உ
சிவாயநம திருச்சிற்றம்பலம்.
பதியும் பணியே பணியாய் அருள்வாய்.
*கோவை.கு.கருப்பசாமி.*
___________________________________
*தினமும் ஒரு பாடல் பெற்ற தல தரிசனம்:*
தேவாரம் பாடல் பெற்ற தலங்களில் தொடர் நிறைவு பதிவு.
___________________________________
*தேவாரம் பாடல் பெற்ற தல தரிசனம் எண்: 274*
*பாடல் பெற்ற சிவ தல தொடர்:*
*சிவ தல அருமைகள் பெருமைகள்:*
*நொடித்தான்மலை.(திருக்கயிலாயம்):*
____________________________________
தேவாரம் பாடல் பெற்ற தலங்களில் வடநாட்டில் அமைந்துள்ள தலத்தில் ஒன்று.
*🌙இறைவன்:* நமசிவாயர்,
அருள்மிகு பார்வதி உடனுறை கயிலாநாதன் திருநாமம் உள்பட ஏனைய திருநாமங்கள். எல்லாம் இவனே!
*💥இறைவி:* பார்வதி, ஈசனுடனாய தேவி திருநாமம் மற்றும் தேவிக்குரிய ஏனைய திருநாமங்கள். எல்லாம் இவளே!
*🌴தல விருட்சம்:* பிரபஞ்சத்தின் அனைத்து விருட்சங்களும், புல், மூலிகை முதலியன.
*🌊தல தீர்த்தம்:* பிரபஞ்சத்தின் அனைத்து நீர் திராவகங்களும் உருவாவன, உருகுவன, ஊர்வன, நிரம்புவன, ஓடுவன, மற்றும் பாய்வன, மானசரோவர் ஏரி, சிந்து நதி, முக்கியமாக கங்கை உள்பட.
*📔தேவாரம் பாடியவர்கள்:*
சம்பந்தர்-2
நாவுக்கரசர்-4
சுந்தரர்-1 ஆக மொத்தம் இத்தலத்திற்கு ஏழு பதிகங்கள்.
*🛣இருப்பிடம்:*
மானசரோவர்.
திபெத் மாநிலம்.
சீனா நாடு.
இது இமயமலைச் சிகரத்தில் இருக்கிறது. வடநாட்டுத் தலங்களுள் ஒன்று. நொடித்தான்மலை என்றுங் கூறப்பெறும். (நொடித்தல் - அழித்தல்) அழித்தல் தொழிலை உடைய உருத்திர மூர்த்தி வீற்றிருந்தருளும் தலமாதலால் நொடித்தான் மலை என்னும் பெயர் பெற்றது.
நொடித்தான் மலை என்னும் இப்பெயர் சுந்தரர் தேவாரத்தில் மட்டும் காணப்பெறுகின்றது.
சம்பந்தரும், அப்பரும் இதைக் கயிலாயம் என்றே பாடியுள்ளனர்.
இது பூ கயிலாயம் எனவும் பெயர்பெறும்.
*இறைவனது இருப்பிடமாய் எங்கும் பரவியுள்ள அருவமாகிய கயிலாயம் வேறு.*
இப்பூ கயிலாயம் தேவர்களாலும் சென்று அடைதற்கரியது.
இம்மலையை உமாதேவி அஞ்சுமாறு இராவணன் பெயர்க்க முயன்றபோது. இறைவன் தன் கால்விரலால் அழுத்த மலையின் கீழ் அகப்பட்டுத் தன் பிழையை உணர்ந்து வழிபட்டு வரங்கள் பெற்றவை.
