Thursday, May 31, 2018

Agneeswarar temple kanchanur

சிவாலயம் திருச்சிற்றம்பலம்.
பதியும் பணியே பணியாய் அருள்வாய்.
*கோவை.கு.கருப்பசாமி.*
----------------------------------------------------------
*📣* தேவாரம் பாடல் பெற்றிருக்கின்ற தலங்களை மட்டும் பிரதானமாய் கொண்டிருக்கும், முக்கால் பங்கு அடியார்கள், வைப்புத் தலங்களை பாராமுகமாய் இருக்கின்றனர்.

நான்கு வருடங்களாய் தொடர்ந்து பதிவிடப்படும் பதிவுகளில் மிகவும் மோசமான பார்வையில் வைப்புத்தல தொடர் உள்ளது.

உதாரணமாக, பாடல் பெற்ற தலப்பதிவை முகநூலில் தினமும் எண்ணூறு பேர் share செய்து வந்தனர். 

முன்னூறு பேர் வாசித்தனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் கருத்து கூறினர்.

அதுபோல்? இது இல்லை! என, வைப்புத் தலங்களின் பாராமுகத்திற்கு வருத்தம் அளிக்கிறது.  

ஆகையினால் இத்தொடரை ஆரம்பத்திலேயே இன்றைய பதிவுடன் நிறுத்திக் கொள்கிறோம். யாவரும் மன்னிக்கவும்.

வைப்புத் தல இறைவன் உணர்த்தும் காலம் வரும், அதுவரை யாம் முடங்கிக் கொள்கிறோம்.

*நாடும் நகரமும் நற்றிருக் கோயிலும்*
*தேடித்திரிந்து சிவபெருமானென்று* 
*பாடுமின், பாடிப் பணிமின், பணிந்தபின்*
*கூடிய நெஞ்சக் கோயிலாக் கொள்வனே!*
                             திருமந்திரம்.

சிவ சிவ.திருச்சிற்றம்பலம்.
-----------------------------------------------------------
______________________________________
*தினமும் ஒரு தேவார வைப்புத் தல தரிசனம்:*
(எல்லோரும் தரிசிக்கச் செல்வதற்காக.......)
_____________________________________
*தேவாரம் பாடல் அல்லாத வைப்புத் தல தொடர் எண்: (4)*

*தேவாரம் பாடலுக்குள் அமைந்த வைப்புத் தலம்:*

*வைப்புத் தல அருமைகள் பெருமைகள்:*

*🏜அக்னீஸ்வரர் திருக்கோயில், அக்கீச்சுரம்:*
_____________________________________
இச்சிவஸ்தலத்தை இப்பொழுது அக்கீச்சுரம் திருகஞ்சனூர் என்று இந்நாளில் வழங்குகிறார்கள்.

*🌙இறைவன்:* அக்னீஸ்வரர்.

*💥இறைவி:* கற்பகாம்பாள்.

*📔தேவாரம் பதிகம் உரைத்தவர்:*
திருநாவுக்கரசர்.

ஆறாம் திருமுறையில் எழுபத்து ஒன்றாம் பதிகத்தில், எடாடாவது பாடலில் குறிப்பிடுகிறார்.

*🛣இருப்பிடம்:*
இருபது கி.மி. தொலைவிலும், கும்பகோணத்தில் இருந்து சுமார் பதினெட்டு கி.மி. தொலைவிலும் இத்தலம் அமைந்துள்ளது.

கும்பகோணம் மற்றும் மயிலாடுதுறையில் இருந்து பேருந்து வசதிகள் உண்டு.

ஆடுதுறையிலிருந்து திருமங்கலக்குடி, சூரியனார் கோவில் வழியாக துகிலி செல்லும் சாலையில் சென்று "கோட்டூர்" "கஞ்சனூர்" என்று வழிகாட்டிப் பலகையுள்ள திசையில் பிரிந்து இத்தலத்தை அடைய வேண்டும்.

*✉ஆலய அஞ்சல் முகவரி:*
அருள்மிகு அக்கினீஸ்வரர் திருக்கோயில்,
கஞ்சனூர், கஞ்சனூர் அஞ்சல்,
வழி துகலி,
திருவிடைமருதூர் வட்டம்,
தஞ்சாவூர் மாவட்டம்.
PIN - 609 804

*✉தொடர்புக்கு:*
நீலகண்ட குருக்கள்.
0435- 2470 155
0435- 2473 737
(கோயில்): டி.ராஜேந்திர குருக்கள்.
94435 88424

*🌸ஆலயப் பூஜை காலம்:*
தினமும் காலை 7.00  மணி முதல் 11.30 மணி வரையும், மாலை 4.00 மணி முதல் இரவு 9.00 மணி வரையிலும் ஆலயம்  திறந்திருக்கும்.

