உ
சிவாயநம திருச்சிற்றம்பலம்.
பதியும் பணியே பணியாய் அருள்வாய்.
*கோவை.கு.கருப்பசாமி:*
------------------------------------------------------
*📣இத்தல பதிவு தொடர்ந்து நான்கு நாட்களாக தொடர்ந்து வரும். அடியார்கள் கவணமெடுத்து இணைத்து வாசிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.*
-------------------------------------------------------
*தினமும் ஒரு பாடல் பெற்ற தல தரிசனம்:*
(நேரில் சென்று தரிசித்ததைப் போல...............)
--------------------------------------------------------
*தேவாரம் பாடல் பெற்ற தல எண்: 268*
*பாடல் பெற்ற சிவ தல தொடர்:*
*சிவ தல அருமைகள் பெருமைகள்:*
*🏜திருகோணேஸ்வரர் திருக்கோயில், திருகோணமலை:*
---------------------------------------------------------
தேவாரம் பாடல் பெற்ற தலங்களில் ஈழ நாட்டில் அமைந்துள்ள இரண்டாவது தலம் இது.
*🌙இறைவன்:*
திருக்கோணேஸ்வரர்
*💥இறைவி:*
மாதுமையாள்.
*🌴தல மரம்:* கல்லால மரம்.
*🌊தீர்த்தம்:* பாவநாசம்.
*வழிபட்டோர்:* இராவணன் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர்.
தல அருமை:*
உலகெங்கும் பல பிரசித்தி பெற்ற ஆலயங்கள் இருந்தாலும் ஒரு குறிப்பிட்ட காரணத்தினால்ல் வேறு எந்த ஆலயமும் திரிகோண மலையில் உள்ள திருக்கோணேஸ்வரர் ஆலயத்தைப் போல சிறப்பை பெற்று இருக்கவில்லை.
இதற்குக் காரணம் குளக்கோட்ட மன்னன் என்பவனால் ஸ்தாபிக்கப்பட்டதாக கூறப்படும் திருகோணமலையில் உள்ள திருக்கோணேஸ்வரர் இரண்டு ஆலயங்களாக உருவாகி உள்ள நிலையே ஆகும்.
ஆலயம் இரண்டாக உருவாகி உள்ளதா?...ஆச்சர்யமாக இருக்கிறதா?
திருகோணமலையில் உள்ள திருக்கோணேஸ்வரர் ஆலயத்தைப் போலவே அந்த இடத்தின்
அருகில் உள்ளதம்பலகமலம்
எனும் இடத்திலும் இன்னொரு திருக்கோணேஸ்வரர் அமைந்திருந்ததே ஆகும்.
அந்த இரண்டு ஆலயத்திலுமே ஒரே மாதிரியான விழாக்கள், நித்திய பூஜைகள் , அபிஷேகங்கள் போன்றவை நடைபெற்றன.
பண்டைய காலத்தில் ஒவ்வொரு நாட்டை சேர்ந்த மன்னர்களும் பிற நாடுகள் மீது படையெடுத்து வந்து நாட்டை பெரிதாக்கிக் கொண்ட நிலையில் குளக்கோட்டான் மட்டும் இலங்கையில் இருந்த திரிகோணமலைக்கு வந்தது நாட்டைப் பிடிக்கும் ஆசையில் அல்லாது, மாறாக திருக்கோணேஸ்வரர் ஆலயத்தை நிறுவுவதற்காகவே என்பதை அறியும்போது ஆச்சர்யம்தான்.
முன்னொரு காலத்தில் இந்தியாவின் சோழ மண்டலத்தில் மனு நீதியை சேர்ந்த அரசர் ஒருவர் நல்லாட்சி செய்து வந்திருந்தார்.
அவர் பெயர் வரராமதேவர் என்பதாகும். அவர் பெரும் சிவபக்தர். அடிக்கடி அனைத்து இடங்களிலும் உள்ள சிவாலயங்களுக்கு சென்று தரிசனம் செய்து வருபவர்.
மனுநீதி கண்ட சோழன் பரம்பரையில் வந்திருந்த வரராமதேவர் ஒருமுறை மச்சேந்திரபுராணத்தில் கூறப்பட்டு இருந்த கோணேசர் ஆலயத்தின் பெருமை பற்றி படித்து அறிந்தார்.
ஆகவே அந்த ஆலயத்தில் சென்று தரிசனம் செய்ய வேண்டும் என்ற ஆவலால் உந்தப்பட்டு இலங்கைக்கு வந்து திருகோணேசரை தரிசனம் செய்து விட்டு சென்றார்.
ஆலயத்தில் வந்து திருக்கோணேஸ்வரரை வழிபட்டவர், அதன் மீது அதிக பக்தி கொண்டு அடிக்கடி அங்கு வரலானார்.
ஒவ்வொருமுறையும் இங்கு அவர் வந்தபோது அவர் பெரும் செல்வத்தை கொண்டு வந்து அந்த ஆலயத்தில் இருந்த கிணறு ஒன்றில் பாதுகாப்பாக வைத்து விட்டுச் சென்றார்.
இதற்குக் காரணம் எந்த காலத்திலாவது அந்த செல்வத்தைக் கண்டெடுப்பவர்கள் அந்த நிதி உதவியைக் கொண்டு அங்கு ஒரு ஆலயம் அமைக்கட்டும் என்ற ஆசையினால் அவர் அப்படி செய்தார்.
அவரே அந்த நிதியைக் கொண்டு ஆலயத்தை அமைக்க வேண்டியதுதானே? அதைவிடுத்து ஏன் கிணற்றில் கொண்டு நிதியைப் போட்டு வைத்தார்? என் கேள்வி எழுகிறதுதானே.........
அவர் ஆலயத்தை அமைக்க முடியாமல் இருந்ததின் காரணம்....அவர் அங்கு வந்து வழிபட்ட நேரத்தில்
அவருக்கு வாரிசு எதுவும் இக்கவில்லை.
தான் ஒரு ஆலயத்தை அமைக்கத் துவங்கி தனக்கு இறுதி காலம் வந்து விட்டால், இந்த ஆலயப் பணிகள் அப்படியே நின்று விடக் கூடுமே!
மேலும் அந்நிய நாட்டில் இருந்த இந்த இடத்தில்
ஆலயத்தை அமைக்க அந்த நாட்டில் இருந்த மன்னர்களின் ஆதரவும் இல்லை என்றால், ஆலயப் பணிகளை மேற்கொள்ள முடியாது.
ஆலயத்தை பாதுகாக்க தக்க படை பலம் தேவையாக இருக்கும். அந்த நேரத்தில் கலிங்க நாட்டுடன் இணைந்திருந்த அந்தப் பகுதியையும் ஆண்டு வந்த மன்னனோ சோழநாட்டு மன்னர்களுடன் நல்ல உறவு கொள்ளாமல் இருந்தார்கள்.
ஆகவே இதையெல்லாம் கருத்தில் கொண்டே
தனக்குப் பிறகு சோழ நாட்டை ஆளத் தகுதியானவர் வந்தால் மட்டுமே இப்படிப்பட்ட அந்நிய நாட்டில் வந்து ஒரு ஆலயத்தை அமைக்க முடியும் என்று எண்ணி செல்வத்தை கிணற்றில்அங்கு கொண்டு வந்து ரகசியமாக
வைத்தார் .
அந்த காலங்களில் ஆலயம் எனக் கூறப்பட்டவை என்பது இப்போது உள்ள கோபுரத்தை போன்றக் கட்டிட அமைப்பைக் கொண்டவை கிடையாது.
திறந்த வெளிகளில் இருக்கும். பல இடங்களிலும் இருந்த ஆலயம் என்பது அந்த காலங்களில் மேல்கூரை இல்லாமல், கட்டிடங்கள் இல்லாமல் பூமியில் புதைத்து வைக்கப்பட்டு இருந்த சில உருவங்களோடு இருந்த இடங்களாகும்.
அப்படி சுயம்பு விக்ரகங்கள் இருந்த இடங்கள் விசேஷமான சக்தி பெற்று விளங்கும். தேவ லோகத்தினர் அமைத்தவை என்ற பரவலான நம்பிக்கைகளும் உண்டு.
இந்த நிலையைக் கொண்டதே பிரம்மா வடிவமைத்த, வாயு பகவானினால் எடுத்து வந்து வைக்கப்பட்ட தக்ஷிண கைலாய மலையில் அமைந்து இருந்த திருக்கோணேஸ்வரர் ஆலயமும் ஆகும்.
இங்கிருந்த ஆத்மலிங்கத்தை கோணேஸ்வரர் என அழைத்து வணங்கி வந்துள்ளனர்.
அப்போது திறந்த வெளியில் இருந்த ஆத்மலிங்கம் அமைந்திருந்த வனப் பிரதேசத்தையே ஆலயம் என அழைக்கப்பட்டு இருந்திருக்க வேண்டும்.
அதையே வழிபாட்டுத் தலமாக கடவுள்கள், யோகிகள், ரிஷி முனிவர்கள் என அனைவரும் கருதி இங்கு வந்து வழிபட்டார்கள்.
சிவபெருமானே ஆத்மலிங்கமாக அங்கு எழுந்திருந்ததினால் அங்கு வந்து அவரை வணங்கி வழிபட்டனர்.
இதுவே பின்னாளில் ஆலயமாக குளக்கோட்டான் எனும் மன்னனால் அமைக்கப்பட்டது என்கிறார்கள்.
மனுநீதி கண்டசோழ வரராமதேவர் அங்கு கொண்டு வந்து ரகசியமாக வைத்து விட்டுச் சென்று இருந்த அந்த செல்வங்கள் அனைத்தையும் அங்கிருந்த பூத கணங்கள் பாதுகாத்து வந்தன.
இப்படி இருந்த காலத்தில் சோழ மண்டலத்தில் அரசாண்டு வந்த வரராமதேவருக்கு சிவபெருமானின் அருளினால் குளக்கோட்டான் பிறந்தார்.
குளக்கோட்டான் பிறந்ததின் காரணம் சிவபெருமானின் அருளே என முழுமையாக நம்பிய வரராமதேவர் மறைவுக்குப் பின்னர் ஆட்சியை அவர் ஏற்றார், அவருடைய மகனான குளக்கோட்டான்.
ஒருமுறை பூத கணங்கள் மூலம் அவரது தந்தை சேமித்து வைத்திருந்த செல்வத்தைப் பற்றியும், திருக்கோணேஸ்வர சிவலிங்கத்தின் மகிமையும் தெரிந்து கொண்டார்.
இங்கு வந்து திருக்கோணேஸ்வரரை வணங்கலானார். அப்போது அவர் தனது தந்தையார் கிணற்றில் பதுக்கி வைத்து விட்டுச் சென்று இருந்த செல்வத்தை பூத கணங்களின் உதவியுடன் கண்டு பிடித்தார்.
பின், அந்த செல்வத்தைக் கொண்டே தனது தந்தையின் கனவை நிறைவேற்றும் பொருட்டு பிரம்ம லோகத்தில் உள்ளதைப் போன்ற அழகான ஒரு ஆலயத்தை நிர்மாணிக்க ஏற்பாடு செய்தார்.
ஆலயம் ஸ்தாபிக்க முடிவு செய்த உடன் இதற்கென சோழ நாட்டில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட கட்டிட அமைப்பு தொழிலாளர்க் குடும்பங்களையும் வரவழைத்தார்.
அவர்களை இங்கு குடி அமர்த்தினார். தான் ஆலயம் அமைக்க இருந்தது அந்நிய தேசத்தில் என்ற பயமும் இல்லை. அந்த எண்ணமும் அவருக்கு ஏற்படவில்லை.
பொற்குவியல் மூலம் கிடைத்தப் பணத்தைக் கொண்டு பல மாத காலம் பாடுபட்டு கோணேசர் ஆலயத்தில் மஹா மண்டபம், நுழைவு மண்டபம், உயர்ந்த கோபுரங்கள், திருமால் கோட்டம், அன்ன தான சத்திரம், மறைகளை ஓதுவார் மடம் என ஆகியவற்றை பெரிய அளவில் அமைத்தார்.
இத்துடன் அங்கேயே அன்னை உமாதேவிக்கு ஒரு தனி ஆலயத்தையும் உருவாக்கி அதன் பாதுகாப்புக்காக
அதை சுற்றி மதிலையும் கட்டினார்.
மானிடப் பிறவியில் பெறும் பாவங்களை நீக்கிக் கொண்டு இறையருள் பெறப் பாவனாசம் எனும் ஒரு புனித தடாகத்தை அங்கேயே உருவாக்கினார்.
சிவபெருமான் நீராடுவதற்கு என ஒரு தனியான மண்டபத்தையும் அமைத்தார். அத்தனை பக்தி ஈசன் மீது அவருக்கு இருந்தது.
கோணேசர் ஆலயத்தை தரிசிக்க வருகை தரும் முனிவர்கள், துறவிகள், அடியார்கள் போன்றோர்கள் தங்குவதற்கும் பெரும் மண்டபங்களையும் கட்டிடங்களையும் உருவாக்கினார்.
ஆலயத்தை மட்டும் நிறுவாமல் அதை அடுத்து பெரிய நீர்த் தேக்கத்தையும், திரிகோண மலையை தொட்டவாறு இருந்த தம்பலகமலம் பகுதியில் இருந்த வயல்களுக்கு தண்ணீர் தரும் நீர்பாசனத் திட்டத்தையும் அமைக்க எண்ணினார்.
எண்ணியவருக்கு அதை எப்படி செயல்படுத்துவது என்பது விளங்கவில்லை. காரணம் இரண்டு மலைப் பகுதியில் இருந்த இடத்தில் இதை நிறைவேற்ற
அவரிடம் போதிய ஆள்பலம் இல்லை.
இதை எப்படி அமைப்பதென்ற திட்டமும் விளங்கவில்லை. அதுவும் போதாது என்று அந்த நேரத்தில் அவருக்கு ஒரு சிறிய சிக்கல் ஒன்றும் ஏற்பட்டது.
ஆலயம் வடிவமைக்கப்பட்டு வந்திருந்த நேரத்தில் கலிங்க தேசத்தை ஆண்டு வந்த மன்னனின் வாரிசாக பிறந்திருந்த ஆடகசௌந்தரி என்ற பெண், ராஜ்ய பரிபாலனத்தை ஏற்று இருந்தாள்.
அவள் அதிகாரத்தில்தான் திரிகோணமலைப் பகுதியும் இருந்து வந்தது. ஆனால் அந்தப் பிரதேசம் வனப் பகுதியாக யாரும் அதிகம் செல்லாத பகுதியாக இருந்தது.
இதனால் அங்கெல்லாம் அரசுப் படையினர் இருப்பதில்லை. மேலும் இந்து சமயமும் அதிக அளவு அங்கு கால் ஊன்றி இருக்கவில்லை.
இதனால் இராவணன் வந்து வழிபட்ட தலம், ரிஷி முனிவர்கள் வந்து தவம் உள்ள இடம் மற்றும் பிரம்மா அமைத்திருந்த இடம் போன்ற எந்த செய்திகளும் அதிகம் மக்களின் கவனத்தில் இல்லாதிருந்தது.
இந்த இடத்தின் மகிமையை அறிந்திருந்த சொற்ப அளவிலான மக்கள் மட்டும் அங்கு வந்து ரகசியமாக வழிபட்டவாறு இருந்து வந்தனர்.
இப்படி இருக்கையில்தான் அவள் அதிகாரத்தில் இருந்த பகுதியில் அவள் கட்டளையைப் பெறாமல் அந்நிய தேசத்து மன்னன் ஒருவன் வந்து பெரிய ஆலயம் அமைக்கின்றான் என்கிற செய்தி அவளுக்குச் செல்கிறது.
செய்தி கிடைத்து அதைக் கேள்விப்பட்டதும் அவள் உடனே தனது அமைச்சரை பெரும் படையுடன் அனுப்பி அந்த ஆலயத்தை இடித்து தள்ளி விட்டு வருமாறு அனுப்பினாள்.
ஆனால் திரிகோண மலைக்கு வந்த அவளது அமைச்சரோ, தேவலோகத்தைப் போலவே ஜொலித்துக் கொண்டிருந்த அங்கிருந்த ஆலய நிலையைப் பார்த்து பிரமித்துப் போயினர்.
தனது அரசி செய்ய இருந்த தவறை உணர்ந்தார். அந்த தேவலோக ஆலயத்தை இடிப்பதை விட அந்த மன்னனையே தனது அரசிக்கும் கணவராக ஏற்பாடு செய்து விட்டால் நல்லது நடக்கும் என எண்ணம் கொண்டனர்.
நாடும் வளம் பெருகும் அல்லவா என நினைத்தார்கள். இதை மனதில் கொண்டு இரு நாட்டு அரசர், அரசியிடமும் தூது போய், நல்லவற்றை எடுத்துக் கூறி, நியாயத்தை எடுத்துரைத்தனர்.
தேவ காரியத்தை மனதில் கொண்டே எதுவும் செய்ய வேண்டும் எனப் பக்குவமாக எடுத்துரைத்து அவர்களுடைய திருமணம் நடைபெற ஏற்பாடு செய்தார்கள்.
இப்படியாக குளக்கோட்டான் மற்றும் ஆடகசௌந்தரி இருவரின் திருமணமும் நல்ல முறையில் நடைபெற்று இரு
நாடுகளுக்கும் இடையே நல்லுறவும் வளர்ந்தது.
திருமணம் முடிந்ததும் தனது மனைவியிடம் அந்தப் பிரதேசத்தின் வழமையைப் பெருக்க நினைத்துள்ள தனது திட்டத்தை எடுத்துக் கூற அவளும் அதற்கு முழு மனதுடன் ஒத்துழைப்புத் தந்தாள்.