இங்கு இறைவனது திருக்கோலத்தைக் காண வேண்டி வந்த அப்பர் பெருமானின் கால்கள், கைகள் மார்பு இவைகள் தேயப்பெற்றுச் செயலற்றுக் கிடந்த நிலையில், இவரது உறுதிப்பாட்டை அறிந்து இறைவன் காட்சி தந்தருளி ஒரு திருக்குளத்தைக்காட்டி அதில் மூழ்கி, ஐயாற்றில் எழுந்தருளித் தன் கோலத்தைக் காணுமாறு திருவாய் மலர்ந்தருளப்பெற்றவை.
திருஞான சம்பந்தரால் திருக்காளத்தியிலிருந்தே பாடப்பெற்றதும், சுந்தரமூர்த்தி சுவாமிகளும், சேரமான் பெருமாள் நாயனாரும் முறையே யானை, குதிரை இவைகளின் மீது வந்து கணநாதர்களாய் எழுந்தருளப் பெற்றதும், சேரமான்பெருமாள் நாயனாரால் ஆதியுலா பாடப் பெற்றதும், பிறவும், இத்தலத்தின் சிறப்புக்களாகும்.
திருஞான சம்பந்தர் தென் கைலாயம் எனப்படும் திருக்காளாத்தியைத்தரிசித்தபின்னர் அங்கிருந்து இத்தலம் மீது பதிகம் பாடினார்.
சேரமான் பெருமாள் இத்தலம் மீது திருக்கயிலாய ஞான உலா பாடியுள்ளார்.
இந்து சமயத்தில் குறிப்பிடப்படும் மும்மூர்த்திகளுள் ஒருவரான சிவன், கைலாய மலையில் தனது துணைவியான பார்வதி
தேவியுடன் உறைகிறார்.
பல இந்து சமயப் பிரிவுகள் கைலாயத்தை சுவர்க்கம் என்றும் ஆன்மாக்கள் இறுதியாகச் சென்றடைய வேண்டிய இடம் இதுவென்றும் கருதுவர்.
கைலாய மலையை மிகப்பெரிய லிங்கமாகவும், மானசரோவர் ஏரியை யோனியாகவும் உருவகப்படுத்தும் மரபும் உண்டு.
ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக் கணக்கானவர்கள் கைலாய யாத்திரை மேற்கொள்ளுகிறார்கள். இது பன்னெடுங்காலமாக நிகழ்ந்து வரும் ஒரு மரபு.
இந்துக்கள் மட்டுமன்றிப் பல சமயங்களைச் சேர்ந்தவர்களும் இங்கே வருவது உண்டு.
இந்து மதம், புத்த மதம், சமண மதம், பொம்பா மதம் ஆகிய நான்கு மதத்தினருக்குப் புனிதத் தலம் இது.
கைலாய மலையை நடந்து சுற்றிவருவது சிறப்பானது என்பது பலரது நம்பிக்கை. முப்பத்திரண்டு மைல் நீளம் கொண்ட இப் பாதையில் நடந்து மலையைச் சுற்றுவது யாத்திரீகர்களின் ஒரு முக்கியமான கடமையாக செய்வர்.
கைலாயம் சீனாவின் திபெத்திய பீடபூமியில் அமைந்துள்ளது.
59-ஆம் ஆண்டில் சீனா திபெத்தை ஆக்கிரமித்த பின்னர் வெளிநாட்டினர் யாரையும் கயிலாய யாத்திரைக்கு அனுமதிக்காமல் இருந்தது.
81-இல் ஏற்பட்ட இந்தோ-சீன ஒப்பந்தத்தின்படி சீன அரசு இந்தியர்களை மீண்டும் கயிலாய யாத்திரைக்கு அனுமதித்தது.
இதுவரை கைலாய மலையை யாரும் ஏறியது இல்லை. மேலும் இறைவனே மலையாக இருக்கிறார்.
இம்மலையின் புனிதமாகக் கருதப்படுவதால் மலையேற அனுமதி இல்லை.
26 ஆம் ஆண்டில் ஒருவர் கைலாயத்தின் வடமுகமாக ஏற முனைந்தபோது இதன் உயரம் ஆறாயிரம் அடிக்கு செங்குத்தாக இருப்பதால் ஏறும் முயற்சியை கைவிட்டார்.
