Thursday, April 12, 2018

Pasupatinathar temple, karur

சிவாயநம திருச்சிற்றம்பலம்.
பதியும் பணியே பணியாய் அருள்வாய்.
*கோவை கு. கருப்பசாமி.*
__________________________________
*தினமும் ஒரு பாடல் பெற்ற தல தரிசனம்:*
(நேரில் சென்று தரிசித்ததைப் போல........................ .)
__________________________________
*தேவாரம் பாடல் பெற்ற தல தொடர் எண்: 260*

*பாடல் பெற்ற சிவ தல தொடர்:*

*சிவ தல அருமைகள் பெருமைகள்:*

*🏜பசுபதிநாதர் திருக்கோயில், கருவூர். (கரூர்):*
___________________________________
தேவாரம் பாடல் பெற்ற தலங்களில் கொங்கு நாட்டில் அமைந்துள்ள ஏழு தலங்களுள் இத்தலம் மூன்றாவது தலமாகப் போற்றப் படுகிறது.

*🌙இறைவன்:* பசுபதிநாதர், ஆநிலையப்பர்.

*💥இறைவி:* சுந்தரவல்லி, அலங்காரவல்லி.

*🌴தல விருட்சம்:* வில்வம்.

*🌊தல தீர்த்தம்:* பிரம தீர்த்தம்.

*📔தேவாரம் பாடியவர்கள்:*
திருஞானசம்பந்தர். இரண்டாம் திருமுறையில் ஒரே ஒரு பதிகம்.

*🛣இருப்பிடம்:*
கரூர் நகரின் மத்தியில் கோவில் இருக்கிறது. கோயமுத்தூர், ஈரோடு, திருச்சியில் இருந்து பேருந்து வசதிகள் நிறைய இருக்கிறது.

கரூர் ரயில் நிலையம் திருச்சி - ஈரோடு ரயில் பாதையில் இருக்கிறது.

*அஞ்சல் முகவரி:*
அருள்மிகு பசுபதீஸ்வரர் திருக்கோயில்,
கரூர்,
கரூர் மாவட்டம்,
PIN - 639 001

*ஆலயப் பூஜை காலம்:*
தினந்தோறும் காலை 6.00  மணி முதல் பகல் 12.30 மணி வரையிலும் மாலை 4.00 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் ஆலயம் திறந்திருக்கும்.

*கோவில் அமைப்பு:*
கொங்குநாட்டு சிவஸ்தலங்களில் கரூரில் உள்ள சிவாலயம் பெருமை மிக்கதும் பெரிய அளவில் அமைந்துள்ளதும் ஆகும்.

மூர்த்தி, தலம், தீர்த்தம் எனும் மூன்று சிறப்புக்களை உள்ளடக்கியது கரூர் பசுபதிநாதர் கோயில்.

கோயில் ராஜகோபுரம் ஏழு நிலைகளைத்
தாங்கியபடியும் ஏழு கலசங்களைத் தாங்கியபடியும் காட்சி கிடைக்க, *சிவ சிவ, சிவ சிவ* என மொழிந்து கோபுரத்தை வணங்கிக் கொண்டோம்.

கோபுரத்தில் திருவிளையாடல் புராணம், தசாவதாரம் ஆகியவை சுதைச் சிற்பங்களாக இருந்தன. மிக மிக நேர்த்தியான முறையில் இருந்தன. உட்கோபுரம் ஐந்து நிலைகளத் தாங்கியபடி காணப்பெற்றது. வணங்கிக் கைதொழுது கொண்டோம்.

இரு கோபுரங்களுக்கும் இடையே புகழ்ச்சோழர் மண்டபம் இருந்தது. வணங்கித் திரும்பினோம்.

புகழ்ச்சோழர் அறுபத்து மூன்று  நாயன்மார்களில் ஒருவர். இவர் கருவூர்ப் பகுதியை ஆண்ட மன்னராவார்.

அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரான எறிபத்த நாயனார் பிறந்த தலம் என்ற பெருமையும் கருவூருக்கு உண்டு.

கோவில் சுற்று மதிலோடு அழகாக காட்சியளித்தன.

முன் கோபுரம் நூற்று இருபது அடி உயரம் வரை இருக்கும். கோயிலுக்குள் இரண்டு பிரகாரங்கள் இருந்தன.

கோயிலில் உள்ள நூற்றுக்கால் மண்டபம் காணவேண்டிய ஒன்றாகும்.

மூலவரை தரிசிக்க அவர் சந்நிதிக்கு விரைந்தோம்.

ஈசனின் முன்பாக இருந்த கொடிமரத்து முன்பு நெடுஞ்சான்கிடையாய் விழுந்து சிரம் கரங்கள் செவிகள் புஜங்கள் பூமியில் புரள வணங்கியெழுந்து நிமிர்ந்தோம்.

அடுத்திருந்த பலிபீடத்தருகாக நின்று நம் ஆணவமலம் ஒழிய பிரார்த்தித்து வணங்கிக் கொண்டு மேலும் மனதில் ஆணவமலம் துளியாதிருக்கும் மனத்தையும் தருமாறு வேண்டிக் கொண்டு நகர்ந்தோம்.

இதனையடுத்திருந்த நந்திபெருமானை வணங்கிக் கொண்டு, ஈசனைத் தரிசிக்க ஆலயத்துள் புக அனுமதியும் வேண்டிக் கொண்டு தொடர்ந்தோம்.

