரு- கொள்ளாதே. ஸர்வச்மின் அபி- எல்லோரிடமும் ஆத்மானம் பச்ய- உன்னையே காண்பாயாக. சர்வத்ர – எங்கும் பேத ஞானம் வேற்றுமை எண்ணத்தை , உத்ஸ்ருஜ- விட்டுவிடு.

நட்பு விரோதம் இரண்டுமே பந்தம் விளைவிப்பது . விஷ்ணுத்வம் அதாவது பகவானை அடையவேண்டும் என்றால் எல்லோரிடமும் பகவானையே காண வேண்டும். ஸமசித்தத்வம் , எல்லோரையும் ஒரேமாதிரி பாவிப்பதுதான் அதற்கு வழி. 
இது சாத்தியமா?
சங்கரர் போன்ற ஞானிகளால் வேண்டுமானால் இது உண்மையாக இருக்கலாம். ஆனால் நம்போன்றவர்களால் இது முடியுமா? 
அதற்கு வழிதான் முந்தைய ஸ்லோகத்தில் கூறப்பட்டுள்ளது. எல்லோரினுள்ளும் இருப்பது இறைவன்தானே ? ஒருவரை வெறுத்தால் அது அவர்க்குள்ளிருக்கும் இறைவனை வெறுப்பது போல அல்லவா ஆகும். ஒருவர் நமக்கு தீங்கிழைத்தால் அது அவருடைய காமக்ரோதாதிகளின் செயல். அதிலிருந்து அவர் விடுபட அவருக்குள் இருக்கும் இறைவனை பிரார்த்திக்க வேண்டும். மேலும் நம் கர்மபலனும் காரணம் ஆகிறது. அதற்கு மற்றவர் ஒரு கருவிதான்.,.இதை நினைவில் கொண்டால் நமக்கு இறைவன் நினைவு வருமே தவிர மற்ற எதிர்மறையான எண்ணங்கள் தோன்றாது. 
எப்படி நம் மனதை இந்த நிலைக்கு கொண்டு வருவது? இது அடுத்தச்லோகத்தில் சொல்லப்படுகிறது.

காமம், க்ரோதம், லோபம், மோஹம்
த்யக்த்வாத்மானம் பாவய கோஹம்;
ஆத்ம ஞான விஹீனா மூடா
தே பச்யந்தே நரக நிகூடா: (26)

பிடிப்பு, துடிப்பு, ஆசை, கோபம்−
விடுத்தே நீயும் உனையே அறிவாய்!
தன்னறிவில்லா மூடனே என்றும்−
துன்பம் காண்பான், நரகத்தில் நின்று! (26)
(Padma Gopal )
பாரதவம்சர் கூறியது. 
காமம் க்ரோதம் லோபம் மோஹம் – ஆசை, கோபம், பேராசை, மனமயக்கம் 
த்யக்த்வா- இவைகளை விட்டுவிட்டு, ஆத்மானம் – உன்னை ., கோ அஹம் – நான் யார் என்று , பாவய – எண்ணிப்பார். ஆத்மஞான விஹீனா- ஆத்மஞானம் இல்லாத , மூடா: - மூடர்கள் , நரகநிகூடா: - நரகத்தில் இருப்பது போன்று , பச்யந்தே – அவதிபடுகிறார்கள்.
பகவான் கீதையில் கூறியுள்ளபடி, 
ஆசையிலிருந்து ( அது நிறைவேறவில்லை என்றால்) கோபம் உண்டாகிறது. ஆனாலும் ஆசைகள் நிறைவேறினாலும் அடங்குவதில்லை. ,அதனால் மேலும் மேலும் வேண்டும் என்ற பேராசை உண்டாகிறது. அதனால் மனமயக்கம் உண்டாகிறது. 
இதை விடுவது எப்படி? ஒரு பொருளின் மேல் நாம் ஆசை கொண்டால் அது அதைவிட மேலான பொருளைப் பார்த்தால் போய்விடும் அல்லவா? அதுபோல எல்லாவற்றிற்கும் மேலான பொருளின்மீது ஆசை வந்துவிட்டால் மற்ற ஆசைகள் அகன்று விடும். அந்த எல்லாவற்றிற்கும் மேலான பொருள்தான் பரம்பொருள். இந்த ஸ்லோகம் உலகப்பற்றை விட்டு அவன் மேல் பற்று வைக்க வேண்டும் என்பதைக் கூறுகிறது.


No comments:

Post a Comment