*அக்கீச்சுரம் வைப்புத் தலத்தைக் குறிப்பிடும் பதிகம்:*

இப்பதிகம் அப்பர் பெருமான் திருப்பூந்துருத்தியில் தங்கி இருந்த போது "ஈச்சுரம்" என வருவனவற்றை வகுத்து அருளிச் செய்தது.

🔔நாடகம் ஆடிடம் நந்திகேச்சுரம் மா காளேச் சுரம் நாகேச்சுரம் நாகளேச்சுரம் நன்கு ஆன கோடீச்சுரம் கொண்டீச்சுரம் திண்டீச்சுரம் குக்குடேச்சுரம் அக்கீச்சுரம் கூறுங்கால் ஆடகேச்சுரம் அகத்தீச்சுரம் அயனீச்சுரம் அத்தீச்சுரம் சித்தீச்சுரம் அம் தண் கானல் ஈடு திரை இராமேச்சுரம் என்று என்று ஏத்தி இறைவன் உறை சுரம் பலவும் இயம்புவோமே.

🙏கூத்தப் பெருமானது இடமாகிய நந்திகேச்சுரம், மாகாளேச்சுரம், நாகேச்சுரம், நாகளேச்சுரம், நன்மை பொருந்திய கோடீச்சரம், கொண்டீச்சரம், திண்டீச்சரம், குக்குடேச்சுரம், அக்கீச்சரம் என்றுமிவற்றைக் கூறுமிடத்து உடன்வரும் ஆடகேச்சுரம், அகத்தீச்சுரம், அயனீச்சுரம், அத்தீச்சுரம், சித்தீச்சுரம், அழகிய குளிர்ந்த கடற் கரையில் முத்து பவளம் முதலியவற்றைக் கொணர்ந்து போடும் திரைகள் சூழ்ந்த இராமேச்சுரம் என்றெல்லாம் இறைவன் தங்குகின்ற ஈச்சுரம் பலவற்றையும் கூறி அவனைப் புகழ்வோமாக.. 

இத்தலம் பற்றிய மேலும் விபரங்கள் அறிய காவிரி வடகரைத் தலங்களில் ஒன்றான கஞ்சனூர் தலப்பதிவில் பதிந்திருந்தோம்.

*வழிபட்டோர்கள்:*
பராசரர், பிரமன், சந்திரன், கம்சன், ஹரதத்தர், சுரைக்காய் பக்தர், மானக்கஞ்சாரர், கலிக்காமர் ஆகியோர்.

*சிறப்பு:*
பஞ்சாக்ஷர மந்திரத்தின் பெருமையை உணர்த்திய ஹரதத்த சிவாச்சாயாருக்காக கல்லான நந்தி உயிர் பெற்று புல் தின்றன.

சுரைக்காய் பக்தரிடம், இறைவன் கறி சாப்பிட்டான்.

பராசரரின் சித்திபிரமை, அக்னிசோகை, நீங்கிய தலம்.

கம்சனின் வியாதி ஒழிந்த தலம்.

சந்திரனுக்கு ஏற்பட்டிருந்த சாபம், இங்கு வந்து ஆராதிக்க, சாபம் நீங்கிய தலமிது.

பிரமன் திருமணக் காட்சி கண்ட தலம்.

இங்கு வணங்கோவோர்க்கு சுக்ரதோஷம் இருந்தால் நீங்கப் பெறுவர்.

மானாற்கஞ்ச நாயனார் அவதரித்த தலம் இது.

கலிக்காமருக்கு இங்கு வைத்துத்தான் திருமணம் நடந்தது.

பராசரருக்காக, நடராஜர் முக்தி தாண்டவம் ஆடிக்காட்டியருளிய தலம்.

தஞ்சை நாட்டில் காவிரியின் வட கரையில் உள்ள கஞ்சனூர் திருநாவுக்கரசரது பாமாலை பெற்ற பதியாகும்.

அங்கித் தேவன் இங்கு ஈசனை வழிபட்டான் என்னும் ஐதீகம். *அனலோன் போற்றும் காவலனை கஞ்சனூர் ஆண்ட கோவை* என்னும் தேவாரத்தால் அறியப்படும்.

இக்காரணத்தால் கஞ்சனூர்ச் சிவாலயம் அக்கீச்சுரம் என்று பெயர் பெற்றது.