திருக்கோணேஸ்வரர் ஆலயப் பகுதியில் இருந்த பூத கணங்களின் உதவியுடன் மளமளவென காரியங்கள் துவங்கின.
கந்தளாய் எனும் பெயருடைய நீர்தேக்கத்தையும், தம்பலகமலம் பகுதியில் இருந்த வயல்களுக்கு தண்ணீர் தரும் நீர்பாசனத் திட்டத்தையும் சில நாட்களிலேயே தேவ பூதகணங்களின் உதவியுடன் செய்து முடித்து வைத்தார்கள்.
இதனால்தான் இன்றும் தம்பலகமலம் பச்சைப் பசேல் என்ற இயற்கைக் காட்சியுடன் செழிப்பாக உள்ளது.
ஆனால் இப்படியாக மிகவும் கஷ்டப்பட்டு குளக்கோட்டான் நிறுவிய ஆலயத்தை போர்த்துகீசியர்கள் பின்னாளில் வந்து இடித்து நாசப்படுத்தினார்கள்.
இதனால் ஏற்பட்ட
தம்பலகமலம் எனும் இடத்தில் இன்னொரு
திருக்கோணேஸ்வரர் ஆலயம் ஆகும்.
இதைப் பற்றி பின்னர் கூறப்பட்டு உள்ளது. குளக்கோட்டனைப் பற்றி குறிப்பு கைலாச புராணம் எனும் நூலில் உள்ளது.
இதைத் தவிர இங்கு கிடைத்துள்ள பல்வேறு கல்வெட்டுக்களும் அவனது பெருமையைப் பறை சாற்றுகின்றன.
இப்படியாக குளக்கோட்டான் திருக்கோணேஸ்வரர் ஆலயம் அமைத்தப் பின் ஆலய மேற்பார்வைக்காகவும், பூஜை புனஸ்காரங்கள் மற்றும் பிற காரியங்களுக்காகவும் பாதுகாப்புக்குமாக பல இனப் பிரிவினரை பல்வேறு இடங்களிலும் அழைத்து வந்து ஆலயப் பகுதியில் குடி அமர்த்தினார்.
பின்பு, தானும் தனது மனைவியான ஆடகசௌந்தரியுடன் அடிக்கடி இந்த ஆலயத்துக்கு வந்து வணங்கி வழிபட்டுச் சென்றார்.
அவர்கள் திருகோணமலையையே தலை நகரமாகக் கொண்ட திரிகோணமலை ராஜ்ஜியம் எனும் நகரை உருவாக்கிக் கொண்டு அங்கு ஆண்டு வந்தார்கள்.
நாட்டின் வளத்தை நன்கு கவனிக்க வேண்டும் என்பதினால் அந்தப் பகுதியை வடக்கு, கிழக்கு மற்றும் மத்தியப் பகுதி என மூன்றாகப் பிரித்து அதை உப ஆளுநர்களைக் கொண்டு நிர்வாகித்து வரலானார்.
இப்படி அவர் ஏற்படுத்திய மத்தியப் பகுதியில் இருந்ததே இன்னொரு திருக்கோணேஸ்வரர் ஆலயம் அமைந்த தம்பலகமலம் எனும் ஊரும் ஆகும்.
தம்பலகாமம் கிராமத்துள் கால் பதித்ததும், நம் கண்ணில் முதலில் படுவது, பார்க்குமிடமெங்கும் காலத்துக்கும் பசுமை நிறைந்து மரகதக் கம்பளம் விரித்தது போலத் தோற்றமளிக்கும் பச்சை பசேல் என்ற வயல்வெளிகள்தான்.
பூத்துக் குலுங்கும் நெற்கதிர்கள், அதை சுற்றிலுமே தண்ணீர் தேங்கி நிற்கும் பெரும் குளமாகவும் அந்த பிரதேசம் காட்சி தருகிறது.
தான் அழைத்து வந்து குடியேற்றியவர்கள் ஆலய பரிபலனங்களை நெறி முறை தவறாமல் செய்து கொண்டு இருந்ததைக் கண்டு ஆனந்தம் அடைந்தான்.
இவ்விதம் வாழ்ந்து கொண்டு இருந்தபோது ஆடகசௌந்தரி கர்பமுற்று ஒரு நல்ல பிள்ளையைப் பெற்றெடுத்தப் பின், சில காலத்தில் அவள் மரணம் அடைந்து விட்டாள்.
இதனால் குளக்கோட்டான் வருத்தம் அடைந்தாலும் அவன் மனதில் ஒரு பயம் தோன்றியது. தாம் இவ்வளவு கஷ்டப்பட்டு உருவாக்கிய ராஜ்யத்தில் உள்ள ஆலயத்தை தன் காலத்துக்குப் பிறகும் நன்கு பராமரிக்க வேண்டுமே என்ற பயமே அது.
அதனால் தான் சோழ மன்னனாக இருந்தாலும், தனக்கு கீழ் இருந்த பாண்டிய மன்னர்களில் ஒரு இளவரசரை இங்கு வரவழைத்து அவருக்கு பூபாலவன்னிபம் என்ற சிறப்புப் பட்டதைத் தந்தான்.
அவரையும் தன் மகனுடன் சேர்த்து தன் ராஜ்யத்தை பரிபாலனம் செய்ய ஆட்சியில் அமர்த்தியப் பின் தான் உலக வாழ்க்கையில் இருந்து ஒதுங்கிக் கொண்டார்.
ஆன்மீக வாழ்வில் முழுமையாக தன்னை ஈடுபடுத்திக் கொண்டு சில காலம் வாழ்ந்திருந்த அவர் பின்பு மரணத்தைத் தழுவினார்.
ஆனால் இவர் மரணம் அடையவில்லை, மாறாக இறைவனுடன் ஒன்றிக்கலந்து விட்டார் என வாய் மொழியாகக் கூறப்படுகிறது.
பெரும் சிவபக்தராகவும் , தேவர்களுக்கு பிரியமானவராக இருந்தவரும், நல்ல உள்ளம் படைத்தவருமான அவர் ஒருநாள் ஆலயத்துக்குள் சென்று கருவறையில் நுழைந்து கதவை மூடிக் கொண்டாராம்.
இப்படியாக இதற்கு முன்னர் அவர் பல முறை செய்தது உண்டாம். கருவறையை மூடிக் கொண்டு பூஜை செய்தப் பின் வெளியே வருவாராம்.
ஒருநாள் அப்படிப்பட்ட நிலையிலேயே கருவறைக்கு உள்ளே சென்றவர் சிவபெருமானிடம் தன்னை அவர் பாதத்தில் இணைத்துக் கொள்ள வேண்டும் என வேண்டிக் கொண்டாராம்.
வெகு நேரம் ஆகியும் குளக்கோட்டான் வெளியில் வரவில்லையே, எந்த விதமான பூஜை செய்யும் ஓசையும் வரவில்லையே என கவலைக் கொண்டவர்கள் கதவைத் திறந்து பார்த்தபோது, அங்கு குளக்கோட்டான் காணப்படவில்லையாம்.
மாறாக ஈசனார் பாதத்தின் கீழ் புத்தம் புதிய தாமரை மலர் மலர்ந்து இருந்ததைக் கண்டிருக்கிறார்கள்.
இவரை ஆலயத்திலுள்ளேயும், வெளியெங்கேயும் காணவில்லை.
மூடிய கருவறைக்குள் புத்தம் புதிய தாமரை மலரும் திடீர் எனத் தோன்றிய அதிசயத்தையும் கண்டு யாருக்கும் விளங்கவில்லை.
ஆனால் மூத்த பண்டிதர்கள் மூலமே நடந்த உண்மையை அறிந்து கொண்டார்கள்.
குளக்கோட்டான் தேவர்களில் ஒருவராகவே இருந்து மானிட உடலை எடுத்து இந்த ஆலயத்தை நிர்மாணிக்க வந்திருந்தார் என்றும், வந்த காரியம் முடிந்தப் பின் தேவ லோகத்துக்கே சிவன் பாதம் மூலம் சென்று விட்டார் என்றும் அதனால்தான் அவர் உடலை அங்கு காணவில்லை என்றும் ஒரு நம்பிக்கையாக கூறுவர்.
முன்னர் கூறியபடி திரேதா யுகத்தில் ராவணன் இந்த ஆலயப் பகுதியில் வந்திருந்தபோது, மரணம் அடைந்துவிட்ட அவனுடைய தாயாருக்கு கர்மாக்களை அந்தணர் உருவில் இருந்த விஷ்ணுவின் மூலம் செய்தான்.
அப்போது விஷ்ணு பகவான் அவனுக்கு அந்த தலத்தின் பெருமைகளை எடுத்துரைத்துக் கொண்டு இருந்தபோது அங்கு ஏழு இடங்களில் தனது தடியினால் தட்டி ஏழு சுனைகளை எழுப்பினார்.
அதைக் கண்ட ராவணன் வந்துள்ளவர் விஷ்ணு என்பதை அறிந்து கொள்ளாமல் ஒரு அந்தணருக்கு அத்தனை மகிமை உள்ளதா என வியந்திருக்கிறான்.
பாதாளத்தில் இருந்து எழுந்திருந்த அந்த ஏழு சுனைகளையே விஷ்ணு பகவான் உருவாக்கிய கன்னித் தீர்த்தம் என்கிறார்கள்.
இதன் கரையில் இறந்து போன ஆத்மாக்களுக்குப் பிண்டம் இடுவது கங்கையில் பிண்டம் வைப்பதை விட மேலும் சிறப்பானதாகும் என்று கருதப்படுகிறது.
இதற்குக் காரணம் இங்குதான் ராவணனின் தாயாருக்கு ராவணனை பிண்டம் இட வைத்து விஷ்ணு பகவானே அதற்கான கர்மாக்களை ஒரு அந்தணர் உருவில் நடத்தினார் என்பதே.
இந்த ஆலயப் பகுதி முழுவதிலுமே உள்ள அனைத்து கட்டிடங்கள், குளங்கள், மண்டபங்கள் என கட்டி முடிக்கப்பட்ட அனைத்துமே தேவ கணங்களுடன் மனிதர்கள் சேர்ந்து செய்தவை என்பதினால் மேலும் இந்த இடம் சிறப்பு மிக்க ஒன்றாக அமைந்துள்ளன.
இந்த நிலையில் பல ஆயிரம் ஆண்டுகள் கழிந்தன. அப்போது போர்த்துகீசியர் தமது நாட்டை விரிவு படுத்திக் கொள்ளும் நோக்கிலும், தமது மதத்தைப் பரப்பும் நோக்கிலும், இலங்கை மீது படையெடுத்து வந்தார்கள்.
வந்தவர்கள் கண்களில் திருகோணமலைப் பிரதேசத்து ஆலயம் கண்களில் பட்டுவிட இதைக் கண்டு பொறாமைக் கொண்டார்கள்.
பொறாமைக் கொண்ட போர்த்துகீசியர்கள் என்ன செய்தார்கள்?...
*தல அருமை:*
திருக்கோணீஸ்வரர் ஆலயத்தை, முன்னர் திருக்கோணமலை கோணீஸ்வரர் கோவில் என்றுதான் அழைக்கப்பட்டு வந்திருக்கிறது.
இலங்கையின் கிழக்கு கோடியில் உள்ள திருகோணமலையில் சுவாமி பாறை (சுவாமி மலை என்றும் கூறுகிறார்கள்) எனும் மலை உச்சியில் திருகோணமலை பிரதேசத்தைப் பார்த்தவாறு கம்பீரமாக அமைக்கப்பட்டு இருந்த இந்த ஆலயம் 1580 ஆம் ஆண்டில் அமைக்கப்பட்டு இருக்கலாம் என்று தெரிகிறது.
ஆறாம் நூற்றாண்டில் இந்த கோயிலிலே மாபெரும் சிவாலயமாக இருந்துள்ளது என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள்.
சுவாமி மலையில் திருக்கோணீஸ்வரர் ஆலயத்தைத் தவிர இன்னும் இரண்டு ஆலயங்களும் இருந்துள்ளன.
முதல் பராந்தக சோழ மன்னன் என்பவனுக்கு அஞ்சி தன் நாட்டில் இருந்து தப்பி இலங்கைக்கு பாதுகாப்புக்காக வந்திருந்த ஒரு பாண்டிய மன்னன் தம்பலகமத்தில் திருப்பணிகள் செய்ததாக சில வரலாற்றுக் குறிப்புக்கள் உள்ளன.
அதன் பின் இந்தியாவில் திருப்பதியில் உள்ள ஆலய கோபுரக் கலசங்களை தங்கத் தகட்டில் அமைத்த ஜடவர்ம வீரபாண்டியன் என்ற அதே மன்னனே திருக்கோணீஸ்வரர் ஆலய கோபுரக் கலசங்களையும் தங்கம் மற்றும் வெள்ளித் தகட்டினால் அலங்கரித்தான்.
இவரைத் தவிர வேறு பல்லவ மன்னர்களும் இந்த ஆலயத்தின் மேன்மையை அறிந்து கொண்டு இதற்கு நிறைய நிதி உதவி செய்துள்ளார்கள்.
இந்த ஆலயத்தில் ஆயிரம் தூண்கள் இருந்தது என்றும் வானளாவிய அளவில் அது கட்டப்பட்டு இருந்தது என்றும் கூறுவார்.
இந்த நிலையில்தான் மேற்கு நாட்டில் இருந்த போர்த்துகீசியர்கள் வர்த்தகம் செய்ய ஆசைக் கொண்டு கிழக்குப் பகுதிகளுக்கு விஜயம் செல்லத் துவங்கினார்கள்.
இந்த காலகட்டத்தில் கிழக்குப் பகுதிகளில் பல நாடுகளில் அரசியல் ஸ்திரத் தன்மை அற்றே இருந்து வந்தது.
ஆகவே எங்கெல்லாம் அரசியல் ஸ்திரத் தன்மை இல்லாமல் இருந்தனவோ அங்கெல்லாம் இருந்த அந்த நாட்டின் மீது படையெடுத்து அந்த நாடுகளைக் கைப்பற்றிக் கொண்டே வந்தார்கள் போர்த்துக்கீசியர்கள்.
இலங்கை மீதும் படையெடுத்து இலங்கையைக் கைப்பற்றினார்கள்.
அப்போது இந்த திருகோணமலைப் பிரதேசமும் அவர்கள் ஆளுகைக்கு வந்தது. அப்போது இங்கிருந்த கோணேஸ்வரர் ஆலயத்தைக் கண்ட போர்த்துக்கீசியர் பிரமித்து இதன்மீது ஆசை கொண்டார்கள்.
வானளவு உயரமான கோணீஸ்வரர் ஆலயம் அவர்களது கண்களை உறுத்தி விழிக்கவைத்தது.
இது மட்டும் அல்ல, இந்த இடத்துக்கு பெருமளவிலான மக்கள் பல பிரதேசத்திலும் இருந்து வந்து வழிபட்டுக் கொண்டு இருந்ததைக் கண்டும், பல மன்னர்களின் ஆதரவினால் அந்த ஆலயம் பெரும் செல்வம் நிறைந்த ஆலயமாக இருந்ததையும் பார்த்து பொறாமை கொண்டார்கள்.
பெரும் புகழ் பெற்று இருந்த இந்த இடம் இந்து சமயத்தின் கடற்கரை விளக்கு போல அமைந்து இருந்ததையும் கண்டு பொறாமைமேல் பொறாமைக் கொண்டார்கள்.
இந்த ஆலயம் இருக்கும்வரை தம்முடைய சமயம் அங்கு தழைத்தோங்க முடியாது என்பதையும் உணர்ந்து கொண்டார்கள்.
ஆகவே அந்த ஆலயத்தின் செல்வத்தைக் கொள்ளையடித்து அந்த ஆலயத்தை தரை மட்டமாக்க முடிவு செய்து அதற்கான நாளையும் குறிக்க முனைந்தார்கள்.
ஆனால் இதை நேரடியாக செய்ய முடியாத அளவு ஆலயம் பாதுகாப்பாக இருந்தது.
ஆலயத்தின் தினசரி பூஜைகளைத் தவிர பல வருட உற்சவங்களும் நடைபெற்றுக் கொண்டுதான் இருந்தன.
இந்த நிலையில் ஆயிரத்து அறுநூற்று இருபத்து நான்காம் ஆண்டு தமிழ் புத்தாண்டு தினத்தன்று எப்போதும் போல சுவாமியை ஊர்வலமாக நகரில் எடுத்துச் சென்று வலம் வரும் விழா நடந்துகொண்டிருந்தது.
இதற்காக மாதுமை அம்பாள் (பார்வதி தேவி) சமேத திருக்கோணேச்சரப் பெருமான் திருவுலாவாக அடியார்களுடன் கோயிலிலிருந்து கிளம்பி நகருக்கு எழுந்தருக் கொண்டு வந்தார்கள்.
இந்த தருனத்தையே எதிர்பார்த்திருந்த போர்த்துக்கீசியப் படை வீரர்கள் பிராமணர்கள் போல வேடம் தரித்துக் கொண்டு ஆலயத்துக்குள் சென்று, சுவாமி தரிசனம் செய்யப் போவது போல கோயிலுக்குள் புகுந்தார்கள்.
அதாவது திருகோணேச்சரப் பெருமான் திருவுலாவுக்கு எழுந்தருளிய பின்னரே போர்த்துக்கேயர் கோவிலுக்குள் உள் புகுந்து விட்டனர்.
அந்த நேரத்தில் கோயிலின் உள்ளே பூசாரிகள் சிலரும் ஆலய வேலையாள் சிலரும் இருந்தார்கள்.
