உ
சிவாயநம திருச்சிற்றம்பலம்.
பதியும் பணியே பணியாய் அருள்வாய்.
*கோவை கு கருப்பசாமி.*
--------------------------------------------------------
*தினமும் ஒரு பாடல் பெற்ற தல தரிசனம்:*
(நேரில் சென்று தரிசித்ததைப் போல...................)
-----------------------------------------------------
*தேவாரம் பாடல் பெற்ற தல எண்: 238:*
*பாடல் பெற்ற சிவ தல தொடர்:*
*சிவ தல அருமைகள் பெருமைகள்:*
*வாமனபுரீஸ்வரர் திருக்கோயில், திருமாணிகுழி:*
--------------------------------------------------------
தேவாரம் பாடல் பெற்ற தலங்களில் நடுநாட்டில் அமைந்துள்ள இருபத்து இரண்டு தலங்களில் இத்தலம் பதினேழாவது தலமாகப் போற்றப் படுகிறது.
*இறைவன்:* வாமனபுரீஸ்வரர், மாணிக்கவரதர், உதவிநாயகர்.
*இறைவி:* அம்புஜாட்சி, மாணிக்கவல்லி, உதவிநாயகி.
*தல விருட்சம்:* கொன்றை மரம்.
*தல தீர்த்தம்:* சுவேத தீர்த்தம், கெடில நதி.
*ஆகமம்:* வாதுள ஆகமப்படி.
*தேவாரம் பாடியவர்கள்:*
திருஞானசம்பந்தர். - மூன்றாம் திருமுறையில் ஒரே ஒரு பதிகம் மட்டும்.
*இருப்பிடம்:*
கடலூர் நகரில் இருந்து சுமார் பத்து கி.மி. தொலைவில் திருமாணிகுழி இரூக்கிறது.
கடலூரில் இருந்து குமணங்குளம் செல்லும் நகரப் பேருந்து திருமாணிகுழி வழியாகச் செல்கிறது.
இதில் சென்றால் கோயிலின் வாயிலிலேயே இறங்கிக் கொளாளலாம்.
கடலூரில் இருந்து திருவஹீந்திபுரம் வழியாக நடுவீரப்பட்டி செல்லும் பேருந்தில் சென்று திருமாணிகுழி நிறுத்தத்தில் இறங்கி அங்கிருந்து ஊருக்குள் செல்லும் சாலையில் சுமார் ஒரு கி.மி. சென்றால் சாலை ஓரத்திலிருக்கும் கோயிலை அடையலாம்.
கடலூரில் இருந்து திருவஹீந்திபுரம், பாலூர் வழியாக பண்ருட்டி செல்லும் பேருந்தில் சென்று திருமாணிகுழி நிறுத்தத்தில் இறங்கி அங்கிருந்து ஊருக்குள் செல்லும் சாலையில் சுமார் ஒரு கி.மி. சென்றால் சாலை ஓரத்திலுள்ள கோயிலை அடையலாம்.
*அஞ்சல் முகவரி:*
நிர்வாக அதிகாரி.
அருள்மிகு வாமனபுரீஸ்வரர் திருக்கோயில்
திருமாணிகுழி அஞ்சல்,
வழி திருவகீந்திரபுரம்.
கடலூர் வட்டம்.
கடலூர் மாவட்டம்
PIN - 607 401
தினமும் காலை 7.00 மணி முதல் 11.00 மணி வரையிலும், மாலை 4.30 முதலி இரவு 8.30 வரையிலும் ஆலயம் திறந்திருக்கும்.
*கோவில் அமைப்பு:*
தலமும் கோயிலும் கெடில நதியின் தென் கரையில், காப்பர் குவாரி என்று அழைக்கப்படும் மலைத்தொடரின் அடிவாரத்தில் உள்ளன.
கிழக்கு நோக்கியிருக்கும் இந்த ஆலயத்தின் ஐந்து நிலைகளைத் தாங்கிய ராஜகோபுரத்தை முதலில் காணப் பெறவும் *சிவ சிவ, சிவ சிவ*என மொழிந்து கோபுரத்தை வணங்கிக் கொண்டோம்.
