Monday, April 23, 2018

Sangameswarar temple

சிவாயநம திருச்சிற்றம்பலம்.
பதியும் பணியே பணியாய் அருள்வாய்.
*கோவை கு. கருப்பசாமி.*
___________________________________
*தினமும் ஒரு பாடல் பெற்ற தல தரிசனம்:*
(நேரில் சென்று தரிசித்ததைப் போல...........................)
___________________________________
*தேவாரம் பாடல் பெற்ற தல தொடர் எண்:258*

*பாடல் பெற்ற சிவ தல தொடர்:*

*சிவ தல அருமைகள் பெருமைகள்:*

*சங்கமேஸ்வரர் திருக்கோயில், திருநணா: ( பவானி )*
_____________________________________
தேவாரம் பாடல் பெற்ற தலங்களில் கொங்கு நாட்டில் அமைந்துள்ள ஏழு தலங்களுள் இத்தலம் முதலாவதாகப் போற்றப்படுகிறது.

*🌙இறைவன்:* சங்க மேஸ்வரர்.

*💥இறைவி:* வேதநாயகி, வேதாம்பிகை.

*🌴தல விருட்சம்:* இலந்தை.

*🌊தல தீர்த்தம்:* பவானி முக்கூடல், காவிரி, அமிர்த நதி, சூரிய தீர்த்தம், சக்கர தீர்த்தம், தேவ தீர்த்தம்.

*🔥ஆகமம்:* காரண ஆகமம்.

*தேவாரம் பாடியவர்கள்:*
திருஞானசம்பந்தர் - 1

*🛣இருப்பிடம்:*
ஈரோட்டில் இருந்து சுமார்  பதினைந்து கி.மி. தொலைவிலும், சேலத்தில் இருந்து ஐம்பத்தாறு கி.மி. தொலைவிலும் பவானி சங்கமேஸ்வரர் தலம்  அமைந்துள்ளது.

பேருந்து வசதிகள் சேலம், ஈரோட்டில் இருந்து பவானிக்கு அடிக்கடி இருக்கிறது. அருகில்  ரயில் நிலையம் ஈரோட்டில் இருக்கிறது.

*அஞ்சல் முகவரி:*
அருள்மிகு சங்கமேஸ்வரர் திருக்கோயில்,
பவானி,
ஈரோடு மாவட்டம்,
PIN - 638 301

*☘ஆலயப் பூஜை காலம்:*
தினந்தோறும் காலை 5.00 மணி முதல் பகல் 1.00  மணி வரையிலும் மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 மணி வரையிலும் ஆலயம் திறந்திருக்கும்.

*கோயில் அமைப்பு:*
வட இந்தியாவில் கங்கையுடன் யமுனை, சரஸ்வதி நதிகள் இரண்டும் சங்கமிப்பதால், *திரிவேணி சங்கமம்* (அலகாபாத்) எனப்படுகிறது.

பவானி, காவேரி மற்றும் கண்ணுக்குப் புலப்படாத அமிர்த நதி என்ற மூன்று நதிகளும் கூடும் இந்த இடத்தை  *தென்திரிவேணி சங்கமம்* என்று அழைக்கப்படுகிறது.

பவானியும், காவிரியும் கூடும் இடமான கூடுதுறையில், பவானி சங்கமேஸ்வரர் கோயில் அமைந்திருக்கிறது.

பவானியும் காவிரியும் கூடும் இடத்தில் வடகரையில் சுமார் நான்கு ஏக்கர் பரப்பளவுடன்  இந்தக் கோயில் அமைந்திருக்கிறது.

கோயிலுக்கு இரண்டு வாயில்கள் இருக்கின்றன. கோயிலின் பிரதான கோபுரம் வடக்கு திசையில் ஐந்து நிலைகளைத் தாங்கி, ஏழு கலசங்களையும் தாங்கியபடியான காட்சியைக் காணவும் *சிவ சிவ சிவ சிவ*, என மொழிந்து கோபுரத்தை வணங்கிக் கொண்டோம்.

