உ
சிவாயநம திருச்சிற்றம்பலம்.
பதியும் பணியே பணியாய் அருள்வாய்
கோவை கு கருப்பசாமி.
-------------------------------------------------------
தினமும் ஒரு பாடல் பெற்ற தல தரிசனம்:
(நேரில் சென்று தரிசித்ததைப் போல..................)
-----------------------------------------------------------
தேவாரம் பாடல் பெற்ற தல எண்: 249
பாடல் பெற்ற சிவ தல தொடர்:
சிவ தல அருமைகள் பெருமைகள்:
🏜திருத்தளிநாதர் திருக்கோயில், திருப்புத்தூர்:
----------------------------------------------------------
தேவாரம் பாடல் பெற்ற தலங்களில் பாண்டிய நாட்டில் அமைந்துள்ள பதினான்கு தலங்களில் இத்தலம் ஆறாவது தலமாகப் போற்றப் படுகிறது.
🌙இறைவன்:
திருத்தளிநாதர்.
💥இறைவி:
சிவகாமி, சௌந்தர்ய நாயகி.
🌴தல விருட்சம்: கொன்றை.
🌊தல தீர்த்தம்: திருத்தளி தீர்த்தம், சிவகங்கை தீர்த்தம்.
🔥ஆகமம்:
📔தேவாரம் பாடியவர்கள்:
திருநாவுக்கரசர்- இரண்டு பதிகங்கள்.
திருஞானசம்பந்தர்- ஒரு பதிகம். ஆக மொத்தம் இத்தலத்திற்கு மூன்று பதிகங்கள்.
🛣இருப்பிடம்:
காரைக்குடியில் இருந்து கிழக்கே சுமார் இருபது கி.மி. தொலைவிலும், சிவகங்கையில் இருந்து சுமார் முப்பத்தைந்து கி.மி. தொலைவிலும், மதுரையில் இருந்து சுமார் அறுபத்தைந்து கி.மி. தொலைவிலும் இக்கோயில் அமைந்திருக்கிறது.
பேருந்து வசதிகள் மதுரை, காரைக்குடி, சிவகங்கை ஆகிய இடங்களில் இருந்து திருப்புத்தூருக்கு இருக்கிறது.
அருகில் உள்ள ரயில் நிலையம் காரைக்குடி.
✉அஞ்சல் முகவரி:
அருள்மிகு திருத்தளிநாதர் திருக்கோயில்.
திருப்புத்தூர் அஞ்சல்.
சிவகங்கை மாவட்டம்.
PIN - 623 211
🌸ஆலயப் பூஜை காலம்:
தினமும் காலை 9.00 மணி முதல் பகல் 12.00 மணி வரையிலும், மாலை 5.00 மணி முதல் இரவு 8.00 மணி வரையிலும் ஆலயம் திறந்திருக்கும்.
பெயர்க் காரணம்:
திருப்புத்துரின் புராண பெயர் கொன்றைவனம்.
இவ்வூர் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் சரக்கொன்றை மரங்கள் நிறைந்த கொன்றை வனமாக திகழ்ந்திருந்தது.
தவம் செய்வதற்கு ஏற்ற பூமியாக சிறந்த தவநிலையுடைய இடம் என்ற பேறுபெற்ற ஸ்தலமாக இத்தலம் இருந்துள்ளது.
இதனை தொடர்ந்து எண்ணற்ற முனிவர்களும் சாதுக்களும் இவ்வூரில் தொடர்ந்து தவம் செய்து வந்திருக்கின்றனர்.
முனிவர்களும் சாதுக்களும் பல ஆண்டுகள் ஒரே இடத்தில் அசையாது அமர்ந்து தவம் செய்தமையால் அவர்களை சுற்றி கரையான் புற்று ஏற்ப்பட்டுள்ளது.
இதனால் இவ்விடம் முழுவது பல புற்றுகள் காணப்பட்டதால், பொதுமக்கள் இவ்விடத்தை புத்தூர் என அழைக்க ஆரம்பித்து நாளடைவில் திரு என்ற அடைமொழி சேர்ந்து திருப்புத்தூர் என்று பெயர் வழங்கப்பட்டு விட்டது.
*கோயில் அமைப்பு:
ஆலய வாயிலிலும் உள் புகவும் சிவ சிவ, சிவ சிவ என மொழிந்து வாயில் நிதானத்தை நோக்கி வணங்கிக் கொண்டோம்.
முன்மண்டபம்:
முன்மண்டபத்தில் ஞானசம்பந்தர், நாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர், பிள்ளையார், பொல்லாப்பிள்ளையார், வள்ளி தெய்வானையுடன் கூடிய சுப்பிரமணியர், பைரவர், சூரியதேவர், சரஸ்வதி, லட்சுமி, சந்திரன் ஆகியோர்கள் இருந்தார்கள்.
ஒவ்வொருவரையும் கையுர்த்தி வணங்கிக் கொள்ள, விநாயகரையும் பொல்லாப் பிள்ளையாரையும் தோப்புக்கரணமிட்டுத் தொழுது வணங்கிவிட்டு நகர்ந்தோம்.
இந்த மண்டபத்தில் உள்ள ஆடல்வல்லானை ஆவல் தீர கண்டு தரிசித்து வணங்கிக் கொண்டோம்.
இவர் சன்னதியில் இருந்த தூண்கள் மிக நுன்னிய கலை வேலைப்பாடுகளுடன் இருந்தன. கண்டு ஆனந்தித்தோம்.
