Monday, May 28, 2018

Ashtapadi in tamil part6

Courtesy:Smt.Dr,Saroja Ramanujam

கீதகோவிந்த மகாகாவ்யம்

அஷ்டபதி 6
முந்தைய அஷ்டபதியில் ராதை கண்ணனின் அழகையும் செயல்களையும் நினைவு கூர்ந்து இந்த அஷ்டபதியில் அவனுடன் சுகித்த அனுபவத்தை நினைந்து அவனைத் தன்னுடன் சேருமாறு செய்ய தோழியை வேண்டுகிறாள்.

ஜீவன் இறைவனிடம் இருந்து தன் அறியாமையினால் பிரிந்து வருந்துகிறான். அந்த அனுபவம் இன்னதென்று நினைவில்லாவிட்டாலும் அந்த ஆனந்தத்தை இழந்ததை உணர்கிறான். அவனுடன் சேர்வது ஒன்றே வாழ்வின் குறிக்கோள் என்பதை உணரும்போது ராதையின் சகியைப் போல் ஆசார்யரானவர் ஜீவனையும் பகவானையும் ஒன்று சேர்க்க முயற்சிப்பதுதான் சகி என்ற பாத்திரத்தின் உருவகம்.

ராதை தான் கண்ணனுடன் இருந்ததை விவரிக்கிறாள்.
1.நிப்ருத நிகுஞ்ச கதயா நிசி ரஹஸி நிலீய வஸந்தம் 
சகித விலோகித ஸகலதிசா ரதி ரபஸபர பரணேன ஹஸந்தம்
ஸகி ஹே கேசிமதனம் உதாரம் 
ரமய மயா ஸஹ மதனமநோரதபாவிதயா ஸவிகாரம்(த்ருவபதம்)

நிப்ர்தநிகுஞ்சகதயா ரஹஸி- ராதை கண்ணனை சந்திக்க யாரும் அறியாமல் லதாக்ருஹத்திற்கு செல்கிறாள். 
நிலீய வஸந்தம்- அங்கு மறைந்து கொண்டு 
சகிதவிலோகித ஸகலதிசா- அவனைக்காணாமல் பயத்துடன் எல்லா திசைகளிலும் பார்ப்பவளைக்கண்டு 
ரதிரபஸபரேண- காதல் மேலிட்டு
ஹஸந்தம்- சிரித்துக் கொண்டு நிற்பவனாய் 
கேசிமதனம் உதாரம் – கேசி என்ற அரக்கனைக் கொன்ற சிறந்த வீரனான் கண்ணனை
ஹே ஸகி-தோழி 
மதனமநோரதபாவிதயா – மன்மதனால் பீடிக்கப்பட்ட 
மயா ஸஹ- என்னுடன் 
ஸவிகாரம்- காதலோடு
ரமய – ரமிக்கச்செய்வாயாக

இனி வரும் ஸ்லோகங்கள் ராதை- கண்ணன் சேர்க்கை அதாவது நாயக நாயகி பாவ பக்தியை விளக்குகின்றன. பகவான்தான் உயிர் இந்த உலகம் அவனுடைய சரீரம். பக்தி என்பது அந்த உயிரை உடலின் ஒவ்வொரு அணுவிலும் உணர்வது . இந்த பாவத்தில் பார்த்தால் நாயக நாயகி பாவம் பற்றி லோகாயதமான உணர்வு ஏற்படாது. சரீர சுகம் என்பது சரீர சரீரி சம்பந்தம். இதுதான் ஆண்டாளையும் மீராவையும் பாட வைத்தது.