கோபுர வாயில் வழியாக உள்ளே நுழைந்தவுடன் கிழக்கு வெளிப் பிரகாரத்தில் செப்புக் கவசமிட்ட கொடிமரத்தைக் காணப் பெற்றோம்.
இதன் முன்பாக நெடுஞ்சான்கிடையாக பூமியில் விழுந்து சிரம் கரங்கள் செவிகள் புஜங்கள் பூமியில் புரள வணங்கியெழுந்து நிமிர்ந்தோம்.
அடுத்து, பலிபீடத்தருகாக வந்து நின்று நம் ஆணவமலம் ஒழிய பிரார்த்தித்து வணங்கிக் கொண்டு மேலும் மனதில் ஆணவமலம் துளியாதிருக்கும் மனத்தையும் தருமாறு வேண்டிக் கொண்டு நகர்ந்தோம்.
அடுத்திருந்த நந்தியாரைக் கண்டு, வணங்கிக் கொண்டு, ஈசனைத் தொழ உள் புக அனுமதியும் வேண்டிக் கொண்டு தொடர்ந்தோம்.
தெற்குப் வெளிப் பிரகாரத்தின் தென்மேற்கு மூலையில் விநாயகர் சந்நிதியில் இருந்தார் விடுவோமா? சடுதியில் காதுகளைப் பிடித்துத் திருகி தோப்புக்கரணமிட்டுக் தொழுது வணங்கிவிட்டு நகர்ந்தோம்.
வடக்கு வெளிப் பிரகாரத்தின் வடமேற்கு மூலையில் சுப்பிரமணியரும் சந்நிதியும் அமைந்திருக்க, கைதொழுவிட்டு நகர்ந்தோம்.
இத்தல முருகனுக்கு ஒவ்வொரு பெளர்ணமியன்றும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன.
வெளிப் பிரகாரத்திலுள்ள பக்கவாட்டு வாயில் வழியாகவும் உள் பிரகாரத்தை அடைய வழியும் இருக்கிறது.
இந்த உள் பிரகாரத்தில் உள் புக, விநாயகர் இருந்தார் வணங்கிக் கொண்டோம்.
அடுத்து, 63 மூவர் திருமேனிகள், சப்தமாதாக்கள், யுகலிங்கங்கள், கஜலட்சுமி சந்நிதிகள் ஆகியவை அமைந்திருந்தன.
ஒவ்வொருத்தரையும் தொடர்ச்சியாக வணங்கிக் கொண்டோம்.
அடுத்து மூலவரை சந்நிதிக்குச் சென்றோம். சுவாமி சந்நிதி வாயிலில் வரலாற்று புடைப்புச் சிற்பம் அமைத்திருந்தார்கள். சிவ சிவ எனக் கூறி உள் நுழைந்தோம்.
கருவறையில் மூலவர் சுயம்பு லிங்க உருவில் அருட்காட்சி வழங்கிக் கொண்டிருந்தார். மனமுருக பிரார்த்தனை செய்து வணங்கிக்கொண்டு அர்ச்சகரிடம் வெள்ளிய விபூதியைப் பெற்றுக் கொண்டு அப்படியே அவ்விபூதியை திரித்து நெற்றிக்கு தரித்துக் கொண்டோம்.
இந்த ஆலயத்தின் ஒரு சிறப்பம்சம் என்னவென்றால், இங்கு மூலவரை நாம் நேரடியாக தரிசிப்பது இயலா நிலை.
ஏனெனில் எந்நேரமும் மூலவர் சந்நிதியில் திரையிடப்பட்டிருக்கிறது.
இறைவனும், இறைவியும் எப்போதும் சிவசக்தியாக சேர்ந்திருக்கும் தலமாக இது கருதப்படுவதால் அவர்களை தொந்தரவு செய்யாமல் இருக்கும் பொருட்டு திரையிடப்பட்டிருக்கிறது என்று குருக்கள் நம்மிடம் கூறினார்.
இறைவன் எப்போதும் இறைவியுடன் இருப்பதாகச் சொல்லப்படுவதால், இத்தலத்தில் அர்த்தசாம பள்ளியறை வழிபாடு என்பது தனியே கிடையாது என்றும் மேலும் கூறினார்.