போர்த்துக்கீசிய தளபதியின் தலைமையில் ஆலயத்துக்கு உள்ளே நுழைந்த படையினர் உள்ளே நுழையும் போது தம்மை எதிர்த்தவர்களை எல்லாம் வாளால் வெட்டிக் கொன்றார்கள்.
கோயிலிலிருந்த தங்கம் வெள்ளி நகைகளையும் விலை மதிப்புமிக்க பிற பொருள்களையும் சூறையாடி எடுத்துக் கொண்டு சென்றனர்.
இதுமட்டும் இல்லாமல் மீண்டும் பீரங்கிகளை கொண்டு வரச்செய்த போர்துக்கீசியப் படையினர் கோயிலை முற்றிலுமாக இடித்து அழித்தனர்.
இதற்கு சில நாட்களுக்கு முன்னர் அங்கு வந்திருந்த ஒரு போர்துக்கீசியப் படை தளபதிகளில் ஈ ஒருவன் அந்த ஆலயக் கட்டுமானத்தின் அழகைக் கண்டு பிரமித்துப் போய் ஒரு ஓவியரை வரவழைத்து அந்த ஆலயத்தின் தரைப் படத்தை வரைந்தெடுத்துக் கொண்டான்.
அந்தப் படம் போர்த்துக்கீசிய நாட்டு கலை அரங்கில் உள்ளதாகவும் ஒரு செய்தி உள்ளது.
அந்த வரை படத்தின் மூலம்தான் போர்த்துகீசியர் அழித்த கோயிலில் ஆயிரங்கால் மண்டபமும் பெரியதொரு தீர்த்தக்கேணியும் பிற மண்டபங்களும் இருந்தன என்பது தெரிய வருகிறது.
இப்படி ஆலயத்தை இடித்துச் சூறையாடப்போகிறார்கள் என்பதை முன்னமே அறிந்து கொண்ட சில சிவ பக்தர்கள், போர்த்துக்கீசிய படையினர் உள்ளே நுழையும் முன்னர் மிகவும் ரகசியமாக வேறு ஒரு காரியத்தை செய்து விட்டிருருந்தார்கள்.
அந்த ஆலயத்தில் உள்ள செல்வங்களை அவர்கள் கொள்ளை அடித்துக் கொண்டு போனாலும் சரி தாம் வணங்கி வரும் கோணேஸ்வரர் விக்கிரகத்தை மட்டும் அவர்கள் எடுத்துச் சென்று விடக் கூடாது என்பதில் தீவீரமாக இருந்தார்கள்.
மாலையில் திருவிழா ஊர்வலத்தில் ஊர்வல மூர்த்திகளை பக்தர்கள் நகர் வலமாக எடுத்துக் கொண்டு சென்று இருந்தபோது அந்த இருட்டை பயன்படுத்திக் கொண்டு ஆலயத்தின் உள்ளே புகுந்திருந்த போர்த்துக்கீசியர் தமது படையினருடன் ஆலயத்தில் சுவர்களை உடைத்தார்கள்.
கண்களில் பட்டதையெல்லாம் உடைத்தார்கள். அப்போது அந்த ஆலயத்தில் ஏழு அல்லது எட்டு திரி விளக்குகள் மட்டுமே ஆலயத்துக்கு ஒளியை தந்து கொண்டு இருந்தது.
அந்த காலங்களில் அத்தனை மின்வசதி கிடையாது. ஆலயத்தில் நுழைந்த போர்த்துக்கீசியர் தூண்கள் பிற வாயில்கள் என அனைத்தையும் உடைக்கத் துவங்கி அதன் பின் அவர்கள் அங்கிருந்த பெட்டிகளில் இருந்த விலை உயர்ந்த சீலைகள், தங்க வெள்ளியிலான தோரணங்கள் மற்றும், தங்க வெள்ளியிலான நகைகள் எடுத்து தனிப் பெட்டிகளில் வைத்துக் கொள்ளத் துவங்கினார்கள்.
அந்த நேரத்தை நன்கு பயன்படுத்திக் கொண்ட சிவனடியார்கள் அந்த கலவரத்தில் உடைக்கப்பட்டு இருந்த பின்புற மதில் சுவர் வழியே உள் புகுந்தார்கள்.
நேராக கர்பக்கிரகத்துக்குச் சென்று அங்கிருந்த மூர்த்தியை அடியோடு பெயர்த்தெடுத்துப் பின் வாயில் வழியே வெளியேறி தம்பலகமத்தை நோக்கி ஓடினார்கள்.
நல்லவேளையாக போர்த்துகீசியர் இருட்டான நேரத்தில் ஆலயத்துக்குள் வந்திருந்ததினால் சிவ பக்தர்களினால் விக்ரகங்களை எடுத்துக் கொண்டு ஓடுவது எளிதாக தெரியவில்லை.
மேலும் அவர்களுக்கு அனைத்துப் பாதையும் அத்துப்படி என்பதினால் அவற்றை எடுத்துக் கொண்டு இருண்ட கானகப்பாதை வழியே ஓடினார்கள்.
இப்படியாக ஒரு பிரிவினர் வீரத்துடன் தமது உயிரையும் லட்சியம் செய்யாமல் ஆலய விக்கிரகங்களை பாதுகாப்பாக எடுத்துச் செல்வதைக் கண்ட மேலும் சிலர் இன்னும் சில விக்ரகங்களை ஆலயத்துக்குள் இருந்து எடுத்துக் கொண்டு இன்னொரு பாதையில் ஓடிக்கொண்டிருந்தார்கள்.
இரண்டு பிரிவுகளாக பிரிந்து ஆலய விக்ரகங்களை பாதுகாப்பதில் ஈடுபட்டிருந்த சிவபக்தர்களுடைய குறிகோள் ஒன்றுதான்.
உயிரைக் கொடுத்தாவது அத்தனை பழைமையான தாம் அத்தனை காலம் வரை வழிபாட்டு வந்திருந்த
விக்ரகங்களை போர்த்துக்கீசியர் கைகளில் சிக்க விடக் கூடாது என்பதற்காகத்தான்.
முதலில் கோணேஸ்வரர் மூர்த்தியை எடுத்துக் கொண்டு தம்பலகமத்தின் மேற்குப் பகுதியை நோக்கி ஓடியவர்கள் அங்கிருந்த உயரமான மலைப் பிரதேசத்தில் ஒரு இடத்தில் அதை கொண்டு போய் மறைத்து வைத்து அங்கேயே அதை வைத்து வழிபடலானார்கள்.
இதுவே முதல் திருகோணேஸ்வரர் ஆலயத்தில் இருந்து வளர்ந்த இரண்டாவது திருகோணேஸ்வரர் ஆலயமாக பின்னர் உருவெடுத்து விளங்கியது.
இதே சமயத்தில் ஆலயத்தில் இருந்து போர்த்துக்கீசியர் கைகளில் சிக்காமல் பாதுகாப்பாக எடுத்து வந்து விட்ட விக்ரகங்களை எடுத்துச் சென்ற இரண்டாவது பிரிவினர் அவற்றை எங்கு பாதுகாப்பாக வைப்பது எனப் புரியாமல் திண்டாடிக் கொண்டு தாம் கொண்டு சென்ற கடவுள் சிலைகளை ஆங்காங்கே இருந்த கிணறுகளில் போட்டு மறைத்து வைத்தனர்.
மேலும் சில சிலைகளை பூமியில் புதைத்து வைத்து விட்டும் ஓடிவிட்டார்கள்.
இந்த சிலைகளே மீண்டும் பல காலம் கழித்து மீண்டும் புதுப்பிக்கப்பட்ட முதல் திருகோணேஸ்வரர் ஆலயத்தில் இன்றும் இருக்கின்றன.
கிணற்றிலும், பூமிக்கு அடியிலும் புதைத்து வைக்கப்பட்டு இருந்த சிலைகளை அங்கிருந்த இடிபாடுகளை அகற்றி ஆலய நிர்மாணப் பணியினை பல காலம் பொறுத்து மேற் கொண்ட பக்தர்கள் கண்டு பிடித்தெடுத்து கோயிலிற் சேர்த்தனர்.
அன்றைக்கு சிவபக்தர்கள், இடிக்கப்பட்ட ஆலயத்தில் இருந்து சிலைகளை எடுத்துச் சென்று இருக்காவிட்டால் புராதான சரித்திர புகழ்ப் பெற்ற இந்த சிலைகள் அனைத்தையும் போர்த்துக்கீசியர்கள் சிதைத்து அழித்திருப்பார்கள்.
அதே நேரத்தில் திருவிழா ஊர்வலம் சென்றிருந்த பக்தர்களுக்கும், ஆலயம் அழிக்கப்பட்ட செய்தி போய்ச் சேர்ந்ததது.
அவர்களும் கொண்டு சென்றிருந்த சிலைகளை திரும்ப ஆலயத்திற்கு கொண்டு வராமல் ஆலயத்துக்கு வெளியிலேயே மறைத்து வைத்துக் கொண்டார்கள் .
போர்த்துக்கேயர் 1624-ல் கோணேசர் ஆலயத்தை அழிக்கும் முன் இந்த ஆலயத்தைக் குறித்த அனைத்து தகவல்களையும் எடுத்து வைத்திருந்தனர்.
போர்த்துக்கீசிய தளபதி என்பவனே ஆலயத்தை அழிக்க முக்கிய காரணமானவன். ஆலயம் அழிக்கப்படும் முன்னர் அவர்கள் எடுத்திருந்த வரைபடங்கள், குறிப்புகள், கட்டிடப் படங்கள் ஆகியன கோணேசர் ஆலயத்தைப் பற்றிய செய்தியை விவரமாக அறிந்து கொள்ள பின்பு பெரிதும் உதவின.
அவனது குறிப்புகளில் அழிக்கப்பட்ட அந்த ஆலயத்தின் பரப்பளவும் கூறப்பட்டு இருந்தன. அவன் எழுதி வைத்திருந்த குறிப்பின்படி அந்த காலத்தில் தற்போது ஆலயம் இருக்கும் பகுதி முழுவதுமே அங்கிருந்த ஆலயத்தின் பகுதியாகவே காணப்பட்டுள்ளது.
போர்த்துக்கீசியரின் பதிவேடுகளிலிருந்து இதை அறிந்து கொள்ள முடிகிறது .
ஆலயத்தை இடித்த போர்த்துக்கீசியர்கள், அதன் கற்களைக் கொண்டே அங்கு தாம் பாதுகாப்பாகத் தங்க ஒரு அரணையும் அமைத்துக் கொண்டார்கள்.
கோயில்களை இடிக்குமுன் அனைத்தையும் தரைப் படமாக வரைந்து வைத்துள்ளான். இந்தப் படங்களில் ஒன்று போர்த்துக்கலிலுள்ள கலைக்கூடத்தில் உள்ளதாகக் கூறுகிறார்கள்.
கோயில் கற்களைக் கொண்டு கோட்டையைக் கட்டும்பொழுது பழைய கல்வெட்டு ஒன்றும் அதன் மகிமைத் தெரியாமலேயே கோட்டை வாசலில் வைத்துக் கட்டப்பட்டிருக்கிறார்கள்.
அந்தக் கல்வெட்டில் கோணேசர் ஆலயம் அன்னியர்களினால் சிதைக்கப்படும் என்றும், அதன் பின் அதைக் கட்டி முடிக்க தமிழ் மன்னர்கள் அங்கு ஆட்சியில் இருக்க மாட்டார்கள் என்றும் ஒரு வாசகம் காணப்படுகிறது.
குளக்கோட்ட மன்னனின் மறைவுக்குப் பிறகு திருமலை ராஜ்யத்தை ஆண்டு வந்த வன்னிய மன்னன் ஒருவருடைய அரச சபையில் அரச பண்டிதர் ஒருவர் இருந்தார்.
அந்த அரச பண்டிதர், இந்த ஆலயத்தின் வருங்காலம் குறித்து மன்னன் வினவிய கேள்விக்கு பதிலாக கோணேசர் ஆலயம் போர்துகீசியர்களினால் அழிக்கப்படும் என்றும், அதை மீண்டும் கட்டி முடிக்க தமிழ் மன்னர்கள் இங்கு ஆட்சியில் இருக்க மாட்டார்கள் என்றும் கூறியிருக்கிறார்.
இந்த செய்தியையே ஆலயத்தின் ஒரு தூணில் இருந்தக் கல்லில் செதுக்கி இருந்தார்கள்.
இதுவே வரும் காலத்தைக் குறித்து பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் கூறப்பட்டு இருந்த தீர்கதரிசனமான ஒரு செய்தியாகும் என்றும் ஆலய மகிமையைக் கூறி வியப்பு தெரிவிக்கிறார்கள்.
போர்த்துக்கீசியர் ஆலயத்தை இடித்தப் பின் சில காலம் ஆனபின்பு........
டச்சுக்காரர்கள் இலங்கை மீது படையெடுத்து வந்து இலங்கையைக் கைப்பற்றி திருகோணமலையையும் கைப்பற்றினார்கள்.
இவர்கள் போர்துக்கீசியரினால் இடிக்கப்பட்டிருந்த கோணேசர் ஆலயத்தில் இடிபடாமல் இருந்த மீதி தூண்களை இடித்துத் தங்களுடைய கோட்டையைக் கட்டிக் கொண்டனர்.
இங்கிருந்த பல பகுதிகளுக்கும் டச்சுப் பெயர்களையும் சூட்டினார்கள். அவர்களும் இந்து மதத்துக்கு எதிரானவர்களாக இருந்ததினால் இங்கு இருந்த ஆலயங்கள் எதற்குமே செல்வதற்கும், வணங்குவதற்கும் தடை விதிக்கப்பட்டிருந்தது.
இதனால் கோணேசர் பக்தர்கள் வேறு வழி இன்றி ரகசியமாக அங்கிருந்த ஆலயப் பகுதிக்கு சென்று வணங்கி வந்தார்கள்.
மேலும் சில காலம் கழித்து இங்கு படையெடுத்து வந்த ஆங்கிலேயர் வசம் திருகோணமலை கோட்டை வீழ்ந்தது.
ஒருவிதத்தில் அது பக்தர்களுக்கு நன்மையாகவே அமைந்து விட்டது.
ஆங்கிலேயர் ஆட்சி செய்த காலத்தில் இடிக்கப்பட்டிருந்த இந்த ஆலயத்துக்கு சென்று வணங்குவதற்கு தடையேதும் செய்யவில்லை.
இடிபட்டு இருந்த இந்த ஆலயத்துக்கு சென்று
தரிசிப்பதை ஆங்கிலேயர் தடுக்காது மக்கள் மன உணர்வுகளுக்கு மதிப்புக் கொடுத்தனர்.
இதன் பின்பு, கோயில் இருந்ததாகக் கருதப்படும் சுவாமி மலையில் இந்துக்கள் வழிபாடு செய்ய அனுமதிக்கப்பட்டனர்.
இவ்வாறான சூழ்நிலையில் உலகப் போர் மூண்டது உலகம் முழுவதும் பல நாடுகள் சுதந்திரம் அடைந்தன.
ஆங்காங்கே ஆட்சி செலுத்தி வந்து கொண்டு இருந்த ஆங்கிலேய அரசாங்கம் தமது ஆட்சியை விலக்கிக் கொண்டு தத்தம் நாட்டிற்கு சென்றார்கள்.
இதன் பின்னணியில் 1948 ஆம் ஆண்டு இலங்கையும் சுதந்திரம் பெற்றது.
போர்த்துகீசியர் ஆலயத்தை அழித்தபோது சிவபக்தர்கள் ஆலயத்தில் இருந்த விக்கிரகங்களை நாலாபக்கமும் எடுத்துச் சென்று புதைத்து வைத்திருந்த சிலைகளை எடுத்தனர்.
பிள்ளையார், சிவன், பார்வதி, விஷ்ணு மற்றும் சிலைகளை பூமியிலிருந்து கிணறு வெட்டும் பொழுது கண்டெடுத்தார்கள்.
பக்தர்கள் ஒன்றிணைந்து மீண்டும் இடிபட்டு அழிக்கப்பட்டு இருந்த அதே ஆலய பகுதியில் கோணேசர் ஆலயத்தை மீண்டும் புனரமைத்தார்கள்.
1963 ஆம் ஆண்டு கும்பாபிஷேகமும் நடத்தினார்கள்.
*தல அருமை:*
இக்கோயில் மூவாயிரத்து முன்னூறு ஆண்டுகளுக்கும் முன்ன பழமை வாய்ந்ததாகும்.
இதற்கு *திரிகூடம்* என்றும் பெயருண்டு.
சுவாமிக்கு விளக்கேற்றுவதற்குப் போதியளவு நெய்யும் திரியும் கிடைப்பதற்கு வழிவகுத்தவர்கள், தாமரைத் தண்டின் நூலெடுத்து திரிசெய்தார்கள். அந்த ஊர் இன்றும் *திரிதாய்* என்று அழைக்கப்பட்டு வருகிறது.
போத்துக்கீசியர் இத்திருக்கோயிலை மிக மிக மோசமாக பாழ்செய்து போயினர்.
சுதந்திரம் பெற்றபின் கோயில் இருந்த நிலத்தில் ஆலயம் அமைக்க முற்பட்டபோது, காசியிலிருந்து சிவலிங்கப்பெருமானை எழுந்தருளச் செய்தார்கள்.
