பஜகோவிந்தம் ஸ்லோகம் 2௦
அடுத்தச்லோகம் ஆனந்தகிரி கூறியது.
பகவத் கீதா, கிஞ்சிததீதா,
கங்காஜல லவ கணிகா பீதா,
ஸக்ருதபி யேன முராரி ஸமர்ச்சா,
க்ரியதே தஸ்ய யமேன ந சர்ச்சா! (20)
கண்ணனின் கீதை அறிவாய் கொஞ்சம்;
கங்கை நீரும் அருந்துவாய் கொஞ்சம்;
மாலவனை, ஒரு கணமேனும் வழிபடு; −
காலனின் பயத்தில் இருந்து நீ விடுபடு! (20)
ஸம்சாரத்தில் ஆழ்ந்திருக்கும் நம்மைப்போன்றவர்க்கு என்ன கதி என்ற கவலைக்கு பதில் கூறுகிறது இந்த ஸ்லோகம்.
பகவத் கீதையை கிம்சித் , சிறிது, அதீதா, அறிந்தாலும்,கங்காஜலலவகணிகா கங்கையின் நீரை சிறிது , பீதா, பருகினாலும், ஸக்ருதபி, ஒரு முறையாவது முராரிஸமர்ச்சா, பூஜித்தாலும் , தஸ்ய , அவனுக்கு யமேன ந சர்ச்சா க்ரியதே, யமபயம் இல்லை.
இது ஒரு குறுக்கு வழிபோல் தோன்றினாலும் இதை ஆராய்ந்தோமானால் இதன் அர்த்தம் புரியும்.
பகவத் கீதையை சிறிதாவது அறிவது என்றால் என்ன? ஒரே ஒரு ச்லோகத்தை படித்து அதை சொல்லிக்கொண்டு வந்தால் போதுமா.? போதாது. ஒரு ஸ்லோகம் படித்தாலும் அதை நன்றாக பொருள் அறிந்து மனதில் கொள்ளவேண்டும் அதன்படி நடக்க முயல வேண்டும்.
எல்லோருக்கும் கீதையின் ஏதாவது ஒரு ஸ்லோகம் பிடித்ததாக இருக்கும். அதன் பொருளை மனதில் வாங்கிக்கொண்டு அதன்படி வாழ்ந்தால் போதுமானது . மொத்த கீதையையும் மனப்பாடம் செய்து இயந்திரம் போல் சொன்னால் ஒரு பயனும் இல்லை
அடுத்தது கங்கை ஜலத்தை துளி பருகினால் போதும் என்பது. அதுவும் நம்பிக்கையுடன் செய்தால்தான் பலன். இல்லாவிட்டால் ஒரு குடம் குடித்தாலும் ஒரு பயனும் இல்லை.
ஒருவர் கங்கையில் ஸ்நானம் செய்த பிறகு கூறினார் " அப்பாடா நான் செய்த பாவமெல்லாம் போய் விட்டது இனிமேல் புதிதாக பாவம் செய்யலாம்," என்று. இது அபத்தமாக தோன்றினாலும் எல்லோரும் இதைத்தானே செய்கிறார்கள்! கரையில் விட்ட ஆசைகளை மறுபடி சுமந்துகொண்டு போகிறார்கள் அல்லவா?
கோவில் வாசலில் விட்ட செருப்பு போல கோவிலில் இருந்து வெளியே வந்ததும் நம் அழுக்கு மூட்டையை மறுபடி கையில் எடுத்துக்கொள்கிறோம்.
ஒருமுறையேனும் ஹரியை வணங்கினால் போதும் என்பதற்குப் பொருள் ..என்னவென்றால் சரணாகதியை செய்யவேண்டியது ஒரு முறைதான் அதற்குப்பிறகு அவன் இட்ட வழக்காக இருக்கவேண்டும்.
'ஸக்ருதேவ பிரபன்னானாம் தவாஸ்மி இதி வாதினாம் அபயம் சர்வபூதானாம் ததாமி ,'
"ஒருமுறை என்னை சரணம் அடைந்து நாம் உன்னுடையவன் என்று சொல்லும் எல்லோருக்கும் நான் அபயம் அளிக்கிறேன் ," என்று ராமன் விபீஷண சரணாகதியின் போது சொல்லவில்லையா ?
இதன் கருத்து என்னவென்றால் செயல் முக்கியம் அல்ல எந்த மனோபாவத்தில் செய்யப்படுகிறது என்பது தான் முக்கியம்.
No comments:
Post a Comment