அடுத்ததாக அம்பாள் சந்நிதிக்குச் சென்றோம். அம்பாள் சந்நிதி அர்த்த மண்டபம், மகா மண்டபத்தோடு விளங்குகின்றன.
அம்பாள் நான்கு கரங்களுடன் கோயில் கிழக்குப் பார்த்த வண்ணம் அமைந்திருந்தது.
அம்மையை கண்குளிர தரிசித்து மணங்குளிர ஆனந்தித்து வணங்கிக் கொண்டு அர்ச்சகரிடம் குங்குமப் பிரசாதம் பெற்றுக் கொண்டு வெளிவந்தோம்.
அம்பாள் சந்நிதி கோஷ்டங்களில் இச்சாசக்தி பிராமி, வைஷ்ணவி துர்க்கை, ஆகியவை இருக்கின்றன.
சண்டேசுவரி சந்நிதி தனியாக இருக்கிறது.
மகாவிஷ்ணு மாணியாக, அதாவது பிரம்மசாரியாக வழிபடுவதற்கு இடையூறு இல்லாமல் காவலாக பீமருத்திரர் உள்ளார் என்றும் சொல்லப்படுகிறது.
தீபாராதனையின் போது மட்டும் திரையை விலக்கி சற்று நேரம் மட்டும் இறைவனை தரிசிக்க அர்ச்சகர்கள் வாய்ப்பு தந்தார்கள்.
அச்சமயம் மட்டுமே சிறிய ஆவுடையார் மீதுள்ள சிறிய சிவலிங்கத் திருமேனியை தரிசிக்கும் பேறு நமக்கு கிடைத்தது.
இறைவனை மறைத்திருக்கும் திரைச்சீலையில் பீமருத்திரர் உருவத்தை சித்திரமாய் தீட்டி தொங்கவிட்டிருக்கிறார்கள்.
ஆலய வழிபாடுகளில் அர்ச்சனை, பூஜை முதலியன முதலில் பீமருத்திரருக்குத் தான் நடைபெறுகிறது.
பின்னர் அவர் அனுமதி பெற்று மூலவருக்கு தீபாராதனை நடத்துவிக்கிறார்கள்.
இத்தலத்தின் தலமரமாக கொன்றையும், தீர்த்தங்களாக சுவேத தீர்த்தம் மற்றும் கெடில நதியும் விளங்குகின்றன.
*தல அருமை:*
திருமால் பிரம்மசாரியாக வந்து மாகாபலியிடம் மூன்றடி மண் கேட்டு அவனையழித்த பழிதீர இங்கு வந்து சிவபெருமானை ஒரு குழி போன்ற இடத்தில் அமர்ந்து வழிபட்டார்.
ஆகையால் இக்கோயில் மாணிகுழி என்று பெயர் பெற்றது. (மாணி என்றால் பிரம்மசாரி).
இத்தலத்தை சம்பந்தர் உதவிமாணிகுழி என்றே தனது பதிகத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.
இதனால் உதவி என்பது ஊர்ப் பெயராக இருந்து, காலப்போக்கில் மாணிகுழி என்னும் கோயிற் பெயரே ஊருக்குப் பெயராகியிருக்கலாம் என்று தோன்றுகிறது என்கிறார்கள்.
*தல பெருமை:*
வடநாட்டு வணிகன் அத்ரி என்பவன் இப்பகுதியில் வந்து கொண்டிருந்த போது திருடர்கள் கொள்ளையடிக்க முற்பட்டனர்.
அவன் இறைவனை தியானித்து உதவி கேட்டு முறையிட்டான். இறைவனும் அவ்வணிகனை திருடர்களிடமிருந்து காத்து உதவி புரிந்தார்.
இதனால் இத்தலம் உதவி என்றும் இறைவன் உதவிநாயகர் என்றும் இறைவி உதவி நாயகி என்றும் அழைக்கப்படுகிறார்கள்.
இதற்கு மேலும் சான்றாகக் கல்வெட்டிலும் இத்தலம் *"உதவி"*என்றே குறிக்கப் பெற்றிருக்கின்றது.
இத்தலத்து முருகப்பெருமானை அருணகிரிநாதர் தனது திருப்புகழில் பாடியிருக்கிறார்.
