Thursday, June 28, 2018

Airavadeswarar temple- thevara vaippu sthalam


சிவாயநம திருச்சிற்றம்பலம்.
பதியும் பணியே பணியாய் அருள்வாய்.
*கோவை.கு.கருப்பசாமி.*
____________________________________
*தினமும் ஒரு தேவார வைப்புத் தல தொடர்:*
(எல்லோரும் தரிசிக்கச் செல்வதற்காக................)
___________________________________
*தேவார வைப்புத் தல தொடர் எண்: 18*

*வைப்புத் தல அருமைகள் பெருமைகள்:*

*🏜ஐராவதேஸ்வரர் திருக்கோயில், இடைக்குளம் (மருத்துவக்குடி)*
______________________________________
இடைக்குளம் தலத்தை தற்போது மருத்துவக்குடி என்று அழைக்கிறார்கள்.

*🌙இறைவன்:* ஐராவதேஸ்வரர்.

*💥இறைவி:* அபிராமி.

*🌊தீர்த்தம்:* சந்திரபுஷ்கரணி.

*📖தேவார பதிகம் உரைத்தவர்:*
அப்பர்.

*🛣இருப்பிடம்:*
மயிலாடுதுறை பேருந்து சாலை வழியில் ஆடுதுறை என்ற ஊர் இருக்கிறது.

இந்த ஆடுதுறையில் இருந்து சுமார் மூன்று கி.மீ. தொலைவில் இன்றைய நாளில் அழைக்கும் மருத்துவக்குடி என்று அறியப்படும் இடைக்குளம் வைப்புத் தலம் உள்ளது.

*📮ஆலய அஞ்சல் முகவரி:*
அருள்மிகு ஐராவதேஸ்வரர் திருக்கோயில்,
மருத்துவக்குடி,
ஆடுதுறை அஞ்சல்,
வழி ஆடுதுறை,
திருவிடைமருதூர் வட்டம்,
தஞ்சாவூர் மாவட்டம்,
PIN - 612 101.

*🍃ஆலயப் பூஜை காலம்:*
தினமும் காலை 8.30 முதல் 11.00 மணி வரையிலும் மாலை 5.30 மணி முதல் இரவு 8.00 மணி வரையிலும் ஆலயம் திறந்திருக்கும்.

இந்த வைப்புத் தலத்தைக் குறிப்பிடும் பதிகப் பாடலில் கூறப்பட்டுள்ள பழையாறு, நாலாறு, தெள்ளாறு, வளைகுளம், தளிக்குளம், திருக்குளம் ஆகியவையும் தேவார வைப்புத் தலங்களாகும்.

இடைக்குளம் வைப்புத் தலத்தைக் குறிப்பிடும் பதிகம்

திருநாவுக்கரசரின் ஆறாம் திருமுறையில், எழுபத்தொன்றாவது பதிகத்தில் பத்தாவது பாடலில் இந்த வைப்புத் தலத்தைப் பற்றிய குறிப்பு இருக்கிறது.

இந்தப் பதிகம் அப்பர் திருப்பூந்துருத்தியில் தங்கியிருந்த போது பாடிய பதிகமாகும்.

🔔நள்ளாறும் பழையாறும் கோட்டாற்றோடு நலம் திகழும் நாலாறும் திருவையாறும் தெள்ளாறும் வளைகுளமும் தளிக்குளமும் நல் இடைக்குளமும் திருக்குளத்தோடு அஞ்சைக்களம் விள்ளாத நெடுங்களம் வேட்களம் நெல்லிக்கா கோலக்கா ஆனைக்கா வியன்கோடிகா கள் ஆர்ந்த கொன்றையான் நின்ற ஆறும் குளம் களம் கா என அனைத்தும் கூறுவோமே.

🙏நள்ளாறு, பழையாறு, கோட்டாறு, நலம் திகழும் நாலாறு, திருவையாறு, தெள்ளாறு, வளைகுளம், தளிக்குளம், நல்ல இடைக்குளம், திருக்குளம், அஞ்சைக்களம், குறையாத சிறப்புடைய நெடுங்களம், வேட்களம், நெல்லிக்கா, கோலக்கா, ஆனைக்கா, பரந்து திகழும் கோடிகா என்றெல்லாம் தேன் நிறைந்த கொன்றைப் பூ மாலை அணிந்த சிவபெருமான் விளங்கும் ஆறு, குளம், களம், கா ஆகிய எல்லாவற்றையும் கூறுவோமே.

*திருநீலக்குடி சப்தஸ்தானம்:*
திருநீலக்குடி சப்தஸ்தானத்தில் திருநீலக்குடி, இலந்துறை, ஏனாதிமங்கலம், திருநாகேஸ்வரம்,
திருபுவனம், திருவிடைமருதூர் மற்றும் மருத்துவக்குடி ஆகிய ஏழூர்த் தலங்கள் அடங்கும்.

