தமிழ்த் தாய் வாழ்த்தினை இப்போது மனப்பாடமாக ஒப்பியுங்கள் பார்க்கலாம் என்றால் நம்மில் பலரும் தடுமாறுவார்கள். பெரிய பெரிய தமிழ்ச் சொற்றொடர்களால் ஆன செய்யுள் வரிகள் என்பதால் நன்கு தெரிந்தவர்க்கும் நினைவில் பிறழ வாய்ப்புள்ளது.
தமிழ்த்தாய் வாழ்த்தை நினைவிலிருந்து கூறுவதற்கு எளிமையான உத்திகள் சில உள்ளன. அதை மனத்தில் வைத்துக்கொள்ளுங்கள். எப்போதும் மறக்காது. மறந்தாலும் இந்த உத்தியின்படி நினைவிற்கொண்டு வந்துவிடலாம்.
முதல் அடி :
நீராரும் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்
முதலடியின் முதற்சொல்லுக்கு ஏற்ப எதுகையாய் இரண்டாம் அடியின் முதற்சொல் தொடங்கும். எதுகை என்றால் முதலெழுத்தைத் தவிர பிற எழுத்துகள் அப்படியே வருவது. மானே தேனே நானே என்பவை எதுகைகள். அதன்படி நீராரும் என்று தொடங்கும் அடிக்கு அடுத்த அடி எதுகையின் வழியே ஊராரும், வாராரும், சீராரும் என்று வரலாம். நம் பாடலில் சீராரும் என்று வருகிறது. இப்போது இரண்டாம் அடியை நினைவில் கொண்டு வந்துவிடலாம்.
இரண்டாம் அடி :
சீராரும் வதனமெனத் திகழ்பரதக் கண்டமதில்
இரண்டாம் அடி கண்டமதில் என்று முடிகிறது. கண்டம் அதில் என்றால் "கண்டமாகிய அதில்" என்று பொருள். கண்டத்தில் ஒரு பெரும் நிலப்பகுதியைக் குறிக்க வருகிறார் புலவர். அது என்ன ? தெற்குப் பகுதி நிலத்தைக் குறிக்கிறார். அதுதான் தெக்கணம். கண்டம் அதில் தெற்குப் பகுதி. தெக்கணம் என்று மூன்றாவது அடி தொடங்கும்.
மூன்றாம் அடி :
தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்
அதற்கு அடுத்த அடி தெக்கணத்துக்கு எதுகையாக வர வேண்டும். தெக்கணம் என்பதற்குத் 'தக்கசிறு" என்னும் சீரை எதுகையாக்குகிறார். இரண்டாம் மூன்றாம் எழுத்துகள் ஒன்றாக அமைந்தாலும் எதுகைதான். அதன்படி நான்காம் அடி தக்கசிறு என்று தொடங்குகிறது.
நான்காம் அடி :
தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறுந் திலகமுமே !
திலகமுமே என்று விளித்துவிட்டார். அங்கே பாட்டு முடிந்துவிட வாய்ப்பிருக்கிறது. ஆனால், முடிக்கவில்லை. கண்டமதில் என்பதிலிருந்து தெக்கணத்தை எப்படித் தொட்டாரோ அதுபோலவே திலகத்திலிருந்து அந்தாதி பிடிக்கிறார். அந்தாதி என்பது ஓர் அடி எந்தச் சொல்லால் முடிகிறதோ அதே சொல்லைப் பற்றி அடுத்த அடியைத் தொடங்குவது. திலகம் என்ற சொல்லோடு முடிகிறது. அதே திலகத்தை வைத்தே அடித்த அடியைத் தொடங்குகிறார்.
ஐந்தாம் அடி :
அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற
அத்திலகம் என்று சுட்டெழுத்தினைப் பயன்படுத்துகிறார். அத்திலக என்பதற்கு எதுகை போடுகையில் எத்திசையும் என்கிறார்.
ஆறாம் அடி :
எத்திசையும் புகழ்மணக்க இருந்த பெருந் தமிழணங்கே ! தமிழணங்கே !
தமிழணங்கை இருமுறை விளிக்கிறார். அணங்கு என்றால் தெய்வப்பெருமகள்.
இறுதி அடி அணங்கின் இளமை திறமை அனைத்தையும் வியந்து மெய்ம்மறந்து வாழ்த்துவது.
ஏழாம் அடி :
உன் சீரிளமைத் திறம்வியந்து செயல்மறந்து
வாழ்த்துதுமே
வாழ்த்துதுமே
வாழ்த்துதுமே !
மூன்றுமுறை வாழ்த்தி முடிக்க வேண்டும்.
இந்த அடிப்படையில் தமிழ்த்தாய் வாழ்த்தை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். என்றும் மறவாது. இதுதான் வாழ்த்துப்பாடலின் கட்டமைப்பு.
நீராரும்........
சீராரும்........
தெக்கணமும்..........
தக்கசிறு..........
அத்திலக.........
எத்திசையும்.........
உன் சீரிளமை............
வாழ்த்துதுமே.........!
- கவிஞர் மகுடேசுவரன்
No comments:
Post a Comment