திருப்புகழில் இத்தலத்து முருகன் மீது ஒரு பாடல் இருக்கிறது.
இத்தலத்தில் ஆறுமுகப்பெருமான் பன்னிரண்டு திருக்கரங்களுடன் மயில் மீது அமர்ந்து தனது தேவியர் இருவரும் உடன் நிற்க கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார்.
மயில் வடக்கு நோக்கி திரும்பி இருக்கிறது.
*தல சிறப்பு:*
சிவன் சந்நிதியில் அணைய இருந்த விளக்குத் திரியை தூண்டப்பெறச் செய்ததது,......
சிவனருளால் எலி மாவலிச் சக்கரவர்த்தியாய்த் தோன்றியவிதம்,......
திருமால் வாமனராய்ச் சென்று மூன்றடி மண் கேட்பது....
உலகளந்த பெருமாளாக மாவலியை அழிப்பது.......
கொலைப்பழி தீர திருமால் சிவனை வழிபடுவது, போன்ற சிற்பங்கள் காட்சியாய் தெரிந்தன.
நடராஜர் விக்கிரகத்தில் பஞ்சாட்சர மந்திரம் பொறிக்கப்பட்டிருக்கிறது.
திருக்கோயிலுக்கு எதிரில் செம்மலை விளங்குகிறது.
இம்மலை சோதிகிரி, ரத்னகிரி, ருத்ர கிரி, புஷ்பகிரி, சஞ்சீவிகிரி என ஐங்கிரிகளை உடையதாய் விளங்குகின்றன.
*சம்பந்தர் தேவாரம்:*
பண்: சாதாரி.
1.🔔பொன்னியல் பொருப்பரையன் மங்கையொரு பங்கர்புன றங்குசடைமேல்
வன்னியொடு மத்தமலர் வைத்தவிறல் வித்தகர் மகிழ்ந்துறைவிடம்
கன்னியிள வாளைகுதி கொள்ளவிள வள்ளைபட ரள்ளல்வயல்வாய்
மன்னியிள மேதிகள் படிந்துமனை சேருதவி மாணிகுழியே.
🙏சிவபெருமான் பொன்மயமான இமயமலை அரசனின் மகளான உமாதேவியைத் தன்திருமேனியில் ஒருபாகமாகக் கொண்டவர் . கங்கைநீர் தங்கிய சடையில் வன்னிப் பத்திரத்துடன் பொன்னூமத்தம் பூவை அணிந்த வலிய அறிவுருவான அச்சிவ பெருமான் வீற்றிருந்தருளும் தலமாவது , வரப்பின்மேல் இள வள்ளைக் கொடிகள் படர்ந்த சேற்றையுடைய வயலில் , இள வாளை மீன்கள் துள்ளிப்பாய , இள எருமைகள் அதில் படிந்து வீடுசேரும் , நீர்வளமும் நிலவளமுமிக்க திருமாணிகுழி ஆகும் .
2.🔔சோதிமிகு நீறதுமெய் பூசியொரு தோலுடை புனைந்துதெருவே
மாதர்மனை தோறுமிசை பாடிவசி பேசுமர னார்மகிழ்விடம்
தாதுமலி தாமரை மணங்கமழ வண்டுமுர றண்பழனமிக்
கோதமலி வேலைபுடை சூழுலகி னீடுதவி மாணிகுழியே.
🙏ஒளிமிகுந்த திருவெண்ணீற்றினைத் திருமேனியில் உத்தூளணமாகப் பூசி , தோலை ஆடையாக அணிந்து , தெருக்களில் பெண்கள் உள்ள ஒவ்வொரு இல்லமும் சென்று இசைப்பாடல்களைப் பாடி வயப்படுத்தும் பேச்சுக்களைப் பேசும் சிவபெருமான் மகிழ்ந்து வீற்றிருந்தருளும் தலம் மகரந்தப்பொடிகள் மிக்க தாமரை மலர்கள் மணம் வீசுவதும் , வண்டுகள் ஒலிக்கின்ற குளிர்ச்சி பொருந்திய வயல்களையுடையதும் , கடலலைகளின் ஓசை மிகுந்ததும் ஆகி விளங்குகின்ற திருமாணிகுழி என்பதாம் .