உட்பிரகாரம்:
உட்பிரகாரத்தில் வலஞ் செய்கையில் அறுபத்து மூன்று நாயன்மார்கள், இருபத்தேழு நட்சத்திரங்கள், வீரபத்திரர், பிராமி, மகேஸ்வரி, கௌமாரி, வைஷ்ணவி, வராகி, இந்திரானி, சாமுண்டி, விநாயகர், சேஷ்டாதேவி, பிரகார விநாயகர், வர்ணலிங்கம் ஆகியோர்களைக் கண்டு, ஒவ்வொருவரையும் தொடர்ச்சியாக வணங்கிக் கொண்டு நகர்ந்தோம்.
இப்பிரகாரத்தில் கருவறைக்குப் பின்னர் சரக்கொன்றை மரம் இருந்தது.
விருட்சத்தினை தீண்டப்பெறாமல் வணங்கிக் கொண்டோம்.
அருகே வால்மீகி தவமிருந்ததாக ஒரு இடம் அம்புக் குறியிட்டு காட்டப்படப்பட்டிருந்தது. (இங்கு நாம் செல்லவில்லை.)
அடுத்து அகத்திய முனிவர் பூசை செய்த அகத்தியலிங்கம் ஒரு சன்னதியில் இருப்பதைக் கண்டோம்.
முன்வந்து நின்று பவ்யபயத்துடன் கூனக்குறுக நின்று வணங்கிப் பணிந்தோம்.
தொடர்ந்து வலம் செல்லும்போது, உட்பிரகாரத்தில் யோகநரசிம்மப்பெருமாள் இருந்தார்.
அடுத்து, சண்டிகேஸ்வரர் இருந்தார். இவரை வணங்கும் நெறிமுறையுடன் வணங்கிக் கொண்டு, உள்ளங்கையினை விரித்து இருப்பனதை எடுத்துரைத்து மெளனியாகக் கூறி விடைபெற்று வெளிவந்தோம்.
அடுத்து, விஷ்ணு துர்க்கை ஆகியோர் இருந்தனர்.
வெளிப்பிரகாரம்:
வெளிப்பிரகாரத்தில் வள்ளிதெய்வானையுடன் கூடிய சுப்பிரமணியர் சன்னதிக்குச் சென்று அழகுற முருகனை ஆனந்தத்துடன் வணங்கித் தரிசித்தோம்.
இதையடுத்து, வன்னிமர விநாயகர் சன்னதி கொண்டு அருள்பாலித்த வண்ணமிருந்தார்.
விடுவோமா?, காதுகளை பிடித்துத் திருகி தோப்புக்கரணமிட்டுக் தொழுது வணங்கிவிட்டு நகர்ந்தோம்
இதே பிரகாரத்தில் யோக பைரவர் சன்னதியும், திருநாகேஸ்வரர் சன்னதியும் இருவரையும் வணங்கிக் கொண்டோம்.
இங்கு உறைந்திருக்கும் இறைவன் புத்தூரீசர் என்னும் திருத்தளிநாதர் சந்நிதிக்கு வந்தோம்.
முன் அமைந்திருந்த கொடிமரத்து முன் நெடுஞ்சான்கிடையாய் விழுந்து சிரம் கரங்கள் செவிகள் புஜங்கள் பூமியில் புரள வணங்கியெழுந்து நிமிர்ந்தோம்.
அடுத்திருந்த நந்தியாரைக் கண்டு வணங்கிக் கொண்டு மேலும் ஈசனைத் தரிசிக்க உள் புக அனுமதியும் வேண்டிக் கொண்டு நகர்ந்தோம்.
ஈசனைக் கண்ணாரக் கண்டு மனமுருகி பிரார்த்தித்து வணங்கி துதித்து, அர்ச்சகரிடம் வெள்ளிய விபூதியைப் பெற்றுக் கொண்டு வெளிவந்தோம்.
அடுத்து, அம்பாள் சிவகாமி யம்மை சந்நிதிக்கு வந்து, இங்கேயும் ஈசனாலயத்தில் உருகி வேண்டிக் கொண்டதுபோல, மனமுருகி பிரார்த்தனை செய்து வணங்கிக்கொண்டு அர்ச்சகரிடம் குங்குமப் பிரசாதம் பெற்றுக் கொண்டு வெளிவந்தோம்.
திருப்புத்தூர் திருத்தாண்டகம்:
மின்காட்டுங் கொடிமருங்குல் உமையாட் கென்றும்விருப்பவன் காண் பொருப்புவலிச் சிலைக் கையோன் காண்நன்பாட்டுப் புலவனாய்ச் சங்கம் ஏறிநற்கனகக் கிழிதருமிக்(கு) அருளினோன் காண்பொன்காட்டக் கடிக்கொன்றை மருங்கே நின்றபுனக்காந்தள் கைகாட்டக் கண்டு வண்டுதென்காட்டுஞ் செழும்புறவின் திருப்புத் தூரில்திருத்தளியான் காண் அவன் என் சிந்தையானே!
என்று தொழுதேத்தி, தமது திருப்புத்தூர் திருத்தாண்டகத்தில் திருநாவுக்கரச சுவாமிகள் புகழ்ந்து பாடியுள்ளார்.
ஸ்ரீயோக பைரவர்:
கிரக தோஷம் போக்கும் ஸ்ரீயோக பைரவர் (ஆதிபைரவர்)பைரவர்
திருத்தளிநாதர் கோவிலில் தனிச் சன்னதியில் எழுந்தருளி கம்பீரத்துடன் அமர்ந்து அருள் பாலிக்கும் ஸ்ரீயோக பைரவர்தான் ஆதிபைரவர்.