*தல அருமை:*
மக்கள் வழக்கில் *மருத்துவக்குடி* என்று வழங்குகிறது.

கெளட தேச பிராமணன் ஒருவன் எள் தானம் வழங்குவதை வழக்கமாகக் கொண்டதால், மேருமலை போல் பாவம் மிகுந்து, வாயு மண்டலம் வரை உயர்ந்து, கரிய நிறம் கொண்டு பிரம்ம ராக்ஷசனானான்.

மிருகம் பட்சிகளைத் தின்று, பின் வாமதேவரையும் பிடித்துத் தின்ன முற்பட்டான்.

முனிவர் விபூதி ருத்திராட்சம் தரித்துக் கொண்டதால், அது அவன்படவும், அவன் உண்மை நிலையை உணர்ந்தான்.

வில்வ வனத்தில் சிவனை நோக்கி பன்னிரண்டு ஆண்டுகள் வரை அவர் கூறியவாறு தவம் செய்தான்.

இதனால், பன்னிரண்டு சிம்ம பலத்தை தன் கைகளில் பெற்றான்.

வாயு மண்டலம் வரை வடிவம் பெற்றதால் மருத்துவாசுரன் பெயரும் பெற்றான்.

அக்னி, யமன், இந்திரன் ஆகியோரை வெல்ல, இந்திரன் பயந்து பூலோகத்தில் இந்தப் பெருமானைச் சரணடைந்தான்.
கைலாய நந்தவனக் காவலன் மாணிபத்திரனை மருத்துவாசுரன் போரில் மார்பில் குத்தினான்.

பின்னர், அகோரமூர்த்தியை பெருமான் அனுப்பி வென்றதால் இத்தலத்திற்கு அவன் பெயர் ஏற்பட்டது.

பூகைலாசம், தக்ஷிண கைலாசம், கதம்பவனம், வில்வாரண்யம், ஐராவதபுரம், மருத்துவர்கரபுரம், ஆதிசேஷபுரம் என்பன இத்தலத்தின் இதர பெயர்களாகும்.

சுயம்பு சுவாமியின் பாணம் வெள்ளை நிறத்துடன் காணப்படுகிறது.

அபிராமி க்ஷேத்திரங்களில் ஆறில் இதுவும் ஒன்று.

இங்கு அருளும் விருச்சிக விநாயகர் விசேஷமானவர்.

அகத்தியர், வாமதேவர், கெளசிகர், காளவர், விஸ்வாமித்திரர், வேதமுனி, கரஸர், காலர், வியாஸர், குத்ஸர், பரத்வாஜர், ஜாபாலி, சந்திரன், பதஞ்சலி, வியாக்ரபாதர், இந்திரன், ஐராவதம், மருத்துவாசுரன், பிரமன், அக்னி, லக்ஷ்மி, ஆதிசேஷன் ஆகியோர்கள் வரங்கள் பெற்ற தலம்.

சந்திர, அக்னி, யம, அகஸ்திய பிரம்ம, காஷ்யப, கெளதம, சேஷ, ம்ருதசஞ்சீவி ஆகிய தீர்த்தங்கள், பிள்ளைப்பேறு, குருத் துரோக நீக்கம், மரண பய நீக்கம், கேட்ட வரம், கிரக தோஷம், சத்யவ்ருதன் பாம்பு விஷம் நீங்கப் பெற்றது போன்ற பலன்கள் கிட்டும்.

ஆலயம் அப்பய்ய தீக்ஷதர் வம்சாவளியில் வந்தவரால் நிர்மாணிக்கப்படுகிறது.

ஊமத்தம்பூவின் சாற்றினை அருந்தி, சிவனிடம் பிறப்பறுக்கும் ஞானம் வேண்டி பாடிய, உன்மத்த பஞ்சக்தி நினைவில் கொள்ளத்தக்கதாகும்.

இவர் கிரஹஸ்தனாக இருந்து பேறு பெற்றவர்.

*சிறப்புகள்:*
இத்தலம் அப்பர் வாக்கில் இடம்பெற்றுள்ள - வைப்புத் தலமாகும்.

பெரிய சிவாலயம் இது. பழைமையானதும்கூட, கற்றளியானது.

நந்தி இருக்கும் இடமானது, நீர் கட்டும் அகழி அமைப்பில் இருக்கிறது.

பிராகாரத்தில் வலம்போது, வரிசையாக நான்கு சிவலிங்க மூர்த்தங்கள் இருக்கின்றன.

மூலவர் சதுர ஆவுடையாராகவும், சற்று கூரான பாணத்துடனும் அருட்காட்சி தருகிறார்.

கோயில் கல்வெட்டில் இறைவன் பெயர் *உய்யக் கொண்டார் வளநாட்டு திரைமூர்நாட்டு திருஇடைக்குளமுடையார்* என்றுள்ளது.

திருச்சிற்றம்பலம்.


No comments:

Post a Comment