இப்பொழுது அக்கினிசுரர் கோயில் என வழங்கும் திருக்கோயிலிற் பொறிக்கப்பட்டுள்ள சாசனத்தில் திருவக்கீச்சுரம் என்று அதனைக் குறிக்கின்றது.

எனவே, திருநாவுக்கரசர் கூறியருளிய அக்கீச்சுரம் கஞ்சனூரிலுள்ள ஆலயம் என்று கொளலாகும்.

அப்பர் பெருமான் ஒரு பதிகத்தில், பதினொரு பாடல்களிலும் கயிலாய நாதனையே காணலாமே என்று கூறுகிறார்.

இப்பதிகத்தை *க்ஷேத்திரக்கோவை திருத்தாண்டகம்* என்று அழைப்பர்.

அதாவது பல சிவக்ஷேத்திரங்களைத் தொகுத்து இவ்வாறு இறுதியில் முடித்திருக்கிறார்.

இருநூறுக்கும் மேற்பட்ட சிவ க்ஷேத்திரங்கள் இவ்வாறு குறிக்கப்படுகின்றன.

இறுதியில் கூறும்போது எந்த சிவத்தலமாயினும் பெருங்கோயிலானாலும் சரி, இங்கு சென்றால் கயிலாயநாதனைக் காணலாகும் என்று பாடுகிறார்.

*கடல் நாகைக் காரோணத்தும் கயிலாய நாதனையே காணலாமே*  என்பதிலிருந்து இப்பாட்டில் குறிக்கப்பட்டிருக்கும் எந்த ஊருக்குச் சென்று அங்குள்ள சிவன் கோயிலுக்குச் சென்றால் அங்கு கயிலாய நாதனைக் காணலாம் என்பது பொருள்.

இந்தியாவின் வட எல்லையாக, மிக உயர்ந்த மலையாகத் திகழ்வது கயிலைமலை. இதன் உச்சியில் பரமன் உறையும் இடம் கயிலாயம். இது நாம் அனைவரும் அறிந்ததே.

ஆதலின்தான் அங்கு மலை உச்சி செல்வதை *கயிலை யாத்திரை* என்கிறோம்.

தமிழ் நாட்டில் எங்கோ ஒரு சிற்றூரில் உள்ள கோயிலுக்குப் போனால் அங்கு கயிலாய நாதனை நாம் எவ்வாறு காணமுடியுமா? என்று நமக்கு ஐயம் எழுவதனால்.........

அப்பர் பெருமான் இவ்வாறு சொல்லிவிட்டார் என்று நமக்கு எண்ணத் தோன்றுகிறது.

நமது இந்து சமயத்தில் தெய்வ உருவங்களை இரண்டு வகையான மூர்த்தங்களாக உருவகிப்பது மரபாக கொண்டிருக்கிறோம்.

ஒன்று பிம்ப மூர்த்தி என்பது. சிலையாலோ, உலோகத்தாலோ, மரத்தாலோ சிற்பமாக வடித்து அமைத்து வழிபடுவது பிம்பமூர்த்தி வழிபாடாகும்.

இவற்றை கோயில்களில் ஸ்தாபிக்கிறோம். இவை சிற்ப வல்லுநர்களாலே வடித்து அமைக்கப்படுபவையாகும்.

அடுத்தது, மந்திரங்களாலே உருவகித்து வணங்கப்படுவது. இதை மந்திரமூர்த்தி என்போம்.

இவற்றிற்கு குருக்கள் மந்திரங்கள் கூறி பிரதிஷ்டை செய்து பூசிப்பார்.

சிற்பங்களைக் கருப்பகிருஹத்தில் பீடத்தில் பொருத்தி நிறுத்துவதை ஸ்தாபனம் என்றும், சிற்பங்களுக்கு மந்திரங்களால், தெய்வ உரு வடித்து உருவகிப்பதை *பிரதிஷ்டை செய்தல்* என்றும் கூறுகிறோம்.

கும்பாபிஷேகத்தின்போது குருக்கள் பிரதிஷ்டை செய்கிறார்கள். இவ்வாறு செய்யும் பிரதிஷ்டையில், சைவசித்தாந்த தத்துவங்கள் அனைத்துமே உருவக வடிவம் பெறுகின்றன.

சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்யும்போது அத்தனை தத்துவங்களும் மந்திரத்தால் ஆவாஹணம் செய்யப்படுகின்றன.

இவற்றை ஆகம நூல்களும் பக்தி நூல்களும் கூறுகின்றன. முப்பத்தாறு தத்துவங்கள் இவ்வாறு மந்திர உருவமாக அமைக்கப்படுகின்றன.

