Thursday, June 28, 2018

Sandhyavandanam with meanings


#
ஸந்த்யாவந்தன_மந்த்ரங்கள்_அர்த்தத்துடன்

#ஸந்த்யாவந்தன_மந்த்ரங்கள்_பாகம்_15

இப்பகுதியில் காயத்ரி ஜபம் செய்வது பற்றிப் பார்க்கவுள்ளோம்.

காயத்ரீ ஜபம் ||15||

ஓம் | பூர்ப்புவஸ்ஸுவ: | தத்ஸவிதுர்வரேண்யம் | பர்க்கோ தேவஸ்ய தீமஹி | தியோ யோ ந: ப்ரசோதயாத் ||

அர்த்தம்:

(ஓம்) ஓம்காரப் பொருளான (ய:) எந்த பரமாத்மா (ந:) நம்முடைய (திய:) புத்தி, சக்திகளைத் (ப்ரசோதயாத்) தூண்டுகிறாரோ, (தத்) அந்த (ஸவிது:) அனைத்தையும் படைக்கின்றவரான (தேவஸ்ய) பகவானுடைய (வரேண்யம்) சிறந்த (பர்க்க:) ஜ்யோதிஸ்வரூபத்தை (தீமஹி) த்யானிப்போம்.

செய்முறை:

காலையிலும் பகலிலும் கிழக்கு முகமாக நின்று கொண்டும், மாலையில் மேற்கு முகமாக உட்கார்ந்தும் ஜபம் செய்ய வேண்டும். அர்க்யப்ரதானத்திற்குக் கைகளை ஒட்டி வைத்துக் கொள்வது போல் வைத்துக் கொண்டு (ஆவாஹநீ முத்திரை) உள்ளங்கைகள் தன்னை நோக்கியிருக்கும்படி செய்து, மேல் வஸ்த்ரத்தை உபவீதமாகப் போட்டுக் கொண்டு, வஸ்த்ரத்தால் கைகளை மூடிக் கொண்டு, காலையில் முகத்திற்கு நேராகவும், பகலில் மார்புக்கு நேராகவும், மாலையில் நாபிக்கு நேராகவும் ஜபிக்க வேண்டும். உதடு கூட அசையாமல் மனதிலேயே ஐந்து இடங்களில் நிறுத்தி (ஓம் | பூர்ப்புவஸ்ஸுவ: | தத்ஸவிதுர்வரேண்யம் | பர்க்கோ தேவஸ்ய தீமஹி | தியோ யோ ந: ப்ரசோதயாத் || என்று) ஜபிக்க வேண்டும்.

ஜபம் மூவகைப்படும். (1) மானஸீகம்; (2) உபாம்சு; (3) வைகரீ. உபாம்சுவில் உதடு அசையும். வைகரியில் உச்சரிப்பு கேட்கும். இவற்றில் மானஸீகம்தான் சிறந்தது. அப்படிச் செய்ய முடியாத போது உபாம்சுவாகவோ அல்லது வைகரியாகவோ செய்யலாம். ஒவ்வொரு வேளையும் 108 முறை ஜபம் செய்ய வேண்டும். போதுமான அவகாசமில்லையெனில், 54 முறை அல்லது 28 முறையாவது செய்யவும். ஆவ்ருத்தியை எண்ணுவதற்கு, நடுவிரலின் நடுக்கணுவில் தொடங்கி பவித்ர விரலின் நடுக்கணுவழியே கீழிறங்கி, ப்ரதக்ஷிணமாக விரல்களின் ஒவ்வொரு கணுவழியே சுண்டுவிரலின் கீழ்க்கணுவை அடையும்போது 12 முறை ஆகும். இவ்வாறு 9 முறை எண்ணினால் 108 வரும். 108/54/28 மணிகளுள்ள ஜபமாலையையும் உபயோகிக்கலாம். மாலையிலுள்ள மணிகளைத் திருப்புவதில் ஆள்காட்டி விரலை உபயோகிக்கக் கூடாது.

இம்மந்த்ரத்தில் பதங்கள் பத்து; எழுத்துக்கள் 24; எட்டு எழுத்துகளடங்கிய அடிகள் மூன்று. ஜபம் செய்பவர்களை காப்பதால் காயத்ரீ என்றும், ஸூர்யமண்டலத்தில் த்யானிக்கப் படுவதால் ஸாவித்ரீ என்றும் இம்மந்த்ரத்திற்கும் அதன் தேவதைக்கும் பெயர்.