இந்தக் கோயிலில் சங்கமேஸ்வரர், வேதநாயகி சந்நிதிகள் மற்றுமன்றி ஆதிகேசவப் பெருமாளுக்கும் சௌந்திரவல்லி தாயாருக்கும் சந்நிதிகள் அமைந்திருக்கிறது.

இது, சைவ வைணவ ஒற்றுமைக்கு ஒரு எடுத்துக்கட்டாகும். 

வடக்கு நோக்கிய முக்கிய வாயில் வழியாக உள்ளே சென்றபோது, சிறிய கோயிலில் விநாயகப் பெருமான் இருந்தார்.

உடனே காதுகளைப் பிடித்துத் திருகி தோப்புக்கரணமிட்டுக் தொழுது வணங்கிவிட்டு நகர்ந்தோம்.

கொடிமரம், கிழக்கு வாயில் பக்கம் இருக்க, அங்கு விரைந்து, கொடிமரத்தின் முன்பாக, நெடுஞ்சான்கிடையாக விழுந்து சிரம் கரங்கள் செவிகள் புஜங்கள் பூமியில் புரள வணங்கியெழுந்து நிமிர்ந்தோம்.

அடுத்து, பலிபீடத்தருகாக வந்து நின்று நம் ஆணவமலம் ஒழிய பிரார்த்தித்து வணங்கிக் கொண்டு நகர்ந்தோம். இதனையடுத்து விளக்கு வைக்கும் கல்தூண் நிமிர்ந்து நின்றது.

வலப்பக்கத்தில் சுப்பிரமணியர் சந்நிதி இருந்தது. முன் வந்து நின்று, மனமுருகி பிரார்த்தித்து வணங்கி துதித்தோம்.

சுப்பிரமணியர் சந்நிதியைக் கடந்து சென்றால் இந்தக் கோவிலின் மூலவரான சங்கமேஸ்வரர் கோவில் இருந்தது. ஈசன் திருமேனியை மனமுருகி பிரார்த்தனை செய்து வணங்கிக்கொண்டு அர்ச்சகரிடம் வெள்ளிய விபூதியைப் பெற்றுக் கொண்டு வெளிவந்தோம்.

அடுத்து அம்பாள் சந்நிதிக்குச் சென்று வணங்கிக் கொண்டு அர்ச்சகரிடம் குங்குமப் பிரசாதம் பெற்றுக் கொண்டு வெளிவந்தோம்.

தமிழகத்தின் சிறந்த பரிகாரத்தலங்களில் பவானியும் ஒன்றாகும்.

பிறப்பு முதல் இறப்பு வரையிலுள்ள அனைத்து தோஷங்களுக்கும் இங்கு பரிகாரம் செய்யப்படுகிறது.

காவிரி, பவானி நதிகள் கூடும் சங்கமத் துறையில் காயத்ரி லிங்கேஸ்வரர் கோயில் உள்ளது.

முனிவர் விஸ்வாமித்திரரால் காயத்ரி மந்திரம் சொல்லி பிரதிஷ்டை செய்யப்பட்டதால் காயத்ரி லிங்கேஸ்வரர் என்று பெயர்.

இக்கோவில் அருகே பரிகார பூஜைகள் தினந்தோறும் நடந்தபடி இருப்பதைக் காணமுடிகிறது.

இந்த ஊரில் எரிக்கப்படும் சடலங்களின் மண்டை ஓடு வெடித்து சிதறுவதில்லை என்பது கண்கூடு.

இத்தலத்து மண்ணிற்குள் ஏராளமான சிவலிங்கங்கள் இருப்பதால் இவ்வாறு நடப்பதாக கூறப்படுகிறது.

கோயிலின் தென்மேற்கு மூலையில் உள்ள தல விருட்சம் இலந்தை மரம் தனி சிறப்பு கொண்டது.

வேதமே மரவடிவெடுத்து வந்திருப்பதாக ஐதீகம்.

இங்கு தான் குபேரனுக்கு சிவபெருமான் சுயம்பு மூர்த்தியாக தரிசனம் தந்துள்ளார்.

இம்மரம் தினமும் இறைவனின் நைவேத்தியத்திற்கு சுவைமிக்க பழங்களை தருகிறது.