அக்காலத்தில் நகரசபையார் கிணறு தோண்ட முயன்றபோது மூன்றடி ஆழம் வரை தோண்டியபோது, அதிசயிக்கும் வண்ணம் மாதுமையாள் சமேத கோணேசுவரப் பெருமானும், சந்திரசேகரர், பார்வதியார், பிள்ளையார், மற்றும் அஸ்திரதேவர் முதலாய தெய்வத்திருவுருவங்கள் வெளிப்பட்டன.
அவையாவும் அண்மைக் காலத்திலமைக்கப் பெற்ற திருக்கோயிலில் ஆங்காங்கே எழுந்தருளச் செய்யப்பெற்றுள்ளன.
முன்னொரு காலத்திலேயே மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் திருக்கோணமலையிலே உச்சியிலும், இடையிலும், அடிவாரத்திலுமாக மூன்று பெருங்கோயில்கள் இருந்தன என்பார்கள்.
ஆகையாலானென்னமோ, இத்தலத்தை திரிகூடம் என்று அழைத்தார்கள்போல.
கோயிலை பறங்கியர்கள் பாழ்படுத்திய வேளையில், பக்தர்களாகிய பாசுபதவிரதிகளும் பணியாளரும் பதைத்துருகித் திருக்கோயிலிலிருந்த திருவுருவங்களை எடுத்துச் சென்று மாற்றிடங்களிலும் கிணறுகளிலும், குளங்களிலும் பாதுகாப்புக்காக பாதுகாத்து வைத்தார்கள்.
அவர்கள் ஒரு திருவுருவத்தை அயலூரான தம்பலகாமம் என்னும் மருதவளம் நிறைந்த ஊரில் மறைத்து வைத்து மிகவும் இரகசியமாக வழிபாடு செய்து வந்தவர்கள்.
அந்த இடத்தை *ஆதிகோணநாயகர் கோயில்* என வழங்கி வணங்கியிருக்கிறார்கள்.
அது ஆதி கோணநாயகர் ஆலயமாகவே பழைய கோணேசுவரர் ஆலயத்துக்குச் சொந்தமான மானியங்களிற் பெரும்பகுதி தம்பலகாமத்திற்கு சேர்ந்தன.
முதற்பராந்தக சோழனுக்கு அஞ்சிய பாண்டியன், இலங்கையில் பாதுகாப்புக்காக புகுந்திருந்த காலத்தில் தம்பலகாமத்தில் திருப்பணிகள் செய்ததாக வரலாறு கூறுகிறது.
*தல அருமை:*
நாரதர் கலகம் நன்மையில் முடியும் என்பார்கள். அதுவே தென் கயிலையிலும் ஒரு முறை நடந்தது.
திருகோணீஸ்வரர் மலை. இது தட்ஷினக் கைலாயம் என்ற பெயரையும் பெற்று, சிவபெருமான் மற்றும் உமையவள் தங்கும் இடமாகவும் இருந்தது.
ஆனால் இதில் ஒரு குறையும் உள என பிரம்மாவிடம் நாரதர் வினா எழுப்பி.... இதை எப்படி கவனிக்காமல் விட்டீர்கள்?' என கேட்டார்.
பிரம்மாவிற்கு ஒன்றும் புரியவில்லை. அவர் நாரதரிடமே, தான் படைத்த கைலாய மலையில் என்னக் குறை இருக்க முடியும்? என்று கேட்டார்.
அதற்கு நாரதர்,..... என்னைப் படைத்த பிரம்மனே, 'கைலாயம் என்றாலே கங்கை உற்பத்தியாகி ஓடும் இடம்தானே!,
நீங்கள் படைத்த தென் இமய மலையில் கங்கை எங்கே உள்ளது? கங்கை இல்லாத இடம் கைலாயம் ஆகுமா? என்று கேட்டார்.
பிரம்மாவுக்கு தான் செய்திருந்த தவறு இப்போது புரிந்தது. ஆனால் இதை எப்படி சிவபெருமானிடம் சென்று இப்போது கூறுவது? இங்கு கங்கையின் கிளையைக் கொண்டு வர என்ன செய்ய வேண்டும்? என நாரதருடன் யோசனை செய்தார்.
முடிவில், விஷ்ணுவிடம் சென்று இதற்கான யோசனையைக் கேட்டார்கள்.
விஷ்ணு, இவர்களிடம் கவலைப் படாமல் செல்லுங்கள். இதற்கான ஏற்பாடுகளை நான் செய்கிறேன்' என்று கூறி அவர்களை அனுப்பினார்.
பின், கங்காதேவியை அழைத்து அவளிடம் ஒரு காரியத்தை செய்யுமாறு கூறினார்.
பகீரதன் தவத்தினால் ஏற்பட்ட கங்கையின் பிரவாகத்தை அடக்க, அவளை தனது முடியில் முடித்து வைத்துக் கொண்டார் சிவபெருமான் என்றாலும், அவர் முடியில் அவர் வைத்திருந்தது கங்கை நதியின் பிரவாகத்தை மட்டுமே.
ஆனால் சில நேரங்களில் கங்கா தேவியும் அங்கு அவர் முடியில் வந்து தங்குவாள்.
ஆனால் உமையுடன் அவர் தனிமையில் இருக்கும்போது, கங்கா தேவி அங்கிருந்து சென்று விட வேண்டும் என்பது உமையின் கண்டிப்பான கட்டளை.
இதற்குக் காரணம் தனிமையில் சிவபெருமானுடன் உமை இருக்கும்போது அவர்களை அந்தக் அந்த கோலத்தில் வேறு எந்தப் பெண்ணுமே பார்க்கக் கூடாது, அவர்களால் அவர்களுக்கு எந்த தொல்லையும் ஏற்படக் கூடாது என்பதே.
விஷ்ணு செய்திருந்த ஏற்பாட்டின்படி திருகோணீஸ்வரர் மலையில் ஒரு நாள் சிவனும் பார்வதியும் தனிமையில் இருந்தபோது கங்கா தேவியானவள், அவர் முடியில் சென்று அமர்ந்து கொண்டு ஒரு பெண்ணின் குரலில் கலகலவென சிரிப்பது போல சப்தம் செய்தாள்.
இதென்ன சப்தம்? உங்கள் முடியில் இருந்து எதோ சப்தம் வருகிறது' எனப் பார்வதி கேட்க, அப்போது தன் முடியில் கங்கை அமர்ந்திருப்பதை உணர்ந்த சிவனார் 'ஒன்றும் இல்லையே, கங்கை நதியல்லவா பாய்ந்து ஓடிக் கொண்டு இருக்கிறது. அதன் சப்தமே இது ' என்று கூறி விட்டு, பார்வதிக்கு தெரியாதபடி தன் தலையில் இருந்த கங்கா தேவியை நீர் திவலைகளாக்கி அதை தலையில் இருந்து துடைத்து ஏறிய அந்த நீர்த் திவலைகள் சிவனாரின் பாதத்தில் சென்று விழ, நீர் திவலைகளாக இருந்த கங்கா தேவி சிவனார் பாதத்தில் இருந்து வெளிக் கிளம்பி திருகோணீஸ்வரர் மலையில் இருந்து பெரும் பிரவாகமாகப் பாய்ந்து அந்த மலையை சுற்றி ஓடியபடி கடலுடன் கலந்தாள்.
அப்படி அவள் மலையை சுற்றி ஓடியபோது, அவள் உடலில் இருந்து வழிந்த நீர் இன்னும் சில இடங்களில் கிளை நதியாகப் பாய்ந்து ஓடியது.
இப்படியாக அந்த தென் கயிலையிலும் சிவபெருமானின் அருளினால் கங்கை நதி பிறந்தது.
இதைக் கண்டு மகிழ்ந்த நாரத முனிவர் பிரம்மாவுடன் ஓடி வந்து விஷ்ணுவிற்கு நன்றி கூற, அவர்களை அழைத்துக் கொண்டு சிவபெருமானிடம் சென்றார் விஷ்ணு.
விஷ்ணுவும், கங்கா தேவியும் சிவபெருமானையும் உமையும் தரிசித்து நடந்ததைக் கூறி அவர்களது ஆசிகளை வேண்டி நின்றார்கள்.
சிவபெருமானும் புன்னகைப் புரிந்து அவர்களுக்கு ஆசி கூறி அனுப்பியப் பின் தன் பாதத்தில் இருந்து வெளிச்சென்ற அந்த கங்கை நதியில் குளித்தால் ஏற்படும் பலவிதமான புண்ணியங்களை அவர்களுக்கு எடுத்துரைத்தார்.
இமய மலைப் பர்வதத்தில் தன் முடியில் இருந்து வெளியான கங்கை, தென் பகுதியில், அதாவது இமய மலையின் அடிப்பகுதியில் உள்ள தென்பகுதியில், தனது பாதத்தில் இருந்து வெளியேறியதன் மூலம், தனது தலை முதல் பாதம் வரை தன்னை அபிஷேகம் செய்த பலனுடன் கங்கை அங்கு இருக்கிறாள் என்பதினால் அது விசேஷமான கங்கை நதியாக கருதப்படும் என்றும் இதில் ஸ்நானம் செய்பவர்கள் அடைய உள்ள பெரும் பயன்களையும் விலாவாரியாக எடுத்துரைத்தார்.
இந்த கிளை நதியில் உற்பத்தி ஆன ஒன்றுதான் கதிர்காமனில் ஓடுகின்ற மணிக்கங்கை நதியாகும்.
திருகோணீஸ்வரர் மலை உச்சியில் உலக அன்னையான உமைக்கு கங்கையின் சிரிப்பு மிக அதிகமா மன வேதனையை தந்ததினால்.....
திருகோணீஸ்வரர் மலையில் உற்பத்தியான அந்த கங்கையின் பெயர் *மஹா வலி* தந்த கங்கை என்பதை குறிக்கும் வகையில் *மாவலிகங்கை* என்ற பெயரைப் பெற்றுள்ளது என்று சிலர் கருத்துக் கூறுவர்.
இது ஈழநாட்டுத் தலங்கள் இரண்டனுள் ஒன்று இத்தலமானகோணேஸ்வர திருக்கோயில்.
இலங்கைத் தீவின் வடகிழக்கு மாகாணத்தின் தலைநகர் இது. தீவின் கிழக்குக் கரையோரத் துறைமுகப்பட்டினம்.
முன்னொரு காலத்தில், வாயுவுக்கும், ஆதிசேடனுக்கும் யார் வல்லமையுடையவர் என்னும் வாக்கு வாதம் ஏற்பட்டது.
அப்பொழுது சேடன் மேரு மலையைத் தன் உடலினால் பிணித்து நின்றான். வாயு தன்பலத்தினால் மேருச்சிகரங்களுள் மூன்றைப் பெயர்த்து எறிந்தான்.
அவைகளில் ஒன்று திருக்காளத்தியிலும், மற்றொன்று திருச்சிராப்பள்ளியிலும், மூன்றாவதானவது திருக்கோணமலையிலும் வீழ்ந்தன.
இங்ஙனம் வடகயிலைப்பகுதியாகிய மேருமலையின் சிகரங்கள் வீழ்ந்த காரணத்தால் இவை தென்கயிலாயங்கள் எனப்பெற்றன.
இச்செய்தியைச் செவ்வந்திப் புராணம் குறிப்பிடுகின்றது.
*தல அருமை:*
இமயமலையின் ஒரு பகுதியே கோணேஸ்வர பர்வதம் என்ற நம்பிககை காரணமாகக் கோணேஸ்வரத்திற்கு தட்சண கைலாயம் என்ற பெயர் உருவாகியது.
திருமால் மச்சவதாரத்தில் தட்சணகைலாயத்தை அடைந்து தனது மீன் உருவத்தை விட்டு நீங்கி மகேஸ்வரனை வணங்கியதால் மச்சகேஸ்வரம் என்ற பெயரும் உருவாகியதாக தட்சணகைலாய புராணம் எனும் நூலில் குறிப்பு இருக்கிறது.
தமிழ் மொழிப் புலவர்களான திருஞான சம்மந்தர், திருமூலர் மற்றும் அருணகிரிநாதர் போன்றவர்களால் பாடப்பட்ட தலம் திருக்கோணேஸ்வரம் மேன்மையானது.
கி.மு ஆறாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இந்த ஆலயத்தில் உள்ள சிவலிங்கத்தை ராவணன் பூஜித்து வந்ததாக மட்டக்கிளப்பு மானியத்தில் குறிப்புக்கள் உள்ளன.
இதற்கு ஆதாரமாக அனைவரும் குறிப்பிடுவது அங்குள்ள ராவணன் வெட்டு என்ற ஒரு பாறை இடுக்கு ஒன்றைத்தான் .
கோணேஸ்வர மலையில் ஒரு பெரிய பாறைப் பிளவு உள்ளது. அந்த பிளவிற்குக் காரணம் ஒரு விசேஷ லிங்கத்தை அவரது தாயாரின் பூஜைக்காக எடுத்து வருவதற்காக கைலாசத்துக்கே சென்றான்.
சிவபெருமானிடம் இருந்து இருமுறை சிவலிங்கத்தை பெற்றுக் கொண்டு வந்த ராவணன் வரும் வழியில் ஏமார்ந்து போய், தான் எடுத்து வந்த லிங்கத்தை தவற விட்டவர்.
ஆகவே மூன்றாம் முறையாக திருக்கோணேஸ்வரர் சிவாலயத்தில் இருந்து சக்தி வாய்ந்த சிவலிங்கத்தை எடுத்து வரச் சென்ற ராவணன், பூமியில் இருந்த அதை அங்கிருந்து அதை எடுக்க முடியாததால் லிங்கம் இருந்த அந்த இடத்தையோடு பெயர்த்துக் கொண்டு வந்ததான்.
இதனால்தான் மலையில் அந்த பிளவு ஏற்பட்டதாகக் கூறுகிறார்கள்.
ராவணன் பல அறிய வரங்களைப் பெற்று ஆட்சியில் இருந்தவன். மிகப் பெரிய சிவ பக்தனாகவும் இருந்தவன். நீதி தவறாமல் ஆட்சி செய்து வந்தவன் காலம் செல்லச் செல்ல அவனுக்கு கிடைத்திருந்த வரங்களினால், இனி நம்மை வெல்ல யாரும் இல்லை என்ற இறுமாப்பு கொண்டான்.
இதோடு அகங்காரம் பிடித்தவன் ஆயினான். தேவர்களையும் அவ்வபோது துன்புறுத்தி வந்தான்.
ஆனால் இவன் சிவபெருமானின் பூரண அருளைப் பெற்று இருந்ததினால் இவனை யாராலும் ஒன்றும் செய்ய முடியாமல் போனதினால் மனம் புழுகிக் கொண்டு இருந்தார்கள்.
சிவ பூஜையை ராவணன் மட்டும் செய்யவில்லை. ராவணனின் குடும்பமே சிவபக்தர்கள் ஆவார்கள்.
அதிலும் அவனது தாயாரான கைகேசி சிவபெருமானின் பெரிய பக்தையாவாள். அவள் நாள் தவறாமல் சிவபூஜை செய்து வருபவவள்.
இந்த நிலையில் ஒரு நாள் ராவணனின் தாயார் கைகேசி நெல்லைக் குத்தி அரிசியை எடுத்து அதை மாவாக்கிக் கொண்டு இருப்பதைக் கண்டு ஆச்சர்யம் அடைந்தான்.
தாயாரிடம் சென்று இதற்கான காரணத்தைக் கேட்டான்.
அதற்கு அவன் தாயார்...மகனே, நீ இந்த பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து உலகையும் ஆண்டவாறு, உன்னை யாராலும் வெற்றி கொள்ள முடியாதவாறு இருக்கவே நான் தினமும் ஆயிரம் மாவிலான லிங்கங்களை செய்து, அதை கடற்கரைக்கு கொண்டு சென்று அங்கு அவற்றுக்கு பூஜை செய்து விட்டு கடலில் கரைத்து விட்டு வருகிறேன்.
நான் பூஜித்தப் பின் கடலில் கரைக்கும் சிவ லிங்கங்கள் பல்லாயிரக்கணக்கான சிவ கணங்களாக கடலில் வாழ்ந்திருந்து அரணைப் போல உனது ராஜ்யத்தைக் காத்து வரும்.
இந்த ஆயிரம் மாவு லிங்கங்களுக்கு இணையான சில சிவலிங்கங்கள் கைலாயத்தில் சிவபெருமானிடம் உள்ளது. அவற்றில் ஒன்று கிடைத்தாலும் நான் செய்யும் பூஜைக்கு இணையாக இருக்கும்.
ஆனால் அதை யார் கொண்டு வர முடியும் என்பதினால் இப்படி என்னால் முடிந்ததை உனக்காக செய்கிறேன் என்று கூறினாள்.
அதைக் கேட்ட ராவணன் வருத்தம் அடைந்தான். தனக்காக தனது தாயார் செய்யும் பூஜைக்கு தன்னால் ஆன உதவியை செய்ய வேண்டும் என நினைத்தவன்.....
தாயாரிடம்... அம்மா! மகன் நான் இருக்க நீ ஏன் இப்படி கஷ்டப்பட்டுக் கொண்டு மாவிலான சிவலிங்கங்களை செய்து பூஜித்தது வருகிறாய்? நான் கைலாயத்துக்கு சென்று அந்த சிவலிங்கத்தை சிவபெருமானிடம் இருந்து வாங்கிக் கொண்டு வருகிறேன்' என சூளுரைத்து விட்டு கைலாயத்துக்கு சென்றான்.
கைலாயத்துக்கு சென்றவன் அதன் வாயிலில் ஆயிரம் ஆண்டுகள் கடும் தவம் புரிந்தான்.
அவன் தவத்தைக் கண்டு மகிழ்ந்த சிவபெருமான் அவன் முன் தோன்றி அவனுக்கு என்ன வரம் வேண்டும் என்று கேட்டார்.
