உ
சிவாயநம திருச்சிற்றம்பலம்.
பதியும் பணியே பணியாய் அருள்வாய்.
*கோவை.கு .கருப்பசாமி.*
__________________________________
*தினமும் ஒரு பாடல் பெற்ற தல தரிசனம்:*
(நேரில் சென்று தரிசித்ததைப் போல.........,)
____________________________________
இத்தல பதிவு இன்றும் நாளையும் தொடர்ந்து வரும். அடியார்கள் இருநாள் பதிவையும் இணைத்து வாசிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
___________________________________
*தேவாரம் பாடல் பெற்ற தல எண்:270*
*பாடல் பெற்ற சிவ தல தொடர்:*
*சிவ தல அருமைகள் பெருமைகள்:*
*🏜மகாபலேஸ்வரர் திருக்கோயில், திருக்கோயில்கள். கர்நாடகம்:*
__________________________________
தேவாரம் பாடல் பெற்ற தலங்களில் துளுவ நாட்டில் அமைந்துள்ளது இத்தலம்
*🌙இறைவன்:* மகாபலேஸ்வரர், பிராணலிங்கேஸ்வரர், ஆத்மலிங்கேஸ்வரர்.
*💥இறைவி:*
கோகர்ணேஸ்வரி, தாம்ரகௌரி.
*🌴தல விருட்சம்:* வில்வம்.
*🌊தல தீர்த்தம்:* கோண தீர்த்தம்.
*🛣இருப்பிடம்:*
கர்நாடகா மாநிலம்
பெங்களூரிலிருந்தும், மங்களூரிலிருந்தும் பேருந்துகள் செல்கின்றன.
சென்னையிலிருந்து இரயில் மூலம் செல்வோர், ஹூப்ளி சென்று அங்கிருந்து பேருந்தில் செல்ல வேண்டும்.
*☎தொடர்புக்கு:*
0838625 257167
*வழிபட்டோர்:* இராவணன், பிரமன், அகத்தியர், காமதேனு, மார்க்கண்டேயர், சரஸ்வதி, வசிட்டர், நாகராசன் முதலியோர்.
*📔தேவாரம் பாடியவர்கள்:*
சம்பந்தர். -1
அப்பர் .-1ஆக மொத்தம் இத்தலத்திற்கு இரண்டு பதிகங்கள்.
*தல அருமை:*
கோ - பசு, கர்ணம் - காது. சுவாமி பசுவின் காதுபோலக் குழைந்து காணப்படுவதால் இத்தலம் இப்பெயரைப் பெற்றது.
இதற்கு ருத்ரயோனி, வருணாவர்த்தம் முதலிய பெயர்களும் உண்டு.
இலங்கை வேந்தன் இராவணன் கயிலைமலை சென்று சிவபிரானை நோக்கிக் கடுந்தவம் புரிந்தான்.
சிவபிரான் உமையம்மையோடு காட்சித்தந்து வேண்டுவன யாது, என வினவினார். இராவணன் இலங்கை அழியாதிருக்க அருளவேண்டும் என்றான்.
அதற்கிசைந்த பெருமான் இராவணன் கையில் பிராணலிங்கத்தைக் கொடுத்து இதனை இலங்கைக்கு எடுத்துச் சென்று பிரதிட்டை செய்து வழிபட்டு வந்தால் இலங்கை அழியாது என்றும், இச்சிவலிங்கத்தைத் தலையில் சுமந்து செல்லவேண்டும், வழியில் இதனைக் கீழே வைத்தால் எடுக்கவாராது எனவும் அருளி மறைந்தார்.
இராவணன் பிராணலிங்கத்தைச் சிரசில் சுமந்து இலங்கை நோக்கிச் சென்றான்.
நாரதர் மூலம் இதனை அறிந்த இந்திரன் பிராண லிங்கத்தை இராவணன் பிரதிட்டை செய்துவிட்டால் இராவணன் அழியான், தேவர்கள் துயர்நீங்காது என எண்ணித் தேவர்கள் புடைசூழ கயிலைமலை சென்று விநாயகரை வேண்டினான்.
