Monday, July 16, 2018

Bhaja Govindam 14 to 16 in tamil

Courtesy:Smt.Dr.Saroja Ramanujam

பஜகோவிந்தம்- 14to 16

இதுவரை சங்கரர் வாக்கு என்றும் பின் வரும் ஸ்லோகங்கள் அவர் சீடர்களால் சொல்லப்பட்டது என்றும் கூறுகின்றனர். இந்த ஸ்லோகம் பத்மபாதர் கூறியதாகக் கருதப்படுகிறது.

ஜடிலோ முண்டி லுஞ்சித கேச:
காஷாயாந்தர பஹுக்ருத வேஷ:
பஸ்யன்னபி ச ந பஸ்யதி மூடோ
ஹ்யுதர நிமித்தம் பஹுக்ருத வேஷ: 
(14)

சடைத்தலை, நீள்முடி, மொட்டை என்று−
இடைக்காவியுடன் போடுவான் வேஷம்;
ஒரு சாண் வயிற்றுக்குப் பலவித ஆட்டம்−
பார்த்தும், பாராதது போல் ஓட்டம்! 
(14)
இந்திரியங்களின் வசம் உள்ள மனிதன் இல்லறத்தில் இருந்தாலும் துறவறம் மேற்கொண்டாலும் அதனால ஒரு பயனும் இல்லை என்பதை மூன்று ஸ்லோகங்களால் விளக்கப்படுகிறது

ஜடில:- சடை முடியுடன் சிலர், முண்டீ-மொட்டைத்தலையுடன் சிலர், லுஞ்சிதகேச: -தானே தன் சிகையைப் பிடுங்கிக்கொண்டு சிலர் , காஷாயாந்தர -காவி உடை மற்றும் இதர உடை இவ்வாறு பஹுக்ருதவேஷ: பலவிதமான வேஷங்கள். உதரநிமித்தம் – வயிற்றை வளர்ப்பதற்காக, பஹுக்ருத வேஷ: பலவித வேஷங்களை தரித்த, மூட: மூடன் , பச்யன் அபி ந பச்யதி- கண்ணிருந்தும் குருடன் ஆவான்.

இங்கு சடை முடி என்பது காபாலிகர்களையும் , மொட்டை அடிப்பது பௌத்தர்களையும் தானே தன் சிகைப் பிடுங்குவது ஜைனர்களையும் குறிக்கிறது. பௌத்தர்கள் காவி உடுத்துவர் ஜைனர்கள் வெள்ளை வஸ்திரம் உடுத்துவர் அவதூத சன்யாசிகளும் இதில் அடக்கம். 
இது அவர்களை பரிகசிக்கக் கூறினதல்ல. . உள்ளத்தில் துறவு இல்லாவிட்டால் எல்லாம் வயிற்றுப்பாட்டுக்கான வேஷம் என்ற அர்த்தத்தில் கூறப்பட்டது. 
சங்கரர் காலத்தில் சிலர் இப்படி இருந்திருப்பார்கள். நம் காலத்திலோ பலர்!

'கர்மேந்த்ரியாணி ஸம்யம்ய மனசா இந்த்ரியை: சரன்
இந்த்ரியார்த்தான் விமூடாத்மா மித்யாசார: இதி உச்யதே'( ப.கீ. 3.6)
கர்மேந்த்ரியங்களை கட்டுப்படுத்தி எவன் மனதால் இந்த்ரிய சுகங்களை நினைத்துக் கொண்டிருக்கிறானோ அவன் மனமயக்கம் கொண்டிருக்கும் ஆஷாடபூதி.

வள்ளுவர் வாக்கும் இந்த ஸ்லோகத்தின் பொருளை பிரதிபலிக்கிறது.
'மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம் பழித்தது ஒழித்துவிடின்.'
ராஜாஜி இந்த ச்லோகத்தைப் பற்றிய விளக்கத்தில் கூறுகிறார், சன்யாசிகள் பலர் காவி உடையை தங்கள் புகழும் மேன்மையும் ஒங்க வேண்டும் என்று அணிகிறார்கள்.எவ்வளவு தீர்க்க தரிசனம்!
. 
அடுத்த ஸ்லோகம் தோடகாச்சர்யருடையதாகக் கருதப்படுகிறது
அங்கம் கலிதம் பலிதம் முண்டம்
தஸன விஹீனம் ஜாதம் துண்டம்;
வ்ருத்தோ யாதி க்ருஹீத்வா தண்டம்−
ததபி ந முஞ்சதி ஆசா பிண்டம்! 
(15)
தளர்ந்தது தேகம், நரைத்தது ரோமம்−
உதிர்ந்தன பற்கள், உருவமே மாற்றம்;
கோல் ஊன்றிச் செல்லும் கிழவன் நெஞ்சிலும்−
ஆல் போல் ஆசை தழைத்தோங்குகிறதே! 
(15)
அங்கம் கலிதம் – வயதானபோது அங்கங்கள் தளர்கின்றன . பலிதம் முண்டம்- தலை மயிர் நரைத்துவிடுகிறது. துண்டம்- வாய், தசனவிஹீனம்- பற்களை இழந்து விடுகிறது. வ்ருத்த: கிழவன், தண்டம் க்ருஹீத்வா –ஊன்றுகோல் கொண்டு , யாதி – செல்கிறான். ததபி- அப்போதும் ஆசாபிண்டம்- ஆசை என்பது , ந முஞ்சதி- விடுவதில்லை.

வ்ருத்தஸ்தாவத் சிந்தா ஸக்த: என்று முன்னமே சங்கரர் கூறியுள்ளபடி, முதுமையில் தான் இழந்த இந்த்ரிய சுகத்தை எல்லாம் நினைத்து ஏங்குவதுதான் இங்கு சொல்லப்படுகிறது. வ்ருத்தாப்ய நிலையை படம் பிடித்துக் காட்டுகிறது இந்த ஸ்லோகம்.பல் போன பின்பு முறுக்கைப் பொடி பண்ணி சாப்பிட ஆசை வருவது போல.

அடுத்தஸ்லோகம் ஹஸ்தாமலகருடையதாக சொல்லப்படுகிறது.

அக்ரே வஹ்னி:, ப்ருஷ்டே பானு:
ராத்ரௌ சுபுக ஸமர்ப்பித ஜானு:
கரதல பிக்ஷஸ்தருதல வாஸ:
ததபி ந முஞ்சதி ஆசாபாச:!

காலைச் சூரியன், கனல் நெருப்பென்றும்−
காலிரண்டு அணைத்து விரட்டுவான் குளிரை;
பிச்சையில் பிழைப்பான்; மரத்தடி படுப்பான்;
இச்சைத் தீயில், இவனுமே அடக்கம்! (16)

அது மட்டும் அல்ல . அக்ரே வஹ்னி: - குளிர் தாங்காமல் நெருப்பின் முன் உட்கார்ந்திருக்கிறான். ப்ருஷ்டேபானு: - பின்னால் சூரியன். ராத்ரௌ – இரவில், சுபுகசமர்பித்த ஜானு: குளிர் தாங்காமல் முழங்கால் மீது முகத்தை வைத்துக்கொண்டு உட்கார்ந்திருக்கிறான். கரதல பிக்ஷ: கையில் பிச்சைப்பாத்திரம். தருதல வாஸ: மரத்தடி வாசம். ததபி – அப்போதும் , ஆசாபாசம்- ஆசாபாசம், ந முஞ்சதி – விடுவதில்லை


No comments:

Post a Comment