3.🔔அம்பனைய கண்ணுமை மடந்தையவ ளஞ்சிவெரு வச்சினமுடைக்
கம்பமத யானையுரி செய்தவர னார்கருதி மேயவிடமாம்
வம்புமலி சோலைபுடை சூழமணி மாடமது நீடி யழகார்
உம்பரவர் கோனகர மென்னமிக மன்னுதவி மாணிகுழியே.
🙏அம்பு போன்ற கூரிய கண்களையுடைய உமாதேவி அஞ்ச , கோபமுடைய , தூணிலே கட்டக்கூடிய மதயானையின் தோலை உரித்த சிவபெருமான் வீற்றிருந்தருளும் தலம் , நறுமணமிக்க சோலை களையுடையதும் , இரத்தினங்கள் பதிக்கப் பெற்ற மாடமாளிகைகள் நிறைந்த அழகிய தேவலோகத்து நகரமாகிய அமராவதியைப் போன்று நிலைபெற்று விளங்குவதும் ஆகிய திருமாணிகுழியாகும் .
4.🔔நித்தநிய மத்தொழில னாகிநெடு மால்குறள னாகிமிகவும்
சித்தம தொருக்கிவழி பாடுசெய நின்றசிவ லோகனிடமாம்
கொத்தலர் மலர்ப்பொழிலி னீடுகுல மஞ்ஞைநட மாடலதுகண்
டொத்தவரி வண்டுக ளுலாவியிசை பாடுதவி மாணிகுழியே.
🙏நாள்தோறும் அநுட்டானம் முதலிய நியமம் பூண்டவனாய்த் திருமால் வாமனவடிவங் கொண்டு மனத்தை ஒருமுகப்படுத்தி வழிபாடு செய்யச் சிவலோக நாயகனாகிய சிவபெருமான் வீற்றிருந்தருளும் தலம் , கொத்தாக மலர்ந்துள்ள பூக்களையுடைய சோலைகளில் சிறந்த மயில்கள் நடனமாட அதைப்பார்த்த வரிகளையுடைய வண்டுகள் நடனத்துக்கு ஒத்தவாறு இசைபாடுகின்ற திருமாணிகுழி ஆகும் .
5.🔔மாசின்மதி சூடுசடை மாமுடியர் வல்லசுரர் தொன்னகரமுன்
நாசமது செய்துநல வானவர்க ளுக்கருள்செய் நம்பனிடமாம்
வாசமலி மென்குழன் மடந்தையர்கண் மாளிகையின் மன்னியழகார்
ஊசன்மிசை யேறியினி தாகவிசை பாடுதவி மாணிகுழியே.
🙏சிவபெருமான் குற்றமில்லாத சந்திரனைச் சடையில் சூடியவர் . வல்லசுரர்களின் பழமைவாய்ந்த திரிபுரங்களை அழித்து நற்குண நற்செய்கையுடைய தேவர்கட்கு அருள்புரிந்தவர் . அப் பெருமான் வீற்றிருந்தருளும் தலம் , நறுமணமிக்க மெல்லிய கூந்தலையுடைய பெண்கள் , மாளிகைகளில் தங்கி அழகிய ஊஞ்சலில் ஏறியமர்ந்து இனிமையாக ஊசற்பாட்டுப்பாடி ஆடுகின்ற திருமாணி குழி ஆகும் .
6.🔔மந்தமலர் கொண்டுவழி பாடுசெயு மாணியுயிர் வவ்வமனமாய்
வந்தவொரு காலனுயிர் மாளவுதை செய்தமணி கண்டனிடமாம்
சந்தினொடு காரகில் சுமந்துதட மாமலர்கள் கொண்டுகெடிலம்
உந்துபுனல் வந்துவயல் பாயுமண மாருதவி மாணிகுழியே.