இந்திரனின் வேண்டுகோளை ஏற்ற விநாயகர் இராவணன் கோகரணத்தை அடையும் வேளையில் அவன் வயிற்றில் நீர்சுரக்குமாறு செய்ய வருணனை ஏவிவிட்டு, ஒரு சிறுவன் போல அவன்முன் தோன்றி நின்றார்.
இராவணன் வந்த அந்தச் சிறுவனை நோக்கிச் சிவலிங்கத்தை அச்சிறுவன் கையில் கொடுத்து, நான் சிறுநீர் கழித்து வரும்வரை இதனைக் கையில் வைத்துக்கொண்டு நிற்குமாறு வேண்டினான்.
சிறுவனாக வந்த விநாயகர், இராவணனை நோக்கி என்னால் சுமைபொறுக்க இயலாத நேரத்தில் மூன்றுமுறை உன்னை அழைப்பேன் அதற்குள் வராவிட்டால் நிலத்தில் வைத்துவிடுவேன் என அருளினார்.
இராவணனும் இசைந்து சென்றான். நெடுநேரம் ஆகியும் அவன் வராதரால் மூன்றுமுறை, அழைத்து சிவலிங்கத்தைப் பூமியில் வைத்துவிட்டார்.
இராவணன் வந்து சிவலிங்கத்தை இருபது கரங்களாலும் எடுக்க முயன்றான். பெருமான் பசுவின் காதுபோலக் குழைந்து காட்டினார். இராவணன், மகாபலம் உடையவர் இவ்விறைவர் எனக் கூறி அந்த அந்தணச்சிறுவன் செய்த தவறுக்காக மூன்றுமுறை அவனது தலையில் குட்டினான்.
சிறுவனாக வந்த விநாயகர் தம் உண்மை வடிவை அவனுக்குக் காட்டிப் பந்துபோல அவனைத் தூக்கி எறிந்து விளையாடினார்.
இராவணன் பிழைபொறுக்க வேண்டினான். விநாயகர், உன் தலையில் இவ்வாறே மூன்றுமுறை குட்டிக்கொள் என்று கூறினார்.
இராவணன் தான் செய்த பிழைக்கு வருந்திக் குருதிசோரத் தலையில் குட்டிக் கொண்டு அவரை வழிபட்டு அருள் பெற்றான்.
விநாயகர் சினம் தணிந்து தலையில் குட்டிக்கொண்டு வழிபடுவோருக்கு வேண்டும் வரங்கள் தருவதாகக் கூறி இராவணனின் பிழைகளைப் பொறுத்து அவனுக்கு நல்வரங்கள் தந்தருளினார்.
*சிறப்பு:*
இத்தலத்தை அப்பர் பெருமான், அருளிய திருஅங்கமாலையில் வைத்துப் பாடியுள்ளார்.
இத்தலத்தில் சிவலிங்கம் ஒரு கொட்டைப்பாக்கு அளவில் ஆவுடையாரில் அடங்கியிருப்பதைக் காணமுடியும்.
இத்தலத்து வழக்கப்படி மக்கள் திருமேனியைத் தொட்டு நீராடி மலர்சூட்டி வழிபடுகிறார்கள்.
*கோயில் அமைப்பு:* தமிழ்நாட்டுக் கோயில்கள் அமைப்பிலிருந்து வேறான அமைப்புடன் அமைந்திருக்கிறது.
கோயில் கடற்கரைக்கு அருகிலேயே இருக்கிறது.
மூலத்தானம் சிறிய அளவுடையது. நடுவிலுள்ள சதுரமேயில் வட்டமான பீடமுள்ளது, இப்பீடத்தின் தென்கிழக்குப் பகுதியில் வெடிப்பொன்று உள்ளது.
இதனைச் சுவர்ணரேகையுள்ள சாளக்கிராம பீடமென்பர்.