இவரிடம் இருந்துதான் முதலில் அசிதாங்க பைரவர், உருபைரவர், சண்ட பைரவர், குரோதன பைரவர், உன்மத்த பைரவர், கால பைரவர், பீஷண பைரவர், சம்ஹார பைரவர் எனும் அஷ்ட பைரவர்கள் தோன்றினர்.
பின்னர் இந்த எட்டு பைரவர் திருமேனி ஒவ்வொன்றிலிருந்தும் எட்டு எட்டாக ஒவ்வொரு காரணத்திற்கேற்ப அறுபத்து நான்கு திருக் கோலங்களில் பைரவர்கள் வாகனத்துடனும், வாகனம் இல்லாமலும் நம் நாட்டில் உள்ள எல்லாக் கோவில்களிலும் எழுந்தருளி அருள் பாலிக்கிறார்கள்.
ஆக, நம் நாட்டில் உள்ள எல்லா ஆலயங்களிலும் எழுந்தருளி அருள்பாலிக்கும் எல்லா பைரவ மூர்த்திகளுக்கும், இத்தலத்தில் எழுந்தருளிக்கும் ஸ்ரீயோக பைரவர்தான் மூலமூர்த்தி ஆவார்.
பைரவரை ஜோதிட நூல்கள் காலமே உருவாய் கொண்ட காலபுருஷனாக கூறுகின்றன.
பன்னிரெண்டு ராசிகளும் அவரது உருவின் பகுதிகளாகின்றன.
மேஷம்-சிரசு,
ரிஷபம்-வாய்,
மிதுனம்-இரு கரங்கள், கடகம்-மார்பு,
சிம்மம்-வயிறு,
கன்னி-இடை,
விருச்சிகம்-லிங்கம்,
தனுசு-தொடைகள்,
மகரம்-முழந்தாள்,
கும்பம்-கால்களின் கீழ்பகுதி,
மீனம்-அடித்தளங்கள்.
பிரபஞ்சத்தில் சகல ஜீவ ராசிகளும் வான மண்டலத்தில் உள்ள நட்சத்திரங்களும், சூரியன், சந்திரன் சனி, ராகு - கேது ஆகிய நவக்கிரகங்களும் காலச்சக்கரத்தின் ஆளுகைக்கு உட்பட்டதே!
ஆனால், காலச் சக்கரத்தினை இயக்கும் பரம்பொருள் பைரவரே ஆவார். ஆதலால் கிரகங்களின் ஆளுமையெல்லாம் இவரின் கீழ்தான் இயங்குவன.
கிரகங்கள் எல்லாம் நம்மை ஆட்டிப் படைத்தாலும், அந்த கிரகங்களை எல்லாம் ஸ்ரீயோக பைரவர் ஆட்டிப் படைத்து ஆட்சி செய்து நம் வேண்டுதலை நலமாக்கித் தருபவர் இவராவார்.
பைரவர் அரசர் என்றால், அவர் இட்ட கட்டளைகளை நிறைவேற்றும் சேவகர்களே கிரகங்கள்.
பைரவரின் கட்டளைப்படியே காலச்சக்கரம் சுழல்கிறது. அவர் கட்டளைப்படியே எல்லா கிரகங்களும் செயல்படுகின்றன. அவரைச் சரணடைந்து நெஞ்சம் உருக வழிபட்டால் காலத்தின் கட்டுப்பாட்டையும் மீறி கிரக தோஷங்களை அகற்றி நன்மை புரிவார். எனவே கிரகங்களை நாடும் முன், பைரவ வழிபாடு அவசியம்.
மேலும் இந்த பைரவர் மிக உக்ரமானவர். அவர் தம் உக்ரத்தைக் குறைக்க, வேறு எந்த ஆலயத்திலும் இல்லாத சிறப்பாக, அவரை சங்கிலியால் பிணைத்து வைத்துள்ளதே இதற்குச் சான்று.
பூஜை முதலியன முடிந்த பிறகு அவர் அமர்ந்திருக்கும் பகுதிக்கு ஆலய அர்ச்சகர்களே கூட செல்ல மாட்டார்கள். அந்த அளவிற்கு உக்கிரமானவர்.
தேய்பிறை அஷ்டமி அன்று இவருக்கு வடை மாலை சாற்றி வழிபடுகின்றனர்.
ராகுகாலம் போன்ற நேரங்களிலும் இவருக்கு சிறப்பு வழிபாடு செய்யப்படுகின்றது.
சத்ரு தொல்லை, ஏவல், பில்லி, சூனியம், காரியத்தடை, திருமண எதிர்ப்பு போன்றவை விலக இவரை வழிபடுதல் சிறப்பு.
இதற்காக சிறப்பு ஹோமங்களும் அர்ச்சனை வழிபாடுகளும் இவ்வாலயத்தில் செய்யப்படுகின்றன.
ஒவ்வொரு கிரகப்பெயர்ச்சியின்போதும் எல்லா ராசிகளுக்கும், குறிப்பாக பாதிக்கப்படும் ராசிக்காரர்கள் ஸ்ரீபைரவரைச் சரணடைந்து வழிபட அவரின் கடைக்கண் பார்வை பட்டு, வாழ்வில் எல்லா வளமும் பெறலாம்!
ருத்ராட்ச கூறை:
திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயில் மூலவர் கர்ப்ப கிரகத்தின் கூரையில் ருத்ராட்ச விதானம் இருக்கிறது.
பிரதோஷக்குழுவினராலும் மற்றும் பக்தர்களாலும் இக்கூறை அமைக்கப் பட்டுள்ளது.
