Thursday, April 19, 2018

Thiruvancaikulam temple

சிவாயநம திருச்சிற்றம்பலம்.
பதியும் பணியே பணியாய் அருள்வாய்.
*கோவை கு கருப்பசாமி.*
-------------------------------------------------------
*தினமும் ஒரு பாடல் பெற்ற தல தரிசனம்:*
(நேரில் சென்று தரிசித்ததைப் போல................)
--------------------------------------------------------
*தேவாரம் பாடல் பெற்ற தல தொடர் எண்: 265*

*பாடல் பெற்ற சிவ தல தொடர்:*

*சிவ தல அருமைகள் பெருமைகள்:*

*🏜திருவஞ்சைக்களத்தப்பர் திருக்கோயில், திருவஞ்சைக்குளம்:*
--------------------------------------------------------
பாடல் பெற்ற சிவ தலங்களில், மலை நாட்டு திருத்தலம் இது ஒன்றுதான்.

கேரள மாநிலம் பிரசித்தமான கொடுங்களூர் பகவதி அம்மன் திருக்கோயிலிலிருந்து சுமார் இரண்டு கி.மீ தொலைவில் இருக்கிறது.

இந்த ஊரை *திருவஞ்சிக்குளம்* என்று அழைக்கிறார்கள்.

கொடுங்களூரிலிருந்து
நகரப்பேருந்து மூலம் இத்தலத்தை அடையலாம். கொடுங்களூரில் தங்குவதற்குப் பல விடுதிகள் இருக்கின்றன.
-------------------------------------------------------
தேவாரம் பாடல் பெற்ற தலங்களில் மலை நாட்டில் அமைந்துள்ள ஒரே தலமானது இத்தலம்.

*🌙இறைவர்:* அஞ்சைக்களத்தப்பர், மகாதேவர்.

*💥இறைவி:* உமையம்மை.

*🌴தல விருட்சம்:* சரக்கொன்றை.

*🌊தல தீர்த்தம்:* சிவகங்கை.

*ஆலயப்பழமை:* இரண்டாயிரத்திலிருந்து மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னதானது.

*🛣இருப்பிடம்:*
கேரள மாநிலத்தில் திருச்சூரிலிருந்து முப்பத்திரண்டு கி.மீ. தொலைவிலும், இருஞ்சாலக்குடா கோயிலிருந்து எட்டு கி.மீ. தொலைவிலும், கொடுங்களூர் பகவதியம்மன் கோயிலிலிருந்து ஒன்றரை கி.மீ. தொலைவிலும் திருவஞ்சைக்களம் திருக்கோயில் அமைந்துள்ளது. 

*🏜கோயில் அமைப்பு:*
திருவஞ்சைக்களம் எனும் பெயரினை திருவஞ்சிக்குளம் என்றே கேரளத்தவர்கள் குறிப்பிடுகிறார்கள்.

கேரள நாட்டுக்கே உரிய கட்டிடக் கலைப் பாணியுடன் மூன்று அடுக்குகளைக் கொண்ட ஓடுவேயப் பெற்ற கூரைகளுடன் கிழக்கு நோக்கியவாறு திருவாயில் அமைந்திருந்தது.

இது கேரள கோபுர அமைப்பாகும். மேற்கு திசையில் வாயில் இருந்தாலும் அங்கு கோபுரம் இல்லை.

*சிவ சிவ, சிவ சிவ* என மொழிந்து கிழக்கு வாயில் கடந்து உள்ளே சென்றோம்.

பெரிய ரிஷபக் கொட்டில் இருந்தது. இதில் காளையார் படுத்த நிலையில் காட்சி தருகிறார். 

இதன் நேர் எதிரே மூலவர் கருவறை ஸ்ரீவிமானம்  தெரிந்தது. கையுர்த்தி வணங்கிக் கொண்டோம்.

அஞ்சைக் களத்தப்பர் லிங்கத் திருமேனி மிகவும் உயரம் குறைவாக காட்சி தந்து அருளிக் கொண்டிருந்தார்.

ஈசன் முன் வந்து நின்று மனமுருக பிரார்த்தனை செய்து வணங்கிக்கொண்டு அர்ச்சகரிடம் வெள்ளிய விபூதியைப் பெற்றுக் கொண்டு வெளிவந்தோம்.

சுவாமி சந்நதிக்கு வடபுறத்தில் பள்ளியறை மண்டபம் இருந்தது.

இதனையடுத்து பகவதி சந்நதிக்குச் சென்று, இங்கேயும் பிரார்த்தனை செய்து வணங்கிக்கொண்டு நகர்ந்தோம்.

அடுத்து நடராஜரும், சிவகாமியும் இருக்கும் சபா மண்டபத்திற்கு வந்து, ஆடவல்லானின் தூக்கிய திருவடியையும், திருமுகத்தையும் கண்டு வணங்கிக் கொண்டோம். 

சிவகாமி அம்மையையும் வணங்கி அவளருட் பெற நினைந்தோம்.

ஈசான் திக்கில் சண்டீசர் கோயில் கோயில் கொண்டிருந்தார். இவரை வணங்கும் நெறிமுறையுடன் வணங்கிக் கொண்டு நகர்ந்தோம்.

தென்புற திருச்சுற்றில் வரும்போது, மாளிகைப் பத்தியில் சேரமான், சுந்தரர் செப்புத் திருமேனிகளைக் கண்டோம். சிரமேற் கைகள் உயர்த்தி குவித்து தொழுது கொண்டோம்.