இதன் நடுவிலுள்ள வெள்ளை நிறமான உள்ளங்கையளவுள்ள பள்ளத்தின் நடுவில் கொட்டைப்பாக்கு அளவில் மகாபலேஸ்வரர் சிவலிங்கபாணம் தென்படுகிறது.
தொட்டுப்பார்த்து உணரலாம்.
பசுவின் காதுபோலக் குழைந்து தோற்றமளிக்கும் அருட்காட்சி நம்மை ஆனந்தத்தில் ஆழ்த்துகிறது.
துவிபுஜ விநாயகர் இவர்முடியில் யானைத் தலையில் இருப்பதுபோல இருபுறமும் மேடும் நடுவில் பள்ளமும் உள்ளது.
இது இராவணன் குட்டியதால் ஏற்பட்ட பள்ளமென்கின்றனர்.
இத்தலத்தில் உள்ள கோகர்ப்பக்குகை கண்டுகளிக்கத்தக்கது.
இங்கு முப்பத்து மூன்று தீர்த்தங்கள் உள்ளன. இவற்றுள் கோகர்ண தீர்த்தம், தாம்ரகௌரிநதி, கோடிதீர்த்தம், பிரமகுண்ட தீர்த்தம் முதலியவை சிறப்புடையவை.
இவற்றுள்ளும் சிறப்புடையது கோடி தீர்த்தமாகும்.
இத்தலத்திற்கு வருவோர் முதலில் கோடி தீர்த்தத்தில் நீராடி, பின்பு கடல் நீராடி, பிண்டதர்ப்பணம் செய்து, மீண்டும் நீராடி இதன்பிறகு மகாபலேஸ்வரரை வழிபட வேண்டும்.
*(விரிவான தல தரிசனம் நாளை)*
*நாவுக்கரசர் தேவாரம்:*
1.🔔சந்திரனுந் தண்புனலுஞ் சந்தித் தான்காண்
தாழ்சடையான்காண் சார்ந்தார்க் கமுதா னான்காண்
அந்தரத்தி லசுரர்புரம் மூன்றட் டான்காண்
அவ்வுருவி லவ்வுருவ மாயி னான்காண்
பந்தரத்து நான்மறைகள் பாடி னான்காண்
பலபலவும் பாணி பயில்கின் றான்காண்
மந்திரத்து மறைப்பொருளு மாயி னான்காண்
மாகடல்சூழ் கோகரணம் மன்னி னானே.
🙏பெரிய மேலைக் கடலால் ஒருபுறம் சூழப்பட்ட கோகரணத்தில் உகந்தருளியிருக்கும் எம்பெருமான் தாழ்ந்த சடையில் பிறையையும் கங்கையையும் அணிந்தவனாய், அடியார்களுக்கு அமுதாய் வானத்தில் உலவிய அசுரரின் முப்புரங்களையும் அழித்தவனாய், அழகிய உருவங்களின் மேம்பட்ட அழகுடைய உருவினனாய், இசைவகைகளை உடைய நான்கு வேதங்களையும் பாடினவனாய்த் தாளத்திற்கு ஏற்பக் கூத்து நிகழ்த்துபவனாய், மந்திரத்தை உடைய வேதமாகவும் உள்ளான்.
2.🔔தந்தவத்தன் தன்தலையைத் தாங்கி னான்காண்
சாரணன்காண் சார்ந்தார்க்கின் னமுதா னான்காண்
கெந்தத்தன் காண்கெடில வீரட் டன்காண்
கேடிலிகாண் கெடுப்பார்மற் றில்லா தான்காண்
வெந்தொத்த நீறுமெய் பூசி னான்காண்
வீரன்காண் வியன்கயிலை மேவி னான்காண்
வந்தொத்த நெடுமாற்கும் அறிவொ ணான்காண்
மாகடல்சூழ் கோகரணம் மன்னி னானே.