கிழக்கு நோக்கி உள்ள கல்யாண பசுபதிநாதர், ஆநிலையப்பர் என்று வழங்கப்படும் மூலவர் ஒரு சுயம்பு லிங்கமாக காட்சி தந்தார்.

சுமார் இரண்டடி உயரம் உள்ள இந்த சிவலிங்கம் வடபுறமாகச் சற்றே சாய்ந்தாற் போலக் காட்சியருளினார்.

இவர் முன் வந்து நின்று மனமுருக பிரார்த்தனை செய்து வணங்கிக்கொண்டு அர்ச்சகரிடம் வெள்ளிய விபூதியைப் பெற்றுக் கொண்டு வெளிவந்தோம்.

பங்குனி மாதம் 14, 15, 16 ஆகிய மூன்று நாட்கள் சூரியனின் ஒளி லிங்கத்தின் மீது படும்படியாக கோவில் அமைப்புள்ள ஆலயம் இது என்று குருக்கள் நம்மிடம் கூறினார்.

கீழ்ப்பகுதி பிரம்மபாகம். நடுப்பகுதி திருமால் பாகம். மேல்பகுதி உத்திர பாகம் என்று மும்மூர்த்திகளும் சேர்ந்த திருமூர்த்தியாக சிவலிங்கம் காட்சி தருகிறார் ஈசன் என்றும் மேலும் குருக்கள் கூறினார்.

உட்பிரகாரத்தில் வலம் வந்தபோது, தெற்குச்சுற்றில்  அறுபத்து மூன்று நாயன்மார்கள் எழுந்தருளியிருந்தனர்.

நெஞ்சுக்கு நேராக கூப்பிய கைகளுடன் அறுபத்து மூவரையும் வணங்கியபடியே நகர்ந்தோம்.

இவர்களில் எரிபத்த நாயனாருக்கு தனி சந்நிதி இருந்தது. இவர் முன் வந்து நின்று, சிரமேற் கைகள் உயர்த்தி குவித்து வணங்கிப் பணிந்தோம்.

இவரின் அதீத பக்தியையும், அடியார்கள் மீது இவர் வைத்தொழுகிய தொண்டையும் நினைந்து நினைந்து கண்ணீர் உகுத்தோம். சிவ சிவ, ஈஸ்வரா!

மேலும், மேற்குச் சுற்றில் விநாயகர் இருப்பதைக் கண்டதும், சடுதியில் காதுகளைப் பிடித்துத் திருகி தோப்புக்கரணமிட்டுக் தொழுது வணங்கிவிட்டு நகர்ந்தோம்.

அடுத்து, கஜலட்சுமி, ஆறுமுகன் ஆகியோரின் திரு உருவங்களைக் காணப்பெற்றோம். வணங்கிக் கொண்டோம்.

வடக்குச் சுற்றில் வலம் வந்தபௌது, பஞ்சலிங்க மூர்த்திகளைக் கண்டு ஆனந்தித்து வணங்கிக் கொண்டோம்.

ஈசன் சந்நிதியில் இருந்து வடக்கு நோக்கிச் சென்றோம். ஒரு வாயிலைக் கடந்தபோது, அம்மன் சுந்தரவல்லி சந்நிதி தெற்கு பார்த்தபடி காட்சி கிடைத்தது.

இங்கேயும் ஈசனாலயத்தில் வணங்கிக் கொண்டதுபோல், மனமுருக பிரார்த்தனை செய்து வணங்கிக்கொண்டு அர்ச்சகரிடம் குங்குமப் பிரசாதம் பெற்றுக் கொண்டு வெளிவந்தோம்.

இவ்வம்மை கிரியா சக்தி வடிவானவள் என்றனர் அருகிருந்தவர்கள்.

இந்த சந்நிதியின் இடது புறத்தில், கிழக்கு நோக்கி அலங்காரவல்லி என்ற அம்மனின் பழைய கோயிலும் இருந்தது. இங்கு சென்றும் வணங்கிக் கொண்டு அருட்பிரசாதம் பெற்றுக் கொண்டு வெளிவந்தோம்.

இவள் ஞான சக்தி வடிவானவள் என்று முன்பு கூறியோர் இவ்வம்மையைப் பற்றியும் கூறினார்கள் அதே அருகிருந்தவர்கள்.

பிரம்மா, காமதேனு ஆகியோர் இங்குள்ள சிவலிங்கத்தை வழிபட்டு பேறுபெற்றுள்ளனர்.

காமதேனு வழிபடும் போது ஏற்பட்ட குளம்பின் தழும்பு இப்போதும் சிவலிங்கத்தின் மீது காணமுடிகிறது என ஏனையோர் நம்மிடம் கூறியிருந்தனர்.

நாம் தரிசித்த சமயத்தில் ஈசனுக்கு மேன்மையான மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. ஆதலால், ஈசனின் திருமேனியிலுள்ள தழும்பைக் காணப்பெற முடியவில்லை.

கந்த புராண காலத்தில் வாழ்ந்ததாக கருதப்படும் முசுகுந்த சக்ரவர்த்தியால் திருப்பணி செய்யப்பட்டதாக பெருமை பெற்றது இந்த ஆலயம்.