இதனின் மேற்குதிக்கில் கணபதியாரைக் காணவும், சடுதியில் காதுகளைப் பிடித்துத் திருகி தோப்புக்கரணமிட்டுக் தொழுது வணங்கிவிட்டு நகர்ந்தோம்.

இதற்கடுத்தாற்போல, பிருங்கி, சிவலிங்கம்  தனித்தனிச் சிறு கோயில்களாக அமைந்திருந்தன. இருவரையும் ஒருசேர வணங்கியபடியே நகர்ந்தோம்.

வெளித் திருச்சுற்றில் வருகையில்,  சுப்பிரமணியர், துர்க்கை, சாஸ்தா கோயில்கள் இருந்தன.

ஒவ்வொன்றையும் தொடர்ச்சியாக வணங்கிக் கொண்டோம்.

வடமேற்குப் பகுதியில், *கங்கை* என்ற பெயரில் சிறிய குளம் காணப்படுகிறது. அருகில் சென்று தீர்த்தத்தை வாரி அள்ளியெடுத்து சிரசிற்கு வார்த்து இறைவனை நினைந்து வணங்கிக் கொண்டோம்.

வடக்குப் பிராகாரத்தில் கொன்றை மரமான தலமரம் இருப்பதைக் கண்டோம். விருட்சத்தை தீண்டப்பெறாமல், அருகில் நின்று வணங்கிக் கொண்டோம்.

பொதுவாக, கேரள நாட்டுக் கோயில்களில் நடராஜரை நாம் காணமுடியாது. இங்கு மட்டும் நடராஜர், சிவகாமி செப்புத் திருமேனிகளும், சண்டீசர் கோயிலும் இங்கு திகழ்வது சிறப்பு அம்சமானதாகும்.

இது தமிழ்நாட்டு கோயில் அமைப்பு முறையைக் கொண்டது.

இங்கு திகழும் நடராஜப் பெருமானின் செப்புத் திருமேனியின் பீடத்தில் *அஞ்சைக் களத்து சபாபதி* என்று தமிழில் பொறிக்கப் பட்டிருக்கிறது.

திருவஞ்சைக்களத்து கோயிலில் காணப்பெறும் பழம் கல்வெட்டுகளாகத் தமிழ் கல்வெட்டுகள் பல இடம் பெற்றிருக்கிறது.

முன்காலத்தில் கேரளத்தின் மொழியாகத் தமிழ்தான் இருந்தது என்பதற்கு இது போன்ற பல கல்வெட்டுகள் அங்கு சான்று.

சுந்தரர் திருவஞ்சைக்களத்தில் மூன்று பதிகங்களைப் பாடியதோடு நிறைவாக யானை மீது ஏறி நீள் விசும்பில் கயிலை செல்லும்போது பாடிய பதிகமும் அஞ்சைக்களத்தப்பர்க்கே என்று அவரே பாடியுள்ளமையால் நான்கு தேவாரப் பதிகங்களைப் பெற்ற சிறப்புடைய தலம் இதுவாகும்.

தஞ்சைப் பெரிய கோயிலை எடுப்பித்த இராஜராஜசோழன் அவ்வாலயத்து கருவறையைச் சுற்றியுள்ள அறையில் திருவஞ்சைக்களத்துக் கோயிலில் பதிகம் பாடும் சுந்தரரின் காட்சியும், யானை மீதேறிச் செல்லும் சுந்தரரும், குதிரை மீதேறிச் செல்லும் சேரமான் பெருமாளும் விண்ணகம் வழியே கயிலை செல்லும் காட்சிகளும், கயிலையில் சுந்தரரும் சேரமான் பெருமாளும் ஈசனார் முன்பு அமர்ந்திருக்க, சேரர் திருக்கயிலாய ஞான உலா பாடும் காட்சி என அற்புதக் காட்சிகளை வண்ண ஓவியமாகத் தீட்டச் செய்திருப்பதை அவ்வாலயத்தில் நாம் கண்டு லயித்திருப்போம்.

மெருகோடு திகழும் அவ்வோவிய காட்சியில் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு திருவஞ்சைக்களம் கோயில் எவ்வாறு திகழ்ந்தன என்பது தத்ரூபமாக அங்கே சித்திரமாக்கி இருக்கிறார்கள்.

தற்காலத்தில் அங்கு *அஞ்சைக் களத்து சபாபதி* என்று தமிழில் பெயர் பொறிக்கப் பெற்றதைக் காணும்போதும்,  நடராஜர் திருமேனியைக் கண்டுமீ, ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பும் சேர நாட்டில், சோழர் காலப் பாணியில் அமைந்த இந்நடராஜர் திருமேனி சோழர்கால ஓவியமாக ஒளிர்கிறது.

திருவஞ்சைக்களத்துப் பெருமானை நீங்களும் சென்று வணங்கவேண்டும், உய்வு பெறவேண்டும் என்பது அடியேனின் விருப்பம்.

*தல சிறப்பு:*
இங்குள்ள சிவாலயத்தில் உள்ள நடராசமூர்த்தியின் பீடத்தில் *"அஞ்சைக்களத்து சபாபதி"* என்று தமிழில் செதுக்கப்பட்ட மூர்த்தியை சேரமான் நாயனார் தினமும் வழிபட்ட மூர்த்தியாகும்.

இறைவருடைய தலையில் உருத்திராக்கமாலை அணிந்திருக்கிறார். மூர்த்தியின் தலையிலேயே செதுக்கப்பட்டுள்ள உருத்திராக்கமாலை இறைவருக்கு பால் அபிசேகம் செய்யும் பொழுது தெளிவாகத் தெரிகிறது.