அம்பிகை வேதநாயகியின் பெருமைக்கு வில்லியம் காரோ என்ற ஆங்கிலேயர் அளித்த தந்தக் கட்டில் ஒன்று சான்றாய் பள்ளியறையில் இருக்கிறது.

ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆண்டுவந்த காலத்தில் வில்லியம் காரோ என்பவர்தான் பவானி பகுதிக்கு கலெக்டராக இருந்தார்.

அம்பிகை வேதநாயகியின் பெருமையையும் அழகையும் மக்கள் வியந்து பேசுவது கண்ட காரோ தாமும் அம்பிகையைக் காண விரும்பினார்.

இந்துக்கள் மட்டுமே கோவிலுக்குள் செல்லலாம் என்பதால், மதில் சுவரில் சாளரம் போன்று மூன்று துளைகளைச் செய்து காரோ அதன் மூலம் அம்பிகையைக் காண வழி செய்தனர்.

காரோவும் அம்பிகையை அச்சாளரத்தின் மூலம் தினந்தோறும் கண்டு வழிபட்டு வந்தார்.

அந்தத் துளைகள் இன்றும் உள்ளன. ஒருமுறை காரோ தனது இல்லத்தின் மாடியில் உறங்கிக் கொண்டிருந்தபோது அம்பிகை வேதநாயகியைப் போன்று வடிவுடைய பெண் ஒருத்தி அவரைத் தட்டி எழுப்பி கையைப் பற்றி விரைவாக வெளியே அழைத்துச் சென்றது போன்ற உணர்வு ஏற்பட்டு திடுக்கிட்டு விழித்து எழுந்த காரோ பரபரப்புடன் மாடியிலிருந்து கீழே இறங்கி வந்திருக்கின்றார்.

அடுத்த நிமிடமே காரோ குடியிருந்த இல்லத்து மாடி இடிந்து சரிந்து கீழே விழுந்திருக்கிறது.

தான் பிழைத்தது அம்பிகையின் அருள் என்று போற்றி, அம்பிகைக்கு தந்தத்தால் ஆன கட்டில் செய்து காணிக்கையாக அம்பிகைக்கு அளித்தார்.

இத்தலத்தில் உள்ள முருகப்பெருமானை அருணகிரிநாதர் தனது திருப்புகழில்பாடியுள்ளார்.

முருகன் சந்நிதிக்கு அருகில் ஜ்வரஹரேஸ்வரர் திரு உருவம் மூன்று கால்கள், மூன்று கைகள், மூன்று தலைகளுடன் காணப்படுகிறார்.

திருஞானசம்பந்தர் இத்தலத்திற்கு வருகை தந்த போது அவருடைய அடியார்களை ஜுரநோயால் பீடித்தனர்.

இங்குள்ள ஜ்வரஹரேஸ்வரரை வழிபட்டு அவர்கள் நோய் நீங்கப் பெற்றார்கள் என கூறப்படுகிறது.

கோவிலின் தெற்குப் பக்கம் அறுபத்து மூன்று நாயன்மார்கள் திரு உருவங்கள் இருந்தன.

கொங்கு நாட்டுத் தலங்கள் எல்லாவற்றிலும் சனீஸ்ர பகவானுக்கு தனி சந்நிதி இருக்கும். இத்தலத்திலும் சனீஸ்வர பகவானுக்கு தனி சந்நிதி இருக்கிறது.

இவர் மிகவும் சக்தி வாய்ந்தவர் என்று மக்கள் நம்புகின்றனர். மேலும் இக்கோவிலில் உள்ள அமிர்தலிங்கேஸ்வரர் சந்நிதி சிறப்புடையதாகும்.

லிங்கத்தின் பாணப் பகுதியை எடுத்து இடையில் வைத்துக் கொண்டு ஆவுடையாரை வலம் வர குழந்தை இல்லாதவர்களுக்கு மகப்பேறு ஏற்படும் எனபது மக்களின் நம்பிக்கையாக இருக்கிறது.

