Thursday, April 26, 2018

Kambar & Lord Narasimha

Courtesy: http://temple.dinamalar.com/news_detail.php?id=52360

கம்பருக்கு அருளிய நரசிம்மர் :

திருமால் நான்காவதாக எடுத்த நரசிம்ம அவதாரம், நாளை என்பதே கிடையாது. இன்றே- இப்பொழுதே என்பதை நிரூபிக்க எடுத்த அவதாரமாகும். அவ்வகையில் கவிச் சக்கரவர்த்தி கம்பருக்கு அருளிய நரசிம்மர் பற்றி அருமையாக விவரிக்கிறது வரலாறு. கம்பர் பிறந்தது தேரழுந்தூரில். இவ்வூர் மயிலாடுதுறையிலிருந்து சுமார் 30 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. கம்பர் நரசிம்ம உபாசகர் நாள்தோறும் அருகிலுள்ள நரசிம்மர் கோயிலுக்குச் சென்று, யோக நரசிம்மரை வழிபட்டு, அங்கேயே சிறிது நேரம் தியானம் மேற்கொள்வர். இந்நிலையில் வால்மீகி ராமாயணத்தை அடிப்படையாகக் கொண்டு தான் இயற்றிய ராமகாவியத்தை அரங்கேற்ற ஸ்ரீரங்கம் திருத்தலத்திற்கு வந்தார். அங்குள்ள பண்டிதர்களும் அறிஞர் பெருமக்களும் தில்லைவாழ் தீட்சிதர்கள் இதற்கு ஒப்புக் கொண்டால்தான் இங்கு அரங்கேற்றம் செய்யலாம் என்று கூறினார்கள். ஸ்ரீரங்கம் கோயிலில் அருள் புரியும். நரசிம்மரை வழிபட்டபின் தில்லைக்குச் சென்றார் கம்பர். அங்கு தீட்சிதர்களைச் சந்தித்து தான் வந்ததுகுறித்து சொன்னார். அதற்கு அவர்கள், நீங்கள் இயற்றிய ராம காவியத்தை இங்குள்ள மூவாயிரம் தீட்சிதர்களும் கேட்க வேண்டும். அவர்கள் ஒவ்வொரு வரும் கேட்கும் கேள்விகளுக்கும் சந்தேகங்களுக்கும் பதில் கூறவேண்டும். ஆனால் மூவாயிரம் தீட்சிதர்களும் ஒரே இடத்தில் ஒன்றுகூடுவது இயலாத காரியம் எனவே வேறு வழியினைத் தேடுங்கள் என்றனர்.

மீண்டும் ஸ்ரீரங்கம் வந்த கம்பர் அங்குள்ள அறிஞர்களிடம் தன் நிலையைக் கூறினார். அவர்களோ தில்லையில் ஏற்றுக்கொண்டால், தான் ஸ்ரீரங்கத்தில் ராமகாவியம் அரங்கேற்றலாம் என்றனர். கம்பர் மனம் தளரவில்லை ஸ்ரீரங்கம் கோயிலிலுள்ள நரசிம்மப்பெருமாள் சன்னிதிக்குச் சென்று நரசிம்மரை வணங்கிவிட்டு தேரழுந்தூர் திரும்பினார். காலம் கடந்தது ஒருநாள் மாலைவேளையில் தேரழுந்தூர் நரசிம்மர் கோயில் மண்டபத்தில் அமர்ந்து நரசிம்மரை உபாசித்தவண்ணம் தியானத்தில் ஆழ்ந்திருந்தார். அப்போது உடனே தில்லைக்குச் செல் என்று அசரீரி ஒலித்தது. அதைத் தொடர்ந்து ராமகாவிய ஓலைச் சுவடிகள் கொண்ட கட்டுகளுடன் தில்லை நோக்கிப் பயணமானார் கம்பர் காலை ஆறு மணியளவில் தில்லையை அடைந்தார்.