*"தலைக்கு தலை மாலை அணிந்ததென்னே"*என்ற சுந்தரர் பாடல் வரிகள் நமக்கு நினைவுக்கு வருகிறது. 

சுந்தரர், சேரமான் பெருமாள் நாயனார் ஆகியோருடைய உற்சவத்திருமேனிகளும் இக்கோவிலில் இருக்கின்றன.

இவர்கள் இருவரும் முறையே வெள்ளையானையிலும் குதிரையிலும் திருக்கயிலாயம் சென்றவர்கள் ஆவர்.

அருகில் உள்ள *"மேல்மகோதை"* கடற்கரையிலிருந்துதான் இவர்கள் திருக்கயிலாயம் புறப்பட்டு சென்றதாக புராணங்கள் கூறுகின்றன.

திருக்கயிலை சென்று அங்கிருந்து தான் வந்து சேர்ந்ததை அஞ்சைக்களத்தப்பருக்கு சுந்தரர் அறிவிப்பதாக தேவரப்பாடலில் தெரிவிக்கிறார்.

இன்றும் ஆடி மாத சுவாதி திருநட்சத்திரத்தன்று கோயம்புத்தூர் சேக்கிழார் திருக்கூட்டத்தினரால் சுந்தரர் குருபூசை இத்தலத்தில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகின்றது.

(கடந்த என்பது ஆண்டுகளாக சீரும் சிறப்பாக தொடர்ந்து நடத்தி வருகிறார்கள்.)

பரசுராமர் தன் தாயை கொன்ற பாவம் தீர வழிபட்ட தலமும் இதுவாகும்.

திருக்கோவிலின் முன்பு அழகிய உப்பங்கழி இருக்கிறது.

சேரநாட்டை ஆண்டு வந்த பெருமாக் கோதையார் என்ற மன்னன் சிறந்த சிவபக்தன் திருவஞ்சிக்குளம் உமாமகேஸ்வரர் மேல் தீராக் காதல் உடையவன்.

அவன் உள்ளத் தூய்மையுடன் சிவனை வணங்கும்போதெல்லாம் தில்லை அம்பலக்கூத்தனின் சிலம்பொலி கலீர் கலீரெனக் கேட்பதை உணர்ந்து வருபவர்.

சிலம்பொலி நாதம் கேட்ட பின்புதான் மன்னன் அமுதுண்ணுவது வழக்கத்தைக் கொண்டிருந்தான்.

ஒருநாள் சேரமான் இறைவனை வழிபடும் போது சிலம்பொலி
கேட்க வில்லை.

மன்னன் திகைப்படைந்தான். தன் பக்தியில் ஏதோ ஒரு குறை நேர்ந்துவிட்டதோ! என ஐயம் கொண்டான். அதனால்தான் சிலம்பொலி கேட்கவில்லையோ? எனக் கருதி, தன் உடைவாளை உருவி தன்னுயிரை மாய்த்துக் கொள்ளத் துணிந்தான்.

அப்போது சிலம்பொலி அதிர, சேரமான் முன்பு ஈசன் தோன்றி, வருந்தாதே மன்னா! என் பக்தன் சுந்தரன் தேனினும் இனிய பாடல்களால் தினமும் என்னை அபிஷேகம் செய்வான்.

இன்றைய பாடல் அபிஷேகத்தில் நான் மெய்மறந்து இருந்து விட்டேன். எனவேதான் சிலம்பொலி கேட்க சற்று தாமதமாகிவிட்டது என்றார்.

ஈசனின் இதயத்தையே உருக்கும் பாடல்களைப் புனையும் அத்தகையதரான சுந்தரரை இதுவரை நான் அறியாது இருந்திருக்கிறோமே!? என்றெண்ணிய சேரன்.......

மறுநாள் தில்லை புறப்பட்டுச் சென்றான். அம்பலவாணரைத் தரிசித்தான். பின் திருவாரூர் சபாபதியைத் தரிசித்துவிட்டு சுந்தரரின் இல்லம் தேடிச் சென்றான்.
அவருடன் நட்பு கொண்டு அளவளாவி மகிழ்ந்தான்.

சேரன் தனது பூர்வீகமான திருவஞ்சிக்குளத்துக்கு வருமாறு சுந்தரருக்கு அழைப்பு விடுத்தான்.

அவரது அழைப்பையேற்று வஞ்சிக்குளம் சென்று, சிறிது காலம் அங்கு கோயில் கொண்டுள்ள ஈசனை ஆராதித்து மகிழ்ந்தார் சுந்தரர்.

பின் தன் நாடு திரும்பிய சுந்தரர் தொண்டை மண்டலம் பாண்டிநாடு என பல சிவத் தலங்களையும் தரிசித்து விட்டு மீண்டும் திருவஞ்சிக்குளம் சென்றார்.

சேரனின் நட்பு அவரை காந்தமென ஈர்த்தது. தன்னைக் காண வந்த சுந்தரரை மன்னன் மேளதாளங்களுடன் வரவேற்று, யானைமீது அமரச் செய்து ஊர்வலமாக அழைத்துச் சென்றான்.

அரியணையில் அமர்த்தி பாத பூஜை செய்து கெளரவித்தான். சுந்தரரும் அங்கேயே தங்கி மலைநாட்டுப் பதிகள் பல கண்டு வழிபட்டார்.

சுந்தரர் கயிலை செல்ல வேண்டிய நேரம் வந்தது. தலைக்குத் தலை மாலை என்ற பதிகம் பாடிக் கொண்டிருந்தார்.