36 ஆம் ஆண்டில் ஒருவர் ஏற முனைந்த போது, அங்கிருந்த மலைவாழ் மக்களின் தலைவரிடம் கைலாய மலையை ஏறுவது பற்றி கருத்து கேட்ட போது,....
பாவங்களற்ற மனிதனால் மட்டும் தான் இதை பற்றி நினைக்க முடியும் என்றார் அவர்
திருக்கயிலாய மலையின் உயரம் சுமாராக இருபத்திரண்டாயிரம் அடிகள் ஆகும்.
*கயிலாயத்தைத் தரிசித்த அடியார்கள்:*
காரைக்கால் அம்மையார்.
சுந்தரமூர்த்தி நாயனார்.
சேரமான் பெருமாள் நாயனார்.
பெருமிழலைக் குறும்பர் நாயனார்.
ஒளவையார்.
அப்பர் பெருமான்.
*சிறப்பு:*
இங்கு இயற்கையான கோயிலமைப்பில் பனி மூடியபடி சிவலிங்கமாகக் காட்சியளிக்கின்றது.
இத்திருமலை எப்பக்கமிருந்து நாம் பார்த்தாலும் எவ்வண்ணமாக நோக்கினும் அவ்வவர்க்கு அவ்வண்ணமாகவே இக்கோயிலாகவே காட்சி தருகிறது என்பது இமயமலையின் அமைந்துள்ள அதிசயமாகும்.
இம்லையின் சிகரம் தென்திசை நோக்கியதாக இருக்கிறது.
முப்பது மைல் சுற்றளவு உடையதாய் விளங்கும் இம்மலையில் சதுரம், முக்கோணம், வட்டம் போன்ற சித்திர்துடனும், இயற்கையாக அமைந்த மேடைகளும் காட்சிதருகின்றன.
இந்தியாவில் கன்னியாகுமரி முதல் இமயம் வரையில் எத்தனை வகையான கோபுரங்கள் உள்ளனவோ அத்தனை மாதிரிக் கோபுரங்களும் இக்கயிலை மலையில் இருப்பதாய் ஐதீகம்.
ஞானசம்பந்தர் திருக்காளத்தியைத் (தென் கயிலாயம்) தரிசித்த பின்பு அங்கிருந்தே கயிலாயம் நோக்கி மனத்தாற்கண்டு பாடிப் பரவினார் அப்பர் பெருமான்.
கயிலாயத்தையும், அங்கு ஆளுநாயகன் வீற்றிருக்கும் அற்புதக் கோலத்தையும் காணுமது காதலித்து நெடிய யாத்திரையை மேற்கொண்டு சென்றார்.
இந்த யாத்திரையின் பயனாகவே அவர் ஐயாற்றில் கயிலைத் தரிசனம் பெற்றார்.
அப்பர் பெருமான் பாடியுள்ள திருக்கயிலைத் திருத்தாண்டகங்கள் *போற்றித் திருத்தாண்டகங்கள்* என்று அழைக்கப்படுகின்றன.
இறைவனருளால் அஞ்சைக்களத்திலிருந்து வெள்ளையானையேறி சுந்தரர் கயிலைக்குச் சென்றபோது, திருவருட் கருணையை நினைந்து, *தானெனை முன்படைத்தான்* என்று தொடங்கும் பதிகம் பாடியவாறே போற்றிச் சென்றார்.
இத்திருப்பதிகம் வருணனால் இவ்வுலகில் திருஞ்சைக் களத்தில் சேர்ப்பிக்கப் பெற்று உலகிற்குக் கிடைத்தது.
சேரமான் பெருமாள் நாயனாரும், காரைக்காலம்மையாரும், ஒளவையாரும் கயிலாயம் சென்ற வரலாற்றை நாமறிவோம்.