அவனும் தனது தாயாரின் ஆசையைக் கூற அதைக் கேட்ட சிவபெருமானும் வேறு வழி இன்றி அவனுக்கு ஒரு சிவலிங்கத்தை கொடுத்து, இந்த லிங்கத்தை கைலாயத்திலிருந்து தந்தப் பின் இதை எடுத்துச் செல்லும் வழியில் பூமியில் எங்குமே வைக்கக் கூடாது என்றார் ஈசன்.
ஆயிரம் மாவு லிங்கங்களை செய்து அவன் தாயார் பூஜித்ததை விட, பல்லாயிரக்கணக்கான வருடங்கள், பல கோடி தேவர்களால் ஐந்து வேளை பூஜை செய்து சக்தியூட்டப்பட்ட ஈசனுடைய ஆத்ம லிங்கங்களில் இதுவும் ஒன்று என்பதை உணர்ந்திருந்தான்.
எனவே, எந்த இடத்திலாவது நீ பூமியில் அதை வைத்து விட்டால், இதை திரும்ப எடுக்க முடியாது என்றும் அதன் பின் அதன் சக்தி அதனுள் அங்கேயே அடங்கி இருக்கும் என்று கூறி அனுப்பினார்.
இதை எடுத்துக் கொண்டு நாடு திரும்பத் துவங்கிய ராவணனை நினைத்து தேவர்கள் அஞ்சினார்கள்.
இதை எடுத்துக் கொண்டு சென்று அதை பூஜித்தால் பிறகு ராவணனை யாருமே அடக்க முடியாதே என அஞ்சி நாரதரிடம் சென்று அதை தடுத்து நிறுத்த ஒரு உபாயத்தைக் கேட்டார்கள்.
அவரும் அந்த தேவர்களுடன் சென்று விநாயகரை வேண்டி துதித்தார்கள்.
விநாயகரும் அவர்கள் முன்னால் பிரசன்னமாகி அவர்களுக்கு உதவுவதாகக் கூறினார்.
இதற்கேற்ப அவர் ஒரு வயதான பிராமண உருவில் சென்று ராவணனை வழியில் குறுக்கிட்டு சந்தித்தார்.
சிவ லிங்கத்தை கையிலே வைத்துக் கொண்டு தன் நாட்டை நோக்கி சரியான பாதையில் சென்று கொண்டிருந்த ராவணனின் கவனத்தை சற்றே கலைய வைத்தார் விநாயகர்.
தன்னையே அறியாமல் புத்தி தடுமாறியவன் தான் சென்று கொண்டு இருந்த பாதையை மறந்து வேறு வழியில் செல்லத் துவங்கினான்.
சிவலிங்கத்தை தூக்கிக் கொண்டு வழி தவறி சென்று கொண்டு இருந்த ராவணனுக்கு வழியில் ஒரே தாகம் எடுத்தது.
ஆனாலும் வைராகியமாக சென்று கொண்டு இருந்தபோது வழியில் ஒரு கமண்டலத்தில் தண்ணீருடன் சென்ற பிராமண உருவில் இருந்த விநாயகரை பார்த்தான்.
அவர் அருகில் சென்று தான் வழி தவறி வந்து விட்டதாகவும், தான் இலங்கைக்கு செல்ல வேண்டிய வழியைக் காட்டுமாறும் வேண்டிக் கேட்டுக் கொண்டான் இராவணன்.
பின், தனக்கு தாகமாக உள்ளதினால் குடிக்க சிறிது தண்ணீர் தர முடியுமா என்றும் கேட்டான்.
இதையே எதிர்பார்த்து காத்திருந்த விநாயகர் அவனுக்கு ஒரு கமண்டலம் தண்ணீரைக் கொடுத்தார்.
தனது மடியில் லிங்கத்தை வைத்துக் கொண்டே நீரைக் குடித்தப் பின் அவரிடம் பேசிக் கொண்டே செல்லத் துவங்க அவன் வயிற்றிலே சென்ற நீர் பெரும் ஆறு போல வயிற்றில் பெருக்கெடுக்கத் துவங்க அவனுக்கு சிறுநீர் உபாதை வந்து விட்டது.
ஆகவே தன்னுடன் வந்து கொண்டிருந்த பிராமண உருவில் இருந்த விநாயகரிடம் அந்த சிவ லிங்கத்தை கீழே வைக்காமல் வைத்துக் கொண்டு இருக்குமாறு கூறி விட்டு சிறுநீர் உபாதையை கழிக்கச் சென்றான்.
அவன் வருவதற்குள் விநாயகர் அந்த சிவலிங்கத்தை கீழே வைத்து விட்டு மறைந்து விட்டார்.
விநாயகர் லிங்கத்தை வவைத்த அந்த இடம் பாட்னாவின் அருகில் உள்ள பைத்யநாத் ஆலயம் உள்ள இடமாகும்.
இங்குதான் ராவணன் ஏமாந்து போய் விநாயகரிடம் தந்து, அதை அவர் கீழே வைத்த ஜோதிர் லிங்கங்களில் ஒன்றான வைஜ்யநாத் எனும் லிங்கம் உள்ளது.
சிறுநீர் கழித்து விட்டு வந்தவன் அந்த சிவ லிங்கத்தை எடுக்க முடியாமல் திணறினான்.
தான் எமார்ந்து விட்டதை நினைத்து வருந்தினான். எத்தனைக் கஷ்டப்பட்டு வந்து இப்படி ஏமாந்து விட்டோமே என எண்ணி வருந்தினான்.
மீண்டும் கைலாயத்துக்கு சென்று இன்னொரு சிவலிங்கத்தைப் பெற்றுக் கொண்டு வர தவம் இருக்கலானான்.
மீண்டும் கைலாயத்துக்கு சென்ற இராவவணன் இதன் வாயிலில் அமர்ந்து கொண்டு மேலும் ஆயிரம் ஆண்டுகள் கடும் தவம் புரிந்தான்.
இந்த முறையும் அவன் தவத்தைக் கண்டு மகிழ்ந்த சிவபெருமான் அவன் முன் தோன்றி அவனுக்கு என்ன வரம் வேண்டும் என்று கேட்டார்.
அவனும் நடந்ததைக் கூறி தான் எப்படி ஏமாற்றப்பட்டேன் என்பதையும் கூறியப் பின் மீண்டும் அது போன்ற சிவலிங்கமே தனக்கு வேண்டும் எனக் கேட்க சிவபெருமானும் வேறு வழி இன்றி அவனுக்கு ஒரு சிவலிங்கத்தை கைலாயத்தில் இருந்து கொடுத்தார்.
மீண்டும் முன்னர் கூறியபடியே இதை நீ எடுத்துச் செல்லும் வழியில் பூமியில் எங்குமே வைக்கக் கூடாது என்றும், மீண்டும் தவறாக எந்த இடத்திலாவது அந்த ஆத்ம லிங்கத்தை பூமியில் அதை வைத்து விட்டால் அதை திரும்ப எடுக்க முடியாது என்றும் எச்சரித்து அனுப்பினார்.
லிங்கத்தை எடுத்துக் கொண்டு நாடு திரும்பிவரும் ராவணனை நினைத்து மறுபடியும் தேவர்கள் அஞ்சினார்கள்.
வாங்கிக் கொண்டு வரும் இந்த லிங்கத்தை இராவணன் பூஜித்தால் பிறகு ராவணனை யாருமே அடக்க முடியாதே என அஞ்சியவர்கள் மீண்டும் நாரதரிடம் சென்று இதையும் தடுத்து நிறுத்த ஒரு உபாயத்தைக் கேட்டனர்.
நாரதரும், வினாயகரின் உதவியை நாட, இதனால் இந்த முறை வினாயகர் வேறு வழியைக் கையாள வேண்டி வந்தது.
இந்த முறை இராவணன் லேசில் ஏமாற மாட்டான் என்பதை விநாயகருக்கு நன்றாகத் தெரியும்.
எனவே, விநாயகர் ஒரு ஆட்டு இடையன் போல வேடம் அணிந்து கொண்டு இராவணன் வரும் வழியில், அவனுக்கு முன்னமே போய் அமர்ந்து கொண்டார்.
சிவலிங்கத்தை கையிலே வைத்துக் கொண்டு தன் நாட்டை நோக்கி சரியான பாதையில் சென்று கொண்டிருந்தான் இராவணன்.
இம்முறை வழியில் தாகம் எடுத்தாலும் தண்ணீரைக் குடிக்கக் கூடாது என்ற திடத்துடன் இருந்தான்.
மனதை இருக்காக வைத்துக் கொண்டு அதை அலைபாயாத வண்ணம் சிவா நாமத்தை உச்சயித்தவாரே வைராகியத்துடன் சென்று கொண்டு இருந்தான்.
இப்போது, இராவணன் கர்நாடகாவின் கோகர்ணம் உள்ள இடத்தை அடைந்து விட்டான்.
இன்னும் சற்று தூரம்தான், இலங்கை வந்து விடும். ஆனால் அதற்குள் வினாயகரின் ஏற்பாட்டின்படி வாயு பகவான் திடீர் என அந்த இடத்தில் அதிக குளிரை தோற்றுவிக்கச் செய்தார்.
கோகர்ணத்தை அடைந்த ராவணனுக்கு குளிரினால் தாங்க முடியாத வேதனை ஏற்பட்டு சிறுநீர் பிரச்சனை ஏற்பட்டது.
கையிலோ லிங்கம், அதை எங்கு வைப்பது? ஆனால் இன்னும் ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியாமல் குளிரினால் சிறுநீர் அவதிவேறு ஏற்பட்டு விட்டது.
லிங்கத்தை வைத்துக் கொண்டும் சிறுநீர் கழிப்பது தவறு என்றும், அப்படி செய்தால் இதன் சக்தி விலகி விடும் என்பதையும் இராவணன் தெரிந்து வைத்திருந்தான்.
மேலும், செய்வதறியாது திகைத்தவன், அப்போது அங்கிருந்த ஆட்டு இடையனைப் பார்த்துவிட்டான்.
அவனைக் கூவி அழைத்தான் இராவணன்.
இதுதான் சமயம் என காத்திருந்த விநாயகரான ஆட்டிடையன் இராவணன் முன் வந்தார்.
இந்த லிங்கம் பூஜைக்கான லிங்கம். இதை கீழே வைத்தால் இதற்கு தோஷம் ஏற்பட்டுவிடும். ஆதலால் சற்று நேரம் இதை நீ உன் மடியில் வைத்துக் கொண்டு இருந்தால் அதற்குள் தான் சிறுநீர் உபாதயை விலக்கிக் கொண்டு வந்து விடுகிறேன் எனக் கெஞ்சினான்.
அந்த இடையன் வேடத்தில் இருந்த விநாயகரும் இதற்கு ஒப்புக் கொண்டார்.
இராவணனோ இந்த முறை தான் ஏமாறக் கூடாது என்றெண்ணிக் கொண்டு, பத்தே நிமிடம் அதை வைத்திருக்குமாறும், அதற்குள் சிறுநீர் கழித்து விட்டு வருவதாகவும் கூறிவிட்டுச் சென்றான்.
இராவணனும் நான் வரும்வரை இதை நீ கீழே வைக்கக்கூடாது என சத்தியம் வாங்கிக் கொண்டு சிறுநீர் கழிக்கச் சென்றான்.
இதற்கு, ஆட்டு இடையனான விநாயகரும் கைநீட்டி ராவணனிடமும் ஒரு சத்தியம் வாங்கிக் கொண்டார்.
அந்த சத்தியமானது......
பத்து நிமிடம் ஆன பின், நான் மூன்று முறை தான் குரல் கொடுப்பேன் என்றும் அதற்குள் வராவிடில் இதை கீழே வைத்து விட்டு தான் சென்று விடுவேன் என்றும் கூறினார்.
இராவணனும் இதற்கு ஒப்புக் கொண்டு சத்தியம் செய்துவிட்டுப் சென்றான்.
பத்து நிமிடம் கழிந்தது. இராவணன் வரவில்லை. ஆட்டு இடையன் மூன்று முறை குரல் கொடுத்தார்.
இன்னும் இருபதடி தொலைதூரம் இருக்க,
கொடுத்த சத்தியத்தின்படி அந்த ஆட்டு இடையன் அதை கீழே வைத்து விட்டார்.
இதுவே தற்போது கர்நாடக மாநிலத்தில் உள்ள *கோகர்ணம்* எனும் இடத்தில் உள்ள ஆலயத்தில் வினாயகர் வைத்த ஆத்ம லிங்கம் ஆகும்.
முதல் முறை கிடைத்த லிங்கம் பீகார் மாநிலத்தில் *வைஜ்யநாத்* ஆலாயத்தில் தங்கிவிட்டது.
இப்போது இரண்டாம் முறைக் கிடைத்த லிங்கமும் *கோகர்ண* ஆலயத்தில் தங்கி விட்டது.
இந்த முறையும் காரியம் கெட்டு விட்டதே என ஓடோடி வந்த ராவணன் கோபமுற்று, அந்த ஆட்டு இடையனை வெட்ட தன் கத்தியை உருவியபோது, அந்த ஆட்டு இடையன் ஓடத் துவங்கினான்.
அப்போது விஷ்ணு பகவான் ஒரு வயதானவர் உருவில் அங்கு தோன்றி, நில்….ராவணா …..நில்! தவறு செய்யாதே, நில்…… எனக் கத்தியபடி ஓடி வந்து ராவணனை தடுத்து நிறுத்தினார்.
சத்தியத்தை மீறுவது முறையா என்று கேட்க ராவணன் வெட்கி தலை குனிந்தான்.
இரு முறை தான் எப்படி எல்லாம் ஏமாந்து போனேன் என்பதை விவரமாகக் கூறிவிட்டு, மீண்டும் மூன்றாம் முறையாக கைலாயத்துக்கு சென்று சிவலிங்கத்தைப் பெற்று வர தீர்மானித்து விட்டதாகக் கூறியவுடன் அந்த வயதான மனிதர் அவனை தடுத்து நிறுத்தி நகைத்தவாறு கூறினார்.
இராவணா, இந்த சுலபமான காரியத்துக்கு நீ ஏன் தேவை இல்லாமல் கைலாயத்துக்குப் போக வேண்டும்? உன் ராஜ்யமான இலங்கையின் தென் பகுதியிலேயே பிரரம்மா படைத்து வைத்துள்ள தக்ஷிண கைலாயம் எனும் மலைப் பருவத்தில் ஏராளமான லிங்கங்கள் உள்ளதே! அது உனக்குத் தெரியாதா? அதன் நடுவில் உள்ள மிகப் பெரிய சிவலிங்கம் சிவபெருமானே வந்து ஸ்தாபித்த ஆத்ம லிங்கமாகும்.
அனைத்து லிங்கங்களை விட சிவபெருமானே வந்தமர்ந்துள்ள அதல்லவா மேன்மையான லிங்கம் அது. அதை எடுத்துப் போய் பூஜிப்பதை விடுத்து வேண்டாத காரியத்தை ஏன் செய்கிறாய் என்றார்.
அடாடா…என் ராஜ்யத்திலேயே அந்த ஆத்ம லிங்கம் இருக்கிறதா?, இந்நாள் வரை இது தெரியாமல் போய் விட்டதே! என எண்ணி வருந்திய இராவணன் சற்றும் தாமதிக்காமல் தனது தேரில் ஏறிக் கொண்டு இலங்கையின் தென் பகுதியில் இருந்த தக்ஷிண கைலாயத்தை அடைந்தான்.
அந்த வயதான மனிதர் கூறிய இடத்திலேயே அதி சுந்தரமான சிவலிங்கம் சூரி ஒளியினால் மின்னிக் கொண்டு இருந்ததைக் கண்டான்.
அவன் கண்கள் கூசும் அளவிற்கு அது பளபளப்பாக இருக்க, இதைக் கண்டு ஆனந்தக் கூத்தாடினான்.
இதோ சமுத்திரக் கடலில் குளித்து விட்டு அதை எடுத்துப் போகிறேன் என மனதுக்குள் கூறிக் கொண்டு கடலில் சென்று குளித்து விட்டு வந்தான்.
குளித்து விட்டு வந்தவன் அந்த லிங்கத்தை எடுக்க முயன்றான். ஆனால் பூமியில் இருந்த அதை எடுக்க முடியாமல் திணறினான்.
ஆகவே வேறு வழி இன்றி அதை அந்த பூமியுடன் சேர்த்து பெயர்த்துக் கொண்டு போவது என முடிவு செய்து விட்டு அந்த பூமியை தனது வலிமை மிக்க வாளினால் ஓங்கி வெட்ட அந்த இடத்தில் இருந்த பூமி லிங்கத்துடன் சேர்ந்து பிளக்க , லிங்கத்தை அந்தப் பிளவுடன் சேர்த்து அதை தன் கைகளில் ஏந்திக் கொண்டு நாடு செல்ல முனைந்தான்.
அப்போது....................
இராவணன் அந்த பூமியை வெட்டிய உடனேயே அதைக் கண்டு அஞ்சிய தேவர்கள் மீண்டும் ஓடிச் சென்றனர் நாராயணனிடம்.
தமக்கு ஏற்பட்ட அச்சத்தை தேவர்கள் எடுத்துக் கூற நாராயணரும் உடனே இவர்களுடன் கிளம்பிச் சென்றார் திருகோணேஸ்வரர் ஆலயத்துக்கு.
திருகோணிஸ்வரர் மலையில் உமையுடன் இருந்த சிவபெருமானை சந்தித்தனர்.