இப்பாடலைக் கேட்ட இறைவன், வெள்ளை யானையை அனுப்பி சுந்தரரை அழைத்து வரும்படி சிவகணங்களுக்கு உத்தரவிட்டார்.

சேரமானைக் கண்டு விடைபெற்று செல்ல சுந்தரர் நினைத்தார். ஆனால் சிவகணத்தார்கள் நம்மை அழைத்துப் போக காத்திருப்பதைக் கண்டார்.

சிவகணத்தவரை காக்க வைக்கும் நோக்கமிலாத சுந்தரர், யானையின் மீதேற சிவகணத்தார்கள் கயிலைக்கு அழைத்துச் சென்றனர்.

அமரர்கள் சூழ யானையின்மீது கயிலாயம் சென்ற சுந்தரரின் நெஞ்சம் முழுவதும் நண்பன் சேரமான் பெருமாளை நினைத்தபடியேதான் இருந்தார்.

சுந்தரரைக் காணாததை தன் உள்ளுணர்வால் சுந்தரர் எங்கேயிருகிறார் என அறிய முனைந்தார்.

சேரமான் பெருமாள் உள்ளுணர்வால், சுந்தரர் விண்ணிலேறி கயிலை செல்வதைக் உணர்ந்தார்.

உடனே, இவரும் தன் வெண்புரவியில் ஏறியமர்ந்து, அதன் காதில் நமசிவாய எனும் ஐந்தெழுத்தை ஓதினார்.

விண்ணில் சென்ற யானையைத் தொடர்ந்து சென்றது குதிரை, இருவரும் கயிலையை அடைந்தாலும் காவலர்கள் சேரமானை உள்ளே அனுமதிக்காமல் வாயிலில் நிறுத்தி வைத்திருந்தனர்.

சுந்தரர் இறைவனை அடைந்து அவரை வணங்கி, என் ஆருயிர் நண்பன் சேரமான் வாயிலில் காத்திருக்கிறார் கருணை கூர்ந்து அவரையும் உள்ளே அழையுங்கள் என்று வேண்டி நின்றார்.

அடியார்க்கு அருளாமல் வேறு யாருக்கு ஈசன் அருளுவான்? சேரமான் பெருமாளை உள்ளே அனுமதித்ததோடு, இனி நீங்கள் இருவரும் சிவகணங்களுக்குத் தலைவர்களாக இருப்பீர்கள் என அருள் புரிந்தார்.

இவ்வாறு சுந்தரனுக்கும் சேரமானுக்கும் ஈசன் கயிலாயப் பதவி அருளிய நன்னாள்தான் ஆடி சுவாதித் திருநாள் ஆகும்

திருவஞ்சிக்குளத்தில் இந்த நன்னாளை ஆண்டுதோறும் பெரிய திருவிழாவாகக் கொண்டாடி வருகின்றனர்.

இவ்விழாவில் தமிழகத்திலிருந்து நிறைய சிவபக்தர்கள் சென்று கலந்துகொள்வர்.

விழாவின் முதல் நாள் இரவன்று கொடுங்கலூர் பகவதியம்மன் ஆலயத்திலுள்ள சுந்தரர், சேரமானின் உற்சவ மூர்த்திகளுக்கு அபிஷேக அலங்கார ஆராதனை செய்து, யானை மற்றும் குதிரை வாகனத்தில் அமரவைத்து மேள தாளங்களுடன் அஞ்சிக்குளத்திற்கு ஊர்வலமாக அழைத்து வருவர்.

மறுநாள் காலை சுந்தர மூர்த்தி நாயனாருக்கு தமிழக பாணியில் கோலாகலமான குருபூஜை விழா நடைபெறும்.

மேலும் அன்றைய தினம் அஞ்சைக் குளத்திலுள்ள அத்தனை உற்சவ மூர்த்திகளுக்கும் அபிஷேக ஆராதனை நடைபெறும்.

திருவஞ்சிக்குளம் ஆலயம் மட்டும்தான் கேரளத்திலேயே தேவாரச் சிறப்புப் பெற்ற ஒரே தலமாகும்.

சுந்தரரால் பாடப்பெற்ற மலைநாட்டுத் தலம் என்ற சிறப்பும் இதற்குண்டு.

கேரளாவிலேயே பள்ளியறை பூஜை நடக்கும் ஒரே தலமும் இதுவாகும்.

சேரமானுக்கும் தில்லை சிதம்பரத்துக்கும் நெருங்கிய தொடர்புண்டு என்பதால், இத்தலத்தை மேலைச் சிதம்பரம் என்றும் கூறுவர்.

இவ்வாலயத்தின் கிழக்குக் கோபுரத்தின் அடித்தளத்தில் யானை மீதமர்ந்த சுந்தரர் கோலமும், குதிரைமீதமர்ந்த சேரமான் கோலமும் சிறப்பாக வடிக்கப்பட்டு உள்ளதைக் காணலாம்.

*கயிலையைக் கண்டவர்கள்:*
 சுந்தரமூர்த்தி நாயனாரை சிவனே வெள்ளை யானையை அனுப்பி கயிலைக்கு அழைத்துச் கொண்டார்.

அவரை தனது வெண்புரவியில் தொடர்ந்து சென்ற சேரமானும் கயிலையை அடைந்தார்.

ஒளவையார் தானும் விரைவில் கயிலை செல்லும் ஆவலில், பிள்ளையாருக்கு விரைவாக பூஜை செய்ய, பிள்ளையார் தன் துதிக்கையால் அவ்வையாரைத் தூக்கிச் சென்று கயிலையில் சேர்த்தார்.