அங்கே தில்லை தீட்சிதர்கள் மூவாயிரம் பேரும் ஓரிடத்தில் கூடியிருந்தார்கள். ஆனால் யாருடைய முகத்திலும் மகிழ்ச்சி இல்லை சோகமே உருவாகத் திகழ்ந்தார்கள் ஏன் எல்லோரும் சோகமாக இருக்கிறார்கள்? என்று ஒரு தீட்சிதரிடம் கேட்டார். கம்பர், அதற்கு அவர், இங்கு தில்லை நடராஜருக்கு வழிபாடுகள் செய்யும் பிரதம தீட்சிதரின் மகன் பாம்பு தீண்டி மாண்டுபோனான். இறுதிச் சடங்கு நடக்கப்போகிறது. அதற்காகத்தான் நாங்கள் மூவாயிரம் பேரும் இங்கு கூடியுள்ளோம் என்றார். அதற்கு கம்பரை கவனித்து விட்ட மற்ற தீட்சிதர்கள் ஒன்றுசேர்ந்து, நாங்களோ கவலையில் இருக்கிறோம். நீர் என்னவென்றால் ராமகாவியத்தை மூட்டை கட்டிக் கொண்டு வந்திருக்கிறீர். போங்கள்.... பிறிதொரு சமயம் வாருங்கள் பார்க்கலாம். என்று விரட்டினார்கள். உடனே கம்பர், கவலைவேண்டாம் பாம்பு தீண்டிய சிறுவனை நான் உயிர்ப்பிக்கிறேன் என்று கூறி, அந்த சிறுவனின் உடலை வீட்டிலிருந்து வெளியே கொண்டுவரச் சொன்னார் தான் வழிபடும் காளி தேவியை மனதில் வழிபட்டார். கம்பத்திலிருந்து தோன்றிய நரசிங்கப் பெருமாளையும் மனதிற்குள் தியானித்து, தனது ராமகாவிய ஓலைச் சுவடிகளிலிருந்து, நாகபாசப் படலம் என்ற பகுதியில் எழுதிய பாடல்கள் சிலவற்றைப் பாடினார். அப்போது யாரும் எதிர்பாராத வண்ணம் ஆகாயத்தில் பெரிய கருடன் ஒன்று வட்டமிட்டது. கம்பர் நாகபாசப் படலம் பாடல்களைப் பாடப்பாட, அந்தக்கருடன் இறந்துகிடந்த சிறுவன் சடலத்தின்மேல் தன் நிழல்படும் படி மூன்று முறை வட்டமிட்டு, குரலெழுப்பி தாழப்பறந்து, பிறகு மேலே வட்டமிட்டபடி வானில் உச்சிக்குச் சென்று மறைந்தது. இந்த அதிசயத்தை அங்கிருந்த மூவாயிரம் தீட்சிதர்களும் ஆச்சரியத்துடன் தரிசித்தார்கள் கம்பர் அந்த கருடனை கைகூப்பி வணங்கினார்.

அப்போது யாரும் எதிர்பாராத வண்ணம் பிணமாகக் கிடந்த சிறுவன் உயிர் பெற்றெழுந்தான் அதைக்கண்டு பரவசமடைந்த தீட்சிதர்கள் அனைவரும் கம்பரை கைகூப்பி வணங்கினார்கள். இறந்தவனையே பிழைக்கவைக்கும் சக்திகொண்ட கம்பரின் பாடல்கள் எந்தவித பரிசோதனைகளுக்கும் கட்டுப்பட்டவையல்ல அவரது ராமகாவியம் அரங்கேற்ற முழுத்தகுதியும் பெற்றுள்ளது. என்று அனைவரும் சான்றோலை அளித்தார்கள். கம்பர் மகிழ்வுடன் அங்கிருந்து ஸ்ரீரங்கம் புறப்பட்டார். கம்பர் எந்த தைரியத்தில் சிறுவனை உயிப்பிப்பதாகக் கூறி நாகபாசப் படலம் பாடல்களைப் பாடினார் என்பது கம்பரின் நெருங்கிய நண்பர்களுக்கு மட்டும்தான் தெரியும். ஒரு சமயம், சடையப்ப வள்ளலின் மகன் சேதிராயன் பாம்பு தீண்டி மாண்டுபோனான். இதையறிந்து கம்பர், உடனே தான் இயற்றிய நாக பாசப் படலம் பகுதிகளில் இரண்டு வெண்பாக்களைப் பாடி, அவனை உயிர்ப்பித்தார். அப்பொழுது ராமகாவியம் முழுமைபெறாத நிலையிலிருந்து குறிப்பிடத்தக்கது.