இராவணனின் செயலைக் கூறி அவன் அந்த லிங்கத்தை எடுத்துச் சென்று விட்டால், பிறகு அவனை யாராலுமே அடக்க முடியாமல் போய் விடுமே என்று கூற அவர்களுக்கு ஆறுதல் கூறினார் சிவபெருமான்.
அஇந்த நேரத்தில்தான் அவன் பிளந்து எடுத்த பர்வதப் பகுதியுடன் இருந்த சிவலிங்கத்தை தன் கைகளில் ஏந்திக் கொண்டு நாடு செல்லக் கிளம்பினான் இராவணன்.
அவன் பர்வதத்தை தனது கைகளில் தூக்கியவுடன் அந்த மலையை, தன் நுனிக் காலினால் அழுத்தினார் சிவபெருமான்.
அவ்வளவுதான், இராவணன் அருகில் இருந்த தேர் உடைந்து போனது. அவன் இடையில் வைத்திருந்த வாளும் இரண்டாக உடைந்து விழந்தது.
உடைந்து விழுந்த மலையின் அடிப்பகுதியில் அதை தாங்கிக் கொண்டு இருந்த ராவணனின் கைகள் சிக்கிக் கொண்டது.
கைகளை விலக்கிக் கொள்ள பிரயர்த்தனம் செய்தபோது அடிப்பட்ட கைகளில் இருந்து குருதி வெளியேறத் துவங்கியது.
குருதி அதிகாரமாக வெளிவரவும், அப்படியே மயங்கி கடலுக்குள் விழுந்தான் ராவணன்.
அவன் பெயர்த்து எடுத்த மலைப் பகுதியும் சிவலிங்கத்துடன் சேர்ந்து அந்த கடலுக்குள் முழுகி மறைந்தது.
அதைக் கண்ட தேவர்கள் ஆஹா..,ராவணன் மரணம் அடைந்து விட்டான் என்று மகிழ்வு கொண்டு சிவபெருமானுக்கு நன்றி கூறி விட்டு தத்தம் இடங்களுக்கு திரும்பிச் சென்றார்கள்.
ஆனால் கடலில் விழுந்த ராவணனோ மரணம் அடையவில்லை. கடலுக்குள் விழுந்தவன் கடல் நீரினால் மயக்கம் களையப்பட்டான்.
மெல்ல நீந்தி வந்து கடல் ஓரத்தில் விழுந்து அப்படியே நெடுநேரம் மயங்கிக் கிடந்தான்.
அவன் பெற்று இருந்த வரங்களினால் அவன் உயிர் பிரியவில்லை. பல நாட்கள் அப்படியே கிடந்தவன் ஒருநாள் மயக்கம் முற்றிலும் தெளிந்து எழுந்தான்.
மயக்கம் தெளிந்து எழுந்தவன் அங்கும் இங்கும் தான் பெயர்த்து எடுத்த மலைப் பகுதியில் இருந்த சிவலிங்கத்தை தேடினான்.
மலைப் பகுதியும் காணவில்லை, சிவலிங்கமும் கண்களுக்கு தெரியவில்லை. நடந்ததை நினைத்துப் பார்த்தான்.
ஆனால் தனக்கு ஏற்பட்ட நிலைக்கு காரணத்தை அவனால் அறிந்து கொள்ள முடியவில்லை.
ஆகவே மீண்டும் தவறு செய்து சிவலிங்கத்தை இழந்து விட்டோமே என நினைத்து வருந்தியவன் விடா முயற்சியாக மீண்டும் ஒருமுறை சிவபெருமானிடம் இருந்தே நேரடியாக சிவலிங்கத்தைப் பெற்றுக் கொள்ள வேண்டும் எனத் தீர்மானித்தான்.
அங்கேயே தன் தலைகளில் ஒன்றை வெட்டி எடுத்தான். அந்தத் தலையை வீணையின் சுரைப் பகுதியாக வைத்துக் கொண்டான்.
இருபது கைகளில் ஒன்றை வெட்டி எடுத்தான். அதை இசைக்கும் பகுதியாகவும், அதன் நரம்புகளை அறுத்தெடுத்து வீணை நாண்களாகவும் மாட்டி ஒரு வீணையை செய்தான்.
கடற்கரையிலேயே அமர்ந்து கொண்டு சிவபெருமானை துதித்து சாமகான வேதப் பாடலை உரத்தக் குரலில் பாடத் துவங்கினான்.
சிவபெருமான் இசைக்கு மயங்குபவர்தானே!. அதுவும் இனிமையான சாமகான வேதப் பாடல்களில் மனதை பறி கொடுப்பவர்.
கண்களை மூடிக் கொண்டு, ராவணன் வீணையை மீட்டியபடி, மனதை உருக்கும் வகையிலான சிவனார் மீதான பாடல்களை பாடப்பாட இன்னிசையில் மயங்கிய சிவனார் தனது ஒரு கணத்தை அனுப்பி திருகோணிஸ்வரர் ஆலயத்தின் அடிவாரத்தில் இருந்த கடற்கரையில் வெட்டப்பட்ட கை மற்றும் திருகி எடுத்த தலையில் இருந்து ரத்தம் கொட்டிக் கொண்டு இருந்த நிலையிலும் அந்த வலியையும் பொறுத்துக் கொண்டு பாடிக் கொண்டு இருந்த ராவணனை அப்படியே தூக்கி வருமாறு கூறினார்.
சிவகணங்கள் தன்னை மறந்து கண்களை மூடிக் கொண்டு இசைத்துக் கொண்டு இருந்த ராவணனை அப்படியே அந்த இடத்தோடு தூக்கிக் கொண்டு வந்து திருகோணிஸ்வரர் ஆலயத்தின் உள்ளே அமர்ந்திருந்த சிவனார் முன் கிடத்தினார்கள்.
அப்போதுதான் ராவணனுக்கு தன் சுய நினைவே வந்தது. சுயநினைவுக்கு வந்தவன் சிவபெருமானைப் பார்த்தான். அப்படியே சிவன் முன் விழுந்து வணங்கினான்.
அவன் நிலையைக் கண்ட சிவனாரும் அவனுக்கு அருள் புரிய, அவன் மீண்டும் பத்து தலைக் கொண்டவனாகவும், இருபது கைகள் கொண்டவனாகவும் பழைய நிலைக்கு மாறினான்.
மீண்டும் சிவபெருமானையும், உமையையும் கீழே விழுந்து விழுந்து நமஸ்கரிக்க, அவன் கேட்டபடி அவனுக்கு மூன்றாவது ஆத்ம லிங்கத்தை தந்தருளினார்.
அப்போது ஈசன் கூறினார்.... இராவணா, இனிமேலும் என்னால் உனக்கு ஆத்ம லிங்கம் கொடுக்க இயலாது. ஆகவே இதை பத்திரமாகக் கொண்டு சென்று உன் தாயாரிடம் கொடுத்து பூஜை செய்யச் சொல். இதை உன்னால் தூக்க முடியாமல் கீழே வைத்தாலும் ஒன்றும் ஆகாது.
நீயே விரும்பினால் ஒழிய இது பூமியில் புதைந்து போகாது. ஆனால் நீயே அதை விரும்பி இங்கேயே புதைந்து இருக்கட்டும் என கீழே வைத்தால் மட்டுமே அங்கேயே எடுக்க முடியாமல் அங்கேயே இருந்து விடும் இப்படியாகக் கூறியவர் உடைந்து போன வாளுக்கு பதிலாக இன்னொரு வாளையும், உடைந்து போன தேருக்கு பதிலாக இன்னொரு தேரையும் அவனுக்கு தந்தார்.
ஆத்ம லிங்கத்தை பெற்றுக் கொண்ட இராவணன் பெரும் மகிழ்ச்சியுடன் அங்கேயே இன்னும் சில நாட்கள் அமர்ந்து கொண்டு மேலும் சிவ பூஜைகளை செய்து விட்டு இலங்கைக்குக் கிளம்பினான்.
நடந்தது அனைத்தையும் மறைந்து நின்றவாறு நாராயணன் பார்த்துக் கொண்டே இருந்தார்.
இராவணன் இலங்கைக்குப் போகும் முன்னர் அவனை தடுத்து நிறுத்த என்ன வழி செய்யலாம் என யோசனை செய்தார்.
அவருக்கு ஒரு உபாயம் தோன்றியது. அதற்கேற்ப ராவனணன் இலங்கைக்கு கிளம்பிய உடனேயே அவசரம் அவசரமாக ஒரு அந்தணர் உருவில் கடல் கரைக்குச் சென்று, அவனது தேருக்கு அருகிலேயே சென்று அமர்ந்தவாறு சிரார்த்தம் செய்வது போல ஒரு சடங்கை செய்யத் துவங்கினார்.
ஆலயத்தில் இருந்து வெளிவந்த இராவணன் தேரில் ஏறிக்கொள்ள கடற்கரைக்கு வந்தான்.
அங்கு ஒரு அந்தணர் சிரார்த்தம் செய்வதைக் கண்டு, இதென்ன கிளம்பும் நேரத்தில் அபசகுனம் போல இருக்கிறதே!, சரி சிரார்ததைப் பார்த்து விட்டதினால், அந்த தோஷத்தைக் களைந்து கொள்ள கடலில் குளித்து விட்டுப் போய் விடலாம் என எண்ணியவன் கடலில் குளித்தான்.
அந்த அந்தணர் கைகேசி, கைகேசி என்ற பெயரைக் கூறி சிரார்த்தம் செய்து கொண்டு இருந்ததைக் கண்டு இராவணன் துணுக்குற்றான்.
அந்த அந்தணர் அவன் தேர் இருந்த இடத்தின் அருகில் காரியங்களை செய்து கொண்டு இருந்ததினால் அவர் காரியங்களை முடிக்கும் வரை அவன் அங்கேயே காத்திருந்தான்.
ஆனாலும் மனதில் இருந்த சந்தேகம் மறையவில்லை. காரியம் முடிந்து கிளம்பிய அந்தணர் அருகில் சென்று ராவணன் கேட்டான்.......
அந்தணரே, நீங்கள் யாருக்காக இங்கு இறுதிக் காரியங்களை செய்தீர்கள்…இடை இடையே கைகேசி, கைகேசி என்ற பெயரைக் உச்சரித்தீர்களே! அந்த கைகேசி யார்? என்றார்.
இதையே எதிர்பார்த்துக் காத்திருந்த அந்தணர் உருவில் இருந்த விஷ்ணு கூறினார்.......
ஐயா, நான் பல இடங்களுக்கும் சென்று சிவ தர்சனங்களை செய்து கொண்டு இருக்கிறேன். இப்போது திருகோனீஸ்வரர் ஆலய மகிமையைக் கேள்விப்பட்டு இலங்கை வழியாக இங்கு வந்து கொண்டு இருந்தேன்.
இங்கு யாரோ ராவணன் எனும் ஒரு மன்னனாம், அவனது தாயாரான கைகேசி என்பவர் அவரது மகன் ராவணன் கடலில் விழுந்து இறந்து விட்டான் என கேள்விப்பட்டு அப்படியே மயக்கம் அடைந்து விழுந்து மரணம் அடைந்து விட்டாளாம்.
அவளுக்கு திதிகளை செய்ய அவளுடைய பிள்ளை இல்லை என்பதினால் திருகோனீஸ்வரர்கடலில் திதி செய்வது பெரும் விசேஷம் என்றும், அங்கு சென்று அதை செய்தால் அவளது ஆத்மா நேரடியாக சொர்கத்துக்குப் போகும் என்று நினைத்த அவளது உறவினர்கள் நினைத்தனர்.
திருகோனீஸ்வரர் ஆலயத்துக்கு வந்து கொண்டு இருந்த என்னிடம் அவளுக்கு திதி செய்யுமாறு கூறிவிட்டு அதற்கான தட்ஷணயையும் எனக்குத் தந்தனுப்பினார்கள்.
ஆகவேதான் அவளுக்காக இதை இங்கு செய்தேன் என்று கூறவும் அதைக் கேட்ட இராவணன் விக்கி விக்கி அழத் துவங்கினான்.
அவரை தேற்றிய அந்தணர் அவன் அழுவதற்கான காரணத்தைக் கேட்டார்.
இராவணனும் அவர் திதி செய்தது அவருடைய தாயாருக்குத்தான் என்று கூறிவிட்டு, தான் யார் என்பதையும், தன்னைப் பற்றியும் விவரமாக எடுத்துரைத்தார்.
பின் எவளுக்காக தான் அத்தனைக் கஷ்டப்பட்டு அந்த சிவலிங்கத்தை எடுத்துப் போக முயன்றேனோ, அவளே இல்லை என்ற பின், அதை வைத்துக் கொண்டு என்ன செய்வது எனக் கூறி அழுதார்.
உடனே அந்தணர் உருவில் இருந்த விஷ்ணுவும் அவனுக்காக பரிதாபப்படுவது போல பாசாங்கு செய்து பின்....
இராவணா, நீதான் கைகேசியின் மகன் என்பது தெரிந்து நான் மன ஆறுதல் அடைகிறேன். உன் தாயார் மீது உனக்குள்ள பாசமும், உன் தாயாருக்கு உன் மீது உள்ள பாசமும் இதில் இருந்து தெரியவில்லையா?
நான் அவளுக்கு திதி கொடுக்க வந்த இடத்தில் நீயும் இருந்து அதைப் பார்த்துள்ளாய். போகட்டும், நல்லதே நடந்துள்ளது.
நீ இந்த திருகோனீஸ்வரர் மலையின் மகத்துவத்தை அறியவில்லை என்று நினைக்கிறேன்.
குபேரன், அதாவது உன்னுடைய தம்பி முதல் அனைத்து தேவர்களும் இங்கு வந்து சிவபெருமானை வேண்டிக் கொண்டு யாகங்கள் செய்த இடம்.
இந்த ஆலயத்தின் அருகில் உள்ள கடலில் வந்து காரியங்களை செய்தால் இறந்தவர்கள் மோட்ஷம் அடைவார்கள். அதற்குக் காரணம் சிவபெருமானும், உமையும் இங்கே தங்கி இருப்பதினால் அந்த அருள் அவர்களது ஆத்மாக்களுக்குக் கிடைக்கிறது.
மேலும் இங்கு வந்து தவம் செய்தாலோ, பூஜைகள் செய்தாலோ அதை விடப் பெரிய புண்ணியம் வேறு எங்கு செய்தாலும் யாருக்கும் கிடைக்காது.
இங்கு பல யோகிகளும் முனிவர்களும் தவத்தில் இருக்கிறார்கள். இந்த மலையை சுற்றி பைரவர்களும், காளி தேவியும் காவலுக்கு உள்ளார்கள்.
இந்த மலையை சுற்றித்தான் சிவபெருமானின் மகனான கதிர்காமரும் தனது மனைவியோடு தங்கி இருக்கிறார்.
அகத்திய முனிவர் போன்ற பெரும் முனிவர்களும் இங்கு வந்து சிவபெருமானை வணங்கி உள்ளார்கள்.
சிவபெருமானை தரிசிக்க பிரம்மாவும், விஷ்ணுவும் இங்கு அடிக்கடி வருவதுண்டு. இப்படிப்பட்ட சிறந்த இடத்தில் உன் தாயாருக்கு இறுதிக் கிரியை நடத்த பேறு பெற்றது உன் அதிருஷ்டமே.
எந்த தாயாருக்காக நீ சிவலிங்கத்தை எடுத்துச் செல்கிறாயோ, அவளே இல்லை எனும்போது, அவளுக்கு கிரியை நடந்த இடத்தின் அருகில் அவள் சார்ப்பில் இதை இந்த ஆலயத்துக்கே தானம் செய்து விட்டு அவளுக்காக இறைவனை வணங்குவதே அவளுக்கு நீ செய்யும் மரியாதை ஆகும் ' என்று கூறினார்.
அவர் கூறியதை எல்லாம் கேட்ட இராவணன் உயிருடன் இல்லாத தாயாருக்காக இதை ஏன் கொண்டு செல்ல வேண்டும், அந்தணர் கூறியதே சரியானதாகும் என்று எண்ணிக் கொண்டு அதை அந்த அந்தணர் உருவில் இருந்த விஷ்ணுவிடம் ' அந்தணரே, நீர் கூறியதே சரியான வழி ஆகும்.
உம்முடைய அறிவுரையை நான் பரிபூரணமாக ஏற்றுக் கொள்கிறேன். இந்தாருங்கள். இதை என்ன செய்ய வேண்டுமோ அதன்படி என் தாயாரின் ஆத்மா சாந்தி அடைய நீங்கள் செய்யவும் என்று கூறிவிட்டு அதை அவரிடம் கொடுக்க அவரும் அதை திருகோனீஸ்வரர் மலையின் வடக்கு திக்கில் ஒரு இடத்தில் பிரதிஷ்டை செய்து விட்டு, மீண்டும் அவனை அழைத்துக் கொண்டு போய் அவன் கையினாலேயே எள்ளும் தண்ணீரும் விட்டு தர்ப்பணம் செய்து வைத்து ஆலயத்துக்கு அழைத்துச் சென்று அவனை தானங்களை செய்யுமாறு கூறினார்.
இராவணனும் தனது தேரில் வைத்திருந்த பொருட்களை எல்லாம் எடுத்துக் கொண்டு போய் ஆலயத்துக்குள் இருந்த அனைத்து அந்தணர்களுக்கும் தானம் செய்தான்.
பாவம் அவனுக்கு அப்போது தெரியாது அங்கிருந்த அனைத்து அந்தணர்களும் விஷ்ணுவின் ஆலோசனைப் படி பல்வேறு அந்தணர்கள் வடிவில் வந்திருந்த பல்வேறு கடவுள்கள் என்பது.