🙏மேற்குக் கடலை அடுத்த கோகரணப் பெருமான் உலகைப் படைத்த பிரமனது மண்டையோட்டை ஏந்தி எங்கும் சஞ்சரிப்பவனாய், அடியவர்களுக்கு அமுதமாய், மலரில் மணம்போல எங்கும் பரவியவனாய், அதிகை வீரட்டனாய்த் தான் என்றும் அழிவில்லாதவனாய்த் தன்னை அழிப்பாரும் இல்லாதவனாய்த் திருநீறு பூசியவனாய்த் தவமாகிய பெருமிதம் உடையவனாய், பரந்த கயிலாயத்தை விரும்பி உறைபவனாய்த் தன்னிடத்துத் தோன்றித் தன் கருத்துக்கு ஏற்பக் காத்தல் தொழிலைச் செய்கின்ற திருமாலாலும் உள்ளபடி அறிய ஒண்ணாதவனாய், உள்ளான்.
3.🔔தன்னுருவம் யாவருக்குந் தாக்கா தான்காண்
தாழ்சடையெம் பெருமான்காண் தக்கார்க் குள்ள
பொன்னுருவச் சோதிபுன லாடி னான்காண்
புராணன்காண் பூதங்க ளாயி னான்காண்
மின்னுருவ நுண்ணிடையாள் பாகத் தான்காண்
வேழத்தி னுரிவெருவப் போர்த்தான் தான்காண்
மன்னுருவாய் மாமறைக ளோதி னான்காண்
மாகடல்சூழ் கோகரணம் மன்னி னானே.
🙏மாகடல் சூழ் கோகரணம் மன்னிய பெருமான் தன் உருவையார்க்கும் எதிர்ப்படச் செய்யாதவனாய்த் தாழ் சடையனாய், அடியார்களுக்கு அநுபவப் பொருளாகிய பொற்சோதியாய், கங்கா தரனாய், பழையோனாய் , ஐம்பூதங்களாய், மின்னல் போன்ற நுண்ணிய இடையை உடைய பார்வதி பாகனாய், யானையின் தோலை உமாதேவி அஞ்சுமாறு போர்த்தவனாய் என்றும் நிலை பெற்ற உருவமுடையவனாய், வேதங்களை ஓதிக்கொண்டு இருப்பவன் ஆவான்.
4.🔔ஆறேறு செஞ்சடையெம் ஆரூ ரன்காண்
அன்பன்காண் அணிபழனம் மேயான் றான்காண்
நீறேறி நிழல்திகழும் மேனி யான்காண்
நிருபன்காண் நிகரொன்று மில்லா தான்காண்
கூறேறு கொடுமழுவாட் படையி னான்காண்
கொக்கரையன் காண்குழுநற் பூதத் தான்காண்
மாறாய மதில்மூன்றும் மாய்வித் தான்காண்
மாகடல்சூழ் கோகரணம் மன்னி னானே.
🙏மாகடல் சூழ்கோகரணம் மன்னிய பெருமான் கங்கையைச் சடையில் சூடிய ஆரூரனாய்ப் பழனத்தில் உறைபவனாய், அன்பனாய்த் திருநீறணிந்து ஒளிவீசும் மேனியனாய், தலைவனாய், ஒப்பற்றவனாய், பிளவு தோன்றுதற்குக் கருவியாகிய மழுப்படையினனாய், கொக்கரை என்ற வாச்சியத்தை உடையவனாய், மேம்பட்ட பூதக்கூட்டத்தை உடையனாய், பகையாகச் செயற்பட்ட மும்மதிலையும் அழித்து மறையச் செய்தவனாவான்.
5.🔔சென்றச் சிலைவாங்கிச் சேர்வித் தான்காண்
தீயம்பன் காண்திரி புரங்கள் மூன்றும்
பொன்றப் பொடியாக நோக்கி னான்காண்
பூதன்காண் பூதப் படையா ளிகாண்
அன்றப் பொழுதே அருள்செய் தான்காண்
அனலாடி காண்அடியார்க் கமுதா னான்காண்
மன்றல் மணங்கமழும் வார்சடை யான்காண்
மாகடல்சூழ் கோகரணம் மன்னி னானே.