கயிலாய யாத்திரைக்கு இந்திய அரசு ஆண்டுதோறும் ஏற்பாடுகளைச் செய்து தருகிறது.
இன்று திருக்கயிலாயம் உள்ள இமயமலைப் பகுதி சீன அரசின் கட்டுப்பாட்டுள் இருந்து வருகின்றது.
ஆண்டு தோறும் கயிலாய தரிசனத்திற்குச் செல்ல விண்ணப்பித்துக் கொள்ளும் அன்பர்களைத் தேர்ந்தெடுத்து இந்திய அரசு அனுப்பி வைக்கின்றது.
சீன அரசும் வருபவர்களுக்கு வசதிகளைச் செய்து தருகின்றது.
*தல அருமை:*
சிவபெருமான் அம்பிகையோடு உடனாகி எழுந்தருளியுள்ள மலை திருக்கயிலாயம்.
அழித்தல் தொழிலையுடைய உருத்திர மூர்த்தி வீற்றிருந்தருளும் தலமாதலால் நொடித்தான்மலை (நொடித்தல் - அழித்தல்) எனவும் வழங்கப்படுகிறது. இத்தலம் சுந்தரரால் நொடித்தான்மலை என்ற பெயராலேயே பாடப்பெற்றது.
இம்மலையை உமாதேவி அஞ்சுமாறு இராவணன் பெயர்க்க முயன்றபோது, இறைவன் தன் கால் விரலால் அழுத்த, மலையின் கீழ் அகப்பட்டுத் தன் பிழையை உணர்ந்து வழிபட்டு வரங்களும், மந்திர வாளும் பெற்ற பதி இது.
*சுந்தரர் தேவாரம்:*
பண்: பஞ்சமம்.
1.🔔தானெனை முன் படைத்தான் அது அறிந்து தன் பொன்னடிக்கே
நானென பாடலந்தோ நாயினேனைப் பொருட்படுத்து
வானெனை வந்து எதிர்கொள்ள மத்த யானை அருள்புரிந்து
ஊனுயிர் வேறு செய்தான் நொடித்தான்மலை உத்தமனே!
🙏திருக்கயிலை மலைக்கண் வீற்றிருந்தருளும் முதல்வன், தானே முன்பு என்னை நிலவுலகில் தோற்றுவித் தருளினான்; தோற்றுவித்த அத்திருக் குறிப்பினையுணர்ந்து அவனது பொன்போலும் திருவடிகளுக்கு, அந்தோ நான் எவ்வளவில் பாடல்கள் செய்தேன்! செய்யாதொழியவும், அப்புன்மை நோக்கி ஒழியாது, என்னை அடியவர்களுள் ஒருவனாக வைத்தெண்ணி, வானவர்களும் வந்து எதிர்கொள்ளுமாறு, பெரியதோர் யானை யூர்தியை எனக்கு அளித்து, எனது உடலொடு உயிரை உயர்வுபெறச் செய்தான்; அவனது திருவருள் இருந்தவாறு என்.
2.🔔ஆனை உரித்த பகை அடியேனொடு மீளக்கொலோ
ஊனை உயிர் வெருட்டி ஒள்ளி யானை நினைத்திருந்தேன்
வானை மதித்த அமரர் வலஞ்செய்து எனையேற வைக்க
ஆனை அருள் புரிந்தான் நொடித்தான்மலை உத்தமனே.
🙏யான், கருவி கரணங்களை அறிவினால் அடக்கி, அறிவே வடிவாய் உள்ள தன்னை உள்கியிருத்தலாகிய ஒன்றே செய்தேன்; அவ்வளவிற்கே, திருக்கயிலை மலைக்கண் வீற்றிருந்தருளும் அம் முதல்வன், வானுலகத்தையே பெரிதாக மதித்துள்ள தேவர்கள் வந்து என்னை வலம்செய்து ஏற்றிச் செல்லுமாறு, ஓர் யானையூர்தியை எனக்கு அளித்தருளினான்; அஃது, அவன் முன்பு யானையை உரித்ததனால் நிலைத்து நிற்கும் பகைமையை அடியேனால் நீங்கச்செய்து, அதற்கு அருள்பண்ணக் கருதியதனாலோ; அன்றி என்மாட்டு வைத்த பேரருளாலோ.