இவர்களுக்கெல்லாம் முன்னதாக கயிலைக்கு வந்தவர் காரைக்கால் அம்மையார். பேயுருங் கொண்டு தன் தலையாலே நடந்து கயிலை வந்தவரை ஈசன் அம்மையே என்றழைத்து, பின்னர் திருவாலங்காட்டில் தன் நடனத்தைக் காட்டியருளி தன் திருவடி நிழலில் சேர்த்துக்கொண்டார்.

கயிலையை அடைய அப்பர் பெருமான் உடல் தளர்ந்து பாதம் நோக யாத்திரை மேற்கொண்டபோது. ஈசன் இக்குளத்தில் மூழ்கி திருவையாற்றில் எழுக என அருளினார்.

அதுபோல் அங்கே கயிலாயக் காட்சியைத் தந்து  அவ்வாறே அருளினார். 

*ஒளவையும் கைலாசம் சென்றார்:*
சுந்தரரும், சேரமான் பெருமாளும் ஆகாயத்தில் விரைந்து சென்று கொண்டிருக்கையில் கீழே பூவுலகில் ஒளவை பாட்டி திருக்கோயிலூர் வீரட்டேஸ்வரர் (விழுப்புரம் மாவட்டம்) ஆலய பரிவாரத்தெய்வமாக இருக்கும் விநாயகருக்குப் பூசைகள் செய்து கொண்டு இருப்பதைக் கண்டனர்.

இவர்கள் அவரையும் தம்முடன் இணைந்து கைலாயத்துக்கு வருமாறு அழைத்தனர்.

அதற்கு ஒளவையும் பூஜையை முடித்து விட்டு வருகிறேன் என சொல்லி,  விநாயகருக்கு பூஜைகளை அவசர அவசரமாக செய்தார்.

உடனை பிள்ளையார் ஒளவையைப் பார்த்து.........
எனக்கு பூஜையை நிதானமாக செய்!.  பூசை முடிந்த பின் தான் கைலாசம் என்று கூறி பூசைகளைத் தொடரச் செய்தார்.

பூசைகளால் மகிழ்வுற்ற விநாயகரும் நேரில் தோன்றி ஒளவையினால் படைக்கப்பட்ட அமுது முதலான சிற்றுண்டிகளை மிக நிதானமாக ரசித்து உண்டார்.

இறுதியில் ஓளவையின் பூசைகளாலும் படையல்களாலும் மகிழ்ச்சியடைந்த விநாயகர், *'ஒளவையே உனக்கு யாது வேண்டும் கேள்?'* என்றார்.

ஒளவையும், உனதருளன்றி வேறென்ன வேண்டும் எனக்கு என்றார்.

விநாயகரும், உலகிலுள்ள குழந்தைகளுக்கு எல்லாம் அறிவூட்டப் பாடிய நீ தெய்வக்குழந்தையான என் மேலும் ஒரு பாட்டு பாடு என்றார்.

உடனே ஒளவையும் *'சீதக்களப செந்தாமரைப் பூம்பாதச் சிலம்பு பல இசைபாட பொன் அரை ஞாணும் பூந்துகில் ஆடையும்'* என ஆரம்பித்து  விநாயகரால் தனக்கருளப் பட்ட யோக சித்தியின் மதிப்பும் சிறப்பும்  உலக மக்களுக்கு விளக்கும் வகையில் எழுபத்திரண்டு அடிகளையுடைய விநாயகர் அகவலை பாடினார்.

இதனைக் கேட்டு மகிழ்ந்த விநாயகரும் ஒளவையின் ம
கயிலையின் எண்ணத்திற்கு உதவ, தன் துதிக்கையால் ஒரே தூக்கு தூக்கி, சேரமான் மற்றும் சுந்தரர் ஆகியோர் போய்ச் சேர்வதற்கு முன்பாக கைலையில் இறக்கி வைத்தார்கள் விநாயகர்.

கைலையை அடைந்த சேரமான் மற்றும் சுந்தரர் ஆகியோர் வியப்புடன் ஒளவையிடம் எவ்வாறு எங்களுக்கு முன் கைலாயம் வந்தாய் என வினவினார்கள்.

ஒளவையும் சேரனை பார்த்து பின்வரும் பாடல் மூலம் பதில் தந்தார்.
*'மதுர மொழி நல் உமையாள் சிறுவன் மலரடியை முதிர நினைய வல்லார்க்கு அரிதோ? முகில் போல் முழங்கி அதிரவரும் யானையும் தேரும் அதன் பின் சென்ற குதிரையும் காதம் கிழவியும் காதம் குல மன்னனே'*

இக்கோயிலில் அம்மன் தனி சன்னதியில் இல்லாமல் சிவனின் கருவறைக்குள்ளாக ஈசனருகில் இணைந்து சதாசிவ கோலத்தில் அருள்பாலிக்கிறார்.

இங்குள்ள நடராசர் பஞ்சலோகச்சிலையாக இருக்கிறார். 

*சுந்தரர் தேவாரம்:*
1.🔔தலைக்குத் தலை மாலை அணிந்தது என்னே 
சடைமேல் கங்கை வெள்ளம் தரித்தது என்னே
அலைக்கும் புலித்தோல் கொண்டு அசைத்தது என்னே 
அதன் மேல் கதநாகம் கச்சு ஆர்த்தது என்னே
மலைக்கு நிகர் ஒப்பன வன் திரைகள் 
வலித்து எற்றி முழங்கி வலம்புரி கொண்டு
அலைக்கும் கடலங்கரை மேல்மகோதை 
அணியா பொழில் அஞ்சைக்களத்து அப்பனே.