🙏மாகடல் சூழ் கோகரணம் மன்னிய பெருமான் திரிபுரங்களை நோக்கிச் சென்று மேரு மலையாகிய வில்லை வளைத்துத் தீயாகிய அம்பைச் செலுத்தி வானத்தில் திரிந்த மும்மதில்களும் சாம்பலாகுமாறு செய்தவனாய், உயிர்களை ஆளாக உடையவனாய், பூதப் படை உடையவனாய், அடியார்களுக்கு அன்றன்று அவ்வப்பொழுதே அருள் செய்தவனாய்த் தீயிடையே கூத்தாடு பவனாய், அடியவர்களுக்கு அமுதானவனாய், நறுமணம் கமழும் நீண்ட சடையை உடையவனாய் உள்ளான்.
6.🔔பிறையோடு பெண்ணொருபால் வைத்தான் றான்காண்
பேரவன்காண் பிறப்பொன்று மில்லா தான்காண்
கறையோடு மணிமிடற்றுக் காபா லிகாண்
கட்டங்கன் காண்கையிற் கபால மேந்திப்
பறையோடு பல்கீதம் பாடி னான்காண்
ஆடினான் காண்பாணி யாக நின்று
மறையோடு மாகீதங் கேட்டான் றான்காண்
மாகடல்சூழ் கோகரணம் மன்னி னானே.
🙏மாகடல் சூழ் கோகரணம் மன்னியபெருமான் சடைமுடியாகிய ஓரிடத்தில் பிறையையும் கங்கையையும் சேர்த்து வைத்த புகழோனாய், பிறப்பில்லாதவனாய், நஞ்சுபொருந்திய நீல கண்டனாய்க் காபாலக் கூத்து ஆடுபவனாய்க் கட்டங்கம் என்ற படை உடையவனாய்க் கையில் மண்டையோட்டை ஏந்திப் பறை ஒலிக்கப் பல பாடல்கள் பாடியவனாய், தாளத்திற்கு ஏற்ப ஆடியவனாய், அடியார்கள் ஓதும் வேத ஒலியையும் பாடும் பாடல் இசையையும் செவிமடுத்தவனாவன்.
7.🔔மின்னளந்த மேல்முகட்டின் மேலுற் றான்காண்
விண்ணவர்தம் பெருமான்காண் மேவி லெங்கும்
முன்னளந்த மூவர்க்கும் முதலா னான்காண்
மூவிலைவேற் சூலத்தெங் கோலத் தான்காண்
எண்ணளந்தென் சிந்தையே மேவி னான்காண்
ஏவலன்காண் இமையோர்க ளேத்த நின்று
மண்ணளந்த மாலறியா மாயத் தான்காண்
மாகடல்சூழ் கோகரணம் மன்னி னானே.
🙏மாகடல் சூழ் கோகரணம் மன்னியபெருமான் ஒளிவீசும் அண்டச்சுவரின் மேலும் பொருந்தியவனாய்த் தேவர்கள் தலைவனாய், எவ்விடத்தையும் தம் தொழிலுக்கு உட்படுத்திய மூவருக்கும் காரணனாய், முத்தலைச்சூலம் ஏந்திய அழகினனாய், என் எண்ணத்தை அளந்து என் உள்ளத்தில் விரும்பி உறைபவனாய், அம்பு எய்தலில் வல்லவனாய்த் தேவர்கள் துதிக்குமாறு இருந்து, உலகை அளந்த திருமாலால் அறியப்பட முடியாத வியக்கத்தக்க நிலை உடையவனாக உள்ளான்.
8.🔔பின்னு சடைமேற்பிறை சூடி னான்காண்
பேரருளன் காண்பிறப்பொன் றில்லா தான்காண்
முன்னி யுலகுக்கு முன்னா னான்காண்
மூவெயிலுஞ் செற்றுகந்த முதல்வன் றான்காண்
இன்னவுரு வென்றறிவொண் ணாதான் றான்காண்
ஏழ்கடலு மேழுலகு மாயி னான்காண்
மன்னும் மடந்தையோர் பாகத் தான்காண்
மாகடல்சூழ் கோகரணம் மன்னி னானே.