நேபாளத்திலுள்ள காட்மாண்டில் இருந்து ஐந்து முக வடிவிலான சுமார் பதினாராயிரம் ருத்ராட்சங்கள் வாங்கி கொண்டு வரப்பட்டது.
குன்றக்குடி பொன்னம்பல அடிகள் விதான நிர்மாணப் பணியை துவக்கி வைத்தார்.
திருத்தளிநாதர் மூலவர் கர்ப்ப கிரகத்தில் தாமிரக் கம்பியால் வலை பின்னப்பட்டு, அதில் ருத்ராட்சங்கள் பொருத்தப்பட்டு, பிரமிட் வடிவிலான கோபுர விதானம் அமைக்கப்பட்டுள்ளது.
வைகாசி விசாக பெருவிழா நிறைவாக நடந்தபோது திருவீதி உலாவில் சுவாமி
அம்பாள் வாகனக் கூரையாக இந்த ருத்ராட்ச விதானம் அமைக்கப்பட்டிருந்தது.
திருப்புத்தூர் தீர்த்தம்:
அட்சய திரிதியையின் நாயகியாக மகாலட்சுமி கருதப்படுவாள்.
ஒருமுறை மகாலட்சுமி செய்த தவத்திற்கு மகிழ்ந்த சிவபெருமான், பத்து கரங்களுடன் அவள் முன்னே தோன்றி நடனமாடினார்.
இந்த தாண்டவம் "இலட்சுமி தாண்டவம்" என்று அழைக்கப் பட்டது. இதுபற்றி திருத்தளிநாதர் கோயில் புராணத்தில் கூறப்பட்டுள்ளது.
இவ்வூரில் திருமகள், சிவனை வழிபட்டதால், அவளது பெயரால் இந்த கோயில் "ஸ்ரீதளி" என்றும், ஊர் "திருப்புத்தூர்" என்றும், திருக்குளத்திற்கு "ஸ்ரீதளி இலட்சுமி தீர்த்தம்" என்றும் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
"ஸ்ரீ", "திரு" ஆகிய இரண்டு பெயர்களும் மகாலட்சுமியைக் குறிக்கும். இவ்வூர் மட்டுமின்றி இலட்சுமி தாயார், சிவபெருமானை திருவாரூர் தியாகராஜர் கோயில், மயிலாடுதுறை அருகிலுள்ள திருநின்றியூர் மகாலட்சுமீஸ்வரர் கோயில் ஆகிய தலங்களிலும் சிவனை வழிபட்டிருக்கிறாள்.
இவை இலட்சுமி தலங்களாக கருதப்படுகின்றன. இவ்வூர்களில் உள்ள தீர்த்தங்களுக்கு இலட்சுமி தீர்த்தம் என்றே பெயர்.
தல அருமை:
எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் இறைவன், தலம் தோறும் எழுந்தருளி, தம்மை நாடி வருவோருக்கு அருள்பாலித்து வருகிறான்.
அத்தகைய அருள் சுரக்கும் ஆலயங்களில் ஒன்று திருப்பத்தூரில் உள்ள ஸ்ரீ திருத்தளிநாதர் ஆலயம்.
திருத்தளிநாதர் இங்கு எழுந்தருள முக்கியக் காரணம் ஸ்ரீ மகாலட்சுமி ஆவார்.
ஈசனாகிய இறைவன் பல்வேறு தாண்டவங்களை நிகழ்த்தினான். அவற்றில் கௌரி தாண்டவமும் ஒன்று.
அதனைக் காண விரும்பிய ஸ்ரீ மகாலட்சுமி இறைவனை நோக்கிக் கடுந்தவம் புரிந்தார். அவருக்கு இறைவன் காட்சி தந்து, கௌரி தாண்டவம் ஆடிக்காட்டிய இடமே இவ்வாலயமாகும்.
அதனால் தான் திரு (மகாலட்சுமி) வழிபட்ட ஆலயம் என்னும் பொருள் தரும்படியாக இவ்வாலயம் 'திருத்தளிநாதர்' ஆலயம் என்று அழைக்கப்படுவதாகத் தலபுராணம் கூறுகின்றது.
மேலும் வான்மீகி மகரிஷி இங்கு வந்து புற்று வடிவில் தவம் செய்து வழிபட்டதாகவும், அதனாலேயே இத்திருத்தலத்திற்கு "திருப்புத்தூர்" என்று பெயர் வந்ததாகக் கூறப்படுகின்றது.
பைரவர் சந்நிதி:
இத்தலத்திலுள்ள பைரவர் சன்னதி மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.
திருப்பத்தூர் திருத்தளிநாதர் திருக்கோவில் ஆலய பைரவர் பெயரில் வைரவன் கோவில் என்றே இந்த ஆலயம் அழைக்கப்படுகிறது.
இவ்வாலயத்தின் இரண்டாவது பிரகாரத்தில் மேற்கு நோக்கிய தனி சந்நிதியில் ஸ்ரீயோகபைரவர் தரிசனம் தருகிறார்.
குழந்தை வடிவில், வலக்கரத்தில் பழம், இடக்கரம் தொடையின் மீது வைத்துக்கொண்டு கோரைப் பற்களுடன் காட்சி தருகிறார்.
உலகில் தோன்றிய முதல் பைரவ மூர்த்தம் இதுதான் என இவ்வாலயக் குறிப்பு கூறுகின்றது.
ஆதலால்தான் இங்குள்ள பைரவர் "ஆதி பைரவர்" என்றே அழைக்கப்படுகின்றார்.