இக்கோயிலில் காலை 6.00 மணிக்கு திருப்பள்ளி எழுச்சியும், 8.00 மணிக்கு காலை சாந்தியும், உச்சிக்காலம் 12.00 மணிக்கும், இடைக்காலம் மாலை 4.30 மணி. சாயரட்சை 5.15 மணிக்கும், அர்த்த ஜாமம் 7.30 மணிக்கும் என ஆறு காலப் பூஜைகள் நடைபெறுகின்றன.

*பவானி முக்கூடல்:*
காவிரியும், பவானியும் கலக்கும் இடத்திற்கு தட்சிண பிரயாகை (தென்னாட்டு பிரயாகை) என்று பெயர்.

வடநாட்டில், கங்கையும் யமுனையும் பிரயாகை என்ற இடத்தில் கூடும்போது சரஸ்வதி அடியில் வந்து கலப்பது போல, இங்கு அமுதநதி அடியில் வந்து கலப்பதாக ஐதீகம்.

கிழக்கு வாயில் வழியாக கூடுதுறைக்குச் செல்லலாம். நீராடுவதற்கு வசதியாக படித்துறைகள் அமைந்துள்ளார்கள்.

கூடுதுறையிலே ஒரு தீர்த்தக் கட்டமும் இருக்கிறது. இதனை *'காயத்திரிமடு'* என்று அழைக்கின்றனர்.

இதன் கரையில் காயத்திரி லிங்கமும், அமுதலிங்கமும் இருக்கின்றன.

திருக்கோயிலைச் சுற்றி அந்நாளில் கோட்டை இருந்திருக்கிறது. தற்போது இடிந்த சிதைந்த சில பகுதிகளைக் காணமுடிகிறது.

இங்குள்ள இரு பெண்களின் சிற்பம் பார்க்கத்தக்க ஒன்று.
[19/02, 8:50 PM] G karuppasamy: இங்கு ஒருமுறை குளித்துச் சென்று, சங்கமேஸ்வரரை வணங்கினால் முக்தி 
நிச்சயம் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

அம்மன், நதி, தலம் மூன்றுக்கும் ஒரே பெயர். பார்வதியின் திருநாமங்கள் பலவற்றுள் பவானியும் ஒன்று. இந்தப் பெயரே நதியின் பெயராகவும், தலத்தின் பெயராகவும் அமைந்துள்ளது சிறப்பு.

இந்தத் தலத்துக்கு வந்து நீராடி, இறைவனைத் தரிசிப்பவர்களுக்கு யாதொரு தீங்கும் நண்ணாது (நெருங்காது) எனவே, இத்தலத்துக்கு *'திருநணா'* என்ற புராணப் பெயரும் உண்டு.

*சோமாஸ்கந்த அமைப்பு:*
ஸ்ரீவேதநாயகியின் சந்நிதி கிழக்கு நோக்கியது. இந்தச் சந்நிதியின் வலப்பக்கம் ஸ்ரீசுப்ரமணியர் சந்நிதி அமைந்துள்ளது. அதையடுத்து, மூலவரான சங்கமேஸ்வரரைக் கண்ணாரத் தரிசிக்கலாம்.

அம்பாளுக்கும் சுவாமிக்கும் நடுவே ஸ்ரீசுப்ரமணியர் அமைந்திருப்பது சோமாஸ்கந்த அமைப்பு.

இது ரொம்பவே விசேஷம் என்பார்கள். இங்கு வந்து முருகப்பெருமானைத் தரிசித்து, மனமுருகிப் பாடியுள்ளார் அருணகிரிநாதர்.

சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் திருப்பணிகள் மேற்கொண்ட ஆலயம் இது.

ஆண்டுதோறும் மாசி மகம், ரத சப்தமிக்கு மூன்றாவது நாள், சூரியனின் ஒளி ஸ்ரீசங்கமேஸ்வரர், ஸ்ரீவேதநாயகி, ஸ்ரீசுப்ரமணியர் மீது பட்டு, சூரிய பூஜை நடப்பது சிறப்புக்கு உரிய ஒன்றாகும்.

*சிறப்பு:*
பூலோகத்தில் உள்ள புனிதத் தலங்களைத் தரிசிக்க விரும்பினான் குபேரன்.