பதினெட்டு சித்தர்களில் ஒருவரான கருவூர் சித்தர் வாழ்ந்து இக்கோவிலில் உள்ள சிவனுடன் ஐக்கியமானதால் அவருக்கு தெற்குப் பிரகாரத்தில் கன்னி மூலையில் கிழக்கு நோக்கி கருவூர் சித்தர் சந்நிதி இருந்தது.

சாஷ்டாங்கமாக முன் விழுந்து பணிந்தெழுந்து வணங்கினோம். நம்மால் இதைத்தானே செய்ய முடியும். மீண்டும் வணங்கி இவராசியைப் பெற்று நகர்ந்தோம்.

கி.பி. பதினான்காம் நூற்றாண்டில் கருவூருக்கு வந்த அருணகிரிநாதர், இக்கோவிலில் உள்ள முருகனை பற்றி தன்னுடைய திருப்புகழில் பாடியிருக்கிறார்.

திருப்புகழில் இத்தலத்து முருகன் மீது ஏழு பாடல்கள் இருக்கின்றன.

இத்தலத்தில் முருகப்பெருமான் ஆறு திருமுகங்களுடனும், பன்னிரண்டு திருக்கரங்களுடனும் தனது தேவியர் இருவருடனும் கிழக்கு நோக்கி நின்ற கோலத்தில் காட்சி தந்தார்.

இவரின் வாகனமான மயில் பின் பக்கம் திரும்பிப் பார்த்த.வண்ணமிருந்தது.

மனமினிக்க தொழுது வணங்கிவிட்டு நகர்ந்தோம்.

*தல அருமை:*
படைப்புத் தொழில் குறித்து பிரம்ம தேவன் அடைந்த கர்வத்தை அடக்குவதற்காக சிவன் நடத்திய விளையாடலால் உண்டான தலம் இது.

சிவனை அடைய விருப்பம் கொண்டிருந்த காமதேனுவிடம் நாரதர் சென்று, பூலோகத்திலுள்ள வஞ்சிவனத்தில் தவம் செய்தால் எண்ணம் ஈடேறும் என்று கூறுனார்.

அதன்படி வஞ்சி வனமாகிய கரூர் சென்று அங்கு ஒரு புற்றுள் இருந்த லிங்கத்திற்கு தன் பாலைச் சொரிந்து திருமஞ்சனம் செய்து வழிபட்டது.

மகிழ்ச்சியடைந்த சிவனும் காமதேனுவுக்கு விரும்புவற்றைப் படைக்கக்கூடிய ஆற்றலை அளித்தார்.

காமதேனுவுக்குக் கிடைத்த படைப்பாற்றலால் அஞ்சிய பிரம்மா, தனது தவறை உணர்ந்து சிவனிடம் போய் தஞ்சம் அடைந்தார்.

சிவனும் அவரை மன்னித்து படைப்புத் தொழிலை அவருக்கேத் திரும்ப அளித்து காமதேனுவை இந்திரனிடம் அனுப்பி வைத்தார்.

காமதேனு வழிபட்டதால் இக்கோவிலில், சிவன் பசுபதீஸ்வரர் என்றும் ஆநிலையப்பர் என்றும் அழைக்கப்படுகிறார்.

*பள்ளியறை:*
இறைவி அரூபமாக இருந்து இறைவனை எண்ணித் தவம் இருந்த இடம் இத்தலம்.

பள்ளியறை இறைவன்  திருக்கோயிலில் அமைந்து, நாள் தோறும் இறைவியே பள்ளியறைக்கு எழுந்தருள்வது எங்குமில்லாத் தனிச்சிறப்பு இங்கு.

அண்ணல் ஆயிரங்கலைகளோடு உறையும்  இடம் ஆதலால் அவரைப் பூசித்துத் தவமியற்றி மணம் புரிந்து கொண்ட அன்னையே பள்ளியறைக்கு எழுந்தருள்கிறாள்.

சமயக்குரவர்கள் நால்வருள்  திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர் ஆகிய இரு நாயன்மார்கள் காலத்திற்கு முன்பே இவ்வூர் தோன்றாத் துணைநாதரும் அவர் கோயில் கொண்டருளிய  திருக்கோயிலும் மிகவும் சிறப்புடையதாக விளங்கி இருக்கிறது.

*வலம்புரி விநாயகர்:*
மேற்கு மதில் விநாயகரது மேல் திருக்கரங்கள் இரண்டிலும் பாதிரி மலர்க்  கொத்துகள் காணப்பெறுகிறது.

அம்பிகை இறைவனைப் பூசித்தபோது உதவி செய்த திருக்கோலம் இது. அதனால் இவர் *கன்னி விநாயகர்* எனப் பெயர் பெறுகிறார். 

*ஆநிலையப்பர் கோவில்:*
இந்த நகரில் உள்ள முக்கியமான திருக்கோவில், ஆநிலையப்பர் கோவில் என அழைக்கப்படும் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலாகும்.

முசுகுந்த சக்ரவர்த்தி காலப்புகழ் பெற்ற இந்த கோயிலானது புகழ்சோழ நாயனார் காலத்தில் இருந்து சிறப்பு வாய்ந்தவை. 