🙏மலைக்கு நிகராகிய தன்மையால் தம்மில் ஒப்பனவாகிய வலிய அலைகள் வலம்புரிச் சங்குகளைப் பற்றி ஈர்த்து வந்து எறிந்து முழங்கி மோதுகின்ற கடலினது அழகிய கரையின் கண்ணதாகிய "மகோதை" என்னும் நகரத்தின்கண் உள்ள, அழகு நிறைந்த சோலைகளையுடைய, "திருவஞ்சைக்களம்" என்னும் திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கின்ற தந்தையே, நீ தலைக்கு அணிகலமாகத் தலை மாலையை அணிந்தது என்? சடையின்மேல் "கங்கை" என்னும் ஆற்றைத் தாங்கியது என்? கொல்லும் தன்மையுடைய புலியினது தோலை உரித்தெடுத்து அரையில் உடுத்தது என்? அவ்வுடையின்மேல் சினத்தையுடைய பாம்பைக் கச்சாகக் கட்டியது என்?.

2.🔔பிடித்து ஆட்டி ஓர் நாகத்தைப் பூண்டது என்னே 
பிறங்கும் சடை மேல் பிறை சூடிற்று என்னே 
பொடித்தான் கொண்டு மெய்ம் முற்றும் பூசிற்று என்னே 
புகர் ஏறு உகந்து ஏறல் புரிந்தது என்னே

மடித்து ஓட்டந்து வன்திரை எற்றியிட 
வளர் சங்கம் அங்காந்து முத்தம் சொரிய
அடித்தார் கடலங்கரை மேல்மகோதை 
அணியார் பொழில் அஞ்சைக்களத்து அப்பனே.

🙏வலிய அலைகள் தம் வடிவத்தைச் சுருளாகச் செய்து ஓடிவந்து மோதுதலினால், கரு வளர்கின்ற சங்குகள் வாய் திறந்து முத்துக்களை ஈன, இங்ஙனம் அலைத்து முழங்குகின்ற கடலினது அழகிய கரையின் கண்ணதாகிய "மகோதை" என்னும் நகரின்கண் உள்ள, அழகு நிறைந்த சோலைகளையுடைய திருவஞ்சைக்களம் என்னும் திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கின்ற தந்தையே, நீ, விரும்பத் தகாத பாம்பை பிடித்து ஆட்டுதலையும், பூணாகப் பூணுதலையும் மேற்கொண்டது என்? விளங்குகின்ற சடையின்கண் பிறையைச் சூடியது என்? சாம்பலை எடுத்து உடம்பு முழுதும் பூசிக் கொண்டது என்? இழிந்த எருதினையே ஊர்தியாகக் கொள்ள விரும்பியது என்?.

3.🔔சிந்தித்து எழுவார்க்கு நெல்லிக்கனியே 
சிறியார் பெரியார் மனத்து ஏறல் உற்றால்
முந்தித் தொழுவார் இறவார் பிறவார் 
முனிகள் முனியே அமரர்க்கு அமரா
சந்தித் தடமால் வரை போற்றிரைகள் 
தணியாது இடறும் கடலங்கரை மேல் 
அந்தித்தலைச் செக்கர்வானே ஒத்தியால் 
அணியார் பொழில் அஞ்சைக்களத்து அப்பனே.

🙏மூங்கில்களையுடைய பெரிய மலைகள் போலும் அலைகள் இடைவிடாது மோதுகின்ற கடலினது அழகிய கரையின் கண்ணதாகிய, அழகு நிறைந்த சோலைகளையுடைய திருவஞ்சைக்களம் என்னும் திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கின்ற தந்தையே, உன்னை நினைந்து துயிலுணர்வார்க்கு நெல்லிக்கனி போன்றவனே, முனிவர்கட்கெல்லாம் முனிவனே, தேவர்கட்கெல்லாம் தேவனே, உன்னை உள்ளந்தெளியப்பெற்றால், சிறியாரும் பெரியாராவர். விரைந்து வந்து உன்னை வணங்குபவர், இறத்தலும் பிறத்தலும் இலராவர். அவரது உள்ளத்தைப் பிணித்தற்கு, நீ, மாலைக் காலத்தில் தோன்றும் செவ்வானம் போலும் அழகிய திருமேனியை உடையையாய் இருக்கின்றனை.

4.🔔இழைக்கும் எழுத்துக்கு உயிரே ஒத்தியால் 
இலையே ஒத்தியால் உளையே ஒத்தியால்
குழைக்கும் பயிர்க்கு ஓர் புயலே ஒத்தியால் 
அடியார் தமக்கோர் குடியே ஒத்தியால் 
மழைக்கு(ந்) நிகர் ஒப்பன வன் திரைகள் 
வலித்தெற்றி முழங்கி வலம்புரி கொண்டு 
அழைக்கும் கடலங்கரை மேல்மகோதை 
அணியார் பொழில் அஞ்சைக்களத்து அப்பனே.

🙏துளிகளைத் தூற்றுதலால் மேகத்திற்கு நிகராகும் தன்மையில் தம்மில் ஒப்பனவாகிய வலிய அலைகள், பல பொருள்களை ஈர்த்து வந்து மோதி முழங்கி, வலம்புரிச் சங்கின் இனிய ஓசையால் யாவரையும் தன்பால் வருவிக்கின்ற கடலினது அழகிய கரையின் கண்ணதாகிய "மகோதை" என்னும் தலத்தில் உள்ள அழகு நிறைந்த சோலைகளையுடைய திருவஞ்சைக்களம் என்னும் திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கின்ற தந்தையே, நீ, உலகத்தை இயக்குதலில், எழுதப்படும் எழுத்துக்களுக்கு உயிரெழுத்துப் போல்கின்றாய்; இல்லாதாய் போல்கின்றாய்; ஆயினும் உள்ளாய் போல்கின்றாய்; உயிர்கட்கு உதவுதலில் தளிர்க்கும் பயிர்க்கு மேகம் போல்கின்றாய்; அடியார்களுக்கு அணியையாதலில், அவரோடு ஒருகுடிப் பிறப்பினை போல்கின்றாய்.