இந்தத் தலத்துக்கு வந்தான் குபேரன். அப்போது, இந்தத் தலத்தில் ஞானிகள், முனிவர்கள், கந்தர்வர்கள் அனைவரும் தவம் செய்வதைக் கண்டான் குபேரன்.

இத்துடன் கூடவே மான், பசு, புலி, யானை, சிங்கம், நாகம், எலி ஆகிய அனைத்து உயிரினங்களும் சண்டையின்றி, ஒன்றாக நீர் அருந்துவதுடன், தவம் செய்பவர்களுக்குத் தொந்தரவு கொடுக்காமல் இருப்பதை பார்த்து ஆச்சரியமடைந்தான் குபேரன்.

இதில் நெக்குருகிப் போன குபேரன், தவமிருந்தான். குபேரனது தவத்தில் மகிழ்ந்த, ஹரியும் சிவனுமாக வந்து,
அவனுக்குக் காட்சி தந்தருளினர்.

குபேரனே! என்ன வரம் வேண்டும், கேள்!, என இறைவன் கேட்டார்.

அளகேசன் எனும் உன் பெயரால் இந்தத் தலம் விளங்கி, உன்னை நாடி வரும் பக்தர்களுக்கு வேண்டும் வரம் தந்தருள வேண்டும் என வேண்டினான் குபேரன்.

அன்றிலிருந்து இந்தத் தலம் *'தட்சிண அளகை'*எனும் பெயர் பெற்றதாம்.

*செவி வழிச்செய்தி:*
பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஆங்கிலேயர் ஆட்சியின் போது கோவை மாவட்டத்தில் திரு. காரோ என்னும் வெள்ளையதுரை மாவட்ட ஆட்சியாளராக பணியில் இருந்தார்.

இவர் ஆட்சிப் பொறுப்புக் காரணமாக ஒரு முறை பவானி வந்து ஆய்வாளர் மாளிகையில் தங்கினார்.

இரவு படுத்து உறங்கும்போது மின்னலுடன் இடிஇடித்துக் கொண்டிருந்தது.

ஒரு சிறிய குழந்தை வந்து உறங்குகின்ற துரையைக் கையைப் பிடித்து வெளியே வெகுவேகமாக இழுத்து வந்தது.

மறுநிமிடம் பேரிரைச்சலுடன் அக்கட்டிடத்தின் கூரை கீழே விழுந்து நொறுங்கியது.

நடந்தது அறிந்த துரை திரும்பிப் பார்த்தார். தன்னை எழுப்பிய குழந்தை நடந்து சென்று கொண்டிருப்பதைக் கண்டார்.

குழந்தையை அழைத்தார்.  குழந்தை திரும்பாமல் சென்று கொண்டிருந்தது.

துரை பின்தொடர்ந்து வேகமாகச் சென்றார். அவர் அக்குழந்தையைச் சென்றடையும் முன் அக்குழந்தை கோயிலுள் புகுந்து மறைந்துவிட்டது.

அன்னை வேதநாயகியே குழந்தை வடிவில் வந்து தன்னைக் காப்பாற்றியதை உணர்ந்து திகைப்பும் சொல்லொணா மகிழ்வும் கொண்டார்.

அம்பிகையைத் தரிசிக்க துரை எண்ணினார். பிற மதத்தினர் ஆலயத்துள் புக அனுமதிக்கப்படுவதில்லை யாதலால் அந்நெறியை மீற மணமின்றி, அம்பாள் சந்நிதிக்கு நேரே வெளிமதிலில் மூன்று துவாரம் செய்வித்து அதன் வழியே அம்பாளைக் கண்குளிரத் தரிசித்தார்.

அர்த்த ராத்திரியில் வெளியே வந்து தன் உயிர் காத்த அம்பிகைக்கு துரை, தன் நன்றிக்கடனாகப் பள்ளியறையில் வைப்பதற்குத் தந்தத்தாலான ஊஞ்சல்
ஒன்றைச் செய்து பரிசாக அளித்தார்.

*சம்பந்தர் தேவாரம்:*
பண்: காந்தாரம்.