மேலும் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரான எறிபத்தநாயனார் அவர்கள் சிவனை வணங்கும் சிவபக்தர்களுக்கு ஏதேனும் தீங்கு விளைவித்தால் மலு என்ற கோடாரி கொண்டு தட்டிக்கேட்கும் தன்மையுடன் வாழ்ந்த தலம்.

*புகழ்ச்சோழரும், எறிபத்தரும்:*
இப்பவெல்லாம் ஆட்சி பீடத்தையும் அதைச் சார்ந்த அதிகாரத்தையும் பெறுவதென்பதெல்லாம், மக்களின் முன்னேற்றைத்தைச் சுரண்டி, அவர்கள் மட்டுமே உயரவேண்டுமென்பதற்காகத்தான் என்பதை  பல காட்சிகளாய் பல வருடங்களாய் கண்டு வருகிறோம்!

இச்செயல்களைக் காணும் போது மனம் எவ்வளவு வேதனைக்கிறது என்பதை அடியிர்கள் எல்லோரும் உணரப்பட்டிருப்போம்.

பலவருடங்களாய் பல விஷயங்களை கேக்கும்போது மனம் கணக்கிறது. சில விஷயங்களை பார்க்கும் போது மனம் கண்கள் கலங்குகிறது. சிலவிஷயங்கள் செவிக்கு வரும்போது, குருதியும் உஷ்ணமாகிறது!.

மேலும் சில விஷயங்கள் *"இப்படியுமா?*என அதிர்ச்சியும் எழுகிறது!

மனம் கல்லாகி பணம் குரங்காகி மேலும் கீழும் தாவி அது மரணித்துப் போயேவிட்டது. இதற்காகவென்றும், அதற்காகவென்றும் நடக்கின்ற அகநடவடிக்கைகளை பார்க்கின்றபோது, வாழ்வே வெறுப்பு தோன்றுகிறது.

இது, எவ்வளவு பெரிய தீயவன.!

பக்தனின் மெய்ம்மையை உணர்த்த ஈசன் ஏராளமான திருவிளையாடல்களை நடத்தினான் அப்போது.

இப்போது நாட்டை வழிநடத்தும் செயல் வளமானதாயில்லை. இனி,
நாட்டிற்காக இளைஞர்கள், மாணவசமுதாயங்கள் எழுச்சி காணவேண்டும்.

ஆம்! இளைஞர்களிடம் புத்துணர்வு புதுமை எழுச்சி பெறப்பட வேண்டும். அதுவும் அத்தகைய புத்துணர்வு கொண்டோரிடம் ஆன்மீகமும் சேர்ந்து இருக்கவேண்டும்.

முன்காலத்தில், ஆண்டவன் ஆண்டவர்கள் எல்லாம் ஆன்மீகத்தைச் சார்ந்தே வழிகியொழுகினர்.

இனி அனைத்து இளைஞர்களும் விழிக்க வேண்டும். முக்கியமா அந்த இளைய சமுதாயாத்தினரிடம் இறைபக்குவம் கண்டிப்பாக இருக்க வேண்டியது முக்கியம். 

நமக்கும் தெரியும், நம்மடியார்களுக்கெல்லாம் ஆட்சியாளன் ஈசன்தான் என்று.

அவன்தான் நம்மை வழி நடத்துகின்றான். அவனின்றி அனுவும் அசையாதென்போம்! அவனும் நமக்குண்டானதை அருளிக் கொண்டுதானிருக்கிறான். நமக்குத்  தேவை அதிகமாயிருப்பின் அதற்கு அவன் பொறுப்பு கிடையாது! அவன் காரணமுமல்ல! 

நெளிவுத் தன்மை கொண்ட நம்முடம்பைக் கொண்டு நெளிவு சுழிவுகளை ஆராய்ந்து நாமதான் கட்டம் கட்டி வாழப்பழகி  உயரவேண்டும்.

அடியார்களுக்கு இப்பதிவு தேவையா? என எண்ணம் கொள்ள வேண்டாம். நமக்கு அரசியல் சாயம் வேண்டாம். அதற்காக, நம்நாடு நம் மக்களையும் பார்க்க வேண்டும். அந்த மக்கள் கூட்டத்துக்குள்தான் நம் அடியார் கூட்டமும் இருக்கிறது.

ஏன்!,.... அரசியலே வேண்டாமென்றும்தான் எல்லா அடியார்களுக்கும் இருக்கிறோம். நம் வயிற்றுக் கடனுக்குண்ட பணியை செய்துவிட்டு அதன்பின், அடியார்கள் தொண்டையும் ஆலயத் தொண்டையும் செய்து வருறோம். அதற்காக நாமெல்லாம் ஜனநாயகக் கடமையாற்ற நமது வாக்குரியையெல்லாம் கொண்டு செலுத்தித்தானே வருகிறோம்.

இன்றைய ஜனநாயகம் எப்படி இளைத்திருக்கிறது.

அந்தக் காலத்தில் மாதம் மும்மாரி பெய்ததாம்!. காரணம், நாட்டில் எதேச்சையாக நடந்த தவறுகளுக்குக் கூட மன்னன் பொறுப்பேற்றுக் கொண்டு அறம், இறை முறைகளை கடைபிடித்து வந்தார்கள். இன்று அப்படியா நடக்கிறது.