3.🔔மந்திரம் ஒன்று அறியேன் மனை வாழ்க்கை மகிழ்ந்து அடியேன்
சுந்தர வேடங்களால் துரிசே செயும் தொண்டன் எனை
அந்தர மால்விசும்பில் அழகானை அருள்புரிந்த
துந்தரமோ நெஞ்சமே நொடித்தான்மலை உத்தமனே.
🙏நெஞ்சே! அடியேன் மறைமொழிகளை ஓதுதல் செய்யாது இல்வாழ்க்கையில் மயங்கி, அடியவர் வேடத்தை மேற்கொள்ளாது, அழகைத் தரும் வேடங்களைப் புனைந்துகொண்டு, இவ்வாறெல்லாம் பொருந்தாதனவற்றையே செய்து வாழும் ஒரு தொண்டன்; எனக்கு திருக்கயிலை மலைக்கண் வீற்றிருந்தருளும் முதல்வன், வெளியாகிய பெரிய வானத்திற் செல்லும் அழகுடைய யானையூர்தியை அளித்தருளியதும் என் தரத்ததோ!.
4.🔔வாழ்வை உகந்த நெஞ்சே மடவார் தங்கள் வல்வினைப் பட்டு
ஆழ முகந்த என்னை அது மாற்றி அமரர் எல்லாம்
சூழ அருள்புரிந்து தொண்டனேன் பரமல்லதொரு
வேழம் அருள்புரிந்தான் நொடித்தான்மலை உத்தமனே.
🙏உலக இன்பத்தை விரும்பிய மனமே, பெண்டிரால் உண்டாகும் வலிய வினையாகிய குழியில் விழுந்து அழுந்திக் கிடந்த என்னை, திருக்கயிலை மலைக்கண் வீற்றிருந்தருளும் முதல்வன், அந்நிலையினின்றும் நீக்கி, தேவரெல்லாரும் சூழ்ந்து அழைத்து வருமாறு ஆணையிட்டு, என் நிலைக்குப் பெரிதும் மேம்பட்டதாகிய ஓர் யானை யூர்தியை அருளித்தருளினான்; அவனது திருவருள் இருந்தவாறு!
5.🔔மண்ணுலகில் பிறந்து நும்மை வாழ்த்தும் வழியடியார்
பொன்னுலகம் பெறுதல் தொண்டனேன் இன்று கண்டொழிந்தேன்
விண்ணுலகத்தவர்கள் விரும்ப வெள்ளை யானையின்மேல்
என்னுடல் காட்டுவித்தான் நொடித்தான்மலை உத்தமனே.
🙏மண்ணுலகில் மக்களாய்ப் பிறந்து நும்மைப் பாடுகின்ற பழவடியார், பின்பு பொன்னுலகத்தைப் பெறுதலாகிய உரையளவைப் பொருளை, அடியேன் இன்று நேரிற்கண்டேன் என்று தன்பால் வந்து சொல்லுமாறு, திருக்கயிலை மலைக்கண் வீற்றிருந்தருளும் முதல்வன், தேவரும் கண்டு விருப்பங்கொள்ள, என் உடம்பை வெள்ளை யானையின்மேல் காணச்செய்தான்; அவனது திருவருள் இருந்தவாறு என்!.
