Monday, April 30, 2018

Oru naal poduma

படித்ததில் பிடித்தது

"ஒரு நாள் போதுமா" ..  உண்மையிலேயே இந்தப் பாடலை கே.வி.மகாதேவன் அமைத்திருக்கும் அழகை - பாடலின் சிறப்பம்சங்களைப் பகிர்ந்து கொள்வது என்றால் அதற்கு  ஒரு நாள் போதாதுதான்.  
 
வடநாட்டில் இருந்துவரும் ஹேமநாத பாகவதர் பாண்டியமன்னனின் சபையில் பாடுவதாக காட்சி.  
நாடெங்கும் உள்ள பாடகர்களை எல்லாம் வெற்றி கொண்ட ஆணவத்தில் மிதக்கும் ஹேமநாத பாகவதரை விறகுவெட்டியாக வரும் ஈசன் எப்படி தன்னிலை உணரவைக்கிறார் என்பது கதை
 
ஆரம்பத்தில் இந்தப் பாடலை சீர்காழி கோவிந்தராஜனைப் பாடவைக்க விரும்பினார் ஏ.பி.நாகராஜன்.  
ஆனால் தோல்வி அடையும் கதாபாத்திரத்துக்கு தான் பாடுவதில்லை என்பதை ஒரு கொள்கையாக வைத்திருந்த காரணத்தால் சீர்காழி கோவிந்தராஜன் தன்னால் பாட முடியாது என்று 
நயமாக மறுத்து விட்டார்.
 
சங்கீதத்தில் முடிசூடா மன்னனாக வரும் பாடகருக்கு ஒரு சங்கீத வித்வானையே பாடவைத்தால் என்ன என்று தோன்றியதும் அனைவருக்கும் ஒருமனதாக நினைவுக்கு வந்த பாடகர் பாலமுரளிகிருஷ்ணா 
அவர்கள்தான்.
 
அவரிடம் சென்று கதையமைப்பைக் கூறி ஹேமநாத பாகவதருக்காக அவர் பாடவேண்டும் என்று தயக்கத்துடன் கோரிக்கை வைத்தார்கள்.
 
"என்னது? தோற்றுப்போகும் சங்கீத வித்வானுக்கு நான் பாடணுமா? 
என்னை என்னவென்று நினைத்தீர்கள்?" என்றெல்லாம் கூச்சல் போடாமல் - சற்றுக்கூட முகம் சுளிக்காமல்,
"அதுக்கென்ன தாராளமா பாடறேன்" - என்று எந்த ஒரு சங்கடமும் இல்லாமல் சம்மதித்தார் பாலமுரளிகிருஷ்ணா.
 
கவியரசர் பாடலுக்கான பல்லவியை இப்படி எழுதிக் கொடுத்தார்:
 
"நாதமா  கீதமா அதை நான் பாட 
இன்றொரு நாள் போதுமா"
 
இந்தப் பல்லவியை  "ச்ரோதோவகயதி" முறையைப் பின்பற்றி..

"ஒரு நாள் போதுமா
இன்றொரு நாள் போதுமா
நான் பாட இன்றொரு நாள் போதுமா
நாதமா கீதமா அதை நான் பாட 
இன்றொரு நாள் போதுமா..

- என்று வரிக்கு வரி வார்த்தைகளைக் 
கூட்டி அமைத்த திறமையை என்னவென்று சொல்வது? 

அதே சமயம் இந்தப் பாடலுக்கு 
கே.வி. மகாதேவன் அவர்கள், 
தேர்ந்தெடுத்த ராகமோ "மாண்ட்".  
 
கதைப்படி ஹேமநாத பாகவதர் வடநாட்டிலிருந்து வரும் ஒரு சங்கீத நிபுணர்.  பாண்டிய நாட்டுக்கு வருகை தந்து அரசவையில் பாட வருகிறார்.  
 
யாருக்குமே அவரது சொந்த மண்ணுக்கு உரித்தான விஷயங்களில்தானே பிடிப்பு சற்று அதிகமாக இருக்கும்.  

ஆகவே தான் ஹேமநாத பாகவதர் தன் பாடலை ஹிந்துஸ்தானி ராகமான மாண்ட்டில் ஆரம்பிக்கிறார்.  
மாண்ட்  -  இது ஒரு ஹிந்துஸ்தானி ராகம்.  கேட்பவரை கிறங்கடிக்கும் வன்மை வாய்ந்த ஒரு ராகம். 

நமது தென்னக கர்நாடக இசையில் கச்சேரியின் பிற்பகுதியில் இடம்பெறும் துக்கடாக்களுக்கு பயன்படுத்தப்படும் ராகம்.

எம்.எஸ். அம்மா அவர்கள் பாடிப் பிரபலமடைந்த வள்ளலாரின் 
"வானத்தின் மீது மயிலாடக் கண்டேன்"  மாண்ட் ராகத்தில் அமைந்தது தான்.
 
அந்த ராகத்தில் துவங்கும் "ஒரு நாள் போதுமா"  பாடலைக் கேட்டு வரகுண பாண்டியன் மட்டும் அல்ல.  
நாமுமே அல்லவா கிறங்கிவிடுகிறோம்.
 
சரணத்தில் "குழலென்றும் .." என்ற வார்த்தைக்கு பிறகு ஒரு சிறு ஆலாபனை, ஸ்வரம் என்று பாடிய பிறகு அந்த வார்த்தைக்கு தக்கபடி குழலிசையில் முடிப்பதும், அதே போல "யாழென்றும்.." என்ற வார்த்தைக்கு பிறகு வரும் ஸ்வரங்களை வீணையில் இசைத்து பிறகு இரண்டு வார்த்தைகளையும் இணைத்து பாடலைத் தொடர்வதும்.....  கே.வி.மகாதேவனுக்கு மட்டுமே சாத்தியம்...
 
கடைசி சரணத்தில் கவிஞர் ராகத்தின் பெயர்களை இணைத்து பாடல் வரிகளை அமைக்க அவற்றை முறையே 
தோடி, தர்பார், மோகனம், கானடா என்று அந்தந்த ராகங்களிலேயே அமைத்து 
ஒரு ராக முத்திரைப் பாடலாக அமைத்துவிட்டிருக்கிறார் கே.வி. மகாதேவன்.
 
இங்கு கையாண்ட ராகங்கள் அனைத்துமே தென்னாட்டுக்குச் சொந்தமான 
கர்நாடக ராகங்கள்தான்.  
 
ஹிந்துஸ்தானியில் மட்டும்தான் என்று இல்லை,  நான் உங்கள் கர்நாடக சங்கீதத்திலும் கரை கண்டவன் என்று ஹேமநாத பாகவதர் பறை சாற்றிக் கொள்வது போல வரிக்கு வரி ராகம் 
மாறும் பாடலாக அமைத்து கதாபாத்திரத்தின் தன்மைக்கு ஏற்பப் 
பாடலை அமைத்திருக்கும் விதம் அந்த கதாபாத்திரத்தை கே.வி. மகாதேவன் 
எந்த அளவுக்கு உள்வாங்கிக்கொண்டு 
இசை அமைத்திருக்கிறார் என்பதற்கு 
ஒரு சான்று.
 
ஒரு இசை அமைப்பாளர் எப்படி செயல்படவேண்டும் என்பதற்கு இந்தப் பாடலின் மூலம் ஒரு இலக்கணமே வகுத்துக்கொடுத்திருக்கிறார் கே.வி. மகாதேவன் என்றால் அது மிகை அல்ல.,,,,

No comments:

Post a Comment