இப்படித்தான்....சோழநாட்டிலுள்ள கரூரில் பிறந்தவர் எறிபத்தர் நாயனார். இவர், எப்பொழுதும் வெட்டும் கோடாரியை உடன் வைத்திருப்பார். இறைவன் மனதை திருடி அவரருளை நெஞ்சுக்குள் நிறைத்து சுமந்தே வலம் வருவார்.
 
அடியார்களுக்கோ, இறை வழிபாட்டுக்கோ ஒருவரால் தீங்கு நேர்வதைக் கண்டால் உடனடியாக, உடன் வைத்திருக்கும் வெட்டும் கோடாரியால் தாக்கி விடுவார். 

இறைவனுக்கோ, அடியவர்க்கோ தீங்கெங்பதை பொறுத்துக் கொள்ளாத அளவுக்கு இறைவன் மீது பற்றும், அடியவர்கள் மீது அன்பும் கொண்டு வாழ்ந்து வந்தவர்

தீங்குகளை எதிர்த்து, வெட்டும் கோடாரியினால் எறிவதை வழக்கமாகக் கொண்டிருந்ததால் இவரை எறிபத்தர் என்று அனைவரும் கூறியழைத்தனர்.

இவ்வூரூரிலேயே சிவகாமியாண்டார் எனும் ஒரு சிவனடியார் இருந்தார். இவர் ஒரு அந்தணரும் கூட. 

அனுதினமும்   வனம் சென்று பூ பறித்து பூமாலை தொடுத்து, அதை கருவூரிலிருக்கும் பசுபதீஸ்வரர் திருக்கோயிலுக்குக் கொடுத்து வழிபட்டு வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

வனத்தில் பூக்கும் அந்த பூக்களைத் தவிர வேறெங்கும் பூமலர்கள் காணப்படாத நிலையில்,  வனத்திற்கு நேரமறிந்து சென்று முறையாக பூக்களை பூக்குடலில் பெருக்கி மாலை தொடுத்து வருபவர் சிவகாமியாண்டாரின் வழக்கமான தொண்டு.

எப்பொழுதும் போல் பூக்கள் உள்ள பூக்குடலை தாங்கியவாறு வனத்திலிருந்து ஆலயம் நோக்கி சிவகாமியாண்டார் வந்து கொண்டிருந்தார். 

அப்போது எதிரே வந்து கொண்டிருந்த புகழ்ச்சோழ அரசரின் பட்டத்து யானையை பாகன்களால் வழிநடத்திக் கொண்டு வந்தனர்.

திடீரென அந்த யானைக்கு மதம் பீடித்து அலைந்தொழிந்து இங்கும் அங்கும் ஓடியது.

இதனைக்கண்டு பயந்து தெருவில் வந்தோர் போனோரெல்லாம் பதறிக் கொண்டு ஓடினார்கள். சிவகாமியாண்டவரால் அவ்விதம் ஓடமுடியவில்லை.

சிவகாமியாண்டவருக்கோ..........ஓடினால், பூக்குடலிலுள்ள பூக்கள் சிதறி விடுமே என்ற பயம்!.. 

மேலும்,.....
பாகனுக்கெல்லாம் கட்டுப்படாத அந்த யானை தொடர்ந்து ஓடி வந்து சிவகாமியாண்டவரின் தோளில் தொங்கிய பூக்குடலையை, தும்பிக்கை கொண்டு தள்ளியெறிந்து விட்டு பிளிறி ஓடியது.

பூக்குடல் கீழே விழுந்தது. மலர்கள் எல்லாம் தரையிலே விழப்பட்டு மன்னாகின. இறைவனுக்கு வேறு மலர்களும் இல்லை. வனத்திலிருந்த மலர்களையும் பறித்து வந்தாகிவிட்டது. இனியென்ன செய்வேன் என கவலை கொண்டார் சிவகாமியாண்டார்.

அப்போது அங்கு வந்து சேர்ந்த எறிபத்தர், மலர்சிந்திக்கிடந்த காட்சியினைக் கண்டும் சிவகாமியாண்டாரின் நிலையையும் எண்ணிய எறிபத்தர், யானை ஓடிய தெருவினை நோக்கி ஓடினார்.

அங்கோ  இவரை நோக்கி  மதம்பிடித்த அந்த யானை எதிரே  மூர்க்கமாக விரைந்து வந்தது.

எறிபத்தர் அசையாது அப்படியே எதிரே நின்றார். யானை தன்னை நெருங்கி வரவும், வெட்டும் கோடாரியை ஆவேசமாக வீசியெறிந்து பிளிறத்தூக்கிய யானையின் தும்பிக்கையை வெட்டி வீழ்த்தினார்.

யானை பிளிறித் துடித்து உயிரை விட்டது. யானை மத்தகத்தில் அமர்ந்திருந்த பாகன் நிலைதடுமாறி கீழே விழுந்தான்.

அந்த பாகனையும் வெட்டுக் கோடாரியால் வெட்டித்  தலையை துண்டித்தார். இதனைத் தடுக்க ஓடிவந்த அரச காவலர்களைப்  பார்த்து..........

உங்களது வேலை யானையை ஒழுங்காக வழிநடத்திக் கொண்டு போவது!, மதம் பிடித்த யானையை அடக்கத் தெரியாத நீங்களெல்லாம் பாகனா?  காவலாளிகளா? இதை செய்ய தவறிய காரணத்தால் வழிபாட்டுக்குண்டான பூக்குடல் சிதைக்கப்பட்டு  மலர்கள் மண்ணில் விதைந்தன. பூஜைக்கு வேறு மலர்களுக்கும் வாய்ப்பில்லை. அதனால் இன்றைக்கு பூஜை இல்லை.