ஆனாலும் இராவணன் உண்மையில் மிகப் பெரிய சிவபக்தன் என்பதினால் அவன் கொடுத்த தானத்தைப் பெற கடவுள்களே அந்தணர் உருவில் வந்திருந்தது அவன் பக்திக்கு சிறந்த எடுத்துக் காட்டாகவே இருந்தது.
அதன் பின் இராவணன் அந்த அந்தணர் கூறியபடி ஆலயத்தின் மூன்று திசைகளிலும் மூன்று சிவலிங்கங்களை பிரதிஷ்டை செய்து விட்டு அங்கிருந்து கிளம்பி தன் நாட்டை அடைந்தான்.
உண்மையில் அவன் இல்லாத நேரத்தில் அங்கு கைகேசி மரணம் அடைந்துதான் இருந்தாள். ஆனால் அதற்குக் காரணம் சிவலிங்கத்தை தனக்காக கொண்டுவர கைலைக்கு சென்ற ராவணன் ஆயிரமாயிரம் வருடங்களாகியும் திரும்பி வரவில்லையே என்ற ஏக்கத்தில் அவள் தன்னைத் தானே வருத்திக் கொண்டு ராவணன் நல்லபடி திரும்பி வர வேண்டும் என்ற விரதம் இருந்து உயிர் துறந்து இருந்துள்ளாள் என்பதும் யாருக்கும் தெரியாது.
அவளுக்கு, ராவணனுக்கு ஏற்பட்ட எந்த சம்பவமும் தெரியாது. இப்படியாக ராவணன் அதிபலசாலியாக யாருமே வெல்ல முடியாதவனாக இருக்க இருந்த நிலையை வினாயகரும், விஷ்ணுவும் தந்திரமாக முறியடித்து, அவனுக்கு சிவபெருமான் கொடுத்திருந்த ஆத்மலிங்கங்களை எடுத்துச் செல்ல முடியாமல் தடுத்து நிறுத்தினார்கள்.
ஆறு நாள் பதிவையும் இணைத்து வாசிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.*
-------------------------------------------------------
*தினமும் ஒரு பாடல் பெற்ற தல தரிசனம்:*
(நேரில் சென்று தரிசித்ததைப் போல...............)
--------------------------------------------------------
*தேவாரம் பாடல் பெற்ற தல எண்: 269*
*பாடல் பெற்ற சிவ தல தொடர்:*
*சிவ தல அருமைகள் பெருமைகள்:*
*🏜திருகோணேஸ்வரர் திருக்கோயில், திருகோணமலை:*
---------------------------------------------------------
தேவாரம் பாடல் பெற்ற தலங்களில் ஈழ நாட்டில் அமைந்துள்ள இரண்டாவது தலம் இது.
*🌙இறைவன்:*
திருக்கோணேஸ்வரர்
*💥இறைவி:*
மாதுமையாள்.
*🌴தல மரம்:* கல்லால மரம்.
*🌊தீர்த்தம்:* பாவநாசம்.
*தல அருமை:*
போர்த்துகீசியர்கள் கோணேஸ்வரர் ஆலயத்தை இடித்து விட்டுச் சென்றபோது அங்கிருந்த பக்தர்கள் மூல மூர்த்தியை இரவோடு இரவாக எடுத்துக் கொண்டு தப்பிச் சென்று தம்பலகமத்தில் இருந்த கழனிமலை என்ற ஒரு ஒரு மலை உச்சியில் வைத்து ரகசியமாக வழிபட்டார்கள்.
அதன் பின் அந்த பக்தர்களும் மரணம் அடைந்து விட்டபின் இந்த ஆலயம் இருந்த இடம் யாருக்குமே தெரியாமல் இருந்தது.
பல காலம் கழித்து இந்த ஆலயம் இருந்த இடத்தைக் கண்டு பிடிக்க பலரும் பெரும் அளவிலான முயற்சி செய்து ஆலயம் இருந்ததாக கூறப்பட்ட மலை சிகரத்தை அதுவும் வெகு தொலைவில் இருந்து மட்டுமே கண்டு பிடித்தார்கள்.
ஆனால் எவராலும் அந்த ஆலயத்தைக் கண்டு பிடிக்கவே முடியவில்லை.
இதற்குக் காரணம் அந்த மலை உச்சிக்குப் ஏறிப் போவதும் மிகக் கடினம் என்பதே.
பாதையும் இல்லாமல் இருந்தது ஒரு காரணம். ஆகவே இந்த ஆலயத்தைக் கண்டு பிடிக்கும் முயற்சி செய்யாது விட்டிருந்தார்கள்.
இப்படிப்பட்ட காலத்தில்தான் ஒரு சிவபக்தருக்கு ஒரு அதிசய அனுபவம் அந்த காட்டுப் பிரதேசத்தில் காட்டு மான் வேட்டை ஆடச் சென்றபோது நேரிட்டது.
இந்த சம்பவம் சுமார் முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் ஆத்மஜோதி என்ற ஒரு புத்தகத்தில் கழனி மலையில் நடந்த அற்புதம் என்ற தலைப்பில் வெளியிடப்பட்டு இருந்தது.
மயில்வாகனார் எனும் ஒரு சிவபக்தர் ஒருநாள் மதியம் தனது நண்பர்களுடைய வற்புறுத்தலின் காரணமாக அந்த அடர்ந்த வனத்துக்கு வேட்டை ஆடச் சென்று இருந்தார்.
அடர்ந்த காட்டு மத்தியில் வழியையும், நண்பர்களையும் தவற விட்டு விட்டு எங்கோ சென்று விட்டார்.
எங்கு சென்று விட்டோம் என்பது அவருக்கு தெரியவில்லை. அவர் எங்கோ சென்று விட்டிருந்ததும் வேட்டையில் மும்முரமாக இருந்த அவருடைய நண்பர்களுக்கும் தெரியவில்லை.
இதனால் மயில்வாகனனார் எத்தனைக் குரல் எழுப்பியும் அவரால் அவர் நண்பர்களையோ அல்லது வேட்டை நாயையோ அருகில் அழைக்க முடியவில்லை.
இருட்டத் துவங்கியது. பயமாகி விட்டது அவருக்கு. ஆங்காங்கே காட்டு விலங்குகளின் ஓசையும் பயத்தை அதிகமானது. என்ன செய்வது என யோசித்தார்.
உயரமான மரத்தில் ஏறி அமர்ந்து கொண்டார். பசியும் வயிற்றைக் கிள்ளத் துவங்கியது. நாடு ஜாமம் ஆகியிருந்த நேரம்.
பயத்தினால் சிவபெருமானின் நாமத்தை உச்சரித்தபடியே மரத்தின் மீது அமர்ந்திருந்தவர் தன்னை மறந்து கண்மூடி தூங்கிப் போனார்.
அப்படியே மரத்தின் மீது அமர்ந்து இருந்தவர் திடீர் என மத்தள ஓசையைக் கேட்டு முழித்தார். தூரத்தில் சிலர் மத்தளத்தை அடித்தவாறும், கையில் விளக்குகளுடன் அந்த மரத்தின் பக்கமாக வந்து கொண்டு இருந்தார்கள்.
அவருக்கு சற்று உயிர் வந்தது. அவர்களை உதவி கேட்டு தன் ஊருக்கு செல்லலாம் என நினைத்தவாறு அந்த ஊர்வலம் மரத்தின் அருகில் வந்ததும் அவசரம் அவசரமாக கீழே இறங்கினான்.
கீழே இறங்கியவன் அதிசயித்து நின்றான். அந்த மனிதர்கள் பொன் மேனியுடன் இருந்தார்கள். யாரும் யாருடனும் பேசிக் கொள்ளவில்லை.
மெளனமாக எதோ உச்சரித்தபடியே நடந்து கொண்டு இருந்தார்கள். அவர்களிடம் பேச்சுக் கொடுக்க மயில்வாகனனார் முயன்றாலும் அவர்கள் அவரை லட்சியமே செய்யாமல் நடந்து கொண்டு இருந்தார்கள்.
ஆகவே வேறு வழி இன்றி எங்குதான் செல்கிறார்கள் பார்க்கலாம் என்று நினைத்துக் கொண்டு அவர்களை பின் தொடர்ந்து சென்றான்.
அவர்கள் அனைவரும் காட்டின் மத்தியில் அமைந்து இருந்த ஒரு ஆலயத்தில் நுழைந்தார்கள். அவனும் அதில் நுழைந்தான்.
என்னே அவர் கண்ட அந்தக் காட்சி!! ஆலயத்தில் இருந்த சிவலிங்கத்தை பூஜித்துக் கொண்டு இருந்தார் ஒருவர்.
அனைவரும் அந்த பூஜையில் பக்திபூர்வமாக கலந்து கொண்டார்கள். மயில்வாகனனாரும் அந்த பூஜையில் கலந்து கொண்டார்.
பல மணிநேரம் பூஜை நடந்து முடிந்தது. பூஜை முடிந்ததும் பூஜை செய்தவர் அனைவருக்கும் திருநீறு, சந்தனம் என பிரசாதத்தை தந்தப் பின் அன்னப் பிரசாதம் தந்தார்கள்.
பசியால் துடித்தவர் அந்த அன்னப் பிரசாதத்தை அதிகமாகவே பெற்றுக் கொண்டு மறைவிடத்தில் சென்று அமர்ந்து கொண்டு சாப்பிட்டார்.
சாப்பிட்டு முடித்தப் பின், அயர்ச்சியினால் மீண்டும் தன்னை மறந்து அங்கேயே உறங்கி விட்டார்.
காலை விடிந்ததும் திடீர் என கண் விழித்து எழுந்தார். எழுந்தவர் அந்த ஆலயத்தில் முன் இரவில் தான் பார்த்த யாரையுமே காணாமல் தான் மட்டுமே இருப்பதைக் கண்டு திகைத்தார்.
தீபம் மட்டும் ஆலயத்தில் எரிந்து கொண்டு இருந்தது.
பயந்து போய் வெளியில் ஓடி வந்தவர், அங்கும் யாரையும் காணாமல் திகைத்தார்.
நல்ல வேளையாக முதல் நாள் இரவில் தனக்கு பிரசாதம் கொடுத்தவரிடம் தனது நிலையை சுருக்கமாகக் கூறி திரும்பிச் செல்லும் வழியைக் கேட்டபோது அவருக்கு செய்கை மூலம் மட்டுமே அவர் செல்ல வேண்டிய பாதையை காட்டினார்.
ஆகவே நன்கு விடிந்ததும், பூஜை செய்த அர்ச்சகர் கூறிய வழியில் செல்லத் துவங்கினார். ஆனால் தான் கண்ட அந்த ஆனந்தமான காட்சியையும், ஆலயத்தையும் குறித்து அனைவருக்கும் காட்ட வேண்டும் என நினைத்து சென்றார்.
திரும்பிப் போகும்போது பாதையை அடையாளம் காட்டும் விதமாக இருக்கட்டும் என மரக் கிளைகளை உடைத்து அதில் இருந்த பச்சை இலைகளுடன் கூடிய கிளைகளை பத்து அடிக்கு ஒன்றாக பூமியில் பாதை நெடுங்கிலும் நட்டுக் கொண்டே சென்றார்.
அவர் சென்று கொண்டிருந்த பாதை எந்த சிக்கலும் இல்லாமல் இருந்தது. நல்ல வேளையாக சில மணி நேரம் கழிந்தப் பின் கவலைக் கொண்டு அவரை தேடிக்கொண்டு இருந்த நண்பர்களை சந்திக்க நேரிட்டது.
அவர்களிடம் நடந்த அத்தனை விஷயத்தையும் கூற, இதைக் கேட்டவர்களும் வியந்து நின்றார்கள்.
அவர்களும் அந்த ஆலயத்தைக் காண விருப்பத்தை தெரிவிக்க அவர்களுக்கும் அந்த ஆலயத்தைக் காட்டுவதாகக் கூறிவிட்டு அவர்களை அழைத்துச் சென்றார்.
அவர் நெற்றியில் காணப்பட்ட சந்தனத்தின் மணமும், வீபுதியும் அவர்களை அவர் கூறியதை நம்ப வைத்தது.
அனைவரும் மயில்வாகனார் நட்டு வைத்து இருந்த பச்சை மரக் கிளைகளை பின் தொடர்ந்து அந்த நல்ல பாதையிலேயே சென்றார்கள்.
ஆனால் அவர்களால் துரதிஷ்டவசமாக ஒரு அளவுக்கே செல்ல முடிந்தது. அதற்கு மேல் அவர் நட்டு வைத்திருந்த மரத்தின் கிளைகளைக் காணாமல் திகைத்தார்கள்.
அடர்ந்த வனமே சுற்றிலும் இருந்தது. எந்தப் பாதையும் காணப்படவில்லை.
ஆனால் அதெப்படி அந்த இடத்துக்கு வந்தவரை நட்டு வைத்திருந்த மரக் கிளைகள் இருக்க அதற்கு மேல் மரக் கிளைகளைக் காண முடியவில்லை?
அங்கும் இங்கும் எத்தனை அலைந்தும் அவர்களால் அந்த அடர்ந்தக் காட்டு மத்தியில் இருந்த ஆலயத்தை மட்டும் கண்டு பிடிக்கவே முடியவில்லை.
ஆனால் சில இடங்களில் சாம்பிராணியின் மணமும், ஊதுபத்தியின் மணமும் மட்டும் எங்கிருந்தோ வந்து அவர்களின் மூக்கைத் துளைத்தது.
அதுவும் எங்கிருந்து வந்தது என்பது தெரியாமல் திகைத்தார்கள். அடுத்தடுத்து சில நாட்கள் பலரும் அந்த அடர்ந்த காட்டில் வந்து கோணேஸ்வரர் இருந்த ஆலயம் இருந்த இடத்தைக் கண்டு பிடிக்க முயன்றும் இன்றளவும் அந்த ஆலயம் இருந்த இடத்தை யாராலும் கண்டு பிடிக்கவே முடியவில்லை என்பதுதான் பெரிதும் வியப்பான செய்தி. மயில்வாகனார் மட்டுமே அதிருஷ்டவசமாக அதைப் பார்த்து இருந்துள்ளார்.
சரித்திர ஆய்வாளர்களின் கருத்துப்படி பண்டைய வரலாறு வரலாற்றுக் காலத்துக்கு முற்பட்ட ஆலயம் ஒன்று திரி கோண மலையில் கடற்கரையின் அடிவாரத்தில் இருந்ததாகவும், பின்னர் கடலில் ஏற்பட்ட சீற்றத்தின் காரணமாக அந்த ஆலயத்தின் ஒரு பகுதி கடலில் மூழ்கி விட்டதாகவும் அதில் ஒரு பகுதியே மலைக் குகை போன்று மலையின் அடிப்பகுதியில், யாராலும் போக முடியாத நிலையில் உள்ளதாகவும் கூறுகிறார்கள்.
அதுவே பல்லவர்கள் கட்டி இருந்த குகை ஆலயமாக இருந்திருக்க வேண்டும் என்றும் நம்புவதினால் தம்பலகமத்தில் மயில்வாஹனார் பார்த்ததாகக் கூறும் ஆலயம் பல்லவர்கள் காலத்தில் கட்டப்பட்டிருந்த சிவன் ஆலயமாக இருந்திருக்க வேண்டும்.
அந்த ஆலயமே தற்போது மலையின் அடிவாரப் பகுதியில் எங்கோ குகைக்குள் உள்ளதாகவும் ஒரு நம்பிக்கை உள்ளது.
ஆகவே அதுதான் கோணேஸ்வரரின் மூன்றாவதான ஆலயம் என்றும் ஒரு சிலர் கருத்து தெரிவிக்கிறார்கள்.
திருகோணேஸ்வரர் ஆலயம் போர்துக்கீசியரால் அழிக்கப்பட்ட பிறகு அங்கிருந்த சிலைகளை பக்தர்கள் ரகசியமாக சென்று ஒழித்து வைத்து பூஜைகளை செய்தவாறு இருந்தார்கள்.
சில காலம் கழித்து , அதாவது சுமார் நானூறு ஆண்டுகளுக்கு முன்னர் கண்டியை ஆட்சி செய்து கொண்டு இருந்த ராஜசிங்கம் என்ற மன்னனின் கனவில் தோன்றிய கோணேஸ்வரர் தான் சுயம்புவாக எழுந்திருந்த சிலை ஒன்று கழனி மலையில் வழிபடப்பட்டு வருவதாகவும் அதை எடுத்து ஒரு ஆலயம் கட்டி வழிபடுமாறும் கட்டளை இட்டாராம்.
ஆகவே அந்த மன்னனும் கழனி மலைக்கு வந்து அங்கு ரகசியமாக வழிபடப்பட்டு வந்திருந்த அழிக்கப்பட்டு இருந்த கோணேஸ்வரர் ஆலய சிலைகளைக் கண்டு பிடித்து தம்பலகமத்தில் ஒரு ஆலயத்தை எழுப்பி அதில் அவற்றை பிரதிஷ்டை செய்து வழிபட்டாராம்.
இதுவே இன்றும் தம்பலகமத்தில் உள்ள இரண்டாவது கோணேஸ்வரர் ஆலயம் ஆகும்.
போர்த்துக்கீசியர் இலங்கைக்கு வந்து சுமார் ஐநூறுக்கும் மேற்பட்ட இந்து ஆலயங்களை இடித்திருந்தார்கள்.
அப்படி அவர்கள் இடிப்பதற்கு முன்னால் திருகோண மலைப் பகுதியில் மூன்று ஆலயங்கள் இருந்துள்ளன என்றும் அவற்றில் ஒன்று மாதுமை அம்பாள் எனப்படும் பார்வதி தேவியின் பிரும்மாண்டமான ஆலயமும் ஆகும்.