6.🔔அஞ்சினை ஒன்றி நின்று அலர் கொண்டடி சேர்வறியா
வஞ்சனை என் மனமே வைகி வான நன்னாடர் முன்னே
துஞ்சுதல் மாற்றுவித்து தொண்டனேன் பரமல்லதொரு
வெஞ்சின ஆனை தந்தான் நொடித்தான்மலை உத்தமனே.
🙏திருக்கயிலை மலைக்கண் வீற்றிருந்தருளும் முதல்வன், ஐம்புலன்களைப் பொருந்தி நின்று, பூக்களைக் கொண்டு தனது திருவடியை அணுக அறியாத வஞ்சனையை யுடைத்தாகிய என்மனத்தின் கண்ணே வீற்றிருந்து, எனக்கு இறப்பை நீக்கி, தேவர்களது கண்முன்னே, என் நிலைக்குப் பெரிதும் மேம்பட்ட, வெவ்விய சினத்தையுடைய யானை யூர்தியை அளித்தருளினான்; அவனது திருவருள் இருந்தவாறு என்!.
7.🔔நிலைகெட விண்ணதிர நிலம் எங்கும் அதிர்ந்து அசைய
மலையிடை யானை ஏறி வழியே வருவேன் எதிரே
அலை கடலால் அரையன் அலர் கொண்டு முன் வந்து இறைஞ்ச
உலையணையாத வண்ணம் நொடித்தான்மலை உத்தமனே.
🙏திருக்கயிலை மலைக்கண் வீற்றிருந்தருளும் முதல்வன், விண்ணுலகம் தனது நிலைகெடுமாறு அதிரவும், நிலவுலகம் முழுதும் அதிரவும் மலையிடைத்திரியும் யானை மீது ஏறி, தனது திருமலையை அடையும் வழியே வருகின்ற என் எதிரே, அலைகின்ற கடலுக்கு அரசனாகிய வருணன், பூக்களைக் கொண்டு, யாவரினும் முற்பட்டு வந்து வணங்குமாறு, உடல் அழியாதே உயர்ந்து நிற்கின்ற ஒரு நிலையை எனக்கு அளித்தருளினான்; அவனது திருவருள் இருந்தவாறு என்!
8.🔔அரவொலி ஆகமங்கள் அறிவார் அறி தோத்திரங்கள்
விரவிய வேதஒலி விண்ணெலாம் வந்து எதிர்ந்து இசைப்ப
வரமலி வாணன் வந்து வழி தந்து எனக்கு ஏறுவதோர்
சிரமலி யானை தந்தான் நொடித்தான்மலை உத்தமனே!
🙏அரகர என்னும் ஒலியும், ஆகமங்களின் ஒலியும், அறிவுடையோர் அறிந்து பாடும் பாட்டுக்களின் ஒலியும், பல்வேறு வகையாகப் பொருந்திய வேதங்களின் ஒலியும் ஆகாயம் முழுதும் நிறைந்துவந்து எதிரே ஒலிக்கவும், மேன்மை நிறைந்த, "வாணன்" என்னும் கணத்தலைவன் வந்து, முன்னே வழிகாட்டிச் செல்லவும், ஏறத்தக்கதொரு முதன்மை நிறைந்த யானையை, திருக்கயிலை மலைக்கண் வீற்றிருந்தருளும் முதல்வன் எனக்கு அளித்தருளினான்; அவனது திருவருள் இருந்தவாறு என்!.
9.🔔இந்திரன் மால் பிரமன் எழிலார் மிகு தேவரெல்லாம்
வந்து எதிர்கொள்ள என்னை மத்த யானை அருள்புரிந்து
மந்திர மாமுனிவர் இவன் ஆர் என எம்பெருமான்
நம்தமர் ஊரன் என்றான் நொடித்தான்மலை உத்தமனே!