இதுக்குக் காரணமான நீங்கள் உயிரோடிருத்தல் கொடும்பாவம்! எனக்கூறி ஐந்து காவலர்களையும் வெட்டுக் கோடாரினால் வீழ்த்திக் கொன்றார்.

மன்னருக்குச் செய்தி கொண்டு சென்றனர் காவலர்கள். மன்னர் புகழ்ச் சோழர் பரிவாரங்களை துணைக்கழைத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தார்.

அங்கே...உடலெங்கும் வீபூதி தரித்த கோலத்துடன், தனியாத கோபக்கணல் தாங்கிய கண்களுடன்,  இரத்தக்கறைத் தோயப்பெற்ற  வெட்டுக் கோடாரி கீழே கிடக்க அதனருகே எறிபத்தர் நின்று கொண்டிருப்பதைக் கண்டார் புகழ்ச் சோழர்.

ஒரு சிவனடியாரா இப்பெரிய காரியத்தை நடத்தியது!?, அப்படியானால் சிவனடியார் இதைச் செய்வதற்கு வேறு ஏதோ ஒரு காரணம் இருக்க வேண்டும்!?, என நினைத்து எறிபத்தர் அருகிற் சென்று விளைந்த  விபரத்தைக் கேட்டார் புகழ்சோழர்.

நடந்த சம்பவம் முழுவதையும் எறிபத்தர், புகழ்ச் சோழரிடம் கூறினார்.

எறிபத்தரின் வாதத்தில் இறையுண்மை தெரிந்தது.

பக்தனே!..இந்நிகழ்வு நிகழக் காரணமானவர்களாக மாண்டு கிடக்கும் அடியேனின் சேவகர்களே என்றாலும், இவர்கள்  என்னால் பணியில் நியமிக்கப் பட்டவர்கள். எனவே இவர்களை நியமித்த காரணகர்த்தவான நானும் இச்சம்பவம் நடைபெற காரணமானவனாக இருந்துள்ளேன்! ஆதலால் இவர்களுக்கு இட்ட செயலை போல என்னையும் நீங்கள் கொல்ல வேண்டும்!.

இன்றைய, சிவபூஜை நடவாமல் போனதற்கு முழுக்காரணமான என்னையும் கொல்ல வேண்டும்!,..கொல்லுங்கள் கொல்லுங்கள்....எனகூறி தன் வாளை இடையிலிருந்து உருவி நீட்டினார்.

எறிபத்தருக்கு தம் உயிரையே விட்டுவிடலாம் போலிருந்தது!, மன்னனின் பணிவான ஒவ்வொரு வார்த்தையும் ஈட்டிமுனையால் உள்ளளுத்தித் தைப்பது போலிருந்தன.

அவர் நிலை தடுமாறி சகஜ நிலைக்கு வர சில நிமிடங்கள் செலவழிந்தது.

இப்படியொரு அருமையான மன்னன் மக்களுக்குக் கிடைக்கப்  பெற்றிருக்கிறார்களே! நான் அவசரகதியில் யானையையும் பணியாளர்களையும் கொன்று விட்டேனே!....'என நினைத்து நினைத்து வேதனைப்பட்டார். 

அதன்பின் தாமதிக்கவில்லை எறிபத்தர். மன்னன் கொடுக்க இருந்த வாளை கைநீட்டி வாங்கினார். 

சம்பவ இடத்தில் கூடியிருந்த கூட்டம் பூராவும், மன்னர் கேட்டுக் கொண்டதற்கினங்க, எறிபத்தர் மன்னரை வெட்டப் போகிறார் என்று பதைபதைத்து பார்த்துக் கொண்டிருந்தனர்.

அப்போதுதான் அது நடந்தது! மன்னனை விட்டு சற்று விலகி வந்து, புகழ்சோழரிடம் வாங்கிய வாளை ஆவேசமாக உயரமாக வீசி வாளின் முனையை தலைகீழா கவிழ்த்து தன்னையே குத்திக் கொல்ல கைகளைத் தாழ்த்தினார். 

வாளின் முனை எறிபத்தரின் நெஞ்சில் இறங்கும் முன்.............

புகழ்சோழர் பாய்ந்து வந்து, எறிபத்தருக்கு ஏற்பட விருந்த உயர்போக்குதலை, தாழ்த்திறங்கிய வாளை தடுத்து பிடித்து நிறுத்தி விட்டார்.

அப்போது அவ்விடமெங்கும்,  பொங்கிப் பெருகி ஒளிச்சிதறல்கள் அவ்விடமெங்கும் பரவி விரிந்தன. அவ்வொளியின் கீற்றுக்குள்ளிருந்து..........
இடபவாகனருவாய் ஈசனும் இறையவரும் காட்சி தந்தனர் விடைமேலிருந்தவண்ணம். 