2.ப்ரதம ஸமாகம லஜ்ஜிதயா படுசாடுசதை: அனுகூலம்
ம்ருதுமதுரஸ்மிதபாஷிதயா சிதிலீக்ருதஜகனதுகூலம்

.ப்ரதம ஸமாகம லஜ்ஜிதயா- முதல் முதலாக அவனுடன் சேர்கையில் உண்டான வெட்கத்துடன் கூடிய என்னை
படுசாடுசதை: - திறமையான செயல்களாலும் 
ம்ருதுமதுரஸ்மிதபாஷிதயா- இனிமையான சொற்களாலும் 
அனுகூலம் – இயல்பான நிலை அடையச்செய்து
சிதிலீக்ருதஜகனதுகூலம் – ஆடையை நெகிழச்செய்த கண்ணனை

முதல் முதலாக இறை உணர்வு ஏற்படும்போது நமக்கு இந்த சரீர உணர்வு தூக்கலாக இருக்கிறது. வெட்கம் என்பது நான் எங்கே அவன் எங்கே அவனுடன் என்னால் சேர முடியுமா என்ற நாணம். பிறகு கொஞ்சம் கொஞ்சமாக உடல் உணர்வு அற்று விடுகிறது.முதலில் அவன் ஒளிந்து கொண்டு நம்மைப் பார்த்து நகைக்கிறான். பிறகு நம் தயக்கத்தை அவனுடைய லீலைகள் மூலம் போக்கி விடுகிறான்.

ஸகி ஹே கேசிமதனம் உதாரம் 
ரமய மயா ஸஹ மதனமநோரதபாவிதயா ஸவிகாரம் (முன்னம் காண்க)

3.கிஸலய சயன நிவேசிதயா சிரம் உரஸி மமைவ சயானம்
க்ருதபரிரம்பணசும்பனயா பரிரப்ய க்ருதாதரபானம்

கிஸலய சயன நிவேசிதயா- தளிர்களால் ஆன சயனத்தில் 
சிரம் உரஸி மமைவ சயானம்- என்மேல் வைத்துக்கிடந்த மலர் மார்பனை 
க்ருதபரிரம்பணசும்பனயா பரிரப்ய க்ருதாதரபானம் – என்னைத்தழுவி அதரபானம் செய்தவனை

நமக்கு மிகவும் நெருங்கி வருபவன். நம்மை முழுதும் அறிந்தவன்.

ஸகி ஹே கேசிமதனம் உதாரம் 
ரமய மயா ஸஹ மதனமநோரதபாவிதயா ஸவிகாரம் (முன்னம் காண்க)

4. அலஸநிமீலித லோசனயா புலகாவலிலலிதகபோலம்
ச்ரமஜஸகலகலேவரயா வரமதனமதாததிலோலம்

அலஸநிமீலித லோசனயா- மகிழ்வினால் என் கண்கள் மூடியிருக்க
புலகாவலிலலிதகபோலம்- மலர்ந்த கன்னங்கள் உடையவனை
ச்ரமஜலஸகலகலேவரயா – என் உடல் வியர்த்திருக்க 
வரமதனமதாததிலோலம்-மன்மதனால் பீடிக்கப்பட்டவனை 
அவன் பெயரைக்கேட்டாலே புளகாங்கிதம் அடைந்து அவனை நேரில்கண்டது போல் கண்கள் மூடினாலும் உள்ளே தெரிபவனாக இருக்கிறான். அந்த நிலை அடைந்து விட்டால் அவன் நமக்கு ஒப்பான ஆனந்தம் அடைகிறான்.

ஸகி ஹே கேசிமதனம் உதாரம் 
ரமய மயா ஸஹ மதனமநோரதபாவிதயா ஸவிகாரம்(முன்னம் காண்க )

5. கோகிலகலரவகூஜிதயா ஜிதமனஸிஜதந்த்ரவிசாரம் 
ச்லதகுஸுமாகுலகுந்தலயா நகலிகிதஸ்தனபாரம்

. கோகிலகலரவகூஜிதயா- ஆனந்தம் மேலிட்டு குயில் போலக் கூவின என்னைக் கண்டு
ஜிதமனஸிஜதந்த்ரவிசாரம் – காதல் மேலிட்டவனை
ச்லதகுஸுமாகுலகுந்தலயா-என் கூந்தல் அவிழ 
நகலிகிதஸ்தனபாரம்- அவனுடைய நகங்கள் என் மார்பில் பதிய வைத்தவனை

கூஜ்ந்தம் ராம ராமேதி மதுரம் மதுராக்ஷரம் என்று கூவின வால்மீகி முதலிய குயில்களைப்போல பக்தனும் அச்சுதா அமரர் ஏறே ஆயர்தம் கொழுந்தே என்று கூவும் போது அவனுக்கும் நம்மேல் காதல் மேலிடுகிறது.