பொதுவாக பைரவர் கையில் சூலத்துடனும், நாய் வாகனத்துடனும், நின்ற திருக்கோலத்தில் காட்சி அளிப்பதே மரபு.
ஆனால் இங்குள்ள பைரவர் அமர்ந்த நிலையில், யோக நிஷ்டையில் காணப்படுகின்றார்.
அதனால் "யோக பைரவர்" என்று அழைக்கப்படுகின்றார்.
இந்திரன் மகன் ஜெயந்தனைக் காப்பதற்காக இவர் திரு அவதாரம் செய்ததாகக் கோயில் குறிப்பு கூறுகின்றது.
இந்திரன் மகன் ஜெயந்தன் இத்தலத்தில் இறைவனை வழிபட்டுப் பேறடைந்தான். ஆதலின் அவன் உருவம் சந்நிதிக்கு வெளியில் வாயிலில் உள்ளது.
சஷ்டி, அஷ்டமி நாட்களில் பைரவருக்கு சிறப்பு ஆராதனை, அபிஷேகம், வழிபாடு, யாகங்கள் செய்யப்படுகின்றன.
பைரவருக்குப் புனுகு சார்த்தப்பட்டு, வடைமாலை அணிவிக்கப் பெற்று, அவருக்கு மிகவும் உகந்ததான சம்பா சாதம் தினம் நைவேத்தியம் செய்யப்படுகிறது.
இவரது வழிபாட்டில் கலந்து கொண்டாலோ அல்லது இங்கு வந்து நியமத்தோடு வேண்டிக் கொண்டாலோ சத்ரு பயம், ஏவல், பில்லி, சூனியம் போன்ற தொல்லைகள், வியாபாரக் கஷ்ட நஷ்டங்கள், வேலை பற்றிய பிரச்னைகள் நீங்குவதாக நம்பிக்கை.
அர்த்தசாம வழிபாட்டிற்காக பூஜை மணியடித்து விட்டால் குருக்கள், பரிசாரகர், நைவேத்தியம் கொண்டு செல்வோர் ஆகிய மூவர் தவிர அதன் பின் யாரும் பைரவர் இருக்கும் பகுதிக்குச் செல்லக் கூடாது என்பது தொன்று தொட்டுக் கடைப்பிடிக்கப்படும் ஐதீக வழக்கம் இருந்து வருகிறது.
இங்கு யோக பைரவர், யோக நாராயணர் ஆகியோர் சந்நிதிகள் உள்ளதால் யோகத்துக்கும் தவத்துக்கும் இதுவோர் அற்புதமான திருத்தலமாக விளங்குகின்றது.
இத்தலத்திலும் பிரான்மலையில் உள்ளது போலவே நவக்கிரகங்கள் அமர்ந்த நிலையில் இங்கு உள்ளன.
திருப்புகழ் தலம்:
இத்தலத்து முருகப்பெருமானை அருணகிரிநாதர் தனது திருப்புகழில் பாடியுள்ளார்.
திருப்புகழில் இத்தலத்து முருகன் மீது இரண்டு பாடல்கள் உள்ளன.
இத்தலத்தில் முருகப்பெருமான் இரண்டாம் பிரகாரத்தில் ஒரு திருமுகமும் நான்கு திருக்கரங்களும் கொண்டு மயிலின் முன் கிழக்கு நோக்கி நின்ற கோலத்தில் தேவியர் இருவருடன் எழுந்தருளியுள்ளார்.
பாண்டிய மன்னர்கள் பலரும் இத்தலத்திற்குத் திருப்பணி செய்துள்ளனர்.
மருதுபாண்டியர்களால் ஆராதிக்கப் பெற்ற தலம் இது.
சிறப்பு:
சிவனார் தம் தாண்டவங்கள் ஏழினுள் கௌரி தாண்டவத்தை இத்தலத்தில் அம்மைக்கு ஆடிக்காட்டி அருட்காட்சி தந்த தலம்.
பைரவர் மேற்கு நோக்கி யோகாசன நிலையில் கால் கட்டைவிரல்களை தரையில் ஊன்றியவாறு, வலக்கையில் சிவலிங்கத்துடன் அமர்ந்தகோலத்தில் ஆபத்துத்தாரண பைரவராக திருக்காட்சி தருகிறார்.
சித்திரை மாத முதல் வெள்ளிக்கிழமை இப்பைரவருக்கு தங்கக்கவசம் சார்த்தப்படுகின்றது
மூலவர் சந்நிதி முன்புறம் வலப்பக்கம் நால்வர், பொல்லாப்பிள்ளையார், நர்த்தன விநாயகர் திருவடிவங்களும், இடப்பக்கம் வள்ளி-தெய்வயானை சமேத முருகர் திருவடிவமும், திருமுறைக்கோயிலும் அமைந்துள்ளன.
நடராஜர் சபை அழகு நிறைந்தது. சுவரின் வெளிப்புறம் பதஞ்சலி , வியாக்ரபாதர் வடிவங்கள் ஓவியங்களாக வரையப்பட்டுள்ளன.
மூலவர் சதுரபீட ஆவுடையாரில் அழகிய வடிவினராக கிழக்கு நோக்கி திருக்காட்சி தருகிறார்.
வால்மீகி முனிவருக்கு சிவனார் திருக்காட்சியளித்த தலம் இது. மூலவர் சந்நிதி பின்புறம் வால்மீகி தவம் செய்த இடம் உள்ளது.