🙏மலரும் நிலையிலுள்ள மலர்களைக் கொண்டு சிவவழிபாடு செய்த பிரமசாரியான மார்க்கண்டேயனின் உயிரைக் கவரும் மனத்தோடு வந்த காலனின் உயிர் நீங்குமாறு காலால் உதைத்த நீலகண்டனான சிவபெருமான் வீற்றிருந்தருளும் தலம் , சந்தன மரங்கள் , கரிய அகிற் கட்டைகள் இவற்றைச் சுமந்து மலையிலிருந்து விழுந்து , குளங்களில் பூத்துள்ள சிறந்த மலர்களையும் தள்ளிக் கொண்டு வரும் கெடிலநதியின் நீர் வயல்களில் பாய நறுமணம் கமழும் திருமாணிகுழி ஆகும் .
7.🔔எண் பெரிய வானவர்க ணின்றுதுதி செய்யவிறை யேகருணையாய்
உண்பரிய நஞ்சுதனை யுண்டுலக முய்யவரு ளுத்தமனிடம்
பண்பயிலும் வண்டுபல கெண்டிமது வுண்டுநிறை பைம் பொழிலின்வாய்
ஒண்பலவி னின்கனி சொரிந்துமண நாறுதவி மாணிகுழியே.
🙏எண்ணற்ற தேவர்கள் வணங்கிநின்று துதிசெய்யப் பேரருளுடையவனாய் எவரும் உண்ணுதற்கரிய நஞ்சை உண்டு உலகம் உய்யும்படி அருள்செய்த உத்தமனான சிவபெருமான் வீற்றிருந்தருளும் தலமாவது , பண்ணிசை பாடுகின்ற வண்டுகள் , பல மலர்களையும் கிளறி , தேனருந்த , வளம்மிக்க பசுமை வாய்ந்த சோலைகளிடத்துச் சிறந்த பலாமரங்களின் இனிய கனிகளிலிருந்து தேனைச் சொரிந்து நறுமணம் கமழ்கின்ற திருமாணிகுழி என்பதாகும் .
8.🔔எண்ணமது வின்றியெழி லார்கைலை மாமலை யெடுத்ததிறலார்
திண்ணிய வரக்கனை நெரித்தருள் புரிந்தசிவ லோகனிடமாம்
பண்ணமரு மென்மொழியி னார்பணை முலைப்பவள வாயழகதார்
ஒண்ணுதன் மடந்தையர் குடைந்துபுன லாடுதவி மாணிகுழியே.
🙏கயிலைமலையின் பெருமையையும் , சிவ பெருமானின் அளவற்ற ஆற்றலையும் சிந்தியாது , கயிலைமலையைப் பெயர்த்தெடுத்த வலிய அரக்கனான இராவணனை அம்மலையின்கீழ் நெரித்து , பின் அவன் சாமகானம் பாட அருள்புரிந்த சிவலோக நாயகனாகிய சிவபெருமான் வீற்றிருந்தருளும் தலமாவது , பண்போன்று மென்மொழி பேசுபவர்களாய்ப் பருத்த கொங்கைகளையும் , பவளம் போன்ற வாயையும் , அழகிய ஒளிபொருந்திய நெற்றியையுமுடைய பெண்கள் கையாற் குடைந்து நீராடும் திருமாணி குழி ஆகும் .
9.🔔நேடுமய னோடுதிரு மாலுமுண ராவகை நிமிர்ந்துமுடிமேல்
ஏடுலவு திங்கண்மத மத்தமித ழிச்சடையெம் மீசனிடமாம்
மாடுலவு மல்லிகை குருந்துகொடி மாதவி செருந்திகுரவி
னூடுலவு புன்னைவிரை தாதுமலி சேருதவி மாணிகுழியே.
🙏பிரமனும் , திருமாலும் இறைவனின் அடிமுடி தேடியும் உணராவகை நெருப்புப்பிழம்பாய் ஓங்கி நின்றவர் சிவபெருமான் . அவர் தம் சடைமுடியில் வெண்தாமரை இதழ் போன்ற பிறைச்சந்திரனையும் , ஊமத்தை , கொன்றை ஆகியவற்றையும் அணிந்து விளங்குபவர் . எம் இறைவரான சிவபெருமான் வீற்றிருந்தருளும் தலமாவது , மகரந்தப்பொடி நிறைந்த மல்லிகை , குருந்து , மாதவி , செருந்தி , குரவம் , புன்னை என்ற மணம் கமழும் மலர்கள் நிறைந்த திருமாணிகுழி என்பதாம் .