ஸகி ஹே கேசிமதனம் உதாரம் 
ரமய மயா ஸஹ மதனமநோரதபாவிதயா ஸவிகாரம்( முன்னம் காண்க )

6.சரணரணிதமணிநூபுரயா பரிபூரிதஸுரதவிதானம் 
முகரவிச்ருங்கலமேகலயா ஸகசக்ரஹசும்பனதானம்

சரணரணிதமணிநூபுரயா – என் பாதங்களில் உள்ள நூபுரம் சப்திக்க பரிபூரிதஸுரதவிதானம் – காதல் விளையாட்டில் மூழ்கியவனை 
முகரவிச்ருங்கலமேகலயா-என் இடை ஆபரணம் குலுங்க 
ஸகசக்ரஹசும்பனதானம்- என்மேல் இதழ்கள் பதித்தவனை

காலில் சதங்கை ஒலிக்க இடையில் மணிமாலையுடன் நாம் சங்கீர்த்தனம் செய்யும் பக்தனை அவன் தழுவி முத்தம் இடாமல் வேறென்ன செய்வான்?

ஸகி ஹே கேசிமதனம் உதாரம் 
ரமய மயா ஸஹ மதனமநோரதபாவிதயா ஸவிகாரம்(முன்னம் காண்க )

7. ரதிஸுகஸமயரஸாலஸயா தரமுகுளித நயனஸரோஜம் 
நிஸ்ஸஹநிபதிததனுலதயா மதுசூதனமுதிதமநோஜம்

ரதிஸுகஸமயரஸாலஸயா – என் மகிழ்ச்சியையும் களைப்பையும் பார்த்து
தரமுகுளித நயனஸரோஜம்- சிறிது மலர்ந்த தாமரைக் கண்களை உடையவனை 
நிஸ்ஸஹநிபதிததனுலதயா –மயங்கியதுபோன்ற உடலைக் கண்டு 
மதுசூதனமுதிதமநோஜம்- மனமகிழ்ந்தவனை

பக்தி மேலீட்டால் உடல் தளர்கிறது, உணர்வு நழுவி மயங்கியது போல் இவ்வுலக உணர்வின்றி இருப்பதைக்கண்டு அவன் மனமகிழ்ந்து தன்னுடன் 
சேர்த்துக் கொள்கிறான். அந்த நிலை வேண்டும் என்றால் குருக்ருபை வேண்டும். அதுதான் சகியிடம் வேண்டுதல்.

ஸகி ஹே கேசிமதனம் உதாரம் 
ரமய மயா ஸஹ மதனமநோரதபாவிதயா ஸவிகாரம்( முன்னம் காண்க )

8.ஸ்ரீஜயதேவபணிதம் இதம் அதிசய மதுரிபு நிதுவனசீலம் 
ஸுகம் உத்கண்டித கோபவதூகதிதம் விதநோது ஸலீலம்

ஸ்ரீஜயதேவபணிதம் இதம் – ஸ்ரீ ஜெயதேவரால் கூறப்பட்ட இந்த 
அதிசய மதுரிபு நிதுவனசீலம் –அதிசயமான கண்ணனின் காதலினால் 
ஸலீலம் – விளையாட்டாகச் செய்யப்பட்டதும்
உத்கண்டித கோபவதூகதிதம்- அதனால் மகிழ்வுற்ற ராதையால் சொல்லப்பட்டவையான இவை 
ஸுகம் விதநோது – கேட்பவர்களுக்கு சுகத்தை அளிக்கட்டும்.

எல்லாமே அவனுடைய் லீலா வினோதம் அதைக் கேட்பவர்க்கு எல்லா சுகங்களும் உண்டாகட்டும் என்கிறார் ஜெயதேவர்.

ஸகி ஹே கேசிமதனம் உதாரம் 
ரமய மயா ஸஹ மதனமநோரதபாவிதயா ஸவிகாரம்( முன்னம் காண்க)