1.🔔பந்தார் விரன்மடவாள் பாகமா நாகம்பூண் டேறதேறி
அந்தா ரரவணிந்த வம்மா னிடம்போலும் அந்தண் சாரல்
வந்தார் மடமந்தி கூத்தாட வார்பொழிலில் வண்டுபாடச்
செந்தேன் றெளியொளிரத் தேமாங் கனியுதிர்க்குந் திருநணாவே.

🙏பந்தாடும் விரலைஉடைய உமையம்மை ஒரு பாகமாக விளங்க, பாம்பை அணிகலனாகப் பூண்டு, எருதேறி, அழகிய மாலையாக அரவத்தைப் பூண்டுள்ள சிவபிரானது இடம், அழகிய குளிர்ந்த மலைச்சாரலின் அருகே மந்திகள் நடனமாடவும் பூம் பொழிலில் வண்டுகள் பாடவும் செந்தேனின் தெளிவில் தோய்ந்த மாங்கனிகள் உதிரும் வளமுடைய திருநணாவாகும்.

2.🔔நாட்டம் பொலிந்திலங்கு நெற்றியினான் மற்றொருகை வீணையேந்தி
ஈட்டுந் துயரறுக்கு மெம்மா னிடம்போலும் இலைசூழ்கானில்
ஓட்டந் தருமருவி வீழும் விசைகாட்ட முந்தூழோசைச்
சேட்டார் மணிக ளணியுந் திரைசேர்க்குந் திருநணாவே.

🙏அழகியதொரு கண் பொலிந்து விளங்கும் நெற்றியினரும், ஒருகையில் வீணை ஏந்தியவரும், பழவினைத் தொகுப்பினைத் தீர்த்தருள்பவரும் ஆகிய எம் இறைவனது இடம், இலைகள் அடர்ந்த காட்டில் மலை அருவி இசைகாட்ட, மூங்கில்கள் உராய்ந்து ஓசை எடுப்ப உயர்ந்த மணிகளைவாரி அலைகள் கரைகளில் சேர்க்கும் திருநணாவாகும்.

3.🔔நன்றாங் கிசைமொழிந்து நன்னுதலாள் பாகமாய் ஞாலமேத்த
மின்றாங்கு செஞ்சடையெம் விகிர்தர்க் கிடம்போலும் விரைசூழ்வெற்பில்
குன்றோங்கி வன்றிரைகண் மோத மயிலாலுஞ் சாரற்செவ்வி
சென்றோங்கி வானவர்க ளேத்தி யடிபணியுந் திருநணாவே.

🙏திருத்தமான இசையுடன் வேதங்களை அருளி, உமையொரு பாகராய் மின்னல் போன்ற செஞ்சடையினராய் விளங்கும் சிவபிரான் உலகம் ஏத்த விளங்கும் இடம், மணம் கமழும் மலையகத்தே குன்றுகள் போல அருவியின் திரைகள் எழுந்து மோத மயில்கள் ஆட வானவர்கள் சாரலை அடைந்து ஏத்தி வணங்கும் சிறப்பினதாகிய திருநணாவாகும்.

4.🔔கையின் மழுவேந்திக் காலிற் சிலம்பணிந்து கரித்தோல்கொண்டு
மெய்யின் முழுதணிந்த விகிர்தர்க்கிடம்போலு மிடைந்துவானோர்
ஐய வரனே பெருமா னருளென்றென் றாதரிக்கச்
செய்ய கமலம் பொழிதே னளித்தியலுந் திருநணாவே.

🙏கையின் மழுவை ஏந்தி, காலில் சிலம்பை அணிந்து, யானையின் தோலைப் போர்த்து விளங்கும் விகிர்தனுக்குரிய இடம், தேவர்கள் கூடிநின்று ஐயனே! அரனே! பெருமானே! அருள்புரிக என்று விரும்பிப் போற்றுவதும், செந்தாமரை மலர்கள் தேனைத் தருவதுமாகிய திருநணாவாகும்.

5.🔔முத்தேர் நகையா ளிடமாகத் தம்மார்பில் வெண்ணூல்பூண்டு
தொத்தேர் மலர்சடையில் வைத்தா ரிடம்போலுஞ் சோலைசூழ்ந்த
அத்தே னளியுண் களியா லிசைமுரல ஆலத்தும்பி
தெத்தே யெனமுரலக் கேட்டார் வினைகெடுக்குந் திருநணாவே.