5.🔔வீடின் பயன் என் பிறப்பின் பயன் என் 
விடை ஏறுவது என் மதயானை நிற்கக்
கூடும் மலை மங்கை ஒருத்தியுடன் 
சடைமேல் கங்கையாளை நீ சூடிற்று என்னே 
பாடும் புலவர்க்கு அருளும் பொருள் என் 
நிதியம் பல செய்த கலச்செலவின் 
ஆடும் கடலங்கரை மேல்மகோதை 
அணியார் பொழில் அஞ்சைக்களத்து அப்பனே.

🙏பொன், மணி முதலிய செல்வங்களைத் தந்த மரக்கலங்களினது செலவினையுடைய, மூழ்குதற்குரிய கடலினது அழகிய கரையின் கண்ணதாகிய, "மகோதை" என்னும் நகரின்கண் உள்ள, அழகு நிறைந்த சோலைகளையுடைய திருவஞ்சைக்களம் என்னும் திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் தந்தையே, நீ "வீடு, பிறப்பு" என்னும் இரண்டனுள் ஒன்றையே அமையாது, மறுதலைப் பொருள்களாகிய அவ்விரண்டனையும் அமைத்ததன் பயன் யாது? மதத்தையுடைய யானை இருக்க, எருதினை ஊர்வது என்? திருமேனியில் நீங்காது பொருந்தியுள்ள மலைமகளாகிய ஒருத்தியோடு கங்கை என்பவளையும் சடையில் வைத்தது என்? உன்னைப் பாடுகின்ற புலவர்க்கு நீ அளிக்கும் பரிசில் யாது?.

6.🔔இரவத்து இடு காட்டெரி ஆடிற்று என்னே 
இறந்தார் தலையில் பலி கோடல் என்னே
பரவித் தொழுவார் பெறு பண்டம் என்னே 
பரமா பரமேட்டி பணித்து அருளாய்
உரவத்தொடு சங்கமொடு இப்பி முத்தம் 
கொணர்ந்து எற்றி முழங்கி வலம்புரி கொண்டு
அரவக் கடலங்கரை மேல்மகோதை 
அணியார் பொழில் அஞ்சைக்களத்து அப்பனே.

🙏யாவர்க்கும் மேலானவனே, எல்லார்க்கும் மேலிடத்தில் உள்ளவனே, வலிமையோடு "சங்கு, இப்பி, முத்து" என்பவற்றைக் கொணர்ந்து வீசி, வலம்புரிச்சங்கை மேலே கொண்டு முழங்கி, ஆர்ப்பரவத்தையுடையதாகின்ற கடலினது அழகிய கரையின் கண்ணதாகிய "மகோதை" என்னும் நகரின்கண் உள்ள அழகு நிறைந்த சோலைகளையுடைய திருவஞ்சைக்களம் என்னும் திருக்கோயிலின்கண் எழுந்தருளியிருக்கும் தந்தையே, நீ இராப்பொழுதில் புறங்காட்டில் எரியில் நின்று ஆடியது என்? இறந்தவரது தலையில் பிச்சையேற்றல் என்? உன்னை ஏத்தி வணங்குவோர் பெறும்பொருள் யாது? சொல்லியருளாய்.

7.🔔ஆக்கும் அழிவும் அமைவும் நீ என்பன் நான் 
சொல்லுவார் சொல்பொருள் அவை நீ என்பன் நான்
நாக்கும் செவியும் கண்ணும் நீ என்பன் நான் 
நலனே இனி நான் உனை நன்கு உணர்ந்தேன்
நோக்கும் நிதியம் பல எத்தனையும் 
கலத்தில் புகப் பெய்து கொண்டு ஏற நுந்தி 
ஆர்க்கும் கடலங்கரை மேல்மகோதை 
அணியார் பொழில் அஞ்சைக்களத்து அப்பனே.

🙏எப்பொருட்கும் தலைவனே, இன்பம் தருபவனே, விரும்புகின்ற நுகர்ச்சிப் பொருள்கள் எத்துணை வகையினவற்றையும் மிகுதியாக மரக்கலங்களில் ஏற்றி நடுவண் செல்லச் செலுத்தி ஆரவாரிக்கின்ற கடலினது அழகிய கரையின் கண்ணதாகிய "மகோதை" என்னும் நகரின்கண் உள்ள, அழகு நிறைந்த சோலைகளையுடைய "திருவஞ்சைக்களம்" என்னும் திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் தந்தையே, அடியேன் இதுபோழ்து உன்னை நன்குணர்ந்தேன் ஆதலின், எப்பொருளின் ஆக்கத்திற்கும், அழிவிற்கும் காரணன் நீயே என்றும், அவற்றிற்குக் காரணங்களாகப் பிறவற்றைச் சொல்லுவாரது சொற்பொருள்களும் நீயே என்றும், புலனுணர்வுக்குக் காரணமான நாக்கு, செவி, கண் என்பனவும் நீயே என்றும் துணிந்து சொல்லுவேன்.