இதற்கு *மந்திரந்யாஸம்* என்றும் பெயர். தியானத்தினால் பல தத்துவங்களும் சிவலிங்கத்தில் இருப்பதாக பாவித்தல் ஆகும்.

அகோரசிவாசாரியார் என்ற பெரியவர், இரண்டாவது இராஜராஜசோழன் காலத்தில் 1150-ல் வாழ்ந்தவர். 

இவர் ஒரு பத்ததியை எழுதியிருக்கிறார். அதுதான் பெரும்பாலான சிவாலயங்களில் இன்றும் கும்பாபிஷேகத்துக்குப் பயன்படுத்தப்படுகிறது.

இதில் சிவலிங்கத்தை எவ்வாறு பிரதிஷ்டை செய்யவேண்டும் என்று கூறியுள்ளார். அது மிகவும் விரிவான பகுதி. அதன்படி ஆகாச தத்துவத்தில் கோகர்ணம், மஹாபலம், அவிமுக்தம் (காசி) ருத்ரகோடி முதலிய இடங்களை தியானிக்க வேண்டும்.

வாயு தத்துவத்தில் பீமேச்சுரம், மாஹேந்திரம், விமலேச்சுரம், நகுளேச்சுரம், குருக்க்ஷேத்திரம், கயை ஆகிய தலங்களை தியானிக்க வேண்டும்.

அக்னியாகிய தத்துவத்தில் கேதாரம், மகாகாளம், மத்யமேச்சுரம், ஜல்பேச்சரம் ஆகியவற்றையும் மற்றும் அரிச்சந்திரம், லகுளீச்சுரம் முதலிய தலங்களையும் ஆவாஹிக்கவேண்டும் என்று கூறியிருக்கிறார்.

ஆவாஹனம் என்றால் தியானத்தால் இங்கு எழுந்தருள வேண்டுதல் என்பனவாகும். சுருங்கச் சொன்னால், நம் ஊரில் சிவலிங்கத்தைப் பிரதிட்டை செய்யும் போது, எத்தனை புண்ணிய சிவக்ஷேத்திரங்கள் உண்டோ அவை அனைத்தையும் இங்கேயே இருப்பதாக தியானித்தல்தான் பிரதிஷ்டையின் தத்துவம் ஆகும்.

இந்த தத்துவங்கள் எல்லாம் அப்பர் காலத்தில் இருந்தனவா? அப்பர் இந்த கோயில்களை எல்லாம் கூறியிருக்கிறாரா? என்று ஐயம் தோன்றலாம்.

தத்துவங்களைப் பற்றி அப்பர் பெருமான் பல இடங்களில் பாடியுள்ளார். அதேபோல் கயிலாயமலை, காரோணம், கந்தமாதனம், மாகாளம் முதலிய தலங்களையும் பல இடத்தில் பாடுகிறார்.

கீழ்வரும் அவரது பாடலைப் பாருங்கள்.

*நாடகம் ஆடிடும் நந்திகேசுரம் மாகாளேச்சுரம் நாகேச்சுரம் நாகளேச்சுரம் நன்கான*

*கோடீச்சுரம் கொண்டீச்சுரம் திண்டீச்சுரம் குக்குடேச்சுரம் அக்கீச்சுரம் கூறுங்கால்*

*ஆடகேச்சுரம் அகத்தீச்சுரம், அயனீச்சுரம், அத்தீச்சுரம் சித்திச்சுரம் அந்தண் கானல்*

*ஈடுதிரை இராமேச்சுரம் என்றென்று ஏத்தி இறைவனுறை சுரம் பலவும் ஏத்துவோமே.* என்று பாடியிருக்கிறார்.

எங்கு சிவபெருமான் உறைகிறாரோ அதுதான் கயிலாயம். எல்லாத் தலங்களும் அதுவே. ஆதலின் உங்கள் ஊரிலேயே, சிற்றூராயினும் சரி, பேரூராயினும் சரி, சிவாலயம் இருக்குமானால் அங்கு கயிலாய நாதன் திகழ்கிறார் என்னும் மகத்தான சிவநெறியைக் பாடலில் கூறுகிறார் அப்பர் பெருமான்.

எவ்வூராயினும் அங்கு க்ஷேத்திரக் கோவையைப் படியுங்கள். அத்தனை புண்ணியச் க்ஷேத்திரமும் இங்கேயே உள்ளன. கயிலாய நாதனைக் காணலாம் என்பதுதான் அப்பருடைய உரைப்பு.

                 திருச்சிற்றம்பலம்.

No comments:

Post a Comment