*பக்தர்களே! உங்களின் சிவபக்தியை மக்களுக்கு எடுத்தியம்பவே இப்படியொரு நிகழ்வை நடத்தினோம்!, இறந்தவரும் யானையும் உயிர் பெறுவர் எனக்கூறி எழச் செய்து மறைந்தார்.*

எறிபத்த நாயனாரின் குருபூஜை மாசி மாதம் அஸ்தம் நட்சத்திரம் அன்று வருகிறது. எனவே அந்த இனிய நாளில் சிவஅடியார்கள் சிவபக்தர்கள்  அனைவரும் எறிபத்தரின் பூஜையில் கலந்து அவரின் ஆசியைப் பெறுவீர்களாக! 

அதோடு தம் தாய்நாட்டுக்கு திருத்தப்பட்ட நல்ல ஆட்சியும், நல்ல கோணும், நீதி தவறாத ஆட்சியாளரும் அமைய வேண்டி பிரார்த்தித்துக் கொள்வோமாக!

இப்படித்தான் அக்காலம் ஆண்டவனிடம் (நாடாண்டவனிடம்) ஒழுங்கு, இறையெழுக்கம், அன்பு, பாசம், பயம், கனிவு, விவேகம் இருந்தது. ஆண்டவனைத் தேடி ஆண்டவரும் துணை செய்தார்.

இதைப்போல நாட்டிற்கு நிலைமை மாறி வர வேண்டும். அப்பாடி மாறினால், ஐநூறு வருடங் கழித்தாவது நாயன்மார்கள் வாழ்ந்த சைவ வளர்ச்சிக் காவத்தைப் பார்க்கலாம். அதற்கான வித்தை ஒவ்வொரு விதைக்க முன் வரவேண்டும்.

*சிறப்பு:*
சோழ மன்னர் முடிசூட்டிக் கொள்ளும் பதிகள் ஐந்துள் இப்பதியும் ஒன்று.

இத்தலத்தில்தான் புகழ்ச் சௌழர் ஆட்சி புரிந்து வந்தார்.

எறிபத்தர் நாயனாரும், சிவகாமியாண்டாரும் இருந்த பதி.

திருவிசைப்பா பாடல் தந்த கருவூர்த் தேவர்க்கும் இத்தலமே.

இருபத்தொன்று சருக்கங்களையும், ஆயிரத்து நூற்றியிருபத்தொன்பது திருவிருத்தங்களைக் கொண்ட புராணம் இருக்கிறது.

இதை ஆக்கியோர் இன்னாரென இதுவரை புலப்படவில்லை.

இப்புராணத்தை, கோவை வித்துவான், கந்தசாமி முதலியார் அவர்களால், பல ஆண்டுகளுக்கு முன்பாகவே அச்சிட்டு வெளிவந்தது.

*சம்பந்தர் தேவாரம்:*
பண்: இந்தளம்.

1.🔔தொண்டெ லாமலர் தூவி யேத்தநஞ்
சுண்ட லாருயி ராய தன்மையர்
கண்ட னார்கரு வூரு ளானிலை
அண்ட னாரரு ளீயு மன்பரே.

🙏தொண்டர்கள் மலர் தூவி ஏத்த நஞ்சினை உண்ட வரும் , அரிய உயிர் போன்றவரும் , கற்கண்டு போல் இனிப்பவருமாய இறைவர் , கருவூர் ஆனிலையில் விளங்கும் தேவராவார் . அருள் வழங்கும் அன்புடையவர் அவர் .

2.🔔நீதி யார்நினைந் தாய நான்மறை
ஓதி யாரொடுங் கூட லார்குழைக்
காதி னார்கரு வூரு ளானிலை
ஆதி யாரடி யார்த மன்பரே.

🙏நீதியின் வடிவானவர். நினைந்து ஆராயத்தக்கதாய நான்கு மறைகளை ஓதும் அந்தணர்களோடு கூடியவர். குழை அணிந்த திருச்செவியர். கருவூர் ஆனிலையில் விளங்கும் முதல்வர். அடியார்களுக்கு அன்பர்.

3.🔔விண்ணு லாமதி சூடி வேதமே
பண்ணு ளார்பர மாய பண்பினர்
கண்ணு ளார்கரு வூரு ளானிலை
அண்ண லாரடி யார்க்கு நல்லரே.

🙏வானத்தில் உலாவும் மதியைச் சூடியவர். வேத இசையாக விளங்குபவர். மேலான பண்பினர். கூத்தர். கருவூர் ஆனிலையில் விளங்கும் தலைவர். அடியவர்கட்கு நல்லவர்.

4.🔔முடியர் மும்மத யானை யீருரி
பொடியர் பூங்கணை வேளைச் செற்றவர்
கடியுளார் கரு வூரு ளானிலை
அடிகள் யாவையு மாய ஈசரே.

🙏சடைமுடியை உடையவர். மும்மதங்களை உடைய யானையை உரித்தவர். வெண்பொடி பூசியவர். மன்மதனைச் செற்றவர். சிறப்புடையவர். கருவூர் ஆனிலையில் விளங்கும் தலைவர். அவர் எல்லாமாய் விளங்கும் ஈசராவார்.

5.🔔பங்க யம்மலர்ப் பாதர் பாதியோர்
மங்கை யர்மணி நீல கண்டர்வான்
கங்கை யார்கரு வூரு ளானிலை
அங்கை யாடர வத்தெம் மண்ணலே

🙏தாமரை போன்ற திருவடியர் . தம் திருமேனியின் பாதியாக உமையம்மையைக் கொண்டவர் . நீல மணி போன்ற கண்டத் தினர் . ஆகாய கங்கையைத் தாங்கியவர் . அழகிய கைகளின் மேல் ஆடும் பாம்பை உடையவர் , அவர் கருவூர் ஆனிலையில் விளங்கும் தலைவராவார் .

