பஜகோவிந்தம்-ஸ்லோகம் 23
கஸ்த்வம் , கோஹம், குத ஆயாத:?
கா மே ஜனனி, கோ மே தாத:?
இதி பரிபாவய ஸர்வமஸாரம்,
விச்வம் த்யக்த்வா, ஸ்வப்ன விசாரம்! (23)
யார் நீ, நான் யார்? எங்கு வந்தேனோ?
யாரோ தாயும்? தந்தையும் யாரோ?
கனவில் வருகின்ற காட்சி தான் என்று−
தன்னைத் தானே தேற்றுதல் நன்று! (23)
(PadmaGopal)
க: தவம் – நீ யார்?, கோ அஹம்- நான் யார்? , குத: ஆயாத: -எங்கிருந்து வந்தேன்? கா மே ஜனனீ – யார் என் தாய் , கோ மே தாத: -யார் என் தந்தை? ஸர்வம்- எல்லாம், அஸாரம் –அர்த்தமற்றவை , த்யக்த்வா- இதை விட்டுவிட்டு, விச்வம் – இந்த உலக வாழ்க்கை, ஸ்வப்னவிசாரம் – கனவுத்தோற்றம், இதி பரிபாவய. – என்று அறிந்து கொள்.
நீ யார்? நான் யார்? இது தன்மை முன்னிலை இரண்டையும் குறிப்பது. விச்வம் என்ற சொல் படர்க்கையைக் குறிக்கிறது. இதில தாய் தந்தையும் அடங்குவர். பிரம்ம பாவனை உள்ளவர்க்கு நான் அவன் என்ற பேதம் கிடையாது. . எல்லாம் ஆத்மா. எல்லாம் பிரம்மன்.
தாய் தந்தை இன்னும் பிற உறவுகள் இந்தப் பிறவியில் மட்டுமே. ( கா தே காந்தா கஸ்தே புத்திர: என்ற ஸ்லோகத்தின் விளக்கம் பார்க்க)
நம்மாழ்வார் சொல்கிறார்.
நான் அவன் இவன் உவன் அவள் இவள் உவள் எவள்
நாம் அவர் இவர் உவர் அது இது உது எது
வீமவை இவை உவை நலந்தீங்கவை
ஆமவையாய அவையாய் நின்ற பரனே
நான் நீ அவள் இவள் அவன் இவன் அவை எல்லாமாய் நின்ற பரனே.
இதைத்தான் உபநிஷத் 'ஸதேவ சௌம்ய இதம் அக்ர ஆஸீத் ஏகமேவ அத்விதீயம்,' ஸத் அல்லது பிரம்மம் மட்டுமே முதலில் இருந்தது தனியாக, வேறு ஒன்றும் இல்லாமல்.'தத் ஐக்ஷத பஹு ஸ்யாம் பிரஜாயேய,' பலவாகத் தோன்றுவேன் என்று அது சங்கல்பித்தது.
ஸர்வம் கலு ப்ரம்ம தஜ்ஜலான் இதி சாந்த உபாஸீத ,' எல்லாம் பிரம்மமே . தத் , அந்த பிரம்மம் சிருஷ்டித்து காத்து சம்ஹரிக்கிறது என்று அமைதியான மனத்துடன் உபாஸிக்க வேண்டும்.
இந்த கருத்தை சொல்வதுதான் இந்த ஸ்லோகம். நான் யார் ? எங்கிருந்து வந்தேன்?
அஹம் ப்ரம்மாஸ்மி என்கிறது உபநிஷத். உண்மையான அஹம் – நான் பிரம்மமே. நான் நீ என்ற வேறுபாடு இந்த உடலினால் வந்தது. இந்த உடல் என்ற உணர்வு இல்லை என்றால் உறவுகள் இல்லை.
எங்கிருந்து வந்தோமோ அங்கு ஒருநாள் போயாக வேண்டும். வருவது போவது என்னும் உணர்வே மாயை. நான் பிரம்மமாக இருக்கிறேன் என்றால் எங்கு போவது? குடங்கள் வேறு ஆனால் அவைகளுக்குள் இருக்கும் ஆகாசம் ஒன்று. குடத்தை உடைத்துவிட்டால் அதற்குள் இருக்கும் ஆகாசம் எங்கு போய்விட்டது?
நம் உடல் , மனம் , புத்தி இவை நம் கர்மாவின்படி அமைகின்றன. இதுதான் நாம் இருக்கும் குடம். மற்ற குடங்களும் இவ்வாறே . உள் இருக்கும் ஆகாசம் ஒன்றே. இதை சிந்தித்துப் பார்த்தால் விருப்பு வெறுப்பு இவை அர்த்தமற்றவையாகத் தோன்றும்.
இந்த உலகத்தில் உள்ள வெவ்வேறு குடங்களுக்கும் உண்மையில் பேதம் கிடையாது. 'வாசாரம்பணம் விகார: நாமதேயம் ம்ருத்திகேத்யேவ சத்யம் ,' என்ற உபநிஷத் வாக்கியமும் இதைத்தான் கூறுகிறது.' பானை, தட்டு, கூஜா என்று வெவ்வேறு உருவமும் பெயரும் இருப்பது உணமை அல்ல. அது எல்லாம் மண்தான் என்பதுதான் உண்மை. பொற்கொல்லன் ஆபரணங்களை இது மாலை, இது வளை என்று பார்ப்பதில்லை எல்லாம் பொன் என்றுதான் பார்க்கிறான்.
இந்தப் பார்வைதான் இந்த ஸ்லோகத்தில் வலியுறுத்தப் படுகிறது.
இந்த ஸ்லோகம் யோகானந்தரால் கூறப்பட்டது.
No comments:
Post a Comment