நாவுக்கரசர் தேவாரம்:
1.🔔புரிந்தமரர் தொழுதேத்தும் புகழ்தக் கோன்காண்
போர்விடையின் பாகன்காண் புவன மேழும்
விரிந்துபல வுயிராகி விளங்கி னான்காண்
விரைக்கொன்றைக் கண்ணியன்காண் வேதம் நான்கும்
தெரிந்துமுதற் படைத்தோனைச் சிரங்கொண் டோன்காண்
தீர்த்தன்காண் திருமாலோர் பாகத் தான்காண்
திருந்துவயல் புடைதழுவு திருப்புத் தூரில்
திருத்தளியான் காண்அவனென் சிந்தை யானே.
🙏தேவர்கள் விரும்பித் துதித்து வணங்கும் புகழுக்கு உரியவனும் , போர்த்தொழில் வல்ல இடப ஊர்திக்குத் தலைவனும் , உலகங்கள் ஏழுமாகிப் பல உயிரும் ஆகி விளங்கியவனும் , மணமிக்க கொன்றைக் கண்ணியை உடையவனும் , வேதம் நான்கையும் உணர்ந்து முற்படப் படைப்புத் தொழிலை மேற்கொண்ட பிரமனது சிரத்தைக் கொய்தவனும் , குற்றமற்றவனும் , திருமாலை ஒரு பாகமாகக் கொண்டவனும் ஆகிப் பண்படுத்தப் பட்ட வயல்கள் நாற்புறமுஞ் சூழ விளங்கும் திருப்புத்தூர்த் திருத்தளியில் திகழுஞ் சிவபெருமான் என்சிந்தையில் என்றும் நீங்காமல் நிற்பவன் ஆவான் .
2.🔔வாராரும் முலைமங்கை பாகத் தான்காண்
மாமறைக ளாயவன்காண் மண்ணும் விண்ணுங்
கூரார்வெந் தழலவனுங் காற்றும் நீருங்
குலவரையும் ஆயவன்காண் கொடுநஞ் சுண்ட
காராருங் கண்டன்காண் எண்டோ ளன்காண்
கயிலைமலைப் பொருப்பன்காண் விருப்போ டென்றுந்
தேராரும் நெடுவீதித் திருப்புத் தூரில்
திருத்தளியான் காண்அவனென் சிந்தை யானே.
🙏கச்சணிந்த முலையினையுடைய உமையம்மையை ஒருபாகமாகக் கொண்டவனும் பெரிய வேதங்கள் ஆனவனும் , நிலமும் விண்ணும் , வெம்மைமிகு தழலும் காற்றும் நீரும் உயர்மலையும் ஆயவனும் , கொடிய நஞ்சையுண்டு கறுத்த கண்டத்தவனும் , எண்டோளினனும் , கயிலைமலையாகிய பொருப்பைத் தன் வாழிடமாகக் கொண்டவனும் ஆகித் தேரோடும் நெடுவீதிகளையுடைய திருப்புத்தூர்த் திருத்தளியில் என்றும் விருப்போடு விளங்கும் சிவ பெருமான் என் சிந்தையிலே என்றும் நீங்காமல் நிலைப்பவன் ஆவான் .
3.🔔மின்காட்டுங் கொடிமருங்குல் உமையாட் கென்றும்
விருப்பவன்காண் பொருப்புவலிச்சிலைக்கை யோன்காண்
நன்பாட்டுப் புலவனாய்ச் சங்க மேறி
நற்கனகக் கிழிதருமிக் கருளி னோன்காண்
பொன்காட்டக் கடிக்கொன்றை மருங்கே நின்ற
புனக்காந்தள் கைகாட்டக் கண்டு வண்டு
தென்காட்டுஞ் செழும்புறவின் திருப்புத் தூரில்
திருத்தளியான் காண்அவனென் சிந்தை யானே.
🙏மின்னலும் கொடியும் போன்ற இடையினை யுடைய உமையம்மையால் என்றும் விரும்பப்படும் கேள்வனும் , மலையாகிய வலிமை மிக்க வில்லை வளைத்த கையினனும் , நல்ல பாட்டுக்களை யாக்க வல்ல புலவனாய்ச் சங்கம் போந்து நல்ல பொற்கிழியைத் தருமிக்கு அருளியவனும் ஆகி , மணமிக்க கொன்றை மலர் பொன்னின் வனப்பைக் காட்ட , அருகே நின்ற மேட்டு நிலக் காந்தள் கைகளின் வடிவினைக் காட்ட , இவற்றைக் கண்டு வண்டு இசைபாடும் முல்லையும் குறிஞ்சியும் மயங்கிய வளமிக்க திருப் புத்தூர்த் திருத்தளியில் விளங்கும் சிவபெருமான் என் சிந்தையில் என்றும் நீங்காமல் நிலைப்பவன் ஆவான் .
4.🔔ஏடேறு மலர்க்கமலத் தயனும் மாலும்
இந்திரனும் பணிந்தேத்த இருக்கின் றான்காண்
தோடேறு மலர்க்கடுக்கை வன்னி மத்தந்
துன்னியசெஞ் சடையான்காண் துகள்தீர் சங்கம்
மாடேறி முத்தீனுங் கானல் வேலி
மறைக்காட்டு மாமணிகாண் வளங்கொள் மேதி
சேடேறி மடுப்படியுந் திருப்புத் தூரில்
திருத்தளியான் காண்அவனென் சிந்தை யானே.