🙏மாகடல் சூழ் கோகரணம் மன்னியபெருமான் இணைத்த சடைமீது பிறை சூடிப் பேரருளாளனாய்ப் பிறப்பிலியாய், உலகுக்குக் காரணனாய், மும்மதிலும் அழித்து மகிழ்ந்த முதல்வனாய்த் தன் உண்மை உருவை மற்றையார் அறிய இயலாத இயல்பினனாய், ஏழ்கடலும் ஏழ்உலகும் ஆயவனாய்ப் பார்வதி பாகனாய் உள்ளான்.
9.🔔வெட்ட வெடித்தார்க்கோர் வெவ்வழ லன்காண்
வீரன்காண் வீரட்டம் மேவி னான்காண்
பொட்ட அநங்கனையும் நோக்கி னான்காண்
பூதன்காண் பூதப் படையி னான்காண்
கட்டக் கடுவினைகள் காத்தாள் வான்காண்
கண்டன்காண் வண்டுண்ட கொன்றை யான்காண்
வட்ட மதிப்பாகஞ் சூடி னான்காண்
மாகடல்சூழ் கோகரணம் மன்னி னானே.
🙏மாகடல் சூழ் கோகரணம் மன்னிய பெருமான் வீணாக அடியவர்களை உரத்தகுரலில் இழித்துப் பேசுபவருக்குக் கொடிய நெருப்புப் போன்றவனாய்த் தவத்தின் பெருமிதம் உடையவனாய், வீரட்டத் தலங்களில் விரும்பியிருப்பவனாய், விரைவாக மன்மதனைச் சாம்பலாகுமாறு தீவிழித்தவனாய், ஐம்பூத வடிவினனாய்ப் பூதப் படையினனாய், தீங்குதரும் கொடிய வினைகள் தாக்காதவாறு காத்து அடியவர்களை ஆட்கொள்பவனாய், கற்கண்டு போன்ற இனியவனாய், வண்டு தேன் உண்ட கொன்றையைச் சூடியவனாய், பிறை சூடியாய் உள்ளான்.
10.🔔கையாற் கயிலை யெடுத்தான் தன்னைக்
கால்விரலால் தோள்நெரிய வூன்றி னான்காண்
மெய்யின் நரம்பிசையாற் கேட்பித் தாற்கு
மீண்டே யவற்கருள்கள் நல்கி னான்காண்
பொய்யர் மனத்துப் புறம்பா வான்காண்
போர்ப்படையான் காண்பொருவா ரில்லா தான்காண்
மைகொள் மணிமிடற்று வார்சடை யான்காண்
மாகடல்சூழ் கோகரணம் மன்னி னானே.
🙏மாகடல் சூழ் கோகரணம் மன்னிய பெருமான் கைகளால் கயிலை மலையைப் பெயர்த்த இராவணனை, கால் விரலால் தோள்கள் நெரியுமாறு அழுத்தியவனாய், தன் உடம்பில் உள்ள நரம்புகளை வீணை நரம்புகளாகக் கொண்டு இன்னிசை எழுப்பி, தன்னைச் செவிமடுக்கச் செய்த இராவணனுக்கு அருள்களை விரும்பிக் கொடுத்தவனாய்ப் பொய்யருடைய உள்ளங்களுக்கு அப்பாற்பட்டவனாய், போரிடுவதற்குரிய படைக்கலன் ஏந்தியவனாய், அவற்றால் போர் செய்யப்படுவார் ஒருவரும் இல்லாதானாய், நீலகண்டமும், நீண்ட சடையும் உடையவனாய், அடியார்கள் அகக் கண்ணுக்குத் தோற்றம் வழங்குகின்றான்.
திருச்சிற்றம்பலம்.
இந்தத் தலபதிவு நாளையும் தொடரும்.
___________________________________
*அடியார்களுக்குத் தொண்டு செய்யுங்கள் இறைவன் அவர்களுக்குள்ளிருக்கிறான்.*
No comments:
Post a Comment