இந்த ஆலயத்துக்கு கீழ்ப் பகுதியில் சிவனாரை தரிசிக்க அவ்வப்போது அங்கு வந்த விஷ்ணுவிற்காக ஏற்பட்டிருந்த ஸ்ரீ நாராயணர் ஆலயம், மற்றும் மாதுமை அம்பாள் எனப்படும் பார்வதி தேவியுடன் கோணேஸ்வரர் வீற்று இருந்த ஆலயம் (அழிக்கப்பட்ட திருகோணேஸ்வரர் ஆலயம்) என மூன்றும் இருந்துள்ளது.
திருகோணேஸ்வரர் ஆலயத்தை சிதைத்த போர்துக்கீசியர்களினால் மற்ற இரண்டு ஆலயங்களையும் அழிக்க முடியவில்லை என்பதின் காரணம், அவை இருந்த இடங்களுக்கு அப்போது அவர்களால் எளிதில் செல்ல முடியவில்லை என்பதே.
மேலும், அவற்றைக் குறித்து அவர்கள் அதிகம் அறிந்திருக்கவும் இல்லை. மாதுமை அம்பாள் ஆலயத்தின் அருகில்தான் பாபநாச கிணறும் உள்ளது.
இது என்றுமே வற்றாத கிணறாக இருந்து வருகிறது.
1950-ல் அழிக்கப்பட்டிருந்த கோணேஸ்வரர் ஆலயத்தை மீண்டும் புனரமைக்க பக்தர்கள் ஏற்பாடு செய்தார்கள்.
அப்போது ஆலயத்தின் அருகில் இருந்த கிணறு ஒன்றை தோண்டிக் கொண்டு இருந்தபோது அங்கு புதைத்து வைக்கப்பட்டு இருந்த சந்திரசேகரர் என்ற பெயருடன் இருந்திருந்த சிவபெருமான், மாதுமை அம்மன் எனும் பெயரில் பார்வதி, விநாயகர் போன்றவர்களின் சிலைகள் கிடைத்தனவாம்.
இவை இன்றுள்ள கோணேஸ்வரர் ஆலயத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டு இருக்கிறது.
இதற்கு முன்னர் 1944-ல் ஆண்டு திருகோணமலைக் கோட்டையினுள்ளே நீர்த்தேக்கம் ஒன்று அமைப்பதற்கு முயற்ச்சிகள் மேற்கொண்ட போது விஷ்ணு மகாலட்ஷ்மி போன்றவர்களின் சிலைகளும் கிடைத்தனவாம்.
மேலும் சில சிலைகள் இன்னும் பல இடங்களில் கிடைத்தன. இவை அனைத்தையும் ஒன்று சேர்த்து, 1952-ல் புதுப்பிக்கப்பட்ட திருகோணேஸ்வரர் ஆலயத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டன.
ஆனால் ஆலயப் பணிகள் அனைத்தும் 1963-ல் முடிவடைந்தது. இந்த ஆலயத்தின் கும்பாபிஷேகமும் நல்ல முறையில் நடந்து முடிந்தன.
முந்தைய ஆலயத்துடன் ஒப்பிட்டுப் பார்த்தால் புதுப்பிக்கப்பட்டுள்ள ஆலயம் அதில் நான்கில் ஒரு பங்கு கூட இருக்காது.
தினமும் ஆறுகால பூஜைகள் நடைபெறுகின்றன. வருடாந்தர விழாக்கள் சுமார் பதினெட்டு நாட்கள் நடைபெறுகின்றன.
ஆலயத்தின் தல விருஷம் ஆல மரம் என்கிறார்கள்.
ஆனால் துரதிஷ்டவசமாக ஆலயத்தில் குளக்கோட்டான் பிரதிஷ்டை செய்திருந்த சிவலிங்கம் இன்னமும் கண்டெடுக்கப்படவில்லை என்பது கவலையான செய்தி.
*சம்பந்தர் தேவாரம்:*
பண்: புறநீர்மை.
1.🔔நிரைகழ லரவஞ் சிலம்பொலி யலம்பும் நிமலர்நீ றணிதிரு மேனி
வரைகெழு மகளோர் பாகமாப் புணர்ந்த வடிவினர் கொடியணி விடையர்
கரைகெழு சந்துங் காரகிற் பிளவு மளப்பருங் கனமணி வரன்றிக்
குரைகட லோத நித்திலங் கொழிக்குங் கோணமா மலையமர்ந் தாரே.
🙏சிவபெருமானின் வலத் திருவடியில் வீரக்கழலும், இடத் திருவடியில் சிலம்பும் ஒலிக்கின்றன. அவர் பாம்பணிந்தவர். இயல்பாகவே பாசங்களின் நீங்கியவர். திருநீறு அணிந்த திருமேனியர். மலைமகளை ஒரு பாகமாகக் கொண்டவர். இடபக்கொடி உடையவர். சந்தனக் கட்டைகளும், கரிய அகில் கட்டைகளும், மாணிக்கக் கற்களும் அளவின்றிக் கரையில் சேர, ஒலிக்கின்ற கடலின் அலைகள் முத்துக்களைக் கொழிக்கும் திருக்கோண மாமலையில் சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்றார்.
2.🔔கடிதென வந்த கரிதனை யுரித்து அவ்வுரி மேனிமேற் போர்ப்பர்
பிடியன நடையாள் பெய்வளை மடந்தை பிறைநுத லவளொடு முடனாய்க்
கொடிதெனக் கதறுங் குரைகடல் சூழ்ந்து கொள்ளமு னித்திலஞ் சுமந்து
குடிதனை நெருங்கிப் பெருக்கமாய்த் தோன்றுங் கோணமா மலையமர்ந் தாரே.
🙏விரைவாகப் பாய்ந்து வந்த யானையின் தோலை உரித்துத் திருமேனிமேல் போர்த்திக் கொண்டவர் சிவபெருமான். அவர் பெண் யானை போன்ற நடையை உடையவளாய், வளையல்களை அணிந்தவளாய்ப் பிறை போன்ற நெற்றியையுடைய உமா தேவியை ஒரு பாகமாக உடையவர். பிறர் கொடிது என்று அஞ்சத்தக்க அலைகளையுடைய ஒலிக்கின்ற கடல், முத்துக்களைச் சுமந்து மக்களுக்கு வழங்கும் வளமைமிக்க திருக்கோண மாமலையில் சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்றார்.
3.🔔பனித்திளந் திங்கட் பைந்தலை நாகம் படர்சடை முடியிடை வைத்தார்
கனித்திளந் துவர்வாய்க் காரிகை பாக மாகமுன் கலந்தவர் மதின்மேல்
தனித்தபே ருருவ விழித்தழ னாகந் தாங்கிய மேருவெஞ் சிலையாக்
குனித்ததோர் வில்லார் குரைகடல் சூழ்ந்த கோணமா மலையமர்ந் தாரே.
🙏சிவபெருமான் குளிர்ச்சியான இளமையான சந்திரனையும், பசுமையான தலையையுடைய பாம்பையும், படர்ந்த சடைமுடியில் அணிந்துள்ளார். கனிபோன்ற சிவந்த வாயையுடைய உமாதேவியைச் சிவபெருமான்ஒரு பாகமாக உடையவர். மேரு மலையை வில்லாகக் கொண்டு, வாசுகி என்னும் பாம்பை நாணாகக் கொண்டு, அக்கினியைக் கணையாகக் கொண்டு முப்புரத்தை அழித்த ஆற்றலுடையவர். அப்பெருமான் ஒலிக்கின்ற கடல் சூழ்ந்த திருக் கோணமலையில் வீற்றிருந்தருளுகின்றார்.
4.🔔பழித்திளங் கங்கை சடையிடை வைத்துப் பாங்குடை மதனனைப் பொடியா
விழித்தவன் தேவி வேண்டமுன் கொடுத்த விமலனார் கமலமார் பாதர்
தெழித்துமுன் னரற்றுஞ் செழுங்கடற் றரளஞ் செம்பொனு மிப்பியுஞ் சுமந்து
கொழித்துவன் றிரைகள் கரையிடைச் சேர்க்குங் கோணமா மலையமர்ந் தாரே.
🙏இறைவர் பெருக்கெடுத்து வந்த கங்கை நதியின் வேகத்தைக் குறைத்து அதனைச் சடையில் தாங்கியவர். அழகிய மன்மதன் சாம்பலாகுமாறு நெற்றிக்கண்ணால் விழித்தவர். பின் அவன் தேவி வேண்ட அவனை உயிர்ப்பித்து அவளுக்கு மட்டும் தெரியும்படி அருள்செய்தவர். இயல்பாகவே பாசங்களின் நீங்கியவர். தாமரை போன்ற திருவடிகளை உடையவர். ஆரவாரத்துடன், செழுமையான முத்துக்கள், செம்பொன், இப்பி இவற்றைத் திரளாக அலைகள் கரையிலே சேர்க்கத் திருக்கோணமலை என்னும் திருத்தலத்தில் சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்றார்.
5.🔔தாயினு நல்ல தலைவரென் றடியார் தம்மடி போற்றிசைப் பார்கள்
வாயினும் மனத்தும் மருவிநின் றகலா மாண்பினர் காண்பல வேடர்
நோயிலும் பிணியுந் தொழிலர்பா னீக்கி நுழைதரு நூலினர் ஞாலம்
கோயிலுஞ் சுனையும் கடலுடன் சூழ்ந்த கோணமா மலையமர்ந் தாரே.
🙏தாயைவிட நல்ல தலைவர் என்று அடியார்கள் சிவபெருமானின் திருவடிகளைப் போற்றிப் பாடுவர். அவர் அடியார்களின் வாயிலும், மனத்திலும் நீங்காத மாண்புடையவர். பல கோலங்களை உடையவர். தம்மை வழிபடும் தொழிலுடைய அடியவர்கள்பால் நோய், பிணி முதலியன தாக்காவண்ணம் காப்பவர். மார்பில் முப்புரிநூல் அணிந்தவர். இவ்வுலகில், திருக்கோயிலும், சுனையும் கடலுடன் சூழ விளங்கும் திருக்கோணமாமலையில் சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்றார்.
6.🔔பரிந்துநன் மனத்தால் வழிபடுமாணி தன்னுயிர் மேல்வரும் கூற்றைத்
திரிந்திடா வண்ண முதைத்தவற் கருளுஞ் செம்மையார் நம்மையா ளுடையார்
விரிந்துயர் மௌவன் மாதவி புன்னை வேங்கைவண் செருந்திசெண் பகத்தின்
குருந்தொடு முல்லை கொடிவிடும் பொழில் சூழ் கோணமா மலையமர்ந் தாரே.
🙏பக்தி பெருகும் நல்ல மனத்தால் அன்பு பெருக வழிபடும் மார்க்கண்டேயரின் உயிரைக் கவரவந்த காலனை, இறை வழிபாடு வினைப்பலனைச் சாராமல் காக்கும் என்ற சைவக் கொள்கைக்கு முரண்படாவண்ணம் உதைத்துப் பாலனுக்கு அருள் புரிந்த செம்மையான திறமுடையவர் சிவபெருமான். ஆன்மாக்கள் ஆகிய நம்மை ஆட்கொள்பவர். அப்பெருமான் விரிந்துயர்ந்த மல்லிகை, மாதவி, புன்னை, வேங்கை, செருந்தி, செண்பகம், முல்லை ஆகியவை விளங்கும் சோலைகள் சூழ்ந்த திருக்கோணமலையில் வீற்றிருந்தருளுகின்றார்.
*7*******🔔
****இப்பதிவு காணக்கிடைக்கின்றன ஈசனருள் இலாது ஆக்கினன்.
8.🔔எடுத்தவன் றருக்கை யிழித்தவர் விரலா லேத்திட வாத்தமாம் பேறு
தொடுத்தவர் செல்வந் தோன்றிய பிறப்பு மிறப்பறி யாதவர் வேள்வி
தடுத்தவர் வனப்பால் வைத்ததோர் கருணை தன்னருட் பெருமையும் வாழ்வும்
கொடுத்தவர் விரும்பும் பெரும்புகழாளர் கோணமா மலையமர்ந் தாரே.
🙏கயிலைமலையை எடுத்த இராவணனின் செருக்கைத் தம் திருப்பாதவிரலை ஊன்றி அழித்தவர் சிவபெருமான். பின் அவன் ஏத்திப் போற்ற விருப்பத்துடன் வெற்றி வாளும், நீண்ட வாழ்நாளும் அருளியவர். செல்வத்தோடு கூடிய பிறப்பும், இறப்பும் அறியாதவர். சிவனை நினையாது தக்கன் செய்த வேள்வியைத் தடுத்தவர். வனப்பு மிகுந்த உமாதேவியை ஒருபாகமாக வைத்தவர். உயிர்களிடத்துக் கருணைகொண்டு தன்னருட் பெருமையும், வாழ்வும் கொடுத்தவர். அத்தகைய பெரும்புகழையுடைய சிவபெருமான் திருக்கோணமலையில் வீற்றிருந்தருளுகின்றார்.
9.🔔அருவரா தொருகை வெண்டலையேந்தி யகந்தொறும் பலியுடன் புக்க
பெருவரா யுறையு நீர்மையர் சீர்மைப் பெருங்கடல் வண்ணனும் பிரமன்
இருவரு மறியா வண்ணமொள் ளெரியா யுயர்ந்தவர் பெயர்ந்தநன் மாற்கும்
குருவராய் நின்றார் குரைகழல் வணங்கக் கோணமா மலையமர்ந் தாரே.
🙏அருவருப்பு இல்லாமல் பிரமனின் வெண் தலையைக் கையிலேந்தி வீடுகள்தோறும் சென்று பிச்சை ஏற்று உண்ணும் பெருமையுடையவர். சீர்மை பொருந்திய பெருங்கடலில் துயில்கொள்ளும் திருமாலும், பிரமனும் ஆகிய இருவரும் அறியா வண்ணம் ஒளியுடைய பெரிய நெருப்புப் பிழம்பாய் உயர்ந்து நின்றவர். திருமால் சிவபெருமானை ஆயிரம் தாமரை மலர்கள் கொண்டு அர்ச்சிக்க, ஒரு பூக் குறைய, அதற்காகத் தாமரை போன்ற தம் கண்ணையே இடந்து அர்ச்சனை செய்யக் குருவாய் விளங்கியவர். அடியவர்கள், ஒலிக்கின்ற வீரக்கழல்கள் அணிந்த தம் திருவடிகளை வணங்கும் வண்ணம் திருக்கோணமலையில் வீற்றிருந்தருளுகின்றார்.
10.🔔நின்றுணுஞ் சமணுமிருந்துணுந் தேரு நெறியலா தனபுறங் கூற
வென்றுநஞ் சுண்ணும் பரிசின ரொருபான் மெல்லிய லொடுமுட னாகித்
துன்றுமொண் பௌவ மவ்வலுஞ் சூழ்ந்து தாழ்ந்துறு திரைபல மோதிக்
குன்றுமொண் கானல் வாசம்வந் துலவுங் கோணமா மலையமர்ந் தாரே.
🙏நின்றுண்ணும் சமணர்களும், இருந்துண்ணும் புத்தர்களும் சிவபெருமானைப் பற்றி நெறியல்லாதவனவற்றைப் புறங்கூறுகின்றனர். சிவபெருமானோ நஞ்சுண்டு தேவர்களைக் காத்த பெருமையுடையவர். மெல்லியலான உமாதேவியை ஒரு பாகமாகக் கொண்டவர். கடல் சூழ்ந்த அம்மலையில் மணம் வீசும் மல்லிகைச் சோலை விளங்கக் கடலலைகள் கரையில் மோதுகின்றன. கடற்சோலைகளின் மணம்வீசும் திருக்கோணமலையில் சிவபெருமான் வீற்றிருந் தருளுகின்றார்.
10.🔔குற்றமி லாதார் குரைகடல் சூழ்ந்த கோணமா மலையமர்ந் தாரைக்
கற்றுணர் கேள்விக் காழியர் பெருமான் கருத்துடை ஞானசம் பந்தன்
உற்றசெந் தமிழார் மாலையீ ரைந்து முரைப்பவர் கேட்பவ ருயர்ந்தோர்
சுற்றமு மாகித் தொல்வினை யடையார் தோன்றுவர் வானிடைப் பொலிந்தே.
திருச்சிற்றம்பலம்.
🙏குற்றமில்லாத குடிமக்கள் வாழ்கின்ற ஒலிக்கின்ற கடல் சூழ்ந்த திருக்கோணமலையில் வீற்றிருந்தருளும் சிவ பெருமானை, கற்றுணர் ஞானமும், கேள்வி ஞானமும் உடைய சீகாழி வாழ் மக்களின் தலைவரான சிவஞானக் கருத்துடைய ஞானசம்பந்தர் செந்தமிழில் அருளிய இப்பதிகத்தை உரைப்பவர்களும் கேட்பவர்களும் உயர்ந்தோர் ஆவர். அவர்களுடைய சுற்றத்தாரும் எல்லா நலன்களும் பெற்றுத் தொல்வினையிலிருந்து நீங்கப் பெறுவர். சிவலோகத்தில் பொலிவுடன் விளங்குவர்.
திருச்சிற்றம்பலம்.
இத்துடன் இத்தல அருமைகள் பெருமைகள் மகிழ்ந்து நிறைந்தது.
-------------------------------------------------------
*அடியார்களுக்குத் தொண்டு செய்யுங்கள் இறைவன் அவர்களுக்குள்ளிருக்கிறான்.*
No comments:
Post a Comment