🙏இதழ்கள் நிறைந்த தாமரை மலரில் விளங்கும் நான்முகனும் , திருமாலும் இந்திரனும் , பணிந்து துதிக்கும் வண்ணம் இருப்பவனும் , இதழ்களையுடைய கொன்றை , வன்னி , ஊமத்தை ஆகிய மலர்கள் செறிந்த செஞ்சடையினனும் , குற்றமற்ற சங்கம் பக்கத்தே ஏறி முத்தை ஈனும் கடற்கரையை எல்லையாக உடைய மறைக்காட்டில் வாழ் மணியும் ஆகி , வளவிய பயிர்களை மேயும் எருமை கரை மீது ஏறி நீர் நிலையில் படியும் திருப்புத்தூர்த் திருத்தளியில் திகழும் சிவபெருமான் என்றும் என் சிந்தையில் நின்று நிலவுபவன் ஆவான் .
5.🔔கருமருவு வல்வினைநோய் காற்றி னான்காண்
காமருபூங் கச்சியே கம்பத் தான்காண்
பெருமருவு பேருலகில் பிணிகள் தீர்க்கும்
பெரும்பற்றத் தண்புலியூர் மன்றா டிகாண்
தருமருவு கொடைத்தடக்கை யளகைக் கோன்றன்
சங்காதி ஆரூரில் தனியா னைகாண்
திருமருவு பொழில்புடை சூழ்திருப்புத் தூரில்
திருத்தளியான் காண்அவனென் சிந்தை யானே.
🙏பிறப்பைப் பொருந்துவதற்கு ஏதுவாகிய வலிய வினை நோயை நீக்கியவனும் , விருப்பம் வருதற்குரிய பொலிவுடன் விளங்கும் கச்சி ஏகம்பனும் , நிலையாமைப் பெருமை மேவும் பெரிய நிலவுலகில் பொருந்தும் பிணிகளைத் தீர்க்கும் குளிர்ச்சிமிக்க பெரும் பற்றப் புலியூர் மன்றாடியும் , கற்பகத்தருப் போலக் கொடுக்கும் பெருமை மிக்க கையினையுடைய அளகைக் கோன் ஆகிய குபேரனுக்கு மிக்க நண்பனும் , ஆரூரில் அமர்ந்த ஒப்பற்ற யானையும் ஆகித் திருப்புத்தூர்த் திருத்தளியில் திகழும் சிவபெருமான் என்றும் என் சிந்தையில் நின்று நிலவுபவன் ஆவான் .
6.🔔காம்பாடு தோளுமையாள் காண நட்டங்
கலந்தாடல் புரிந்தவன்காண் கையில் வெய்ய
பாம்பாடப் படுதலையிற் பலிகொள் வோன்காண்
பவளத்தின் பருவரைபோல் படிவத் தான்காண்
தாம்பாடு சினவிடையே பகடாக் கொண்ட
சங்கரன் காண் பொங்கரவக் கச்சை யோன்காண்
சேம்பாடு வயல்புடைசூழ் திருப்புத் தூரில்
திருத்தளியான் காண்அவனென் சிந்தை யானே.
🙏மூங்கில் போன்ற தோளுடைய உமையம்மை காணுமாறு பல கூத்து விகற்பங்களையும் கலந்து ஆடியவனும் , சீற்றம்மிக்க பாம்பு கையிற் கங்கணமாய்ப் பொருந்தி ஆடத் தலைஓட்டில் பிச்சை ஏற்பவனும் , பவளத்தால் ஆன பெரிய மலை போன்ற வடிவினனும் , கயிற்றால் பிணித்தற்குரிய சினமிக்க இடபத்தையே யானை என மதிக்கத்தக்க ஊர்தியாகக் கொண்ட சங்கரனும் , பொங்கும் சினப் பாம்பையே அரைப்பட்டிகையாகப் புனைந்தவனும் ஆகி நீர்ச் சேம்புகள் நிறைந்த வயல்கள் நாற்புறமும் சூழ்ந்த திருப்புத்தூர்த் திருத்தளியில் திகழும் சிவபெருமான் என்றும் என் சிந்தையில் நின்று நிலவுபவன் ஆவான் .
7.🔔வெறிவிரவு மலர்க் கொன்றை விளங்கு திங்கள்
வன்னியொடு விரிசடைமேல் மிலைச்சி னான்காண்
பொறிவிரவு கதநாகம் அக்கி னோடு
பூண்டவன்காண் பொருபுலித்தோ லாடை யான்காண்
அறிவரிய நுண்பொருள்க ளாயி னான்காண்
ஆயிரம்பே ருடையவன்காண் அந்தண் கானல்
செறிபொழில்சூழ் மணிமாடத் திருப்புத் தூரில்
திருத்தளியான் காண் அவனென் சிந்தை யானே.
🙏மணம்நாறும் கொன்றை மலரையும் விளக்க முடைய திங்களையும் வன்னியையும் விரிந்த சடைமேல் சூடியவனும் , புள்ளிகள் பொருந்திய கோபிக்கும் நாகத்தையும் , எலும்பினையும் அணியாகப் பூண்டவனும் , போர்க்குணமுடைய புலியினது தோலை ஆடையாகக் கொண்டவனும் , அறிதற்கரிய நுண்பொருள்களாய் ஆனவனும் , ஆயிரம் பேர் உடையவனும் ஆகி , அழகியதும் , குளிர்ந்ததும் ஆகிய கடற்கரையிடத்தே நெருங்கி விளங்கும் பொழில்கள் சூழ்ந்ததும் , வரிசையாயமைந்த மாடங்களை உடையதுமாகிய திருப்புத்தூர்த் திருத்தளியில் திகழும் சிவபெருமான் என்றும் என் சிந்தையில் நின்று நிலவுபவன் ஆவான் .