தில்லை தீட்சிதர்கள் மூவாயிரம் பேரும் சான்றளித்ததால் கம்பர் இயற்றிய ராமாயணத்தை அரங்கேற்ற ஸ்ரீரங்கம் வாழ் பண்டிதர்களும் அறிஞர்களும் அனுமதியளித்தனர். ஒரு சுபநாளில் கம்பர் ஸ்ரீரங்கம் திருக்கோயிலின் ஐந்தாவது பிராகாரத்திலுள்ள சிங்கப்பெருமாள் சன்னிதிமுன் உள்ள மண்டபத்திற்கு வந்தார். அவரது ராமாயணத்தைக் கேட்க ஊர் மக்களும் பெரியவர்களும் சான்றோர்களும் ஓன்று கூடினார்கள். கம்பர், அவர் அமர்ந்திருந்த மண்டபத்தின் எதிரிலுள்ள அழகிய சிங்கப்பெருமாள் சன்னிதியைப் பார்த்து கைகூப்பி வணங்கியபின், ராமகாவியத்தை ஒவ்வொரு படலமாகப் பாடி விளக்கம் கொடுத்தார். ராமகாவியத்தில் இரண்ய சம்ஹாரத்தை மிக அருமையாகக் காட்டியிருந்தார். ராமகாவியத்தில் இரண்ய சம்ஹாரமா? என்று அந்தப் படலத்தை சில அறிஞர்களும் பண்டிதர்களும் ஏற்றுக்கொள்ளாமல் எதிர்ப்புத் தெரிவித்தார்கள். இவர்களுக்கு என்ன பதில் சொல்வதென்று எதிரே காட்சி தந்த அழகியசிங்கப்பெருமாள் சன்னிதியைப் பார்த்தார் கம்பர். அப்போது நிகழ்ந்ததை கீழுள்ள வரலாறு கூறுகிறது.

திசை திறந்து அண்டங்கீறிச்
சிரித்தது செங்கட்சீயம்

என்ற அடிகளை கம்பர் வாசித்தபோது எதிரிலிருந்த நரசிம்மர் சன்னிதி விமானத்திலிருந்த நரசிம்ம உருவம் அம்மண்டபம் முழுவதும் எதிரொலிக்குமாறு சிரித்ததோடு நில்லாமல், கம்பருடைய பேரறிவாற்றலைப் போற்றுவதுபோல, பலமாகக் கைதட்டி தலையாட்டியன. (சிரக்கம்பம், கரக்கம்பம்) இதனால் திகைப்பும், அதிர்ச்சியுமடைந்த அங்குள்ள அறிஞர்களும் பண்டிதர்களும் ராமகாவியத்தை அங்கீகரித்தனர். ஆகவே, கம்பர் அரங்கேற்றிய ராமாயணக்காவிய மண்டபத்திற்கு கம்பர் மண்டபம் என்ற பெயரும் உண்டு. கம்பராமாயணம் ஸ்ரீரங்கத்தில் அரங்கேற்றிய காலம் சாலிவாஹனசகம் 807 என்பதாகும். அதாவது கி.பி. 885 என்று வரலாறு கூறுகிறது. கம்பர், நரசிம்ம சுவாமி உபாசகர் கம்பத்திலிருந்து தோன்றியதால் நரசிம்ம சுவாமிக்கு கம்பர் என்ற பெயரும் பொருந்தும் என்று ஆன்றோர் கூறுவர்.


No comments:

Post a Comment