10.🔔மொட்டையம ணாதர்முது தேரர்மதி யில்லிகண் முயன்றனபடும்
முட்டைகண் மொழிந்தமொழி கொண்டருள்செய் யாதமுதல் வன்றனிடமாம்
மட்டைமலி தாழையிள நீர்முதிய வாழையில் விழுந்தவதரில்
ஒட்டமலி பூகநிரை தாறுதிர வேறுதவி மாணிகுழியே.
🙏மொட்டைத் தலையுடைய சமணர்களும் , பேதைமை முதிர்ந்த புத்தர்களும் இறையுண்மையை உணராதவர்கள் . முயன்று செய்த வினைகளே பயன்தரும் . அதற்குக் கர்த்தா வேண்டா என்று சொல்பவர்கள் அவர்கள் . உருட்டிய வழி உருளும் முட்டைபோல் தமக்கென ஓர் உறுதி இல்லாத , அவர்கள் சொன்ன சொற்களால் அவர்கட்கு அருள்புரியாத சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடமாவது , மட்டைகளையுடைய தென்னைகளின் இளநீர்கள் வாழையிலும் , பாக்கு மரங்களிலும் விழுந்து குலைகள் சிதற விளங்கும் திருமாணிகுழி ஆகும் .
11.🔔உந்திவரு தண்கெடில மோடுபுனல் சூழுதவி மாணிகுழிமேல்
அந்திமதி சூடியவெம் மானையடி சேருமணி காழிநகரான்
சந்தநிறை தண்டமிழ் தெரிந்துணரும் ஞானசம் பந்தனதுசொல்
முந்தியிசை செய்துமொழி வார்களுடை யார்கணெடு வானநிலனே.
திருச்சிற்றம்பலம்.
🙏பலபொருள்களை நீர்ப்பெருக்குடன் அடித்து வரும் கெடிலநதி சூழ்ந்த உதவி மாணிகுழியின் மீது , மாலைக்காலப் பிறைச்சந்திரனைச் சூடிய எம் தலைவனான சிவபெருமானின் திரு வடிகளை இடைவிடாது தியானிக்கும் அழகிய சீகாழியில் அவதரித்த ஞானசம்பந்தன் சந்தம் நிறைந்த இன்தமிழில் அறிந்துணர்ந்து அருளிய இத்திருப்பதிகத்தை இசையுடன் பாட முற்படுபவர்கள் உயர்ந்த முத்திப் பேற்றைப் பெறுவர் .
திருச்சிற்றம்பலம்.
*திருவிழாக்கள்:*
கார்த்திகை மாதத்தில் பிரமோற்சவம்.
கார்த்திகை ரோகிணியில் தீப தரிசனம்.
ஆடிப்பூரம்,
நவராத்திரி,
சிவராத்திரி,
கந்தசஷ்டி,
மார்கழி திருவாதிரை,
நடராஜர் அபிஷேகம்,
மாதப் பிரதோஷம்.
கார்த்திகை சோமவார நாளில் வாமனேஸ்வரரையும், அம்புஜாட்சியையும் அர்சிப்பது மிகவும் சிறப்பு.
*அருகிலுள்ள பாடல் பெற்ற தலங்கள்:*
திருமாணிகுழியிலிருந்து தொலைவுகள்.....................
திருத்தினைநகர்......27.கி.மி.
திருமுதுகுன்றம்.......57.கி.மி.
திருஅதிகை...............15.கி.மி.
திருத்துறையூர்..........25.கி.மி.
திருவடுகூர்................31.கி.மி.
திருப்பபாதிரிப் புலியூர்.
.........09.கி.மி.
திருசோபுரம்...............21.கி.மி.
தேவாரம் பாடல் பெற்ற தலங்களில் நடுநாட்டில் அமைந்துள்ள நாளைய தலப்பதிவு *பாடலேஸ்வரர் திருக்கோயில், திருப்பாதிரிப்புலியூர்.(கடலூர்)*
--------------------------------------------------------
*அடியார்களுக்குத் தொண்டு செய்யுங்கள் இறைவன் அவர்களுக்குள்ளிருக்கிறான்.*
No comments:
Post a Comment