8.🔔புக்கடைந்த வேதியற்காக் காலற் காய்ந்த
புண்ணியன்காண் வெண்ணகைவெள் வளையாளஞ்ச
மிக்கெதிர்ந்த கரிவெருவ உரித்த கோன்காண்
வெண்மதியைத் தலைசேர்த்த தண்மை யோன்காண்
அக்கரும்பு பெரும்புன்னை நெருங்கு சோலை
ஆரூருக் கதிபதிகாண் அந்தண் தென்றல்
திக்கணைந்து வருமருங்கின் திருப்புத் தூரில்
திருத்தளியான் காண்அவனென் சிந்தை யானே.
🙏தன்பால் அடைக்கலம் புக்க வேதியன் மார்க் கண்டேயனுக்காக இயமனைக் கோபித்துக் கொன்ற புண்ணியனும் , வெள்ளிய பற்களையும் வெள்ளிய வளையல்களையும் உடைய உமையம்மை அஞ்சுமாறு சினம் மிக்கு எதிர்த்த யானை நடுங்க அதன் தோலை உரித்தவனும் , வெள்ளிய மதிப்பிறையைத் தலையில் தரித்து அருளியவனும் , மன்மதன் வில்லாகக் கொள்ளுதற்கு வாய்ப்புடைய அக்கரும்பும் , பெருமைமிக்க புன்னையும் நெருங்கிய சோலைமிக்க ஆரூர்க்கு அதிபதியும் ஆகி , மெல்லிதாய்க் குளிர்ந்த தென்றல் வடக்குத் திக்கினை அணையவரும் இடத்தில் உள்ள திருப்புத்தூர்த் திருத் தளியில் திகழும் சிவபெருமான் என்றும் என் சிந்தையில் நின்று நிலவுபவன் ஆவான் .
9.🔔பற்றவன்காண் ஏனோர்க்கும் வானோ ருக்கும்
பராபரன்காண் தக்கன்றன் வேள்வி செற்ற
கொற்றவன்காண் கொடுஞ்சினத்தை யடங்கச் செற்று
ஞானத்தை மேன்மிகுத்தல் கோளாக் கொண்ட
பெற்றியன்காண் பிறங்கருவிக் கழுக்குன் றத்தெம்
பிஞ்ஞகன்காண் பேரெழிலார் காம வேளைச்
செற்றவன்காண் சீர்மருவு திருப்புத் தூரில்
திருத்தளியான் காண்அவனென் சிந்தை யானே.
🙏அண்டினார்க்குத் துணையானவனும் , தேவர்க்கும் மற்றையவர்க்கும் அவரின் வேறுபட்டு மேலானவனும் , அவரோடு கலந்து நின்று அவரைப் போலக் கீழானவனும் , தக்கனது வேள்வியை அழித்த வெற்றியினனும் , கொடிய சினத்தை முற்றிலும் அழித்தவனும் , ஞானத்தை மேன்மேலும் வளரச் செய்தலைத் தன்கொள்கையாகக் கொண்டவனும் , அருவி விளங்கும் கழுக்குன்றில் யாம் வணங்கும் தலைக்கோலம் உடையவனும் , மிக்க எழில் படைத்த மன்மதனை விழித்து அழித்தவனும் , ஆகி , புகழ்மிக்க திருப்புத்தூர்த் திருத்தளியில் திகழும் சிவபெருமான் என்றும் என் சிந்தையில் நின்று நிலவுபவன் ஆவான் .
10.🔔உரம்மதித்த சலந்தரன்தன் ஆகங் கீண்ட
வோராழி படைத்தவன்காண் உலகு சூழும்
வரம்மதித்த கதிரவனைப் பற்கொண் டான்காண்
வானவர்கோன் புயம்நெரித்த வல்லா ளன்காண்
அரமதித்துச் செம்பொன்னி னாரம் பூணா
அணிந்தவன்காண் அலைகடல்சூழ் இலங்கை வேந்தன்
சிரம்நெரித்த சேவடிகாண் திருப்புத் தூரில்
திருத்தளியான் காண்அவனென் சிந்தை யானே.
திருச்சிற்றம்பலம்.
🙏தனது வலியைப் பெரிதாக மதித்த சலந்தரனின் உடலைப் பிளந்த ஒப்பற்ற ஆழியைப் படைத்தவனும் , உலகினைச் சூழவருவோனாய் எல்லாராலும் மேலாக மதிக்கப்பட்ட சூரியனுடைய பல்லைப் பறித்தவனும் , இந்திரனுடைய புயத்தை நெரித்த வன்மை யுடையவனும் , பாம்பினைச் செம்பொன் ஆரமாகவும் பூணாகவும் மதித்து அணிந்தவனும் , அலைகடல் சூழ் இலங்கைக்கு இறையாகிய இராவணனுடைய சிரங்களை நெரியச் செய்த சேவடியினனும் ஆகி , திருப்புத்தூர்த் திருத்தளியில் திகழும் சிவபெருமான் என்றும் என் சிந்தையில் நின்று நிலவுபவன் ஆவான் .
திருச்சிற்றம்பலம்.
திருவிழாக்கள்:
சித்திரையில் பைரவர் விழா.
கார்த்திகையில் கந்த சஷ்டி.
தொடர்புக்கு:
94420 47593
தேவாரம் பாடல் பெற்ற தலங்களில் பாண்டிய நாட்டில் அமைந்துள்ள நாளைய தலப்பதிவு பழம்பதிநாதர் திருக்கோயில், திருப்புனவாயில்.
---------------------------------------------------------
அடியார்களுக்குத் தொண்டு செய்யுங்கள் இறைவன் அவர்களுக்குள்ளிருக்கிறான்.
No comments:
Post a Comment