🙏முத்துப் போன்ற பற்களை உடைய உமையம்மை ஒருபாகமாக விளங்கத் தம் மார்பில் வெண்ணூல் பூண்டு பூங்கொத்துக்களைச் சடைமிசைச்சூடியுள்ள சிவபிரானது இடம், சோலைகளில் சூழ்ந்த வண்டுகள் தேனுண்ணும் விருப்பினால் இசைபாடி ஆட, தும்பிகள் `தெத்தே` என்ற ஒலிக்குறிப்போடு முரல விளங்கும் அழகுடையதும் பெயர் சொல்லக் கேட்டார் வினைகளைக் கெடுப்பதும் ஆகிய திருநணாவாகும்.

6.🔔வில்லார் வரையாக மாநாக நாணாக வேடங்கொண்டு
புல்லார் புரமூன் றெரித்தார்க் கிடம்போலும் புலியுமானும்
அல்லாத சாதிகளு மங்கழன்மேற் கைகூப்ப அடியார்கூடிச்
செல்லா வருநெறிக்கே செல்ல வருள்புரியுந் திருநணாவே.

🙏மேருமலை வில்லாகப் பொருந்த, வாசுகி என்னும் பெரிய பாம்பு நாணாக அமைய, தான் பெருவீரனாக வேடம்புனைந்து அவுணர்தம் முப்புரங்களையும் எரித்தவனது இடம், புலி மான் இவையும் அல்லாத பிறவிலங்கினங்கள் யாவும் திருவடிகளைக் கைகூப்பி வணங்க, அடியவர்கூடி வழிபடுவதும், யாரும் செல்ல இயலாத வீட்டு நெறிக்குக் செல்ல இறைவன் அருள் புரிவதும் ஆகிய திருநணாவாகும்.

7.🔔கானார் களிற்றுரிவை மேன்மூடி யாடரவொன் றரைமேற்சாத்தி
ஊனார் தலையோட்டி லூணுகந்தான் றானுகந்த கோயிலெங்கும்
நானா விதத்தால் விரதிகணன் னாமமே யேத்திவாழ்த்தத்
தேனார் மலர்கொண்டடியா ரடிவணங்குந் திருநணாவே.

🙏காட்டில் வாழும் யானையின் தோலால் உடலை மூடி, ஆடும்பாம்பினை அரைமேல் கட்டி, ஊன் பொருந்திய தலையோட்டில் பலி ஏற்று உகப்பவராகிய சிவபிரான் உவப்புடன் மேவும் கோயில் தவவிரதிகள் எங்கும் பல்வேறு வகைகளில் திருப்பெயர்களைச் சொல்லி வாழ்த்த அடியவர் தேன்சிறந்த மலர்களைக் கொண்டு மகிழ்ந்து அடி வணங்குவதாகிய திருநணாவாகும்.

8.🔔மன்னீ ரிலங்கையர்தங் கோமான் வலிதொலைய விரலாலூன்றி
முந்நீர்க் கடனஞ்சை யுண்டார்க் கிடம்போலு முனைசேர்சீயம்
அன்னீர் மைகுன்றி யழலால் விழிகுறைய வழியுமுன்றிற்
செந்நீர் பரப்பச் சிறந்து கரியொளிக்குந் திருநணாவே.

🙏பெருகிய கடல் நீரால் சூழப்பட்ட இலங்கை மன்னன் இராவணனின் வலிமை அழியுமாறு கால் விரலை ஊன்றி அடர்த்தவரும், கடலிடையே தோன்றிய நஞ்சினை உண்டவருமாகிய சிவபெருமானுக்குரிய இடம், மலைக்குகையில் வாழும் சிங்கம் தன் தன்மைகுன்றி அழல் பொழியும் தன் விழி குறைய அதனோடு போரிட்டு முன்றிலில் படிந்த அதனது குருதியைக் கண்டு தன் வலிமையில் பெருமை பெற்ற யானை சென்று மறையும் திருநணாவாகும்.