இந்த காயத்ரீ மந்த்ரத்தை குருமுகமாக உபதேசம் பெறுவதற்காகத்தான் உபநயன ஸம்ஸ்காரம். இம்மந்த்ரோபதேசம் எல்லாவற்றினும் பெரிதாதலாலும், எல்லாவற்றையும் தன்னுள் அடக்கிக் கொண்டிருப்பதாலும் இதற்கு ப்ரஹ்மோபதேசம் என்று பெயர்.

மந்த்ர உபதேசத்தில் குருவின் உடலிலிருந்தும் உள்ளத்திலிருந்தும் சிஷ்யன் உடலுக்கும் உள்ளத்துக்கும் தெய்வீக சக்தி பாய்கின்றது. மானிட குருவின் மூலம் ஸநாதனமான தெய்வமே அப்போது பேசுகின்றது. குருவினிடமிருந்து உபதேசம் (தீக்ஷை); உபதேசத்தால் மந்த்ரம்; மந்த்ரத்தால் தேவதை; தேவதையால் ஸித்தி. மந்த்ரம் எழுத்தென்றும், குரு மனிதன் என்றும் அலக்ஷ்யம் செய்தல் கூடாது. அவ்வாறு அலக்ஷ்யம் செய்பவன் தாழ்மையடைவான். மந்த்ரம் தேவதையின் ப்ரதீகமன்று; பெயருமன்று, அது ஸாக்ஷாத் தேவதையே ஆகும். ஜபத்தால் ஸாதகனுடைய ஸாதன ஸக்தி மந்த்ர சக்தியில் ஒன்றுபடுகிறது. அப்போது தேவதா ஸக்தி ஸாதகனை கைதூக்கி விடுகிறது.

காயத்ரி ஜபம் முடிந்தவுடன், ப்ராணாயாமத்துடன் அங்கந்யாஸம் மட்டும் செய்து (அங்கந்யாஸ மந்த்ரத்தில் "ப்ரசோதயாத் அஸ்த்ராய பட்" வரை உச்சரித்து விட்டு) "பூர்ப்புவஸ்ஸுவரோம் இதி திக்விமோக:" என்று சொல்லி, த்யான மந்த்ரத்தால் துதித்து, பஞ்ச பூஜை செய்யவும். த்யான மந்த்ரம் மற்றும் பஞ்சபூஜை மந்த்ரங்கள் #ஸந்த்யாவந்தன_மந்த்ரங்கள்_பாகம்_14-ல் உள்ளது.

#ஸந்த்யாவந்தன_மந்த்ரங்கள்_பாகம்_14 என்ற இணைப்பைச் சொடுக்கினால் அம்மந்த்ரங்களைப் பார்க்கலாம்.அதற்குப்பின் உபஸ்தானம்.

ப்ராணாயாமம்:

ஓம் பூ: | ஓம் புவ: | ஓகும் ஸுவ: | ஓம் மஹ: | ஓம் ஜந: | ஓம் தப: | ஓகும் ஸத்யம் ||

ஓம் தத் ஸவிதுர்-வரேண்யம் பர்க்கோ தேவஸ்ய தீமஹி| தியோ யோ ந: ப்ரசோதயாத் ||

ஓமாபோ ஜ்யோதீ ரஸோऽம்ருதம் ப்ரஹ்ம பூர்ப்புவஸ்ஸுவ-ரோம் ||

இதற்கான அர்த்தம் பாகம்-3-ல் தந்துள்ளதால் மீண்டும் இங்கு தரவில்லை. அர்த்தம் வேண்டுவோர், #ஸந்த்யாவந்தன_மந்த்ரங்கள்_பாகம்_3 என்ற இணைப்பின் மீது சொடுக்கவும்.

அங்கந்யாஸம்:

அங்கந்யாஸம்: - தத்ஸவிது: ஹ்ருதயாய நம: | வரேண்யம் சிரஸே ஸ்வாஹா | பர்க்கோ தேவஸ்ய சிகாயை வஷட் | தீமஹி கவசாய ஹும் | தியோ யோ ந: நேத்ரத்ரயாய வௌஷட் | ப்ரசோதயாத் அஸ்த்ராய பட் || பூர்ப்புவஸ்ஸுவரோம் இதி திக்விமோக: ||

மந்த்ரத்தால் அதிதேவதைகளைக் கட்டுவதால் "திக்பந்த:" என்றும், ஜபம் முடிந்தபின் அவர்களை கட்டிலிருந்து விடுவிப்பதால் "திக்விமோக:" என்றும் உச்சரிக்கிறோம்.

இதற்குப்பின் உபஸ்தானம். இதைப்பற்றி நாம் அடுத்த பகுதியில் பார்க்கலாம்.


No comments:

Post a Comment