6.🔔தேவர் திங்களும் பாம்புஞ் சென்னியின்
மேவர் மும்மதி லெய்த வில்லியர்
காவ லர்கரு வூரு ளானிலை
மூவ ராகிய மொய்ம்ப ரல்லரே.

🙏தேவர்கட்கு எல்லாம் தேவர். திங்கள், பாம்பு ஆகியவற்றை முடிமேல் சூடியவர். மும்மதில்களை எய்தவில்லை உடையவர். எல்லோரையும் காப்பவர். கருவூர் ஆனிலையில் விளங்கும் இவர் அயன், அரி, அரன் ஆகிய மும்மூர்த்திகளுக்கும் சக்தி வழங்கியவர் அல்லரோ?.

7.🔔பண்ணி னார்படி யேற்றர் நீற்றர்மெய்ப்
பெண்ணி னார்பிறை தாங்கு நெற்றியர்
கண்ணி னார்கரு வூரு ளானிலை
நண்ணி னார்நமை யாளு நாதரே.

🙏பண்களின் வடிவாய் இருப்பவர். படிந்து ஏறுதற்கு உரிய விடையூர்தியர். நீறணிந்தவர். திருமேனியில் உமைஅம்மையைக் கொண்டுள்ளவர். பிறை சூடிய திருமுடியர். நெற்றியில் கண்ணுடையவர். கருவூர் ஆனிலையில் எழந்தருளியிருப்பவர். நம்மை ஆளும் நாதர் அவர்.

8.🔔கடுத்த வாளரக் கன்க யிலையை
எடுத்த வன்றலை தோளுந் தாளினால்
அடர்த்த வன்கரு வூரு ளானிலை
கொடுத்த வன்னருள் கூத்த னல்லனே.

🙏வாளோடு சினந்து வந்து கயிலையைப் பெயர்த்த இராவணனின் தலை தோள் ஆகியவற்றைத் தாளினால் அடர்த்தவன். பின் அவனுக்கு அருள் கொடுத்தவன். கூத்தன். அவன் கருவூர் ஆனிலையில் விளங்கும் பெரியவன்.

9.🔔உழுது மாநிலத் தேன மாகிமால்
தொழுது மாமல ரோனுங் காண்கிலார்
கழுதி னான்கரு வூரு ளானிலை
முழுது மாகிய மூர்த்தி பாதமே.

🙏எல்லாமாய் விளங்கும் இறைவனின் பாதங்களைப் பன்றி வடிவெடுத்துப் பெரிய நிலத்தை உழுது சென்று முயன்ற திருமால், பிரமன் ஆகியோர் தொழுதும் காண்கிலர். அத்தகைய பெருமான் கருவூர் ஆனிலையில் நாம் எளிதின் வணங்க எழுந்தருளியுள்ளான்.

10.🔔புத்தர் புன்சம ணாதர் பொய்யுரைப்
பித்தர் பேசிய பேச்சை விட்டுமெய்ப்
பத்தர் சேர்கரு வூரு ளானிலை
அத்தர் பாத மடைந்து வாழ்மினே.

🙏புத்தர்களும் புன்மையான அறிவற்ற பொய்யுரைகளைக் கூறும் பித்தர்களாகிய சமணர்களும் பேசும் பேச்சுக்களை விட்டு உண்மையான பக்தர்கள் சேரும் கருவூர் ஆனிலையில் விளங்கும் மேலான இறைவனின் திருவடிகளை அடைந்து வாழுங்கள்.

11.🔔கந்த மார்பொழிற் காழி ஞானசம்
பந்தன் சேர்கரு வூரு ளானிலை
எந்தை யைச்சொன்ன பத்தும் வல்லவர்
சிந்தை யிற்றுய ராய தீர்வரே.

           திருச்சிற்றம்பலம்.

🙏மணம் பொருந்திய பொழில்கள் சூழ்ந்த சீகாழிப் பதியில் தோன்றிய ஞானசம்பந்தன் கருவூர் ஆனிலையை அடைந்து எம் தந்தையாகிய இறைவன் மேல் பாடிய இப்பதிகப்பாடல் பத்தையும் ஓத வல்லவர் மனத்துயர் தீர்வர்.

        திருச்சிற்றம்பலம்.

*🎡திருவிழாக்கள்:*
பங்குனி உத்திரம், மார்கழி திருவாதிரை, ஆருத்ரா தரிசனம் பதின்மூன்று நாட்கள் திருவிழா, பிரதோஷ காலங்கள், குரு பெயர்ச்சி, சனி பெயர்ச்சி.

*☎தொடர்புக்கு:*
91 4324 262010
98657 78045

தேவாரம் பாடல் பெற்ற தலங்களில் கொங்கு நாட்டில் அமைந்துள்ள நாளைய தலப்பதிவு *திருமுருகநாதசுவாமி திருக்கோயில், திருமுகபூண்டி.*

____________________________________
*அடியார்களுக்குத் தொண்டு செய்யுங்கள் இறைவன் அவர்களுக்குள்ளிருக்கிறான்.*