8.🔔வெறுத்தேன் மனை வாழ்க்கையை விட்டொழிந்தேன் 
விளங்கும் குழைக் காதுடை வேதியனே
இறுத்தாய் இலங்கைக்கு இறையாயவனைத் 
தலை பத்தொடு தோள் பல இற்று விழக்
கறுத்தாய் கடல் நஞ்சு அமுது உண்டு கண்டம் 
கடுகப் பிரமன் தலை ஐந்திலும் ஒன்று 
அறுத்தாய் கடலங்கரை மேல்மகோதை 
அணியார் பொழில் அஞ்சைக்களத்து அப்பனே.

🙏ஒளிவிடுகின்ற குழையையணிந்த காதினையுடைய அந்தணனே, கடலினது அழகிய கரையின் கண்ணதாகிய "மகோதை" என்னும் நகரின்கண் உள்ள, அழகு நிறைந்த சோலைகளையுடைய "திருவஞ்சைக்களம்" என்னும் திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கின்ற தந்தையே, நீ, இலங்கைக்கு அரசனாகிய இராவணனை அவனது பத்துத் தலைகளோடு பல தோள்களும் அற்று விழுவன போலும்படி நெரித்தாய். பாற்கடலில் தோன்றிய நஞ்சினை அமுதமாக உண்டு, கண்டம் கறுப்பாயினாய். பிரமன் தலைகள் ஐந்தனுள் ஒன்றை விரைவில் அறுத்தலும் செய்தாய். அடியேன் எனது மனை வாழ்க்கையை மனத்தாலும் வெறுத்தேன், உடம்பாலும் துறந்து விட்டேன்.

9.🔔பிடிக்குக் களிறே ஒத்தியால் எம்பிரான் 
பிரமற்கும் பிரான் மற்றை மாற்கும் பிரான்
நொடிக்கும் அளவில் புரம் மூன்று எரியச் 
சிலை தொட்டவனே உனை நான் மறவேன் 
வடிக்கின்றன போல் சில வன் திரைகள் 
வலித்து எற்றி முழங்கி வலம்புரி கொண்டு 
அடிக்கும் கடலங்கரை மேல்மகோதை 
அணியார் பொழில் அஞ்சைக்களத்து அப்பனே.

🙏மூன்று அரண்கள், ஒருமுறை கைந்நொடிக்கும் அளவிலே எரிந்தொழியுமாறு வில்லை வளைத்தவனே, முத்துக்கள் முதலியவற்றை வடித்தெடுத்துச் சேர்ப்பனபோல, சில வலிய அலைகள் அவைகளை ஈர்த்து வந்து வீசி, வலம்புரிச் சங்கினால், கரையிலுள்ளாரைத் தாக்குகின்ற கடலினது அழகிய கரையின் கண்ணதாகிய "மகோதை" என்னும் நகரின்கண் உள்ள அழகிய சோலைகளையுடைய, "திருவஞ்சைக்களம்" என்னும் திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கின்ற தந்தையே, நீ பெண் யானைக்கு ஆண் யானை போல உயிர்கட்கு யாண்டும் உடன் செல்லும் துணைவனாய் உள்ளாய்; என் போலும் மக்கட்கும், பிரமன் திருமால் முதலிய தேவர்கட்கும் தலைவனாய் உள்ளாய்; இவற்றையெல்லாம் உணர்ந்து, அடியேன் உன்னை மறத்தல் ஒழிந்தேன்.

10.🔔எம் தம் அடிகள் இமையோர் பெருமான் 
எனக்கு என்றும் அளிக்கும் மணிமிடற்றன்
அந்தண் கடலங்கரை மேல்மகோதை 
அணியார் பொழில் அஞ்சைக்களத்து அப்பனை
மந்தம் முழவும் குழலும் இயம்பும் 
வளர் நாவலர் கோன் நம்பி ஊரன் சொன்ன 
சந்தம் மிகு தண் தமிழ் மாலைகள் கொண்டு 
அடிவீழ வல்லார் தடுமாற்று இலரே.
  

       திருச்சிற்றம்பலம்.

🙏என்போலும் அடியவர்கட்கு முதல்வனும், தேவர்கட்குத் தலைவனும், எனக்கு எஞ்ஞான்றும் அருள்பண்ணும் சிவனும் ஆகிய, அழகிய குளிர்ந்த கரையின் கண்ணதாகிய, "மகோதை" என்னும் நகரின்கண் உள்ள, "திருவஞ்சைக்களம்" என்னும் திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கின்ற தந்தையை, மத்தளமும் வேய்ங்குழலும், "மந்தம்" என்னும் அளவாக இயம்பப்படுகின்ற, நன்மை வளர்கின்ற திருநாவலூரில் உள்ளார்க்குத் தலைவனாகிய நம்பியாரூரன் போற்றிய இசை நலம் மிக்க, தமிழ்ச்சொற்கள் என்னும் மலர்களால் இயன்ற இம்மாலைகளை வாயிலாகக்கொண்டு அப்பெருமானது திருவடிகளில் பணிய வல்லவர் நிலையாமை நீங்கப் பெற்று, நிலைபேறுடையவராவர்.

       திருச்சிற்றம்பலம்.

*தேவாரம் பாடல் பெற்ற தலங்களில் நாளைய தலப்பதிவு கர்நாடகா மாநிலத்திலுள்ள மல்லிகார்ஜுனர் திருக்கோயில், சைவம்.*

-------------------------------------------------------------
*அடியார்களுக்குத் தொண்டு செய்யுங்கள் இறைவன் அவர்களுக்குள்ளிருக்கிறான்.*

No comments:

Post a Comment