9.🔔மையார் மணிமிடறன் மங்கையோர் பங்குடையான் மனைகடோறும்
கையார் பலியேற்ற கள்வ னிடம்போலுங் கழல்கணேடிப்
பொய்யா மறையானும் பூமிய ளந்தானும் போற்றமன்னிச்
செய்யா ரெரியா முருவ முறவணங்குந் திருநணாவே.

🙏கரிய நீலமணிபோன்ற மிடற்றினனும், உமைபாகனும் வீடுகள் தோறும் பலியேற்றுப் பலியிடுவார் உள்ளங்களைக் கவரும் கள்வனும் ஆகிய சிவபெருமானது இடம் திருமுடி திருவடிகளைத் தேடி வேதங்களை ஓதும் நான்முகனும் நிலம் அளந்த திருமாலும் போற்ற நிலைபேறுடைய செந்தீயுருவாய் உருவம் பெற அவர்கள் இருவரும் அப்பெருமானது அடிமுடி காணல் ஆற்றாது வந்து வழிபடும் திருநணாவாகும்.

10.🔔ஆடை யொழித்தங் கமணே திரிந்துண்பார் அல்லல்பேசி
மூடும் உருவ முகந்தா ருரையகற்று மூர்த்திகோயில்
ஓடு நதிசேரு நித்திலமு மொய்த்தகிலுங் கரையிற்சாரச் 
சேடர் சிறந்தேத்தத் தோன்றி யொளிபெருகுந் திருநணாவே.

🙏ஆடையின்றி அம்மணமாகத் திரிந்து இரந்து உண்பவரும் துன்பமான செய்திகளைப் பேசி உடலைப் போர்த்தித் திரிபவரும் ஆகிய அமணர், பத்தர்களின் உரைகளைச் செவிமடுக்காத சிவமூர்த்தியின் கோயில், பெருகி ஓடும் நதி, முத்து, அகில் முதலியவற்றைக் கரையில் சேர்ப்பதும், பெரியோர் சிறப்புடன் வந்து வழிபடுவதும், கட்புலனாய் ஒளிபெருகி விளங்குவதுமாகிய திருநணாவாகும்.

11.🔔கல்வித் தகத்தாற் றிரைசூழ் கடற்காழிக் கவுணிசீரார்
நல்வித் தகத்தா லினிதுணரு ஞானசம் பந்தனெண்ணும்
சொல்வித் தகத்தா லிறைவன் றிருநணா வேத்துபாடல்
வல்வித் தகத்தான் மொழிவார் பழியிலரிம் மண்ணின்மேலே.

        திருச்சிற்றம்பலம்.

🙏கரையை அகழும் வித்தகத்தோடு அலைகள் சூழும் கடலைஅடுத்துள்ள காழிப்பதியில் கவுணியர் குலத்தில் தோன்றி நல்ல ஞானத்தால் எல்லாவற்றையும் இனிதுணரும் ஞானசம்பந்தன் கருதிச் சொல் வித்தகத்துடன் இறைவனது திருநணாவை ஏத்திய இப்பதிகப்பாடல்களை மேம்பட்ட இசைத் திறமையால் பாடிப் போற்றுவார் இவ்வுலகில் பழியிலராவர்.

          திருச்சிற்றம்பலம்.

*🎡திருவிழாக்கள்:*
ஆடி பதினெட்டாம் பெருக்கன்று நீராடுவது சிறப்பு.
சித்ரா பெளர்ணமி,
ரதசப்தமி,
சித்திரையில் பதின்மூன்று நாள் தேர்த் திருவிழா,
ஆடி பதினெட்டு,
ஆடி அமாவாசை,
தை அமாவாசை,
கிரகண காலங்கள்.

*☎தொடர்புக்கு:*
04204 - 230192
98432 48588

தேவாரம் பாடல் பெற்ற தலங்களில் கொங்கு நாட்டில் அமைந்துள்ள நாளைய தலப்பதிவு *அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில் திருச்செங்கோடு.*

____________________________________
*அடியார்களுக்குத் தொண்டு செய்யுங்கள் இறைவன் அவர்களுக்குள்ளிருக்கிறான்.*

No comments:

Post a Comment