🙏திருக்கயிலை மலைக்கண் வீற்றிருந்தருளும் முதல்வனாகிய எம்பெருமான், இந்திரன், திருமால், பிரமன், எழுச்சி பொருந்திய மிக்க தேவர் ஆகிய எல்லாரும் வந்து என்னை எதிர் கொள்ளுமாறு, எனக்கு யானை யூர்தியை அளித்தருளி, அங்கு, மந்திரங்களை ஓதுகின்ற முனிவர்கள், "இவன் யார்" என்று வினவ, "இவன் நம் தோழன்` ஆரூரன் என்னும் பெயரினன் என்று திருவாய் மலர்ந்தருளினான்; அவனது திருவருள் இருந்தவாறு என்!.
10.🔔ஊழிதொறு ஊழி முற்றும் உயர் பொன் நொடித்தான்மலையைச்
சூழிசையின் கரும்பின் சுவை நாவல ஊரன் சொன்ன
ஏழிசை இன்தமிழால் இசைந்து ஏத்திய பத்தினையும்
ஆழி கடலரையா அஞ்சையப்பர்க்கு அறிவிப்பதே.
திருச்சிற்றம்பலம்.
🙏ஆழ்ந்ததாகிய கடலுக்கு அரசனே! உலகம் அழியுங்காலந்தோறும் உயர்வதும், பொன்வண்ணமாயதும் ஆகிய திருக்கயிலை மலைக்கண் வீற்றிருந்தருளும் முதல்வனை, திருநாவலூரில் தோன்றியவனாகிய யான், இசைநூலிற் சொல்லப்பட்ட, ஏழாகிய இசையினையுடைய, இனிய தமிழால், மிக்க புகழை உடையனவாகவும், கரும்பின் சுவை போலும் சுவையினை உடையனவாகவும் அப்பெருமானோடு ஒன்றுபட்டுப் பாடிய இப்பத்துப் பாடல்களையும், திருவஞ்சைக்களத்தில் வீற்றிருந்தருளும் பெருமானுக்கு, நீ அறிவித்தல் வேண்டும்.
திருச்சிற்றம்பலம்.
திருச்சிற்றம்பலம்.
திருச்சிற்றம்பலம்.
திருச்சிற்றம்பலம்.
திருச்சிற்றம்பலம்.
*📣இதுவரை பதினோறு மாத காலமாய் பதிந்து வந்த, தினமும் ஒரு தேவார பாடல் பெற்ற தரிசன தொடரை எழுத வாய்ப்பு அளித்த கையிலைநாதரை வணங்கியும், நீண்ட தொடராக இருப்பினும் கூடவே பயணித்து வாசித்தும் படித்தும், பாராட்டியும், ஊக்க்ப்படுத்திய என் நெருங்கிய அடியார்நட்புகளுக்கு நன்றியறிதலையும் அன்பையும் தெரிவித்து இந்தத் தொடரை நிறைவு செய்கிறேன்.*
இந்த பதினோரு மாதத்தில் 274 தலங்களை நேரில் சென்று தரிசித்ததைப் போல, பதியும் பணியே பணியாய் அருளிய பதிவை பதிய அருள் புரிந்த ஈசனையும் வணங்கி அடியேன் மகிழ்ச்சியானேன்!
*அடியார்களுக்கு ஒரு விண்ணப்பம்:*
மேற்க்கண்ட சுந்தரமூர்த்தி நாயனாரின் பதிகத்தை, அவரவர்கள் வீட்டு சாமி படத்து முன் இன்று பாட வேண்டும் என்பது அடியேன் ஆசை.
இந்த விண்ணப்பத்திற்காக 274 தல தரிசன பதிவை காணிக்கையாக்குகிறேன்.
பாடுவீர்களா?
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
நன்றி திருச்சிற்றம்பலம்.
வாழ்க அடியார்கள்!
வளர்க அடியார் தம் உறவுகள்!!
___________________________________
*அடியார்களுக்குத் தொண்டு செய்யுங்கள் இறைவன் அவர்களுக்குள்ளிருக்கிறான்.*
No comments:
Post a Comment